லெப். கேணல் முகிலன்
வெளித் தெரியா வீரியம் லெப். கேணல் முகிலன்.
15.08.2006 நள்ளிரவு நேரம் எமது பகுதியின் தொலைத்தொடர்பு சாதனத்தில் அழைப்பு ஒன்று எடுத்து கதைத்தபோது ஒரு நொடியில் அதிர்ந்து விட்டோம். சில நிமிடங்களின் முன்பே முகமாலைக் களநிலவரம் தொடர்பாக முகிலனிடம் கேட்டறிந்து கொண்டோம். முகிலன் வீரச்சாவா? நம்ப மறுக்கிறது மனம். அவனின் தோழன் லெப்.கேணல் அன்பழகன் தியாகசீலம் சென்று உறுதிப்படுத்த விரைந்தான். தாயக விடுதலைக்காகத் தனது பணிகளை நிறைவு செய்த மன நிறைவுடன் எங்களின் நண்பன் மாவீரன் லெப்.கேணல் முகிலனாகத் துயில்கின்றான்.
22.04.1972 அன்று மகாதேவன்-இராசமலர் தம்பதிகளின் முதல் முத்தாக சிவக்குமார் வேலணையில் பிறந்தான். நல்ல ஒழுக்கமுள்ளவனாக கல்வியில் திறமையாளனாக தந்தையின் சுமையைத் தாங்கும் சுமை தாங்கியாக இருந்தான். கல்வியில்; கல்விப் பொது சாதாரண தரப் பரீட்சையில் நல்ல பெறுபேறுகளைப் பெற்று உயர் தரத்தில் வர்த்தகப் பிரிவில் கல்வி கற்றான். இவனின் ஒழுக்கம், பண்புகள் தான் கற்ற வேலணை மத்திய கல்லூரிக்குப் பெருமை சேர்த்துக் கொடுத்தான்.
உயர் தரம் கற்றுக்கொண்டிருந்த பொழுது இந்தியப் படையினரின் கெடுபிடிகளினால் இவனின் தந்தையார் கொழும்பிலுள்ள உறவினர் ஒருவரின் வியாபார நிலையத்தில் வேலைக்குச் சேர்த்து விட்டார். தனது கல்வியை முழுமையாகத் தொடர முடியாமல் போய்விட்டதை எண்ணி நாளும் வேதனைப்பட்டான். மீண்டும் 1990 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் 2 ஆம் கட்ட ஈழப்போரால் ஊருக்கு வர பல தடவை முயற்சித்தும் தந்தையின் தலையீட்டால் வர முடியாமல் போனது. கொழும்பில் தமிழர்களுக்குக் கெடுபிடி அதிகரித்த பொழுது யாருக்கும் சொல்லாமல் ஊருக்கு வந்து சேர்ந்தார். ஊர் வந்தவர் தந்தையுடன் இணைந்து விவசாயம் செய்து வாழ்ந்து வந்தார்.
நீண்ட இடைவெளியின் பின் பெற்றோர் சகோதார்களுடனும் உறவினர்களுடனும் இணைந்ததில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தான். இவரது வாழ்வில்; 1991 ஆம் ஆண்டு புயல் வீசியது. அவனது ஊரின்மீது சிங்களப் படையினர் மேற்கொண்ட படை நடவடிக்கை காரணமாக இடம்பெயரும் அவலம் நிகழ்ந்தது. சொல்ல முடியாத வேதனையுடன் ஊரைவிட்டு அகன்றான். கிளிநொச்சி-முரசுமோட்டை என்னும் கிராமம் இவனை வரவேற்றது
இடப்பெயர்வு இவனுக்கு மனவேதனையை ஏற்படுத்தியது. புதிய இடமாக இருந்தாலும் விவசாயம் செய்வதற்குச் சிறந்த இடம் என்பதால் ஓரளவு மன நிறைவுடன் தந்தை யாருடன் இணைந்து விவசாயம் செய்தான்.
