அச்சுறுத்தும் கடற்புலிகள்!
முழு அளவிலான போரில் புலிகள் குதிக்காத நிலையில் இன்று முப்படைகளையும் எதிர்கொள்ளக் கூடிய ஆற்றல் புலிகளுக்குள்ளதா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. வடக்கில் இராணுவத்தினர் புலிகளிடம் பல தோல்விகளைச் சந்தித்துள்ள அதேநேரம், கிழக்கில் புலிகள் வசமுள்ள பெரும்பாலான பகுதிகளை படையினர் கைப்பற்றி வருவது பல்வேறு கேள்விகளையும் எழுப்புகிறது.
வடக்கு, கிழக்கு தமிழர் தாயகமாயிருந்த போதிலும் கிழக்கில் அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ள படைவலுச் சமநிலையிலான மாற்றங்கள், கிழக்கில் புலிகள் மரபு வழிச் சமரிலிருந்து மீண்டும் கெரில்லாப் பாணியிலான போர் முறைக்குள் தள்ளப்பட்டுள்ளார்களா என்ற கேள்வியை எழுப்புகிறது.
கிழக்கில் தற்போது தொடரும் படை நடவடிக்கைகள் தங்களுக்கு மிகவும் சாதகமாயிருப்பதாகக் கருதும் அரசு, இந்தப் படை நடவடிக்கையை மேலும் தொடரவே முயல்கிறது. எனினும், கிழக்கில் இதுவரை புலிகள் முழு அளவிலான சமரில் ஈடுபடாததுடன் தங்கள் ஆட்பலத்தையும் ஆயுத வளத்தையம் பாதுகாத்தவாறு தற்காப்புச் சமருடன் பின் நகர்ந்து வருகின்றனர்.
இதன் மூலம் புலிகள் வசமுள்ள நிலப்பிரதேசங்களை மீட்டு அவர்களின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை இல்லாது செய்து விடலாமென அரசு கருதுகிறது. இதனாலேயே அங்கு மேலும் மேலும் படை நடவடிக்கையில் ஆர்வம் காட்டி வரும் அரசு மட்டக்களப்பில் தற்போது புலிகள் வசமுள்ள பிரதேசங்கள் அனைத்தையும் பிடித்து விட வேண்டுமென்ற முனைப்பிலுள்ளது.
எனினும், கிழக்கில் அகலக் கால் வைத்துவரும் படையினருக்கு பெரும் ஆளணிப் பற்றாக்கறை ஏற்பட்டு வருகிறது. புதிதாகப் பிடிக்கும் இடங்களை தக்க வைக்க மேலும் ஆயிரக் கணக்கான படையினர் தேவைப்படுவதால் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களுக்கு மீண்டும் மீண்டும் பொது மன்னிப்புகளை வழங்கி அவர்களை மீண்டும் படையணிகளில் இணைக்க பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வரும் அதேநேரம், புதிதாக படையணிகளுக்கு ஆட்களை சேர்க்கும் நடவடிக்கைகளும் ஆரம்பமாகியுள்ளன.
கிழக்கில் தரைப் படையினர் ஆளணிப் பற்றாக்குறையை எதிர்நோக்குகையில் அவர்களால் அங்கு மேலும் பாரிய படை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. இதேநேரம், அம்பாறை கஞ்சிக்குடிச்சாறு காட்டுப் பகுதியில் புலிகள் வசமிருந்த பகுதிகளை ஆக்கிரமித்த விஷேட அதிரடிப் படையினர், அங்கு புலிகளின் ஊடுருவல் தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பக்கிமிட்டிய மற்றும் தங்க வேலாயுதபுரம் பகுதிகளில் புலிகள் நடத்திய ஊடுருவல் தாக்குதல்களில் 25 க்கும் மேற்பட்ட அதிரடிப் படையினர் கொல்லப்பட்டதுடன் 30 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். எனினும் இது தொடர்பான தகவல்களை படைத் தரப்பினர் மூடி மறைக்க முயன்றுள்ளனர்.
