கடற்கரும்புலி கப்டன் சிவகாமி
நெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி
அவள் ஒரு ஓட்ட வீராங்கனை. அவள் பங்குபற்றுகின்ற ஓட்டப்போட்டிகள் அனைத்திலுமே பரிசு வாங்காமல் வந்ததில்லை. எந்த நேரமும் கால்கள் நிலத்தில் படாதவாறு துறுதுறுத்தபடி பறந்து திரிவாள்.
சிவகாமி என்ற போராளி ‘மின்னல்’ என்ற சிறிலங்கா இராணுவ நடவடிக்கையில் மணலாற்றில் வீரச்சாவடைந்ததை நினைவு கூர்ந்து, செல்வி என்ற இவளுடைய இயற்பெயர் ‘சிவகாமி’ ஆனது.
இவளும் மேஜர் மதுசாவும் நெருங்கிய தோழிகள். இயக்கத்துக்கு வந்தபின் சிவகாமி தன் போராட்ட வாழ்க்கையில் மதுசாவுடனேயே இருந்தாள். அந்த உறவு; மதுசா திருமலைக் கடலுக்குக் கரும்புலியாகச் சென்ற சமயம் தனக்கும், மதுசாவுக்கும் ஒன்றாக வாய்ப்புக் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, அது நிறைவேறாமல் போக, தன்னைவிட்டுப் பிரிந்து போன மதுசாவுக்காய் உள்ளுக்குள் அழுதாலும் மேன்மேலும் உறுதியாய் நின்றது.
அவள் பிறந்து வளர்ந்து மீன் குஞ்சுபோல் நீந்தப் பழகிய மயிலிட்டிக் கடற்கரைக்கு ஒரு முறை போய் வந்தது அவளுக்கு மறக்க முடியாத அனுபவம். அடிக்கடி கரையில் நின்றபடி பேய் குடிகொண்ட பூமியாய் தூரத்தே தெரிகின்ற தன் ஊரைச் சுட்டிக்காட்டி ‘நனவிடை தோய்பவள்’ உண்மையாகவே அந்த வாய்ப்புக் கிடைத்த போது அங்கு போய் வந்தாள். எல்லோரிடமும் ‘‘என்ர ஊருக்குப் போய்வந்தனான்’’ என்று கூறிக்கூறி மாய்ந்து போனாள்.
குழந்தை போல எதையும் சொல்லிக் குதூகலிக்கின்ற பண்பினாலோ என்னவோ, எங்கள் சிவகாமி மனதளவில் ஒரு குழந்தைபோல எல்லோருக்குள்ளும் நிறைந்து போனாள்.
மேஜர் மதுசா திருமலைக் கடற்பரப்பில் வீரச்சாவடைந்ததை அடுத்து, அந்தக் கடலிலேயே தானும் வீரச்சாவடைய வேண்டும் என்பதை மனதளவில் வரித்துக்கொண்டாள்.
‘‘மதுசாக்கா வெடிச்ச கடலிலதான் நானும் போக வேண்டும்’’ என்ற அவளது ஆசை போல, 1995.10.17 அன்று எங்கள் சிவகாமி திருமலையின் ஆழமான கடலலையோடு கரைந்து போனாள்.
அதன்போது சிறிலங்காக் கடற்படைக்குச் சொந்தமான ஒரு துருப்புக்காவிக் கப்பலும், ஒரு டோராப் படகும், ஒரு தரையிறக்கும் கப்பலும் வெடித்துச் சிதறின.
எங்கள் சிவகாமியைப் போல மேலும் மூன்று கரும்புலிகளையும் கடலன்னை தன்னோடு அணைத்துக்கொண்டாள். எங்களுக்குத் தெரியும் திருமலையில் புலிக்கொடி பறக்கும்வரை அந்தக் கடலன்னை தனது பிள்ளைகளைத் தனக்குள் எடுத்துக் கொண்டே இருப்பாள் என்று. அதுவரை எங்கள் கரும்புலிகள் ஒயப்போவதில்லை அந்தக் கடல் அலைகளைப் போலவே.
களத்தில் 110 (12.06.1996) இதழிலிருந்து தேசக்காற்று.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”