தனது ஓய்வு நேரங்களில் நூலகம் சென்று புத்தகங்கள் எடுத்து வாசிப்பது இவனின் இயல்பு. அதனால் தனது அறிவை வளர்த்துக் கொண்டான். நூலகத்தில் இவன் வாசிக்காத புத்தகங்களே இல்லையெனலாம். விவசாயம் தன் பணி என்றிருந்த பொழுதும் மனதிற்குள் தாயகத்தில் சிங்களப் படையினரால் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட சம்பங்களை அறிந்தும் பார்த்தும் மனதில் விடுதலைத் தீயை வளர்த்துக் கொண்டான் சிவா.
1995 ஆம் ஆண்டில் 3 ஆம் கட்ட ஈழப்போர் தொடங்கிய பொழுது பல இளைஞர், யுவதி போரில் பங்குகொள்ள போராளிகளாகத் தம்மை இணைத்துக்கொண்ட பொழுது தனது மச்சான்களுடன் சிவா விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டான். சரத்பாபு-10 பயிற்சி முகாம் இவனை முகிலன் என்ற நாமத்துடன் போராளியாக மாற்றிக் கொண்டது. பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது அவனின் தந்தையார் இறந்த செய்தி அறிந்தும் பயிற்சியை நிறைவு செய்த பின்னரே சென்றான்.
பயிற்சியை நிறைவு செய்து வெளியேறிய முகிலனை இம்ரான்-பாண்டியன் படையணியின் வெளிப் பாதுகாப்புப் புலனாய்வு அணிக்கு பிரிகேடியர்.இரட்ணம் மாஸ்ரரால் தெரிவு செய்யப்பட்டான். அக்காலப் பகுதியில் அணிப் பொறுப்பாளராக இருந்த கப்டன்.கௌதமன் அவர்களால் அணியின் கல்விப் பிரிவுக்கு நியமிக்கப்பட்டான். எல்லோருடனும் அன்பாகவும் பண்பாகவும் பழகும் இயல்பும் எளிதில் எல்லா போராளிகளிடமும் இவனை நெருக்கம் கொள்ள வைத்தது. முகாமில் நிற்கும் வேளைகளில் புத்தகமும் படிப்புமாகவே இருப்பான்.
ஒரு தடவை புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் எங்கள் கல்விப் பிரிவினரைச் சந்தித்துக் கலந்துரையாடினார். சந்திப்பின் பொழுது அம்மான் அவர்களிடம் பல கேள்விகள் கேட்டு போராளிகள் தங்களது சந்தேகங்களைப் பூர்த்தி செய்தனர். முகிலனும் அம்மானிடம் கேள்வி கேட்டான். அப்பொழுது இவனை நன்றாகப் பார்த்து விட்டு ‘தம்பி நீ நல்லதொரு புலனாய்வளனாக வருவாய்’ எனக் கூறினார். அதன்பின்னரே அவனின் கேள்விகளுக்குப் பதில் சொன்னார். அம்மான் கூறியதுபோலவே பின்னாளில் சிறந்ததொரு புலனாய்வாளனாக விளங்கினான் எங்கள் முகிலன்.
1996 ஆம் ஆண்டில் சூரியக்கதிர் படை நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்து வன்னி வந்து சில காலம் முகாம் அமைக்கும் பணிகளைச் செய்தான். கழுத்தில் ஒரு துவாய், கையில் ஒரு புத்தகம் இதுதான் இவனது அடையாளம். இவனிடம் நிறையவே எழுத்தாற்றல் இருந்தது. படையணி, புலனாய்வு அணி வெளியீடுகளில் இவனின் எழுத்துக்குத் தனியிடம்.