புலிகளுக்கெதிராக முழு அளவிலான யுத்தத்தை கிழக்கில் நடத்தி வரும் அரசு வடக்கிலும், தெற்கிலும் பாரிய அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகிறது.
கிழக்கில் அகலக் கால் வைத்துள்ள படையினருக்கு வடக்கு என்றுமே மிகவும் நெருக்கடிக் குரியதாகவேயுள்ளது. கிழக்கில் கடற்புலிகளை முற்றாக இல்லாது செய்து விட்டதாக கருதும் படைத் தரப்புக்கு வடக்கே கடற்புலிகளின் பலம் சிம்ம சொப்பனமாயுள்ளது.
அதேநேரம் அண்மைக் காலங்களில் கடற்புலிகளின் தாக்குதல்கள் கடற்படையினரின் பாதுகாப்பை விட இலங்கைத் துறைமுகங்களின் பாதுகாப்பு குறித்தும் கேள்விகளை எழுப்புகிறது. இதற்கேற்ப அண்மைக் காலங்களில் இடம்பெற்ற கடல் நடவடிக்கைகளும் பல கேள்விகளை எழுப்பியுள்ளன.
இலங்கையைப் பொறுத்தவரை அதன் துறைமுகங்களின் பாதுகாப்பு இன்று உறுதிப்படுத்தப்பட்டதாயில்லை. வடக்கு- கிழக்கில் காங்கேசன்துறை, பருத்தித்துறை ( இறங்குதுறை) திருகோணமலை துறைமுகங்களுள்ளன. இதற்கு வெளியே கொழும்பு மற்றும் காலி துறைமுகங்களுள்ளன.
இவற்றில் எந்த துறைமுகத்தையும் தாக்கக் கூடிய ஆற்றல் கடற்புலிகளுக்கு இருப்பதாகவே அரசும் படைத் தரப்பும் கருதுகின்றன. கடந்த மாதம் 27 ஆம் திகதி கொழும்புத் துறைமுகம் மீதுபுலிகள் நடத்த விருந்த தாக்குதலைத் தாங்கள் முறியடித்து விட்டதாக கடற்படையினர் கூறுகின்றனர்.
இதன் போது கடற்புலிகளின் மூன்று படகுகள் அழிக்கப்பட்டதாகவும் அவை தற்கொலைத் தாக்குதலை நடத்தும் கரும் புலிப் படகுகளாயிருக்கலாமெனவும் தெரிவிக்கப்பட்டது. இந்தப் படகுகள் கொழும்புத் துறைமுகத்தின் அதி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் நுழைய முற்பட்ட போதே அதனைத் தடுத்து நிறுத்திய கடற்படையினர் ஒன்றன் பின் ஒன்றாக ஆறு கடல் மைல் தூரத்திலும் 11 கடல் மைல் தூரத்திலும் 14 கடல் மைல் தூரத்திலும் அந்தப் படகுகளை அழித்ததாகத் தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதல்களானது அதிகாலை 5.30 மணிக்குப் பின்பே நடைபெற்றுள்ளதாகவும் கடற்படைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும் இந்தத் தாக்குதல்களில் கடற்படையினருக்கு எதுவித சேதமும் ஏற்படவில்லையென்பதுடன் கடற்புலிகளின் இந்தத் தாக்குதலை முறியடித்ததன் மூலம் கொழும்புத் துறைமுகம் மிகவும் பாதுகாப்பானதொரு துறைமுகமென்பதை கடற்படையினர் நிரூபித்துள்ளதாகவும் துறைமுக அமைச்சர் மங்கள சமரவீர கொழும்புத் துறைமுகத்திலிருந்து அறிவித்தார்.
இதேநேரம், இந்தத் தாக்குதலை நடத்த வந்த புலிகளில் மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் தீவிர விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும் கடற்படையினர் தெரிவித்த போதும் அவர்கள் யாரென்ற விபரங்களை இதுவரை வெளியிடவில்லை.
