தாயும் மகளும்…….
போராட்டக் களத்தினிலே மாவீரர்களாகிவிட்ட போராளிகளை ஈன்றெடுத்த பெற்றோர்களின் மனம், இவ்வீரர்களைப் பெற்றதற்காக ஒரு புறம் பெருமிதம் கொண்டபோதினிலும், மறுபுறம் ஏக்கம் கலந்த ஒரு வெறுமையும்கூட அங்கு உள்ளது. எனினும் ஏதோ ஒரு நம்பிக்கை கலந்த நிலையினிலேயே பெரும்பாலான பெற்றோர்கள் வாழ்கின்றார்கள். இப்போராட்டத்திற்குத் தொடர்ந்தும் தமது பங்களிப்பை வழங்கி வருகின்றார்கள். அந்த வரிசையிலே 2ம் லெப். சாளினியின் பெற்றோரை இங்கு சந்திக்கின்றோம்.
சாளினி அக்காவின் வீட்டுவாசலைத் திறந்து ”அம்மா” என்றவாறு உள்ளே செல்லவும், ”வாருங்கோ பிள்ளையள், சாளியை உங்களுக்குத் தெரியுமா?” என்று சிரித்தபடி எங்களை வரவேற்று அமரச் செய்தார் அம்மா. பின்னர், ”இருங்கோ, பிள்ளையளுக்கு ஏதாவது குடிக்கக் கொண்டு வாறன்” என்றவாறு இரு நிமிட இடைவெளிக்குள் எலுமிச்சம் பழச்சாற்றை எமக்குப் பருகுவதற்குத் தந்தபடியே ”என்ன விசயம்? என்னிட்ட வந்திருக்கிறியள்?” என்றார் புன்னகை மாறாத முகத்துடன்.
பெரும்பாலும் மாவீரரைப் பெற்ற தந்தையோ, தாயோ சக போராளி ஒருவரைக் காணும் வேளையில், மடைதிறந்த வெள்ளம் போல் அழுவதைத்தான் நான் கண்டிருந்தேன். ஆனால் இத்தாயோ கவலைகள் அனைத்தையும் மனதினுள் புதைத்துவிட்டு எங்களுடன் எப்படி உரையாடுகின்றார் என நினைத்தபோது வியப்புத்தான் தோன்றியது. இவ்வேளையில் அவ்வன்னையின் குரல் எம்மைத் திசை திருப்பியது.
”மாவீரரைப் பெற்ற ஒரு தாய் என்னும் ரீதியில் உங்களுடன் சிறிது உரையாட வந்துள்ளோம்” என்று நாம் கூறவும், மலர்ந்த முகத்துடன் அம்மா உரையாடத் தொடங்கினார்.
”உங்களைப் பார்க்கும் போது என்னுடைய சாளியின் நினைவு தான் வருகிறது. வீட்டின் மூன்றாவது பிள்ளைதான் அவள். மிகவும் துடிப்புடைய துணிச்சல்காரி. மெலியோரை வலியோர் வதைப்பதைப் பொறுக்காதவள். பாடசாலை வாழ்க்கையின் போது கலைத்துறையில் மிகவும் ஈடுபாடு கொண்டு பரிசில்கள் பலவும் பெற்றுக் கொண்டவள். திரைப் படத்தைப் பொறுத்த வரையில் மோதல் காட்சிகள் அதிகமாக உள்ள படங்களைத்தான் மிகவும் ரசிப்பாள்.”
விடுதலை அமைப்போடு தொடர்பு ஏற்பட்டது பற்றி வினவியபோது,
எங்களது குடும்பம் இயக்கம் ஆரம்பமான காலத்தில் இருந்தே அதனுடன் ஒன்றியபடி தான் வாழ்ந்து வந்திருக்கின்றது. எமது ஊரான வல்வெட்டித்துறை, சிங்களப் பொலிசார் தொடக்கம் இந்திய இராணுவம் வரையிலான அழிவுகளை ஏற்றுக்கொண்ட நிலமாகும். மேலும் சாளியின் தந்தையும் மிகவும் தீவிரமான விடுதலை உணர்வு மிக்கவர். இந் நிலையில் அன்று தொடங்கிப் பலமுறை சிறை சென்று சித்திரவதைகள் அனுபவித்தவர். இதுவே ஒரு காரணமாக, இவளும் இயக்க வேலைகள் பலவற்றை இளம் வயதிலேயே செய்து கொண்டிருந்தாள்.
