ஈழப்பிரியனே…..
ஒரு கணம் ஒன்றில்
எனக்கும் மரணம்
வரும்
மரங்களின் இலைகளும்
பூக்களின் இதழ்களும்
அப்படியே தானிருக்கும்
மேலெழும்பும் காற்றும்
வானும் மண்ணும்
தெருவில் போகும்
சிறுவனின் கண்களும்
கூட அப்படிதானிருக்கும்
ஒரு கண்ணாடிச் சில்லுடைதலின்
சல சலப்பு கூட என்
மரணத்தில் இருக்காது
ஆனால் உன்…?
தோழா
வன்னி மரங்களின்
அழுகை கேட்கின்றதா உனக்கு..
உன் வீரம் பார்த்த
பூக்களும் அதனை தாங்கும்
காம்புகளும் கூட
அழுது அரட்டுகின்றனவாம்
கேட்கின்றதா உனக்கு
தன் வீரப்
புதல்வனின் மூச்சு
காற்றை எனி என்று
தன்னுள் கலப்பேன்
என்று
காற்றும் தலைவிரித்து
ஓங்கி அழுகின்றது
வானம் இன்று
தொலைந்தே போய்விட்டது
உன் மரணம் பார்த்த
செய்தி கேட்டதில் இருந்து
சூரியனை கூட சுட்டெரிக்கின்றது
ஆயிரமாயிரம்
புதல்வர்களினை அடைகாத்து
விடுதலையின்
விழுதாக்கும்
மண்கூட பேச்சின்றி
கிடக்கின்றது
கேளாய் தோழா
பிறப்பும் இறப்பும்
எனும் வட்டத்தில்
சிக்கிவிட்ட சில் வண்டுகள்
என்னைப் போன்றவர்கள்
ஒவ்வொரு சொட்டு இரத்ததிலும்
அடிமைத்தனத்தின்
கண்ணிகளை உடைத்து
மீண்டும் மீண்டும்
அதே மண்ணில்
பிறப்பெடுக்கும்
ஊற்றுக் கண்கள் நீங்கள்
மரணத்தின் பின்பும்
தீயாய் தாய் மண்ணில்
கொழுந்து விடும்
அக்கினிக் குஞ்சுகள்
நீங்கள்
போய் வா தோழா…
உன் வீரத்தின்
ஒரு
சொட்டில்
கூட உரிமை கொள்ள
முடியாத
கோழைக் கவிஞனின்
கண்ணீர் அஞ்சலியை
ஏற்றுக் கொண்டு
போய் வா தோழா
கவியாக்கம்:- நிழலி (2009.01.08)
யாழ் கருத்துக்களம்
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”