மேஜர் கருணாகரனின் நினைவாக………….
இங்கே கவனியுங்கள்
மேஜர் கருணாகரன் மட்டக்களப்பு மாவட்டம் மன்னம்பிட்டியைச் சேர்ந்தவர். 1973 கார்த்திகை 18ஆம் நாள் பிறந்த இவரது இயற்பெயர் கணபதிப்பிள்ளை உபேந்திரன் என்பதாகும். பூநகரிக் கூட்டுத்தளம் மீதான புகழ் பெற்ற ‘ஒப்பரேசன் தவளை’ நடவடிக்கையின் போது விழுப்புண் அடைந்ததால் கையொன்றின் இயக்கத்தை இவர் இழந்திருந்தார் என்பதும், அந்நிலையிலும் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட அரசியல் பொறுப்பாளராகப் பணியேற்றுச் சென்றார் என்பதும் சொல்லிக் காட்டக்கூடிய விடயங்களாகும். மேலும் சந்திரிகா குமாரதுங்கா சிறிலங்காவின் ஜனாதிபதியாகப் பதவி ஏற்றதை அடுத்து, தமது நல்லெண்ண சமிக்ஞையைக் காட்டுவதற்காக புலிகள் இயக்கம் ஒருதலைப்பட்சமான போர் நிறுத்தத்தை அறிவித்த அன்றுதான் (13.11.1994) நரிப்புல் தோட்டத்தில் சிங்களப் படையினர் ஒரு பதுங்கித் தாக்குதலை மேற்கொண்டு கருணாகரனை களப்பலியாக்கினர் என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.
இங்கே.
தனது கண்ணெதிரில் உயிரிழந்த ஒரு தோழனை எண்ணி அவர் எழுதிய நினைவுக் குறிப்பையும், கண்ணுக்கெட்டாத தொலைவில் – யாழ்ப்பாணத்திலிருந்த தனது நண்பனுக்கு அவர் எழுதிய கடிதம் ஒன்றையும் – அவர் வரைந்த கடைசி மடல் கீழே தருகின்றோம்.
உறுதிக்கு ஒரு உதாரணம்
எட்டாம் மாதம் 11ஆம் திகதி, இரவு 9.20 மணி – தாக்குதலணிக்குரிய போராளிகள் அணியணியாய் நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். இரவு 11.30இற்குத் தாக்குதலை ஆரம்பிப்பதாகத் திட்டம். 10.45 இருக்கும் ”சுது சுது” என தளபதி ராம் அண்ணன் கூப்பிடுகிறார்.”என்னமாதிரி, சந்தித்துவிடீர்களா?”.
”இல்லை சந்திப்போம்” – இது சுது அண்ணன்.
”றோமியோ மைக் யோகன். சொல்லுங்கோ”.
” நாங்க அந்த இடத்துக்குப் போயிட்டம்” என்கிறார் யோகண்ணன்.
”சொன்ன நேரத்திற்கு அந்த இடத்துக்குப் போங்கோ” – இது ராம் அண்ணன்.
நேரம் செல்லச் செல்ல எல்லோரது நெஞ்சும் படக் படக்கென அடித்துக்கொண்டது. நகரும்போது எதிரி கண்டு விட்டால் சண்டை குழம்பிவிடும். மூன்று பக்கமும் வயல்வெட்டை. ஒரு பக்கம் குளமும் காடும். வெட்டையால் நகருவது என்றால் மிகவும் கடினம்.
நேரம் 11.20. ”சுது சுது குடுங்க குடுங்க யோகன் யோகன் குடுங்க” என்று ராம் அண்ணன் கூறுகிறார். ஆனால் சண்டை தொடங்கவில்லை. எதிரி உசாராகாதபடியால் போராளிகள் சிலர் முகாமுக்குள்ளே புகுந்துவிட்டார்கள்.
சண்டை தொடங்கிவிட்டது. மற்றைய இடங்களில் ‘ரோப்பிற்றோ’ பெரும் சத்தத்துடன் வெடித்தது. கண்ணன் என்ற போராளியும் தடை அகற்றும் அணியில்தான் இருந்தான். ‘ரோப்பிற்றோவை’ ஓடிப்போய் சுருள் கம்பிக்குள்ளே புகுத்தினான். அதோடு சேர்த்து அவனும் அதற்குள்ளே சிக்குண்டான். ஒன்றுமே செய்யமுடியாது. தடையை அகற்றிக் கொடுத்தால்தான் போராளிகள் உள்ளே புகுந்து முகாமைக் கைப்பற்றுவார்கள். யோசிக்க நேரமில்லை, கண்ணன் பலம்கொண்ட மட்டும் இழுத்துப் பார்த்தான்; ஆனால் விடுபட முடியவில்லை. தான் வீரச்சாவடைந்தாலும் தடையை அகற்றிக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, ”கிட்ட வராதிங்கடா….கிட்ட வராதிங்கடா” என்று கத்திக்கொண்டு, ‘ரோப்பிற்றோ’வின் சேப்ரி பின்னை இழுத்தான் கண்ணன்.
