மேஜர் யாழிசை
முல்லை மாவட்டம் நந்திக்கடல் பகுதியில் 25.03.2009 அன்று உலக வல்லாதிக்க அரசுகளின் துணையோடு முன்னேறி வந்த சிங்கள இனவெறிப் படைகளுக்கெதிரான நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் யாழிசை அவர்களின் 06ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தமிழீழத்தில் முல்லைத்தீவு மாங்குளத்தில் பிறந்த துவாரகா இவள் விளையாடித்திரிந்த வீதிகள் எங்கும் எதிரியானவனதும் – துரோக சக்திகளினது உருவங்கள் நடமாடி திரிந்தனர், ஆதலால் அவ்வூரினதும் அதனை அண்டிய கிராமங்களின் உருவே மாறியிருந்து அங்கு வாழ்ந்த மக்கள் நாளும் சிங்கள இனவெறி அரசின் படைகள் தங்கள் இனவாதத்தின் அகங்காரத்தை மக்கள் மீது திணித்து வந்த காலம். தமிழ் மக்கள் தம் நாட்டில் ஏன் தம் சொந்த வீதியால் கூட சுதந்திரமாக நடமாட முடியாத சூழ்நிலை. அப்படி செல்வதானால் ஏதாவது காரணம் கூறி அடிப்பதும் – கைது செய்வதுமாய் இருந்த நாட்கள் அவைகள்…………..
தமிழீழ தேசமெங்கும் சிறிலங்கா அரசின் போர் இனவெறிகளும், அடக்குமுறைகளும் சூழ்ந்திருந்த காலங்களில் தமிழீழத் தேசிய இனத்தின் இறைமையைக் காப்போம், சுதந்திரத்தை நிலைநாட்டுவோம் என்று புறப்பட்ட இயக்கங்களில், தமிழீழ விடுதலைப் புலிகள் தவிர ஏனையவை சுவடுகள் தெரியாமல் அழிந்துபோயின; மிஞ்சியவை சில ஏகாதிபத்தியத்தால் விலைக்கு வாங்கப்பட்டு போயின.
ஆயினும், விடுதலைப் புலிகள் அமைப்பு தமிழரின் பிரதிநிதிகளாககவும். அவர்களே எம்மினத்தின் காவலர்களாகவும், எதிர்கால சந்ததியினரும் மக்களும் விடியலின் சுவாசக்காற்றை சுவாசிக்க திசையெங்குமிருந்து பல இளைஞர் – யுவதிகள் விரைந்தனர்.
நாட்கள் செல்ல செல்ல அவர்களின் தியாகத்தின் உழைப்பில் எதிரியின் பிடியிலிருந்து மீண்ட எம் மண்ணில் ஒவ்வோர் குடிமகனும் தலைநிமிர்வுடன் நிமிர்ந்தனர். நாளடைவில் தமிழீழ சுதந்திர பிரகடனச் செய்திகள் தேசியத் தலைவனின் மதிநுட்பம் வாய்ந்த தலைமைத்துவ வழிநடத்தல் மற்றும் போர்த் தந்திரோபாய திட்டமிடலினால் எம் மக்களுக்கு வந்த களமுனை – ஊர்கள் மீட்புச் சமர் வெற்றிச் செய்திகளில் ஒவ்வோர் இளையவர்களும் தம்மில் எத்தனையோ விடியலின் கனவையும் அதற்காக ஊனாக உருகி உழைத்த காவிய நாயகர்களையும் நெஞ்சிருத்தி விரைந்தனர் விடுதலைப் படையில் அணிசேரும் அவாவுடன்; அப்படியாக 2001ம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலை புலிகள் அமைப்பில் துவாரகாவும் இணைந்து பயிற்சிப் பாசறையில் இருந்து யாழிசை எனும் சிறந்த போராளியாக வெளியேறுகின்றாள்.
