முகம் அறியாத உறவிற்கு ஒரு கடிதம்
எனக்காகத் தீக்குளித்த உடன்பிறப்பே, இனத்திற்காய் உயிர் துறந்த உறவே, உன் பெயர் அறியேன், உன் முகம் அறியேன், சரியான உன் முகவரி அதுதானும் அறியேன், ஆயினும் இதை எழுதுகிறேன். இக் கடிதம் உனக்கு வந்துசெராது என்பதுவும் எனக்குத் தெரியும். ஆனாலும் உன் அர்ப்பணிப்பைக் கூறாமல் இருக்க முடியவில்லை. எம் தேசத்தின் இளம் தலைமுறை இன்று புதிய விதத்தில் சிந்திக்கத் தொடங்க வேண்டும் என்பதற்காய் எழுதுகின்றேன்.
நீ தீக்குளித்த செய்தி அறிந்து திகைத்தேன். வேதனையோடு வெட்கத்துள் முகம் புதைத்து அழுதேன். உனக்காக மட்டுமல்ல, என்னையும் எண்ணித்தான். பேர் அறியா உறவே என்னை உனக்குத் தெரியாது, ஆனால் இன்று எனக்கு மட்டுமல்ல உலகத்திற்கே உன்னைத் தெரிந்துவிட்டது. என் மனக் கண்ணில் நீ நடாத்திய யாகம் தெரிகிறது. நீ எழுதிய இறுதி வரிகளும் தெரிகிறது. நீ எரிகிறாய், நெய்யாய் உருகிறாய், புழுவாய் நெளிந்து விழுகிறாய், ஐயனே நீ படும் வேதனையை என்னால் எண்ணிப் பார்க்கவும் முடியவில்லை. ஏன் இந்த வேதனை? யாருக்காக இந்தத் தியாகம்? எனக்காகத்தானே, என் உறவுக்காகத்தானே, என் அம்மாவிற்காக, என் அப்பாவிற்காக, அக்காவிற்காக, தம்பி தங்கைக்காக, என் குடும்பத்திற்காக, எங்கிருந்தோ நீ உன்னை வருத்தி உயிரை விட்டாய். ஆனால் நான் மட்டும் இங்கே, என் உறவிற்காக உயிர் நீத்த உத்தமனே ,ஏன் இப்படிச் செய்தாயோ? எனக்குப் புரிகிறது. உனக்கும் ஒரு சொந்த நாடு இருந்திருக்குமானால் நீ இப்படி யோசித்து மாண்டிருக்க மாட்டாய். படைதிரட்டி வந்து தமிழன் யார் என்பதைக் காட்டியிருப்பாய். என்ன செய்வது? உலகம் எங்கும் பறந்து வாழும் தமிழனுக்கு ஒரு நாடு இல்லை. சுதந்திரமாய் குந்தி இருக்க ஒரு கூடு இல்லை, தமிழனாகப் பிறந்ததற்காக நிம்மதியான ஒரு வாழ்வு இல்லை. இந்த அவல நிலைமையை மாற்றப்போவது தமிழீழம்தான் என்பதை நீ சரியாகப் புரிந்து கொண்டாய். தமிழன் என்றாலும் உலகில் எந்த மூலையில் வந்தாலும் உணர்வால் ஒன்று பட்டவன் என்று தத்துவத்திற்கு புத்துயிர் ஊட்டிவிட்டாய். என் இனத்தின் இரத்தமே, உன் தேசத்தில் நீ மூட்டிய நெருப்பு உன்னை மட்டும் எரிக்கவில்லை. தமிழ் உருவத்தில் எதிரிக்கு கொள்ளி கொடுக்கும், கோடரிக் காம்புகளின் போலி முகத் தோலையும் எரித்துவிட்டது. எம் தேசத்தில் இளைஞர், யுவதிகளின் நெஞ்சத்திலே புதிய வேகத்தை ஊட்டிவிட்டது. இனியும் எம் இன்லம் தலைமுறை உறங்காது. விழித்து எழும். எம்பகி வேருடன் விழும். உன் நினைவு நெஞ்சத்தில் நீங்காது வாழும்.
இப்படிக்கு
தமிழீழத்தின் உடன்பிறப்பு.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”