மூத்த பெண்ணும் இதில் பங்குகொண்ட போதினிலும், இவளைப் போல உளவு சொல்வதில் துணிந்து ஈடுபடவில்லை. இவளின் துணிவைப் பாராட்டி ஒரு சம்பவம் கூறுகின்றேன்.
இந்திய இராணுவம் எங்கள் பகுதியில் நிலைகொண்டிருந்த வேளையில் கணவன் துரோகிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டார். இவரைப்போலவே பலரை இராணுவம் கைதுசெய்து கொண்டு முகாம் சென்றுவிட்டது. இதனால் அவர்கள் அனைவரையும் விடுவிக்கும் நோக்கில் மாணவர்கள் தொடக்கம் வயது முதிந்தோர் வரை முகாமின் முன் சென்று கூச்சலிட்டோம். இராணுவமோ எங்களை உள்ளே வராதபடி முட்கம்பிகளைப் போட்டது. ”முதலில் எழுந்த சாளி, துப்பாக்கிகள் நீட்டப்பட்டபோதினிலும் துணிந்து முன்சென்று கம்பிகளை இழுத்தெடுத்து அப்புறப்படுத்தியபடியே உள்ளே சென்றுவிட்டாள். இதனை அடுத்துக் கூட்டம் முழுவதுமே உள்ளே நுழைந்துவிட்டது. இயலாமை காரணமாக இராணுவம் இறுதியில் அனைவரையுமே விடுதலை செய்தது”.
போராட்டம் பற்றிய அவரின் கருத்தினைக் கேட்டவேளை,
”பன்னிரண்டு வயதினிலேயே போராடவேண்டும் என்ற கரு அவளின் மனதில் இருந்தது”. ”சீ…எங்கடை கையிலே ஒண்டுமில்லையே இவங்களைச் சுடுவதற்கு” என்று தனது ஆற்றாமையை வெளிப்படுத்துவாள். அவள் 1989இல் தன்னை முழுமையாக விடுதலைப் போராட்டத்தினில் இணைத்துக்கொண்டாள்”.
”போராட்டத்தில் அவளின் பங்களிப்பைச் சமுதாயம் வரவேற்றுக் கொண்டதா?”
”இல்லை, எனது உறவினர்கள் அனைவருமே கொழும்பில் வசிப்பவர்கள். அவர்கள் இதைப் பற்றி ஒன்றும் கேட்பதில்லை. ஆனால் சாளியின் தந்தையின் சொந்தபந்தங்கள் அனைவரும் குறைகூறத் தலைப்பட்டனர். ‘பொம்பிளைப் பிள்ளையெண்டால் அடக்கமாக இருக்கவேணும். வீட்டோடை அடக்கி வைச்சுப்போடு, உங்களால எல்லோருக்கும்தான் கடைசியில் ஆபத்து’, என்று குறை கூறுவார்கள். நானோ எனது பிள்ளையை விட்டுக் கொடுக்கமாட்டேன். ”தாய், தந்தையின் வழி எதுவோ, அதன்படிதானே பிள்ளைகளும் செல்லவேணும். எனது பிள்ளையைப் பற்றி எனக்குத் தெரியும். இராணுவம் அழிக்கும் போதுதான் நிலைமை உங்களுக்குப் புரியும் என்பேன்”.
”சாளினி முழுமையாகத் தன்னைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டவேளையில் என்ன மன நிலையில் இருந்தீர்கள்?”
குடும்பத்தில் உள்ள அனைவருமே பெரும்பாலும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காரணத்தினால் மகளின் சேவைக்கு நான் தடை விதிக்கவில்லை. ஊக்கமே கொடுத்து வந்தேன். இருப்பினும் என்றாவது ஒரு நாள் என்னை விட்டுப் பிரிந்து செல்வாள் என்பதை நான் எதிர்பார்த்துத்தான் இருந்தேன். ஆனாலும் அவள் சென்றுவிட்டாள் என அறிந்தபோது துடித்தேன். ஏனெனில் வீட்டினைப் பொறுத்தவரை அனைத்து வேலைகளையும் பொறுப்புடன் செய்யக்கூடியவள் அவள்தான். அயலில் என்ன நிகழ்வுகள் நடப்பினும் அங்கு நிச்சயம் நிற்பாள். அதனால் முதலில் வேதனை அடைந்த போதிலும் எனது கணவரின் வார்த்தைகளால் ஆறுதல் அடைந்தேன். உறவினர்களின் கதைக்கு நான் அசைந்து கொடுக்கவில்லை, மாறாக வீட்டுக்கொரு பிள்ளையாவது நிச்சயம் போராடத்தான் வேண்டும் என்று அவர்களுக்குப் பதில் வழங்கினேன்.
