ராதா நினைவாக………………
தமிழ் மக்களின் வீட்டு முற்றங்களில் பூத்துப்படர்ந்து நின்ற முல்லைப் பந்தல்களைப் பிய்த்தெறிந்து கொண்டு இரும்புச் சப்பாத்துக்கள் அத்துமீறித்தடம் பதித்தன.
வீட்டின் கதவுகள் எட்டி உதைந்து திறக்கப்பட்டன. அப்பாக்களின் நெஞ்சுக்கு நேரே துப்பாக்கிக் குழல்கள் நீண்டன. அன்பான அம்மாக்களின் தலைக்கு மேலே துவக்குப் பாத்திகள் உயர்ந்தன. அக்காவும், தங்கைமாரும் அழுத குரல்கள் அர்த்தமற்றுப் போயின.
இளைஞர்கள் காரணமெதுவுமின்றிச் சிறைகளில் தள்ளப்பட்டனர். தீ வைப்புக்கள், படுகொலைகள் மேலும் மேலும் தொடர்ந்தன. அதுவரை பரிட்சை மண்டபங்களிலும், நேர்முகப் பரிட்சைகளிலும் பார்வையிடப்பட்ட அடையாள அட்டைகள் இரும்புத் தொப்பிக்காரர்களால் பிறந்த வீட்டினுள் வைத்தே பரிசீலிக்கப்படுகின்ற துர்ப்பாக்கியா நிலை.
இவ்வாறு ஈழத்தமிழினத்திற்கு எதிரான வன்கொடுமைகள் சிறீலங்காவிலிருந்து எமது தாயகத்தின் வாயில் கடந்து, வீட்டு முற்றத்தினையும் தொட்டுவிட்ட உச்சக் காலகட்டம். அது 1983ம் ஆண்டின் நடுப்பகுதி.
மாற்று வழி ஏதுமின்றி ஆயுதங்களால் செப்பனிடப்பட்ட பாதைவழி தமிழ் இளைஞர்கள் வேகமாக நகரத் தொடங்கினர்.
அப்பாவி ஈழத்தமிழ் மக்கள் மீது கொண்ட மேலான அன்பின் நிமித்தம், தாயக மண் மீது கொண்ட தீராத பற்றின் நிமித்தம் தமிழீழ விடுதலையை இலட்சியமாய் வரித்துக் கொண்ட எம் தலைவர் அவர்களின் தலைமையினைத் தேர்வுசெய்து, தனது வங்கிப் பதவியினை விட்டெறிந்து, வசதி வாய்ப்பு, அந்தஸ்து என்ற போலிகளைப் புறந்தள்ளி, விடுதலைப் பாதையில் இணைந்த ‘ஹரி’ என்றழைக்கப்பட்ட ஹரிச்சந்திரா எனும் இளைஞன்.
தளபதி ராதாவாகி விடுதலைப் பயிரின் ஆணிவேருக்கு உரமூட்டிய இனிய பொழுதுகளை மீட்டிப் பார்ப்பது காலத்தின் தேவையாகி நிற்கிறது.
யாழ். குடாநாட்டின் சிறீலங்காப் படை முகாம்களிலிருந்து படையினரை வெளியேறவிடாது தடுத்து நிறுத்தி படைமுகாம் வாசலில் முற்றுகையிட்டு நின்ற 1985, 1986, 1987ம் ஆண்டு காலப்பகுதியில் பலாலித் தளத்திலிருந்து எறிகணைகள், விமானக் குண்டு வீச்சுக்கள் சகிதம் முன்னேற முயன்ற படையினரை எதிர்த்து மிகச் சிறிய அணியைக் கொண்டு விரட்டியடித்த வீரச்சமர் ஒன்றில் தலைமை தாங்கி நின்ற யாழ். மாவட்டத் தளபதி லெப். கேணல் ராதா அவர்கள் வீரச்சாவடைந்து பல ஆண்டுகள் கடந்து விட்டன.
சுமார் இருபது வருடங்களுக்கு முன்பே (2003ம் ஆண்டு வரையப்பட்டது) எமது கண்ணிவெடிகளால் சிதைந்துபோன சிறிலங்கா படையினரின் இராணுவ மனோநிலை. அவர்களால் மிகப் பலமெனக் கருதப்பட்ட பவள் கவச வாகனத்தின் புதிய வருகையோடு சீர் செய்யவென முற்பட்ட வேளை, தளபதி ராதா தலைமையில் நடாத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதல் மூலம் பவல் வாகனம் சிதைக்கப்பட்டவுடன் படையினரின் மனோ நிலையானது சிதைந்து, சிதைந்தே நகரத் தொடங்கியது.