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், மண்ணையும் – மக்களையும் நேசித்தவளுக்கு பயிற்சிப் பாசறையில் கடின பயிற்சிகளும் இலகுவாய் செய்து முடித்து அங்கு தனக்கான ஓர் தனித்துவத்தின் அடையாளத்தைப் பெற்றாள். அங்கு பயிற்சி ஆசிரியரால் இலகுவில் இனம் காணப்பட்ட போராளிகளில் யாழிசையின் உருவமும் இருந்தது. அதுவே யாழிசையை மென்மேலும் முயற்சிகளுக்கு வலுவகுத்து பின்னர் யாழிசை 2ம் லெப். மாலதி படையணிக்குள் உள்வாங்கப்படுகின்றாள். அங்கும் சிறப்புத் தளபதி மற்றும் பொறுப்பாளர்கள், போராளிகளின் ஆளுகையின் கீழ் கடமைகளை பொறுப்புணர்ச்சியுடன் செய்து அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்று தமிழீழத்தின் வடக்கு, கிழக்கு, மற்றும் மேற்றுக் கரையோர எல்லைகளில் தேசத்தைக் காக்கும் தார்மீக கடமைகளையும் முழு வீச்சுடன் திறம்பட செய்துமுடிக்கின்றாள்.
தமிழீழ தேசத்தில் எதிரி தொடுத்த ஆக்கிரமிப்பு போர்களின் முறியடிப்பு சமர்களிலும், ஏனைய மீட்பு சமர் முனைகளிலும் இவளின் சாதனைகள் ஏனைய சக போராளிகளுடனும் மற்றும் தன்னிச்சையாகவும் தொடர்ந்தன. சில களங்களில் இவளின் சாதனைச் சிகரம் தொட்டதில் அந்த வேகத்தின் இயக்கசக்தியே களமுனை அணித் தலைவர்களால் அவதானிக்கப்பட்டு பின் சிறப்புத் தளபதியின் கவனத்தை கவர்ந்து அந்த வளர்ச்சியே லெப். கேணல் விக்ரர் கவச எதிர்ப்புப் படையணிக்குள் உள்வாங்கப்படுகின்றாள். தெரிந்த முகங்களுடனும் புதியவர்கள் மத்தியிலும் மீண்டும் ஓர் உறவை வளர்த்து தாய் தேசத்திற்கான உழைப்பைத் தொடர்கிறாள். கடினமான (R.P.G) ஆர்.பி.ஜி உந்துகணைச் செலுத்தி பயிற்சிகளையும் அவை சார்ந்த ஏனைய பயிற்சிகளையும் கடின வாழ்விற்குள் இருந்து ஏனைய போராளிகளுடனும் நிறைவு செய்கின்றாள்.
யாழிசையின் கடமை சார்ந்த கட்டமைப்பு சற்று மாறுபட்டதால் இவள் மக்களுடன் மட்டும் நிகழ்வுகளை சார்ந்தே பழகும் தருணங்கள் அதிகம், ஆனால் சக போராளிகளுடன் அன்பாகப் பழகுவாள். சக போராளிகளின் தேவைகளை தாயாகவும், சகோதரியாகவும் பூர்த்தி செய்தாள். நன்கு கடமை வேலைகளை நிதானமாக செய்வதுடன் வேலைகளை இயன்றளவு நேர்த்தியுடனும் சலிப்பின்றியும் செய்வாள். சக போராளிகளின் வேடிக்கைப் பேச்சுகளுக்கு நகைச்சுவையாகவும் பதிலளித்து அனைவரையும் சிரிக்கவைத்து கலகலப்பாக பழகும், திடமான உடல்வாகு கொண்ட இவளின் கைகளில் தவழும் அந்த கனரக ஆர்.பி.ஜி உந்துகணைச் செலுத்தியும் ஓர் வீரத்தின் அழகாக மிளிரும். தமிழீழத்தில் சில நிகழ்வுகளில் இராணுவ ரீதியான அணிவகுப்பில் இவளின் உருவமும் அந்த ஆர்.பி.ஜி உந்துகணைச் செலுத்தியும் இவளின் கரத்தையும் தோளையும் தழுவியவண்ணம் இருப்பதையே அவதானிக்க முடியும்.