மேலும் இன்றைய கால கட்டத்தில் விடுதலைப் போரில் பெண்களின் பங்களிப்பும் நிச்சயம் தேவை. இரு பாலாரும் இணைந்து போராடினால் தான் விடுதலையைப் பெற்றுக்கொள்ளலாம். ஆகையினால் எனது மகள் நாட்டிற்குச் சேவை செய்யச் சென்றதனைப் பெருமையாகவே நினைத்தேன். அவள் போராளியாக மாறிய பின் எங்களால் மறக்க முடியாத சம்பவம் ஒன்றே ஒன்றுதான் மிக முக்கியமானது. ஒரு முறை எனது கணவர் ஓர் இடத்தில் ஒப்பந்த அடிப்படையில் கட்டிட வேலை செய்துகொண்டிருந்த சமயம் எனது மகள் சகபோராளி ஒருத்தியுடன் வந்து, மண் ஏற்றுவதற்காக உளவு இயந்திரம் ஒன்றைக் கேட்கவும், உரிமையாளரோ ” சாரதி இல்லை” என்று பதிலளிக்கவும், சற்றுத் தள்ளி வேலை செய்துகொண்டிருந்த தனது தந்தையிடம், தந்தை மகள் என்று காட்டிக்கொள்ளாமல் ஏனைய தொழிலாளிகளுடன் உரையாடியது போலவே உரையாடி உதவி கேட்டாள். அந்த நிகழ்வை இன்னும் எங்கள் இருவராலும் மறக்க முடியாதுள்ளது.
சாளி சென்ற சிலமாதங்களின் பின் இளைய மகனும் சென்றுவிட்டான். சிறியவனான அவனுக்குக் காடு ஒத்துப்போகாத காரணத்தினால் நோய் ஏற்படத் திரும்பி வந்து விட்டான். அவ்வேளையில் வீடு வந்த சாளி ‘இயக்கத்துக்குப் போனாத் திரும்பி வரக்கூடாது. ஏன் வந்தனீ?’ என்று தம்பியைக் கண்டித்தாள். வீட்டில் விடுமுறையில் இருந்த சிலனாட்களிலும் கூட பல பிள்ளைகளைப் போராட்ட வழியில் இணைத்தாள். இவளின் உற்ற நண்பி யாரெனில் தற்போது வீரச்சாவடைந்த கப்டன் சந்தியா தான், அவளையும் இப் போராட்டப் பாதையில் இணைத்தவள் சாளிதான்.
இவ்வளவிற்கும் எனது மகளின் இழப்பை எப்படித் தாங்கிக் கொண்டேன் என்பது புரியாத நிலையிலேயே உள்ளது. 1990 ஆடி 10ம் திகதி அன்று கடற்புலிகளான கொலின்ஸ், காந்தரூபன், வினோத் ஆகியோரால் இலங்கைக் கடற்படைக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்கு மறுநாள், கடற்படையினரும், விமானங்களும் குண்டுத் தாக்குதலை நடத்தலாம் என்ற அச்சத்தால் பெரும்பாலான மக்கள் இடம்பெயர்ந்து விட்டனர். எங்களையும் அழைத்தனர். நாங்கள் மறுத்துவிட்டோம். ஊரே வெறிச்சென்று இருந்த வேளையில், தந்தையும் மகனும் கடலின் நிலைமையைப் பார்க்கச் சென்று விட நான் தனியே இருந்தபோது, வீதியில் வாகன இரைச்சல் கேட்கவும், மகள்தான் வருகின்றாள் என்ற சந்தோசத்தில் எழுந்து ஓடிச்சென்றேன். வாகனத்தை விட்டு இறங்கிய ஒரு பெண் போராளியின் பின் தோற்றம் எனது மகளைப் போல் இருக்க ‘குட்டி அம்மன்’ என்று அழைத்தேன்.
வீட்டினில் செல்லமாக முன்பு அப்படித்தான் அழைப்பேன். உடனேயே அந்தப் பிள்ளை திரும்பிப் பார்த்தது. என்னிடமே ‘சாளியின் அம்மா வீடு எதுவம்மா?’ எனக் கேட்டது. நான் தான் சாளியின் அம்மா. என்ன விசயம்? என்றேன். அவர்கள் சொல்லுவதற்குத் தயங்குவதைக்கண்ட நான் ”என்ரை பிள்ளைக்கு என்ன நடந்தது? காயமோ?” என்று கேட்டவாறு அழத்தொடங்கிவிட்டேன்.
