உயிர்ப்பூ திரைக்காவியத்தின் பார்வை
உயிர்ப்பூ திரைக்காவியத்தின் பார்வை
உயிர்ப்பூவின் உன்னதத்தை பேசி முடியாது. தமிழீழத்தில் வெளிவந்துள்ள அருமையான திரைக்காவியம். காட்சிக்கு காட்சி கவிதையின் படிமங்களாய் விரிந்து மனித ஆழ் உணர்வுகளோடு உரசும் ஒரு உறவை அது இறுதிவரை வைத்திருந்தது. கடலை நம்பி அந்தக் கரையோரக் கிராம மக்கள் தம் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். இந்த வாழ்வினைச் சுட்டுப் பொசுக்குகிறது சிறிலங்கா கடற்படை. இந்தக் கிராமத்து வாழ்வின் உயிர்நாடியே நின்று விடுகிற அளவுக்கு கொடூரம் விளைத்தார்கள். அவசியமும் அவசரமுமானதுமான ஒரு கரும்புலித் தாக்குதல் திட்டமொன்று தீட்டப்படுகிறது. அந்தத் தாக்குதலுக்கு பங்குபற்ற இருந்த கரும்புலி வீரனிடம் “இந்த டோறாவை நான்தான் அடிக்கவேண்டுமென்று அடம்பிடிக்கிறான்” இன்னொரு கரும்புலி வீரன். திரையில் கதை விரிகிறது.
“டேய் அப்பருக்கு நல்ல சூடி பட்டிருக்காம். எழும்படா! எழும்படா!” தாய் அதட்டி எழுப்புகிறாள்.
அவன் அசையாமல் கிடக்கிறான். தாயின் கரைச்சல் தாங்காமல் எழுந்தவன் “ஆழிக்குப் போய் சுறா பிடிச்ச கை. சூடி தெரியப் போகேலாது” என்று கூறி மறுத்துவிட்டு இறுகப் போர்த்திக்கொண்டு கிடக்கிறான். இவன் இப்படித் தூங்கிக்கொண்டிருக்க இவனுக்கு வேண்டியவள் இவனின் முகத்தில் மீசைக் கோலம் போட்டுவிட்டாள். சூடை தெரிய வரவில்லை என்ற ஆத்திரத்தில் மாமன் கடுங்கோபத்தோடு தடியோடு வந்து அவனை அதட்டுகிறார். அவன் விழித்தெழுந்த போது அவனின் கோலத்தைக் கண்டு அச்சத்தால் கத்துகிறார். இவாறு கிராமத்திற்கேயுரிய அத்தகைய சில கேலிப் பண்புகள் ஆங்காங்கே சிரிப்பை மூட்டுகின்றன. “எனக்கு மீசை வைச்சவள் யாரடி ?” அந்தச் சின்னக் கிராமம் ஒரு கலங்கு கலங்குகிறது. ஒரு யதார்த்தக் காதல் இழையோடித் திரிகிறது. முரடன் போல இருக்கிறான். ஆனால், நெஞ்சு நிறைய அன்பு. தம்பி மேல் அவனுக்கோ உயிர். பாசத்துக்கு அவன்தான் ஒரு உதாரணம். இருவரும் கடலில் குளிப்பதும், மண்ணில் புரள்வதும், காற்றில் திரிவதும் ஒரு கவிதையையே எழுதிவிடுகிறது கமெரா. இத்தனை உயிர்ப்பும், பிணைப்பும் மண்ணோடும், கடலோடும், மனித வாழ்வோடும் இந்த சூட்சுமத்தைச் சொல்லத் துடிக்கின்ற கமெரா தோற்றுப் போய்விடவில்லை. கடலலைகளைப் போல எழுந்து சதா ஒரு தேடலை நிகழ வைத்துவிடுகிறது. முரளியின் இசையும் இசைந்து வருகின்றது. இந்த உயிர்ப்பு நிறைந்த வாழ்வினை இழந்திடல் தகுமோ? இதற்குக் காரணமானவர்கள் மீது கடும் கோபம் வருகிறது. இழப்பின் பின் இழப்பாய் இருக்கியா இரும்பு மனிதன் கரும்புலியாகிறான்.
போர் நடக்கும் பூமியிலிருந்து எழுந்து ஒரு காவியம் எத்தகைய இன்னல்களைத் தாண்டி எழுந்திருக்கும் என்பது எம்மில் பலருக்குச் சொல்லாமலேயே புரியும். அது பெய்யும் ஆத்மா சுருதி எவராலும் எளிதில் வாசிக்க முடியாதது.
எங்கள் மண்ணில்தான் உயிர்ப்பூ பூக்கும்.
இக்காவியம் (கடற்கரும்புலி மேஜர் நகுலன்) கடற்கரும்புலிகளுக்குச் சமர்ப்பணம்.
கடற்புலிகளின் ஆதரவுடன் கலை பண்பாட்டுக் கழகமும் நிதர்சனமும் இணைந்து வழங்கும் “உயிர்ப்பூ”வை கதை வசனம் எழுதி நாட்டுப்பற்றாளர் “இயக்குனர்” பொ. தாசன் அவர்களே இயக்கியிருந்தார்.
உயிர்ப்பூ திரைக்காவியம் உறவுகளிடம் இருக்குமாயின் எமது தேசக்காற்று மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.
மீண்டும் ஒரு தாயக படைப்புடன்…………
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”