சண்டைக்குப் போவதற்காக சண்டை பிடிக்கும் இயக்கத்தில் இவனும் இரட்ணம் மாஸ்ரரிடம் சண்டை பிடித்துச் சண்டைக்குச் சென்றான். 1997.01.09 அன்று நடந்த வரலாற்றுச் சமரான ஆணையிறவு-பரந்தன் ஊடறுப்புச் சமரில் உப்பளம் பகுதியில் சமரிட்டான். வெற்றிக்காய் வீழ்ந்தவர்களில் இவனின் தோழர்கள் கப்டன்.அற்புதன், கப்டன்.இராஜேஸ் வீரச்சாவடைந்த பொழுது இவன் வேகங்கொண்டு சமரிட்டான். இச்சமரில் பங்குகொண்டு வெற்றிக்கு பங்கு செய்து வீரத்தழும்புடன் தளம் திரும்பினான். தளத்தில் மீண்டும் தனது பணியைச்செய்து கொண்டு இருந்தவனுக்கு புதிய பணி இவனை உள்வாங்கியது. அதாவது, இவனுக்கு சிங்களமும் தெரியும் என்பதாலும் இவன் ஆழமான சிந்தை கொண்டவன் என்பதாலும் இரட்ணம் மாஸ்ரர் இவனை இராணுவத்தினரின் உரையாடல்களை ஒட்டுக்கேட்கும் பணிக்கு நியமிக்கப்பட்டார். அறிவும் ஆற்றலுமுள்ள இவன் விரைவாகப் பணியின் நுணுக்கங்களை அறிந்து தனக்கு வழங்கப்பட்ட பணியைத் திறம்பட செய்தான். இவன் தரவுகளின் அடிப்படையில் ஒருசில கரும்புலித் தாக்குதலுக்கு பேருதவியாக இருந்தது. இதனால், பிரிகேடியர்.ஆதவன் அவர்களால் பாராட்டப்பட்டவன் எங்கள் முகிலன்.
2000 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இம்ரான்-பாண்டியன் படையணித் தளபதியாக இருந்த இரட்ணம் மாஸ்ரர் தலைவரினால் படையப் புலனாய்வுப் பொறுப்பாளராக நியமிக்கப் பட்டார். இரட்ணம் மாஸ்ரர் இவனையும் தன்னுடன் அப்பிரிவுக்கு அழைத்துச் சென்றார்.
இவன் இரட்ணம் மாஸ்ரரின் நம்பிக்கையாளனாகவும் தோழனாகவும் செயற்பட்டான். இரட்ணம் மாஸ்ரர் யாருடனும் இலகுவில் மனம் விட்டு பழகுவதில்லை. பணியும் தானு மாக இருப்பவர். அப்படிப் பட்டவரையே தன்னுடன் நெருங்கிப் பழக வைத்தவன் எங்களின் முகிலன். படையப் புலனாய்வுப் பிரிவு மீள்ளொழுங்கு செய்வதில் இரட்ணம் மாஸ்ரரு டன் கடுமையாக உழைத்தவன். இவன் ஒரு தொய்வு நோயாளனாக இருந்தும் பணிக்கும் முன் அவனுக்கு நோய் ஒன்றும் பெரிதாக தெரிந்ததே இல்லை. 2002 இல் அவனது 30 ஆவது அகவையில் தனது மச்சாளைத் திருமணம் செய்து மகிழ்வாக இருந்தான். அதன் பேறாக மகன் பிறந்தான். மிகவும் மகிழ்வுற்றான். குடும்பத் தலைவனாக இருந்த பொழுதும் தன் பணியை ஒருபொழுதும் மறந்ததில்லை. குடும்பத்தைக் காரணம் காட்டிப் பணிக்கு பின் நிற்கவில்லை. அவனின் எண்ணம், சிந்தனை, கனவு எல்லாமே தன் பணியைப் பற்றியதே. இருந்தும் அவன் தனது மனைவிமீது அளவு கடந்த அன்பும் பாசமும் வைத்திருந்தான். அதன் வெளிப்பாட்டை அவனது மனைவியை காண்பதில் புரிந்து கொள்ளலாம்.