எனினும், இந்தத் தாக்குதல், கடற்படையினர் கூறுவது போல் கொழும்புத் துறைமுகத்திற்கு வெளியே நடைபெறவில்லையென்றும் துறைமுகத்தை தாக்க எவரும் வரவில்லையென்றும் அப்பாவி மீனவர்களே கடற்படையினரின் தாக்குதலுக்கிலக்காகினர் என்பதும் பின்னர் சிங்கள கடற்றொழிலார்கள் மூலம் தெரிய வந்தது.
இது குறித்து நீர்கொழும்பு கடற்றொழிலாளர் சங்கம் ஜனாதிபதி முதல் அமைச்சர்கள் வரை அவசர கடிதங்களை அனுப்பியுள்ளதுடன் அன்றைய தினம் தாக்குதலுக்கிலக்கானது அப்பாவி மீனவர்களென்றும் அந்தத் தாக்குதல் கூட கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் இடம்பெறவில்லையென்றும், துறைமுகத்திலிருந்து 20 கடல்மைல் தூரத்தில் ஆழ்கடலில் இடம்பெற்றதாகவும் சுட்டிக் காட்டியுள்ளனர்.
தாங்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதிக்கு திடீரென தாக்குதல் நடத்தியவாறு வந்த கடற்படையினர் தங்களைக் கடலில் குதிக்குமாறு கூறிவிட்டு தாங்கள் கடலில் குதித்தும் படகுகளை தாக்கி அழித்ததாகவும் பின்னர் ஒன்பது பேரைக் கைது செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
படையினரும் ஊடகங்களும், கொழும்புத் துறைமுகத்தை தாக்க வந்த கற்புலிகளின் படகுகள் அழிக்கப்பட்டதாக பொய் கூறுவதாகவும் உண்மையிலேயே தாக்குதலுக்கிலக்கானவை சிங்கள மீனவர்களின் படகுகளே என்றும் அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.
உண்மை இதுவாயின் ஏன் இந்தப் புனைகதையை அரசும் படைத் தரப்பும் பரவ விட்டன. காலியில் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு நடைபெறும் சமயத்ததில் இவ்வாறானதொரு பொய்ப் பிரசாரத்தின் மூலம் கொழும்புத் துறைமுகத்திற்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் காண்பித்து உதவி வழங்கும் நாடுகளிடமிருந்து உதவிகளைப் பெற்றுவிடலாமெனக் கருதினார்களா?
எனினும், தென்பகுதியில் உண்மை நிலையை அரசும் படைத் தரப்பும் ஊடகங்களும் மூடி மறைத்துவிட்டன. அதேநேரம், கடற்புலிகளின் தாக்குதலிலிருந்து கடற்படையினர் மிகத் திறமையாக துறைமுகத்தை பாதுகாத்து விட்டனரெனவும் படைத்தரப்புக்கு பெரும் புகழாரம் சூட்டப்பட்டது.
கொழும்புத் துறைமுகத்தை கடற்புலிகள் தாக்க வந்ததாக அரசும் படைத் தரப்பும் கூறியதன் மூலம், இலங்கையில் இன்று எந்தத் துறைமுகமும் கடற்படைத் தளமும் எவ்வேளையிலும் புலிகளின் தாக்குதலுக்கிலக்காகும் நிலைமை ஏற்பட்டுள்ளதை அரசும் படைத் தரப்பும் மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளன.
புலிகளின் தரைப் படையை விட இன்று கடற்புலிகள் குறித்தே படைத் தரப்பு அச்சமடைந்துள்ளது. இலங்கையில் ஒவ்வொரு துறைமுகமும் ஒவ்வொரு கடற்படைத்தளமும் தாக்குதலுக்கிலக்காகும் போது, கடற்புலிகள் எங்கிருந்து, எப்படி வந்தார்கள் என்ற கேள்வியை தென்பகுதி மக்கள் எழுப்புகின்றனர்.