அவர்கள் தயங்கியபடியே மெதுவாக விடயத்தைச் சொல்லி ஆறுதல் கூறிச் சென்றதன் பின்னர் இருமணி நேரம் உறவினர்கள் யாரும் அருகில் இல்லாத நிலைமையில் தனித்திருந்து, கதறி அழுதேன். அந்தக் கொடுமையைக் கூறமுடியாது” என்றார் நாத் தழுதழுத்த குரலில்.
சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கூறலானார்.”விடயம் அறிந்த பின்னரே சிறிது சிறிதாக உறவினர் வந்து ஆறுதல் கூறினார்கள். இவ்வளவிற்கும் எனது மனம், ‘மகள் எப்படிச் செத்தவள்’ என்று கேட்கவேண்டும் என்று ஆவலில் துடித்தது. வேதனையை மறைத்தபடியே அங்கு வந்திருந்த சகபோராளியிடம் இவளைப் பற்றிக் கேட்டேன். அப்போது கப்டன் சுந்தரி ” அம்மா! உங்கட மகள் கொக்காவிலில் முன்னுக்குப் போய்ச் சண்டை பிடிச்சுத்தான் வீரச்சாவடைந்தவள்’ எனக் கூறினார். அதன் பிறகுதான் எனது மனம் அமைதி அடைந்தது. பிள்ளையை இழந்த துயர் இருந்தபோதிலும், நேரடிச் சண்டையில்தான் உயிரைக் கொடுத்தவள் என்பதையும், அவளின் வீரதீரங்களைச் சக போராளிகளின் வாய் வழியாகக் கேட்ட காரணத்தினாலும் எனது மனம் அவளைப் பெ ற்றதற்காகப் பெருமையே கொண்டது. ஆனாலும் இன்னும் சிறிது காலம் நாட்டிற்காகச் சேவை செய்ய இருந்திருக்கக் கூடாதா ? என்ற ஏக்கமும் எனக்கிருந்தது.
மேலும் சாளியின் இழப்பு என்னைவிட என் கணவரையே அதிகம் பாதித்தது. நானாவது அழுது எனது துக்கத்தினை ஆற்றிக்கொண்டேன். அவரோ மனதினுள் வைத்துப் புழுங்கினார்.இதன் விளைவு சிறிது புத்தித் தடுமாற்றத்தினையே ஏற்படுத்திவிட்டது. ஆறுதல் வார்த்தைகளைச் சுமந்த கடிதங்கள் பல இங்கு வரும். இவையெல்லாம் மனதை ஆற்றுமா ? வேதனையைத் தீர்க்குமா? இவற்றைவிட முன்பு இயக்கத்திற்குப் போய்த் திரும்பி வந்த இளைய மகனின் போக்கில் மாற்றம் ஏற்படுவதைக் கண்டேன்.
‘அம்மா’ என்றவாறு என்னைப் பார்க்க ஓடி வருவார்கள். இப்படியான பிள்ளைகளையும், தியாகங்களையும் கடந்து எப்படி வேறெங்காவது போவது? போராடுவதற்கு ஒன்று, இரண்டு காரணங்கள் கூறி முடிக்க முடியாது. அது பல எல்லைகளைக் கடந்த சக்தி. இதுவே எமக்குத் துணையாக இருந்து போராட வைக்கிறது.
அமைதியாக இருந்து, சாளியின் எட்டுச் செலவின் போது அவற்றை எல்லாம் நன்றாகச் செய்து முடித்த பின்னர் தன்னையும் இயக்கத்தில் இணைத்து கொண்டுவிட்டான்.
