கடற்கரும்புலி மேஜர் வித்தி
கடலின் மடியில்…………
எமது மண்ணை ஆக்கிரமித்திருக்கும் சிறிலங்கா கடற்படையால் எமது மக்கள் அனுபவித்து வருகின்ற துயரங்கள் சொல்லில் அடங்காது.
எமது மக்களின் குருதி சிந்தி எங்களின் கடல் செங்கடலாய் ஆனது.
“என்றுதான் விடியுமோ?” என்று உளத்தே கவலை மிகக் கொண்ட வாழ்வு.
தொண்டைக்குழி இறுகி அந்தரத்தே தொங்கும் வாழ்வு ஒரு கேடா?
சிறிலங்கா கடற்படைகளின் அட்டகாசம் எல்லை கடந்து போயிற்று. எந்த நேரமும் இரவு பகல் என்று பாராது செல்லடிக்குள் சீவியம் நடத்தினர் மக்கள். கடும் பட்டணி கிடக்க நேரிட்டபோது கடலுக்குத் தொழிலுக்குச் சென்றவர்கள் பிணமாய் மிதந்தனர்.
வீடிழந்தும், வாசலிழந்தும், துணையிழந்தும், தொழிலிழந்தும் துக்கித்து நிற்கின்ற அழுத்தச் சுமைகளைச் சுமந்த மக்களின் வாழ்வை இருள் கொள்ளவோ?
அதிகாலை 12.25
08.11.1994
நெட்ட உயர்ந்த கரும்பனைகள், உயர்ந்த மணல்குன்றுகளில் நின்று காற்றில் கலக்கும் கீதமிசைக்கும். பூவாய் காற்று மணல் சொரியும். பாலாய் எறிக்கும் நிலவில் தோயும் அந்த வெற்றிலைக் கேணியில்…………
வெற்றிலைக்கேணி என்றதும் விடுதலைப் புலிகளே நினைவுக்கு வருவர்.
மண்ணை ஏறி மிதித்து நடந்த எதிரிப் படையினர் மீதொரு புயலாய் நின்று எதிர்த்த வரலாற்றின் நினைவு விரியும். காற்றின் வெளியில் கைகளை ஊயரத்தி வீரம் உரைத்த கதை எழும். உப்பு வெளியிலும், வீசும் உப்புக் காற்றிலும் வீரர் இறுதி மூச்சொலிக்கும். அந்த வெற்றிலைக்கேணியில் சிறிலங்கா கடற்படை இராணுவத் தளபாடங்களை இறக்கிக் கொண்டிருந்தது. சிறிலங்காவிற்குச் சொந்தமான தரையிறங்கும் போர்க்கப்பலை நோக்கி கடற் கரும்புலி மேஜர் வித்தி சென்றான். வெடிமருந்தேற்றிய படகில் ஊடுருவிச் சென்றான். அதோ அந்தக் கப்பலின் மீது மோதிச் சாய்த்தான். எரிமலைப் பிழம்பென எங்கும் சோதி பரப்பி கங்குல் கிழித்தான் காவியநாயகன்; எங்களின் கடற்கரும்புலி மேஜர் வித்தி. புதிய காவியம் எழுதினான்.
108 அடி நீளமும் 26 அடி அகலமும் உள்ள அந்தக் கப்பல் மணிக்கு எட்டு கடல் மைல் வேகத்தில் ஓடக்கூடியது. அதன் வீச்சு 1800 கடல் மைலாகும். 268 தொன் எடையுள்ள அந்தக் கப்பலில் 600 துருப்புக்களை ஏற்றிச் செல்லக்கூடியவை. அத்தோடு நான்கு கனரக வாகனங்களையும் ஏற்றிச் செல்ல வல்லது. 12 கோடி ரூபா பெறுமதியுள்ள இந்தக் கப்பல் ஆழ்கடலில் 1.5 மீற்றர் அமிழ்ந்து செல்லும். தரையிறங்கும் பொது 2 அடி தண்ணீரிலும் மிதக்கக்கூடியது. 09.10.1992ல் கற்பிட்டிக் கடலில் மூழ்கிய ‘கந்துல’ தரையிறங்கும் கப்பல் இனத்தைச் சேர்ந்தது. இந்தக் கப்பல் ஆக்கிரமிப்பாளரின் பல ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்குப் பேருதவியாக அமைந்திருந்தது. முல்லைத்தீவு, பூநகரி, வெற்றிலைக்கேணி எனப் பல இடங்களில் சிறிலங்காப் படையினரையும் வாகனங்களையும் தரையிறக்கப் பயன்படுத்தப்பட்டது.
இந்த கப்பல் பலத்த உயிர்ச் சேதங்களையும் பாரிய இழப்பையும் எதிர்கொண்டது.
கரும்புலி மேஜர் வித்தியின் தாக்குதலின் பின் ஆழியின் ஓசை எழுந்து எங்கும் ஓங்காரித்தபடி இருக்க கடற்புலிகள் அதிவேகப் படகில் விரைந்தனர். மூன்றுமணி நேரமாக கடலில் கடும் சமர் நிகழ்ந்தது. சிறிலங்கா விமானப் படையின் ஹெலிகொப்டர்கள் துணைக்கு வந்தன. அவற்றாலும் கடற்புலிகளின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமற் போயிற்று. வெடிமருந்துகளையும் இராணுவத் தளபாடங்களையும் எமது மக்களைக் கொன்று குவிப்பதற்காக தரையிறங்கிக் கொண்டிருக்கையில் துணைப் பாதுகாப்புக்காக நின்ற டோறா படகுகள் கடற்புலிகளின் தாக்குதலுக்கு எதிர்நிற்க முடியாது போயின. தொடர்ந்து நடந்த அந்தச் சமரில் மூன்று கடற்படைச் சிப்பாய்களும் ஒரு மாலுமியும் இறந்து போயினர்.
“கடலம்மா”
மேஜர் வித்தியின் குரல் திசையெல்லாம் முழங்க அதிகாலை சூரியப் பிரகாசத்தைப் போல மக்கள் முகங்கள் மலர்கின்றன.
எங்களின் கடலில் இனியதொரு வாழ்வு சிறக்காமலா போகும்?
கடற்புலிகளின் படகுகள் பேரிரைச்சலோடு கடலைச் சுற்றி வந்துகொண்டிருந்தன.
கடலில் பேரலை எழுகின்றது.
எரிமலை இதழிலிருந்து தேசக்காற்று.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”