காலியில் கடற்படைத்தளம் மீதான தாக்குதல் தென்பகுதி மக்கள் மத்தியில் கடற்புலிகள் குறித்து பெரும் அச்சத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கொழும்புத் துறைமுகமும் அதனோடிணைந்த இராணுவ முகாமுமே இலங்கைக்குள் வரும் போர்த்தளபாடங்களைப் பெற்று ஏனைய பகுதிகளுக்கு விநியோகிக்கும் மையங்களாகும். இதனால் ஏனைய துறைமுகங்கள், கடற்படைத் தளங்களை விட கொழும்புத் துறைமுகத்தின் முக்கியத்துவம் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.
இதைவிட கொழும்புத் துறைமுகமே இன்று இலங்கையின் மிகப்பெரும் பொருளாதார மையமுமாகும். இலங்கையின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மிகப் பெரும்பாலும் கடல் வழியூடாகவே நடைபெறுவதால் கொழும்புத் துறைமுகமே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாயுள்ளது.
இந்தத் துறைமுகத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியானால் இலங்கையின் பாதுகாப்பே கேள்விக்குறியாகும். 2000 ஆம் ஆண்டில் கட்டுநாயக்கா விமானப்படைத்தளம் மற்றும் சர்வதேச விமான நிலையம் தாக்குதலுக்கிலக்கான போது நாட்டின் பொருளாதார நிலைமை எப்படிக் கேள்விக்குறியானதோ அவ்வாறே கொழும்புத் துறைமுகத்தின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளாகுமானால் நாட்டின் பொருளாதார நிலைமையும் கேள்விக்குறியாகும்.
இன்று முல்லைத்தீவுக்கு அப்பால் வட பகுதி கடற்பரப்பின் முழுமையான ஆதிக்கம் புலிகள் வசமேயுள்ளது. அண்மைக்கால மோதல்களில் கடற்படையினர் அங்கு சந்தித்து வரும் பேரிழப்புகளானது இதனை நன்கு நிரூபிக்கிறது.
கடந்த வருட நடுப்பகுதியில் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணிப் பகுதியில் 800 இற்கும் மேற்பட்ட படையினருடன் காங்கேசன்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த `ஜெற் லைனர்’ கப்பலை கடற்புலிகள் சுற்றிவளைத்த போது அந்தக் கப்பல் சர்வதேசக் கடற்பரப்பைத் தாண்டி இந்தியக் கடற்பரப்பினுள் நுழைந்ததுடன் பின்னர் அந்தக் கப்பலை இந்தியக் கடற்படையே காலி துறைமுகத்துக்கு கொண்டு வந்து விட்டதும் தெரிந்ததே.
இதேபோன்றே கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி திருமலைத் துறைமுகம் மீது புலிகள், சம்பூரிலிருந்து ஆட்லறி ஷெல் தாக்குதலை நடத்திய போது 800 படையினருடன் திருமலை கடற்படைத்தளம் நோக்கி வந்த `ஜெற்லைனர்’ பின்னர் அங்கிருந்து தப்பி சர்வதேசக் கடற்பரப்பையும் தாண்டி இந்திய கடல் எல்லைக்குள் சென்று பின்னர் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.
திருமலைத் துறைமுகத்துக்கு புலிகளின் ஆட்லறிகளால் அச்சுறுத்தலாயிருந்த சம்பூரை படையினர் கைப்பற்றியபோது, யாழ். குடா நாட்டுக்கான கடல்வழிப் பயணத்துக்கான அச்சுறுத்தல் நீக்கப்பட்டதாக அரசு கருதிய போதும், வட பகுதி கடற்பரப்பு தொடர்ந்தும் புலிகளின் ஆளுகைக்குள்ளிருப்பதால் இன்று வான் வழியூடான அவசர விநியோகத்தையே படைத்தரப்பு நம்ப வேண்டியுள்ளது.