இன்று ‘பவள்’கவச வாகனம் உட்பட ராங்கிகள் படைத்தரப்பால் கைவிட்டு விட்டு புறமுதுகிட்டு ஓடும் இழிநிலை சிறிலங்காப் படையினருக்கு ஏற்பட்டுள்ளமையானது 20 ஆண்டு காலமாக படையினரின் போரிடும் ஆற்றல் சிதைந்து கொண்டே வந்துள்ளதை அவதானிக்க முடிகிறது.
அதேவேளை, எமது இயக்கத்தின் போரிடும் ஆற்றல் என்பது உலக இராணுவ ஆய்வாளர்களையும், இராணுவ வல்லுனர்களையும் வியப்பில் ஆழ்த்திய பெரும் செயல் என்றே நோக்கத்தக்கதாகவுள்ளது.
இத்தகைய போரிடும் ஆற்றலை நாம் ஒரே தடவையிலோ அல்லது ஓரிரு இராணுவ வெற்றிகளிலிருந்தோ பெற்றுக் கொண்டவையல்ல. மிகுந்த பக்குவமாய், நுணுகி ஆராய்ந்து பாரிய இடர்களுக்கும், சிரமங்களுக்கும் மத்தியில் நின்று நீண்ட காலமாய் போராடிய எமது போராளிகள், தளபதிகளின் மனத்துணிவினாலும் அயராத உழைப்பினாலும் உயிர் அர்ப்பணிப்புக்களினாலும் பெறப்பட்டதே ஆகும்.
ஆரம்ப கால களங்களை தனது போரியல் அறிவினாலும், நுண்ணாய்வுத்திறனாலும் கையாண்ட தளபதி ராதா போன்றோர் இட்ட உறுதியான அத்திவாரமே இன்று நாம் பாரிய இராணுவ சக்தியாக பரிணமித்து நிற்க காரணமாயுள்ளன.
தனது ஆரம்பப் பயிற்சிப் பாசறையில் ஓர் ஆளுமைமிக்க இராணுவ உயர் அதிகாரிக்குரிய சிறப்பியல்புகளை வெளிக்காட்டி, எமது தலைவர் அவர்களாலும் மூத்த போராளிகளாலும் இனம் காணப்பட்ட ராதாவின் செயற்பாடுகள் அசாத்தியமானவை.
தளபதி ராதாவின் மீது எம் தலைவர் அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையின் பாத்திரமாக, புதிய பயிற்சிப் பாசறை ஒன்றினை நடாத்தும் பாரிய பணி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது தலைவர் அவர்களின் எண்ணக் கருவினை சுமந்து நின்று முற்றிலும் மாறுபட்ட புதிய வடிவமைப்பிலான பயிற்சித்தளம் ஒன்றை அமைத்தார்.
அதுவரை இந்திய பயிற்சி அதிகாரிகளால் வழங்கப்பெற்ற பயிற்சி முறைகளிலிருந்து மாறுபட்டு, ஒழுங்குபடுத்தலுடன் கூடியதான முழுமையான சீருடை தரித்த நிலையில், தமிழீழப் பிரதேசத்தின் புவியியல் தரைத் தோற்றத்தைக் கருத்திற் கொண்டு தயார்படுத்தப்பட்ட பயிற்சிப் பாசறையாக முழுமைபெற்று உயர் பயிற்சிபெற்ற இராணுவ அணி ஒன்றினை உருவாக்கிக் காட்டினார்.
இன்று பெயர் சூட்டி அழைக்கின்ற பல பயிற்றப்பட்ட சிறப்புப் படையணிகளைக் கொண்டதாக எமது விடுதலை இயக்கம் பரந்து விரிந்து நிற்பதற்கான பலமான முகவுரை ஒன்றினை எம் தலைவர் அவர்கள் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பே தளபதி ராதாவினுடாகச் செயற்படுத்தத் தொடங்கியுள்ளார் என்பதை நோக்கும் போது எமது விடுதலை அமைப்பின் பரிமாணம வளர்ச்சியின் கணம் தெரிகிறது.
தனது பயிற்சிப் பாசறையின் மாணவப் போராளிகளுடன் 1985ம் ஆண்டு முற்பகுதியில் மன்னார் மாவட்டத்தில் களப் பணியாற்ற தலைவர் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டபோது, இருபது பேர் கொண்ட அணியுடன் களமிறங்கிய தளபதி ராதா அவர்கள் எமது மூத்த தளபதி விக்டர் அவர்களுடன் இணைந்து அவருக்குப் பக்கமலமாக நின்று பல துணிகரமான இராணுவ வெற்றிகளை ஈட்டக் காரணமாக இருந்தார்.
1985ம் ஆண்டு மே மாதம் 9ம் திகதி மன்னார் மாவட்டத்தின் நகர்ப் பகுதியில் அமைந்திருந்த மன்னார் பொலிஸ் நிலையம் வெற்றிகரமாகத் தாக்கி அழிக்கப்பட்ட வரலாறுப் பதிவு ஒன்றில் தளபதி ராதாவின் பணி காத்திரமானது.