வன்னியிலிருந்து பணியாற்றியவனை 2002 ஆம் ஆண்டு சமாதானக் காலம். இராணுவ ஆக்கிரமிப்புக்குள்ளான யாழ் மண்ணில் தனது புலனாய்வுத் திறனால் இயல்பாக பணியைச் சிறப்பாகச் செய்தான். சமாதானக் காலத்தில் வன்னிப் பகுதியில் படையினரின் ஆழஊடுருவல் அணியின் (LRP) நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதில் இவன் பங்கு மிகப் பெரியது. வவுனியாவிலும் இவனின் பணி தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு இரணைமடுவில் அமைந்துள்ள எமது வான் தளத்தை அழிக்கும் நோக்குடன் சிங்களப் படை யின் ஆழஊடுருவல் அணி பெரியளவிலான படை நகர்வை நடவடிக்கைக்காக நகர்ந்து கொண்டிருந்தது. அப்போது வவுனியா–ஓமந்தை சாவடியில் ஓர் இராணவ வீரனை இவன் மாற்றி வைத்திருந்தான். அந்த இராணுவ வீரன் தந்த தகவலின் அடிப்படையில் ஆழஊடுருவல் அணியினரின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டதுடன், வான்தளமும் பாதுகாக்கப்பட்டது. இவ்வாறு இவனின் பல தகவல்களினால் அன்று எமது இயக்கம் பாதுகாக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
யாழில் பலாலி படைமுகாமை அண்மித்த பகுதிகளில் மக்களுடன் மக்களாக நின்று தனது பணிகளைச் செய்து வந்தான். சமாதானம் குழம்பும் நிலையை அண்மிக்க முன் அவ்வேளை படையப் புலனாய்வுப் பொறுப்பாளராக இருந்த கேணல்.சாள்ஸ் அவர்களால் அவசரமாக வான் எதிர்ப்பு ஏவுகணைகள் யாழ்ப்பாணத்திற்குக்கொண்டு செல்லவேண்டும் எனக் கூறிய பொழுது மிகவும் இறுக்கமான இராணுவத் தடைகளைத் தாண்டி மிகவும் விரைவாகக் கொண்டு சேர்த்தான் எங்கள் முகிலன். இதற்காக தலைவர் அவர்களினால் பாராட்டையும் பரிசினையும் பெற்றுக்கொண்டான்.
11.08.2006 அன்று முகமாலையில் 4 ஆம் கட்ட ஈழப்போர் தொடங்கிய பொழுது அச்சமரை வழி நடத்திய கட்டளைத் தளபதி பிரிகேடியர்.தீபன் அவர்களின் அழைப்பை ஏற்று கேணல்.சாள்ஸ் அவர்களின் அனுமதியுடன் பளைப் பகுதியில் ஓட்டுக்கேட்கும் பணியைச் செய்தான். அத்துடன், யாழ் குடாவில் கிளைமோர் தாக்குதலுக்குரிய வழி நடத்தலையும் மேற்கொண்டிருந்தான்.
15.08.2006 அன்று மாலை பளைப் பகுதியில் தனது கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். எங்கும் எறிகணை வீச்சுத் தொடர்ந்த வண்ணமிருந்தது. அதில் தொலைவில் வீழ்ந்து வெடித்த எறிகணை ஒன்றின் சிதறல் இவனின் இதயத்தைத் துளைத்து எங்களிடமிருந்த எங்களின் அன்புத் தோழன் முகிலனைப் பறித்துக் கொண்டது. இவனின் இழப்பினைத் தங்களில் ஒருவனை இழந்ததுபோல் முரசுமோட்டைக் கிராமமே சோகத்தில் மூழ்கியது. இறுதி விடை பெற்ற எங்களின் தோழன் லெப்.கேணல் முகிலனாக கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் தூயிலுமில்லத்தில் தாயகத்திற்காக தனது பணியை நிறைவு செய்த மனநிறைவுடன் உறங்கிக் கொண்டான் எங்களின் முகிலன்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”