கடற்புலிகளைப் பொறுத்தவரை வடக்கே காங்கேசன்துறை மற்றும் காரைநகர் கடற்படைத் தளங்களையோ அல்லது காங்கேசன்துறை, பருத்தித்துறை துறைமுகங்களையோ தாக்குவதும் திருமலை கடற்படைத்தளத்தை அல்லது துறைமுகத்தை தாக்குவதும் கடினமான விடயமல்ல. ஆனால், புலிகள் தெற்கே காலி கடற்படைத்தளத்தையும் மேற்கே கொழும்புத் துறைமுகத்தையும் தாக்குகிறார்களென்றால், அது புலிகளின் பலத்தை விட கடற்படையினரின் பலவீனத்தையே காட்டுகிறது.
காலித் துறைமுகத்துக்கு கடற்புலிகள் எப்படிச் சென்றார்கள், கொழும்பு துறைமுகத்துக்கு அவர்கள் எப்படி வந்தார்களென்பதை ஆராயும் அதேநேரம், தாக்குதல்களின் பின்னர் அவர்கள் தப்பிச் சென்றுவிட்டார்களென்பது தெற்கில் மிகப்பெரும் அதிர்ச்சியான செய்திகளாகும்.
தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள நிலப்பரப்புடன் கூடிய கடற்பரப்புக்கும் அப்பால் மிக நீண்ட தூரம் (நூற்றுக்கும் மேற்பட்ட கிலோ மீற்றர்) சென்று கடற்புலிகள் தாக்குதல்களை நடத்துவது, அரசுக்கும் படைத்தரப்புக்கும் பேரிடியான செய்திகளாகும்.
இவ்வாறான அதிரடித் தாக்குதல்களின் போது கடற்படையினர் நிலைகுலைந்து விடுகின்றனர். அதேநேரம், தரைச் சமர்களில் இராணுவத்தினருக்கு பக்கபலமாகச் செயற்படும் விமானப் படையினரால் கடற்சமர்களின் போது, அதுவும் பகல்பொழுதுகளில் நடைபெறும் சமர்களில் கடற்படையினருக்கு உதவ முடியாது போவது விமானப் படையினரின் பலவீனத்தையே காட்டுகிறது.
இலங்கையை பொறுத்தவரை அதன் நிலப் பரப்பை விட கடற்பரப்பு அதிகமானது. அதன் நாற்புறமும் கடலால் சூழப்பட்ட நிலையிலும் நாட்டில் உள்நாட்டுப் போரொன்று நடைபெற்றுவரும் நிலையிலும் தரைப்படைக்குச் சமமாக அதன் கடற்படையுமிருக்க வேண்டும். ஆனால், இலங்கையைப் பொறுத்தவரை அதன் கடற்படையின் பலம் மிகவும் வலுவிழந்துள்ளது. இந்த உள்நாட்டுப் போரில் விமானப் படையின் பங்களிப்பு கணிசமாயுள்ள போதும் தற்போது புலிகளின் வான்படையினது அல்லது விமான எதிர்ப்பு படையணியின் பலவீனம் இலங்கை விமானப் படையினருக்கு அண்மைக் காலமாக சாதகமாகவேயுள்ளது.
கிழக்கில் அண்மைக் காலங்களில் இடம்பெற்ற பாரிய படை நகர்வுகள் மூலம் கடற்புலிகளுக்கு சில பின்னடைவுகள் ஏற்படுத்தப்பட்டதுடன் கிழக்கில் கடற்படைத் தளங்களுக்கும் துறைமுகங்களுக்குமான உடனடி அச்சுறுத்தல்களும் தவிர்க்கப்பட்டுள்ள.