முற்றிலும் கடலால் சூழப்பட்ட நகர் பிரதேசமொன்றினுள் இரவோடு இரவாக படகுகள் மூலம் பயணித்து. நீண்டதூர நீரேரி பகுதி ஒன்றினைக் கனத்த சுமைகளுடன் கடந்து சென்று மின்னொளியால் போத்திய வண்ணம் உயர் பாதுகாப்புடன் கூடியிருந்த சிறிலங்கா பொலிஸ் நிலையத்தை இரண்டு மணிநேரத்துள் வெற்றிகரமாக தகர்த்தழித்ததுடன் பல பொலிசாரைக் கொன்று நூற்றுக்கணக்கான ஆயுத தளபாடங்களை கைப்பற்றியதுடன் இரண்டு பொலிசாரை சிறைபிடித்துக் கொண்டு தளம் திரும்பிய தீரமிகு தாக்குதலில் தளபதி விக்டரின் பக்கத்துணையாகி நின்ற தளபதி ராதாவும் நினைவு கொள்ளத்தக்கவர்.
இன்று ஆனையிறவு பெருந்தள மீட்பு வெற்றிச் சமருக்காக எமது படையணிகள். கடற்புலிகளின் மயிர்க்கூச்செறியும் துணிச்சலுடன் தரையிறங்கி, நீரேரியைக் கடந்து உயர் பாதுகாப்புத் தளங்களைப் பிளந்து நின்று நிலையெடுத்து வீரப்போர் புரிந்த களச்சூழல்.
அன்று தளபதிகள் விக்டர், ராதா ஆகியோரின் அடிச்சுவட்டிலிருந்து தொடர்வதை நாம் வரலாற்றுப் பெருமையுடனும், வீரசாதனையாகவும் எண்ணிப்பார்க்கக் கூடியதாகவுள்ளது.
1985ம் ஆண்டு ஏப்ரல் மாதம் யாழ் கோட்டை இராணுவத் தளத்தின் உயர் பாதுகாப்பினுள் அமைந்திருந்த யாழ்.பொலிஸ் நிலையம் எமது மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்களின் தலைமையில் துணிகரமாகத் தாக்கி அழிக்கப்பட்டது. பின்பு 1987ம் ஆண்டு பெப்ரவரி மாதம் அதியுயர் பாதுகாப்புடன் கூடிய யாழ். பொலிஸ் விடுதி மீண்டும் தாக்கி அழிக்கப்பட்டு ஐந்து பொலிசாரும் சிறைப்பிடிக்கப்பட்டனர். அப்போது தளபதி கேணல் கிட்டு அவர்களின் பக்கபலமாக தளபதி ராதா அவர்களும் அணி சேர்த்து நின்றதும் இன்னொரு வரலாற்றுப் பதிவாகிறது.
இவ்வாறு மன்னார் கோட்டை வாயிலில் வைத்து இரண்டு டிரக் வண்டியில் வெளியேறிய இராணுவத்தினரை உயர் பாதுகாப்பு வளையத்தினை, பொருட்படுத்தாமல் நின்று சிதைத்து அழித்த துணிகர வெற்றித்தாக்குதலிலும்.
யாழ். காங்கேசன்துறை முகத்தினுள் காப்பர் வியூ ஹாட்டலில் முகாமிட்டிருந்த இராணுவ மினி முகாமினுள் உயர் பாதுகாப்பினையும் ஊடறுத்து அதிரடியாய் உட்புகுந்து பல இராணுவத்தினரைக் கொன்றழித்து பல நவீன ஆயுதங்களையும் கைப்பற்றிய துணிவு மிக்க வெற்றித் தாக்குதலையும் தளபதி ராதா அவர்களே தலைமையேற்று நடாத்தினார்.
இவாறு 18 வருடங்களுக்கு (2003 எழுதப்பட்டது) முன்பே சிறிய அணியைக் கொண்டு இராணுவ உயர்பாதுகாப்பு வலயங்களை ஊடறுத்து அதிரடியாய் உட்புகுந்து பேரிடியாய் போய் வெடித்து இறுதியாகத் தீச்சுவாலைக்கே தீமூட்டி வென்ற எமது போர்ப் படையணிகளுக்கு முன்னால் இராணுவ அவமானங்களைச் சுமந்து நிற்கும் சிறிலங்காவின் படைத்தரப்பானது, அடி அத்திவாரங்கள் சிதைக்கப்பட்டு, உருக்குலைந்த தளத்தில் கட்டியெழுப்பப்பட்ட நிலையில் உயர் பாதுகாப்பு வலயம் என்று இன்றைய சமாதான முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்ட வண்ணம் பம்மாத்துக் காட்டுவது வேடிக்கைக்குரியதொன்றாகும்.
