எதிரி எனக்கு அளித்த வரம்
இடர்சூழ்ந்தவாழ்வே இன்னும் வருக.
என்னை விட்டகலாதே.
நீ வரும்போதே
நான் புதிது புதிதாகப் பிறக்கிறேன்.
இருளையும் பகலையும் இனம் காணுகின்றேன்.
மேலும் மேலும் எழவேண்டுமென்ற எண்ணம்
என்னுள்ளே பெறுகிறது.
துயரம் அழுவதற்காக வருவதில்லை
எழுவதற்கென்று இப்போதுணர்கின்றேன்.
இன்னலிடை இருக்கும் போது
இன்பமறிகின்றேன்.
போரிடும் எண்ணம் பிறக்கிறது
ஊர்விட்டகலாது இருந்தவரை
உலகம் இவ்வளவு விரிந்ததென்று
விளங்கவில்லை.
இடம்பெயர்ந்து செல்லச்செல்ல
திசைகளும் நீண்டு செல்கிறது.
இதுகாலவரை
முட்டைக்குள்ளிருந்தேனென அறிகிறேன்.
உறவு நரம்புகளில் புதிய குருதி பாய்ந்து
எவரெவரின் கோடியெல்லாம்
எனக்கு உரிமையாகிறது.
“சாப்பிட்டாச்சா”
நேற்றுவரை மனைவியே கேட்டாள்.
இன்று எவரெவரெல்லாம் கேட்கின்றனர்
செலவுக்கு பணமுண்டா?
தேவையெனிற் தருகிறேன்
வழிமறித்துப் பல வாய்கள் குரல்வைக்கிறன.
நான் தனியனல்லன்
பாலைவனத்தில் வழிதவறிய பயணியுமல்ல……
பெரிய சொந்தங்கள் கூடிய சந்தைக்குக்
குத்தகைக்காரன்
எதிரி எனக்களித்த வரமிது.
தாயகக்கவி புதுவை இரத்தினதுரை.