சம்பூரில் கடற்புலிகளின் வலுவான தளமிருந்த போது கிழக்கில் கடற்புலிகளின் ஆதிக்கம் குறிப்பிடத்தக்களவிற்கிருந்தது. அத்துடன், சம்பூரில் நிலை கொண்டிருந்த புலிகள், திருமலைத் துறைமுகத்தையும் கடற்படைத் தளத்தையும் தங்களது ஆட்லறிகளின் தாக்குதல்கள் மூலம் பூரண கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
எனினும், சம்பூர் உட்பட மூதூர் கிழக்கை இராணுவத்தினர் கைப்பற்றிய போது, திருமலைத் துறைமுகம் மற்றும் கடற்படைத் தளத்திற்கான புலிகளின் ஆட்லறி அச்சுறுத்தல் இல்லாது போனதுடன் சம்பூரிலிருந்த கடற்புலிகளின் தளமும் வாகரைக்கு மாற்றப்பட வேண்டியிருந்தது.
இது, கிழக்கில் புலிகளின் கடலாதிக்கத்தை குறைத்து விடுமெனக் கருதிய படைத்தரப்பு, வாகரையையும் பின்னர் கைப்பற்றியதன் மூலம் கிழக்கில் கடற்புலிகளின் கடலாதிக்கத்தை முற்றாகவே இல்லாது செய்து விட்டதாகக் கருதுகிறது.
எனினும், கிழக்கு கடற்பரப்பு ஈழ விடுதலைப் போராட்டத்தில் மிகப்பெரும் சமர்க்களமாயிருந்ததில்லை. கிழக்கில் படை முகாம்களுக்கான தரைவழித் தொடர்புகள் பெருமளவில் இருப்பதால் கடல் வழியூடான நடவடிக்கைகளுக்கு அங்கு எதுவித தேவையுமிருக்கவில்லை.
ஆனால், வடக்கில் நிலைமை அவ்வாறில்லை. யாழ். குடாநாட்டில் பெரும்பாலான பகுதிகள் படையினர் வசமேயுள்ள அதேநேரம், குடாநாட்டுக்கு தரைவழித் தொடர்பில்லாததாலும் விமானப் படையின் வான் வழி விநியோகம் குடாநாட்டிலுள்ள படையினரின் தேவைகளைப் பூர்த்தி செய்யமாட்டாதென்பதாலும் அங்கு கடல் வழி விநியோகத்தை படையினர் முழுமையாக நம்பியுள்ளனர்.
இந்த நிலையில் கிழக்கை விட வடக்கிலேயே கடற்புலிகளின் செயற்பாடுகள் முழுமையாகவுள்ளது. இதனால் வடக்கில் கடற்படையினரின் நடவடிக்கைகள் பெருமளவில் முடக்கப்பட்டுள்ளன.
தற்போதைய சமரில் அரச படைகளைப் பொறுத்தவரை அவர்களது எண்ணிக்கையும் அவர்கள் வசமுள்ள போர்த்தளபாடங்களும் அவர்களை வலுவுள்ளவர்களாகக் காண்பிக்கிறது. அதேநேரம், கடற்புலிகளின் கரும்புலிப் படகுகள் அவர்களை வலுவள்ளவர்களாக்கியுள்ளது. தரைப்படையினருக்கு உதவுமளவிற்கு, விமானப் படையினரால் கடற்படையினருக்கு உதவ முடிவதில்லை.
இவ்வாறான நிலைமைகளில் கிழக்கில் தற்போது அரசும் படைத்தரப்பும் தங்கள் முழுக்கவனத்தையும் திருப்பியிருக்கையில் புலிகள் தொடர்ந்தும் மௌனம் சாதித்து வருகின்றனர். எனினும், இது அவர்களது பின்னடைவல்ல. தருணம் பார்த்து அவர்கள் மிகப்பெரும் பாய்ச்சலுக்கு தயாராகிறார்களென்பதே உண்மை.
ஆக்கம்:- விதுரன்
தினக்குரல் (மாசி 04, 2007) இதழிலிருந்து……
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”