வேதனையில் இருந்த நாம் இதனைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மகனை வரும்படி அழைத்தேன். ‘நீயாவது எங்களுடன் வந்து இரடா’ என்று கூறி அழுதேன். அவனோ ‘எனது அக்காவின்ரை இடத்தை நிரப்ப ஒருவராவது வேண்டாமா? தயவு செய்து என்னைக் கூப்பிடாதைங்கோ’ எனக் கூறிவிட்டான். வீட்டிலிருக்க விருப்பமில்லாத ஒரு பிள்ளையை எப்படி அழைத்து வருவது? ஆகையினால் வேதனைகளைத் தாங்குவதற்கு நானும் பழகிக்கொண்டேன். என்னிடம் வரும் போராளிகளை என் பிள்ளைகளாகவே காண்கிறேன். தென்மராட்சியில் இருந்தும் கூட ‘அம்மா’ என்றவாறு என்னைப் பார்க்க ஓடி வருவார்கள். இப்படியான பிள்ளைகளையும் தியாகங்களையும் கடந்து எப்படி வேறெங்காவது போவது? போராடுவதற்கு ஒன்று, இரண்டு காரணங்களைக் கூறி முடிக்க முடியாது. அது பல எல்லைகளைக் கடந்த சக்தி. இதுவே எமக்குத் துணையாக இருந்து போராட வைக்கிறது. மகளின் நினைவுகள் வேதனையைத் தந்த போதிலும், சகல நிகழ்வுகளையும், சோதனைகளையும் சகிப்பதற்குப் பழக்கப்படுத்திக் கொண்டவர்கள் நாங்கள்.
மேலும் தமிழீழ விடுதலைப் போராட்டம் எங்கள் உயிருடன் ஊறிய ஒன்று. அன்று மனம் தளராத காரணத்தினால்தான் போராட்டத்தின் வளர்ச்சியைப் பார்த்து இன்று மனம் குளிர்ந்து நிற்கிறோம். கொக்காவில் என்ற சொல்லைக் கேட்கும் போதெல்லாம் பிள்ளையின் துணிச்சலும் திறமையும்தான் என் கண் முன்னே வரும். இதை நினைக்கையில் எங்களுக்குப் பெருமையாகக்கூட இருக்கும். அவளைப் போன்ற பிள்ளைகளைக் காணும் போதும், அவர்கள் வாயார, மனமார ‘அம்மா, ஐயா’ என அழைக்கும் வேளையிலும் எனது மகள் இறந்துவிட்டாள் என்ற எண்ணமே எனக்கு மறந்து போய் விடுகின்றது. எங்கோ அவள் உயிருடன் இருப்பதாகவே இப்போதும் நினைத்து வாழ்கின்றேன்.
நான் இழந்தது ஒரு பிள்ளையைத்தான். ஆனால் எனக்கு இப்போது எத்தனை பிள்ளைகள் தெரியுமா? கணக்கிடமுடியாது. எப்போது பார்த்தாலும் யாராவது ஒரு பிள்ளை ‘அம்மா’ என்றழைத்தபடி என் முன்னே வந்து நிற்கும். அவர்களைக் காணும்போது எனது வேதனைகளை மறந்துவிடுகின்றேன். ஒரு தாய் தனது பிள்ளைகளுக்கு உணவு படைப்பது போலத்தான், நானும் இவ் வேலையைச் செய்கின்றேன். சுமையாக இல்லை. ஆத்மதிருப்தியை இது தருகின்றது. மேலும் எங்களால் இயன்றளவு, உடலில் உயிர் உள்ளவரையிலும் விடுதலைக்கான சேவையை செய்ய உள்ளோம். மனதில் வேதனை ஏற்படுத்திய காயம் இப்போது ஆறி வருகின்றது. எனது இளைய மகனும் ஆனையிறவுப் போரின்போது காயம் அடைந்திருந்தவேளையில் எனது மனம் அவனுக்காக மட்டுமல்லாது, அனைத்துப் போராளிகளின் சுகத்திற்காகவுமே இறைவனிடம் வேண்டிக்கொண்டது. மேலும் இறுதி மூச்சுவரையிலும் எனது சேவை இந்த நாட்டிற்காகவே தொடரும் என்றார்.
அவ்வன்னையின் அன்பான வேண்டுகோளுக்கிணங்க மதிய உணவை உண்ட பின்னர் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டபோது அம்மா கூறினார் ”போறீங்கள், ஆனால் இந்தப் பகுதியால் நீங்கள் எப்ப வந்தாலும் ஒரு முறை எட்டி ‘அம்மா, ஐயா எப்படி இருக்கிறீங்கள்?’என்று கேட்டால், அதுவே எங்களுக்குப் போதுமம்மா” என்று அன்புடன் கூறி எங்களை வழியனுப்பி வைத்தனர் அந்த அன்புப் பெற்றோர்கள்.
நினைவாக்கம்:- பொன்னிலா.
எரிமலை இதழிலிருந்து தேசக்காற்று.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”