மேஜர் தணிகைவேல்
எப்படி மறப்பது……
அண்ணா உங்கள் நினைவுகளினை……..
நண்பனாக நீங்கள் நின்ற காலங்கள்,கண்ணெதிரே……..
நண்பனே தலைமைத்துவத்தில் உங்களுக்கு நிகர் நீங்களே…
அணிகள் நகர்வதென்றால் அங்கே அணியின் ஆசானாக கடமையில் கால் பதிப்பது நீங்களே.
சண்டைக்களம் என்றாலும் சரி,சாதாரண நகர்வென்றாலும் சரி அங்கே அணியின் ஒருங்கிணைப்பாளன் நீங்களே அண்ணா. நான் உங்களோடு அதிக காலம் பழகியதில்லை இருந்தும் அந்த சிறிய காலத்தில் உங்களின் நட்பு மறக்க முடியாத நினைவுகள் அண்ணா.
ஒன்றா,இரண்டா நினைவலைகள்…….
2007 ஆம் ஆண்டு தை மாதம் திருமலை தியாகவனம் தளம். நாம் எல்லோரும் ஒரு நகர்வுக்கான தயார் படுத்தலில், அணிகளினை தளபதி லெப். கேணல் வியஜகாந்த் அண்ணன் ஒழுங்குபடுத்திய வேளை. “தம்பி தணிகைவேல் கவனமாகப் போகவேணும். ஆமி கண்டால் அவதிப்பட்டு அடிக்காதை……. நிலைமைகள் தெரியும் தானே கவனமாக அணிகளினை கொண்டு வரணும்” என்ற அன்பான கட்டளையினை வழங்கினார்….
அது மட்டக்களப்பில் இருந்து வரும் அணிகளினை எங்களின் தளங்களுக்கு கொண்டு வருகின்ற முக்கிய பணி. ஆம் காயப்பட்ட போராளிகளையும் பல முக்கிய தளபதிகளையும் கொண்டு வரும் அந்த பணி.
பிரிகேடியர் சொர்ணம் அண்ணன் வருகின்ற அணியல்லவா.
கவனமாக அவர்களினை எங்களின் தளத்துக்கு கொண்டு வரவேண்டும். அந்த அணிக்கு தணிகைவேலே தலமைதாங்கினான். ஆண் போராளிகளும்,பெண் போராளிகளுமாக 25 பேர்களாக அந்த அணியில் பயணத்தினை தொடர்ந்தோம். காடுகள் எல்லாமே தணிகைவேலுக்கு பழகிப் போன இடமாக இருந்ததினால் அவனுடைய வேகம் இன்னும் பல மடங்காகி இருந்தது……..
ஆட்கள் குறைவான போதும் அன்றைய தினம் எங்கள் தளத்திலே 10 பெயர்தான் இருந்தனர். அவர்களும் காயப்பட்ட போராளிகளே. எங்களின் அணி நகர்ந்தவண்ணம் இருந்தது. மொரவா குளம் நோக்கி அந்த பயணம், களைப்பு மிகுதியுடன் நகர்ந்தோம். அந்த இடத்தினை நெருங்கிய போது எதிர்பாரதவிதமாக தணிகைவேலுவின் காலில் நல்ல பாம்பு தீண்டியது.அதை கவனித்தது நான் தான். அண்ணை காலில் பாம்பு கடிச்சிட்டுது என்று அவரிடம் சொல்ல…..
“யாரிடமும் சொல்லிடாத இப்ப சொன்னால் எல்லோரும் பயப்பிடுவாங்கள்,அது சரியாகிவிடும்.” என்று சொன்னான். காரணம் அந்த இடத்திற்குரிய நகர்வுகள் எல்லாமே தணிகைவேலுக்குத்தான் தெரியும்… அவனுக்கு இப்படி என்றால் அங்கே இருப்பவர்களுக்கு பாதைகள்,இடங்கள் ஒன்றுமே தெரியாது …
உடனே அவன் தனக்கு எதாவது நடந்திடும் என்று தெரிந்தும், எங்கள் தளத்திற்கு தொடர்பு கொண்டு வியஜகாந்த் அண்ணனை அங்கே வரச்சொன்னான்.அவரும் நிலைமையைப் புரிந்து கொண்டு அங்கே இருந்து 4 போராளிகளினை அழைத்துக் கொண்டு வந்தார். அதற்கிடையில் இங்கே நிலைமைகள்????????……
தணிகைவேல் அண்ணா மயக்கமாகினான், அது மருத்துவ ப் போராளிக் கு மட்டுமே தெரியும் அதற்கான மருத்துவம் கொடுத்திருந்தான். அண்ணா என்னிடம் சொன்னான் தணி கைவேலை தூங்கவிடாதே என்று. அவருக்கு அருகிலே நான் இருந்தேன். அடிக்கொரு தடைவைகள் தடவிப்பார்ப்பதும்……
ஆனால் கடவுள் பாக்கியத்தினால் அவன் தப்பித்து விட்டான். அப்படியே அவனுடைய நினைவலைகள் …. தணிகைவேல் என்ற பெயருக்கு ஏற்ற மாதிரியே அவனுடைய செயற்பாடுகளும். தனிமையே அதிகம் விரும்பும் சுபாவம் கொண்டவன்.தனக்கான கொட்டி லையும்,பதுங்கு குழியையும் தனியாகவே அமைப்பான். சிரித்த முகத்துடனே எப்போதும் இருப்பவன்.
அண்ணா என்று அழைத்தாலும்,அவனை நான் நண்பனாகவே நினைத்தேன்.அவனும் அப்படியே பழகியவன்..அடிக்கடி ஒன்றை மட்டும் கூறுவான் “நான் றோயலை பார்க்கணும்” ஆம் அவனும் இவனும் நண்பர்கள் இருந்தும் நேரடியாக சந்திப்பது அரிதாகவே இருந்தது. றோயல் அண்ணா கும்புறுப்பிட்டியிலே இருந்தவர்.,,,,
அண்ணா நான் உங்களிடம் பலவற்றினை பார்த்திருக்கின்றேன். அணியினை ஒன்று கூடலுக்கு அழைத்து கதைக்கும் போது உங்களுக்கே தெரியாது நீங்கள் காலினை ஆட்டியபடியே கதைக்கும் அழகு…… அணிகள் கலைகின்ற போது எனக்கும் சென்றி (காவல் கடமை) போடுங்கள் என்று கூறும் பண்பும் இன்றும் என் கண்களின் முன்னே வருகின்றதண்ணா.
கடைசியாக நான் வன்னிக்கு போக வேண்டி புறப்பட்டபோது கட்டிப்பிடித்து “மறந்திடாதடா வன்னிக்கு போனபிறகு, நீ பிறகு வரும்போது நான் இருப்பனோ தெரியாதடா, இருந்தால் பார்ப்போம் இல்லாட்டி நீ தானடா என்னை துயிலும் இல்லத்தில் வந்து பார்க்கணும்” என்று சொன்னாயடா …….
கட்டித்தளுவியே நான் விடை பெற்றேன். நண்பனே நீ சொன்னது நடந்தது ஆனால் நான் இன்னமும் உன்னுடைய கல்லறையையும் பார்க்கவில்லையடா. நண்பனே நீ நினைத்தது நடக்கும் காலம் மிக விரைவினிலேயே. உன் பணி நான் தொடர்வேன் இது உங்கள் மேல் உறுதி. அன்றே நான் வருவேன் உனது கல்லறை காண இல்லையோ உனதருகில் அமருவேன் கதைபேச மாவீரன் ஆக……….
நினைவுப்பகிர்வு:- போராளி ஈகன்
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”