தைத்திங்கள் மலரட்டும்
‘தைத்திங்கள் மலரட்டும்’
வதை செய்தோர் காலம் போய்
விதை விதைக்கும் காலத்தை
கதையாகத்தந்தான் காண் கரிகாலன்
கவிதை சொல்லும் தைத்திங்கள் கனிகிறது.
திக்கெட்டும் புகழ் பரப்பி
திசை எங்கும் தமிழ் பரப்பி
கொட்டட்டும் போர்ப்பரணி வரலாறு
திகைக்கட்டும் சிங்களத்தின் அகராதி.
காலம் ஒரு பதில் சொல்லும்
கரிகாலன் சேனை விடையளிக்கும்
புதியதொரு வரலாறு உருவாகும்
புதிய தைப்பொங்கலுடன் உறவாடும்.
ஏருழவர் தொழிலாளர் சிற்பிகளின்
தேரூர்ந்த சிறப்புக்களைச் சிதைத்திருந்த
கொடூரத்தின் கும்பல்களை குதறிவிட்டோம்
கொஞ்சு தமிழ்க் கோலத் தை நீ வாழி.
கிராமியத்துப் படையணிகள் கிளம்பட்டும்
கிறுக்கழிக்க எல்லைப்படை விரையட்டும்
களமாடும் புலிச்சேனை தளைக்கட்டும்
களங்க மற்ற தைத்திங்கள் மலரட்டும்.
போர் ஆண்டு பூரணமாய் பொலியட்டும்
புகுந்து நின்று போர் முடிக்க இணையட்டும்
வீட்டிற்கொரு விடுதலைத் தீ கிளம்பட்டும்
விரைவான சுதந்திரமாய் மலரட்டும்.
கவிஞர் செவ்வந்தி மகாலிங்கம்.
எரிமலை (தை 2001) இதழிலிருந்து தேசக்காற்று.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”