எல்லைக்கு செல்வதும் மீண்டும் கடின பயிற்சியுமாக மாறி மாறி நகர்ந்த வாழ்நாட்களில் மன்னார் மற்றும் முகமாலையிலும் – மணலாறிலும் கடமை மாற்றங்களுடன் தமிழீழத் திசையாவும் தடம் பதித்து சாதனைகள் நாட்டியவண்ணம் ஓய்வின்றி நடந்தன இவளின் பாதங்கள்.
படையணிகள் ரீதியாகவும், திறமைகள் அடிப்படையிலும் தமிழீழத் தேசியத் தலைவரின் பாராட்டுதல்களைப் பெற்ற போராளிகளில் யாழிசையும் உள்ளடக்கம்.
தமிழீழத்தில் சமாதான மேகம் சூழ்ந்த வேளைகளிலும் இவளின் பணி போர்க்களத்தில் இருப்பது போன்று தமிழீழ எல்லைகளில்த்தான் இருந்தது. நிசப்தமற்ற இரவுகளில் எதிரியானவனின் ஊடுருவலைத் தடுத்தும், ஊரே உறங்கும் போதும் உறக்கமற்றும் சோர்வே அற்ற களவாழ்வுபோல் பல போராளிகளோடு ஒன்றிப்போனது இவளின் அன்றைய வாழ்வும்.
தேசத்தின் எல்லைகளைக் காவல் செய்வது எவ்வகையான கடினம் என்பது இங்கே பதிந்து விட முடியாது எல்லையில் இருப்பவர்களை எண்ணி அவர்கள் மீதுள்ள நம்பிக்கையில் நாட்டுக்குள்ளே ஏனைய பணிகளும், எம் தேசத்து குடிமக்களின் வாழ்வும்.
இவ்வகையான மனோபாவமும் வேகமும் தியாக உணர்வும்தான், இன்று எங்களது விடுதலைப்போரை உலக அரங்கிற்கு எடுத்துக் காட்டியிருக்கின்றது.
சமாதான மேகம் களைந்து போர் காரிருள் சூழ்ந்தது தமிழீழத்தில் மீண்டும் பலமுனைகளிலும் சிறிலங்கா இராணுவம் தனது தாக்குதல் நடவடிக்களைத் தீவிரப்படுத்தியது உலக வாள்ளரசுகளின் துணையோடு…..
அதன் விளைவே தமிழீழ வாசலெங்கும் ஒப்பாரி ஓலங்கள், நாளும் சாவுகள் நிறைந்து அன்னை பூமி சுடுகாடு ஆனது.
எமது வீரர்கள் எதிரியை அழிக்காது விடமாட்டோம் எம் அன்னைபூமியை விட்டு விரட்டாமல் விடமாட்டோம் என உறுதி பூண்டு ஆவேசத்துடன் நின்றனர்.
எதிரியானவனுக்கு தக்க பதிலடிகள் உரிய நேரத்தில் எம்மவர்கள் தமிழர்களின் வீரத்தை பறைசாற்றி கொடுக்க மறந்ததில்லை அப்படியான ஓர் களம்.
25.03.2009 அன்று உலக வல்லரசுகளின் துணையோடு முன்னேறிவந்த சிங்கள இராணுவத்திற்கு முல்லை மாவட்டம் நந்திக்கடல் பகுதியில் கடும் சமர் மூண்டது. நந்திக்கடலில் சபதம் எடுத்து செங்களங்கள் ஆடி நின்றனர் கரிகாலனின் படைகள். எதிரியானவன் ஊக்கிரப்படுத்தினான் ஓய்வின்றி நீண்ட சில மணித்தியாலங்களில் சில போராளிகளுடன் யாழிசையும் அந்த நந்திக்கடல் ஏரியை முத்தமிட்டவாறு வீரச்சாவைத் தழுவிக்கொள்ள தாய்மண்ணும் தன் வீரமகவை அணைத்துக்கொள்கின்றது.
யாழிசை இன்று எம்முடன் இல்லை. ஜீரணிக்க முடியவில்லை. எல்லாப் போராளிகளின் வீரச்சாவுகளும் அப்படித்தான், எம்முடன் அவர்கள் வாழ்ந்துகொண்டிருப்பது போல…..
நினைவுகளுடன்: அ.ம.இசைவழுதி.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”