நிலை எடுத்திருந்த போராளிகள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தனர். 3 செக்கன்கள், ஒரு ஒளிப்பிழம்பு, அதைத்தொடர்ந்து ‘டமார்’ எனப் பெரிய சத்தத்துடன்’ ரோப்பிற்றோ’ வெடித்தது. 25 மீற்றருக்கு கம்பிகளைச் சுருட்டி எறிந்தது. கண்ணன் சின்னச் சின்ன சதைத் துண்டுகளாகச் சிதறினான். 10 மீற்றருக்கப்பால் படுத்திருந்த போராளிகளின் மேல் கண்ணனின் இரத்தமும் சதைத்துண்டுகளும் பட்டு வழிந்தன.
முகாமைக்கைப்பற்றும் நோக்குடன் விரையும் போராளிகளை தன் செந்நீரால் குளிப்பாட்டி வழியனுப்பினான் கண்ணன். அவன் செய்த அந்தத் தியாகத்தால், நாங்கள் கட்டுமுறிவு இராணுவமுகாமைக் கைப்பற்றி, ஆயுதங்களையும் எடுத்துவர முடிந்தது. பின் முகாமைக் கைவிட்டு வரும்போது, கம்பிக்கருகில் கண்ணனின் சிதைந்த உடலைப் பார்த்து எல்லோரும் திகைத்துவிட்டோம். ஓ…! அந்த வீரனின் தியாகத்தை எண்ணி சில வரிகள் எழுதுகிறேன்.
க.கருணாகரன்.
கல்லறையில் அல்லது பாசறையில் சந்திப்போம்
என் அன்பின் சுதாவுக்கு! நாங்கள் அனைவரும் நலமே; உங்கள் நலமறிய ஆவல்.
நான் மிராஜ் அண்ணையிடம் அனுப்பிய மடல் கிடைத்திருக்குமென நினைக்கின்றேன். ஏன் பதில் அனுப்பவில்லை? ஒரு கடிதம் எழுதுவதென்றால், எங்களுக்கு நான்கு நாள் பிடிக்கும். சிறிது ஓய்வு நேரத்தில்தான் எழுத வேண்டும். இடம் மாறி மாறி நிற்பதால் ஓரிடம் என்று இல்லை. விளங்கும்தானே! எழுதி முடிந்தால் அனுப்புவது கஷ்டம்.
அடுத்து இங்கு ஒரு பிரச்சனையும் இல்லை. இறைச்சிக்கு மட்டும் பஞ்சமில்லை. சலசலக்கும் அருவிகளும் , ஊ…ஊ…என்ற சத்தத்தை உண்டாக்கும் அடர்ந்த காடுகளும், பெரிய மலைகளும்தான் நாங்கள் இருக்குமிடம். மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. காலையில் சூரியன் உதிக்கும் காட்சி, மிருகங்கள் ஓடித்திரியும் காட்சி, பறவைகளின் கூச்சல்….. அப்பப்பா! எதை ரசிப்பது?. நீங்கள் ரவுணைப் பார்க்க ரவுணுக்குத்தான் செல்ல வேண்டும். நாங்கள் மலையேறிப் பார்த்துவிடுவோம். சுதா! நானும் யாழ்ப்பாணத்தில் இருந்தபோது சொகுசாகத்தான் இருந்தேன். அனால் அதைவிட சொகுசாக இங்கும் இருக்கலாம். ஆனால் இந்தக் காற்றும் மனதுக்குப் பிடித்த இயற்கைக் காட்சிகளும் ஒரு மன நிம்மதிதான். சுதா! நீ இங்கு இருந்தனிதான். ஆனால் இப்படியான காட்சிகளை ரசித்திருக்கமாட்டாய், எதற்கும் கொடுத்துவைக்கவேணும்.
நாங்கள் சத்தம் போட்டுக் கதைப்பதில்லை. கூடுதலாகக் கைப்பாசைதான். ஒருவரோடு ஒருவர் வீணாக அலட்டுவதில்லை. நீங்கள் இரவானதும் படுக்க ஆயத்தமாவீர்கள்; நாங்கள் நடக்க ஆரம்பிப்போம். விடிந்தால் நீங்கள் நித்திரை விட்டு எழும்புவீர்கள்; நாங்கள் அப்போதுதான் படுப்போம். நீங்கள் சத்தம் போட்டு பயிற்சிஎடுப்பீர்கள்; நாங்கள் மௌனமாகப் பயிற்சி எடுப்போம். இவைகள்தான் வித்தியாசம். வேறு என்ன, எல்லாம் வழமைபோலத்தான்.
சுதா! காலத்தின் தேவை பிரிந்தோம்; இதயத்தால் அல்ல, இடத்தால். என்றோ ஒருநாள் கல்லறை அல்லது பாசறை நம் சந்திப்புக்காகக் காத்திருக்கும்.
இப்படிக்கு,
க. கருணாகரன்.
விடுதலைப்புலிகள் (தை 1995) இதழிலிருந்து தேசக்காற்று.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”