ஆரம்ப காலங்களில் பதுங்கித் தாக்குதல்களிலும் சரி, கண்ணிவெடித் தாக்குதல்களிலும் சரி,எதிரியின் முன்னேற்ற முயற்சிகள் மற்றும் சுற்றிவளைப்புக்களை முறியடிப்பதிலும் சரி, பொலிஸ் நிலையங்கள், இராணுவ மினிமுகாம்கள் மீதான தாக்குதல்களிலும் சரி சிறிய அணிகளைப் பயன்படுத்தி, மரபுவழிப் போருக்கு நிகரான போர்க்களங்களை எதிரிக்கு முன்னால் வரித்து எதிரியைத் தடுமாற வைத்த சாதனை மிகு களங்களில் நின்று வழிகாட்டிய வீரத்தலபதிகளில் லெப்.கேணல் ராதாவின் பணியும் மெச்சத்தக்கது.
எமது இயக்கத்தின் பலம் என்பது எமது போராளிகளின் நெஞ்சுரத்தில் இருந்தே பிறக்கிறது என்ற எம் தலைவர் அவர்களின் உயிர்த் துடிப்புமிக்க வைர வரிகளுக்கு அன்று தொட்டு இன்றுவரை கடந்த 20 வருட கால ஆயுதப்போரில் எமது போராளிகளும் தளபதிகளும் காட்டிவரும் நெஞ்சுரம் என்பது வாழையடி வாழையென இரத்தமும், சதையுமான வரலாறாகி எம்மையும் எமக்கூடாக விடுதலைப் போராட்டத்தையும் இயக்கிக் கொண்டிருப்பது தெளிவாகப் புலப்படுகின்றது.
தனது இடது கையினால் இதமாகத் தலை தடவி, அப்பன்….. என்று அன்பு மொழிபேசி தாயாய், தந்தையாய் தளபதியாய் இவ்வாறு போராளிகளின் தளபதியாய் நிலைமைகளைப் புரிந்து தன்னைப் பற்றி எம் நெஞ்சில் ஈரம் கசியவைக்கும் நினைவுகள் வீரம் பிரக்கவைக்கும்.
ஐசே! சிறி நாத்தை சுட்டுப்போட்டான் ஐசே! நாம் ஐ சுட்டுப்போட்டான். வார்த்தைக்கு வார்த்தை ஐசே. அப்பன் அப்பன் என்றும் வாழ்ந்து, நடத்திய தளபதி ராதாவின் நினைவுகள் என்றும் அழியாதவை.
18 வருடங்களுக்கு முன் எமது இயக்கம் திப்பு பேச்சுவார்த்தைக்கான முயற்சியில் ஈடுபட்டிருந்த வேளை எமது போராளியான லெப்.சாம் என்பவரை சிறிலங்காப் படையினர் சுட்டுக் கொன்றுவிட்டனர். அப்போது தளபதி ராதாவின் உளக்கொதிப்பும், சிங்களப் படையினரின் அத்துமீறிய போக்கும்,
பல வருடங்களுக்கு இடைவெளியின் பின் 5வது தடவையாக சர்வதேச சமூகத்தின் அனுசரணையுடன் எமது இயக்கம் அமைதிப் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தபோது சர்வதேசக் கடற்பரப்பில் 11 போராளிகள் தமது உயிரை இழந்த துன்பகரமான சம்பவத்தையிட்டு நாம் அடைந்த உளக்கொதிப்பினையும் சிறிலங்கா கடற்படையினரின் அத்துமீறிய போக்கினையும் ஒப்பிட்டுப்பர்க்கும்போது சிங்களப் படையினரின் அத்துமீறிய மன நிலைகளில் மாற்றம் வரக்கூடிய சான்றுகளைக் காண முடியாதுள்ளது.
லெப். சாம் என்ற போராளி அநியாயமாகச் சுடப்பட்டபோது, தளபதி ராதா அவர்களின் தலைமையில், மறுநாள் ஒரு சிறிலங்கா இராணுவ ஜீப் வண்டி 7 சிப்பாய்களுடன் தகர்க்கப்பட்டு பழிதீர்க்கப்பட்டுள்ளது.
தமிழீழ தேசத்திற்கு எதிராக சிங்களப் படையினரால் ஒரு செய்ய முடியுமாயின், அதைவிட பல மடங்கு மிகச் சிறப்பானதாய் எங்களாலும் செய்ய முடியும் என்பதற்கான வரலாற்றுத் தடங்கள் கடைசிவரை இவ்வாறுதான் நகர்ந்துள்ளன.
ஆனாலும், இன்று நாம் அமைதி காத்து நிற்கின்றோம். புதிய மாற்றம் வேண்டிக் காத்துக் கிடக்கிறோம். சிறிலங்காவின் போக்கில் மாற்றம் வருமா? அதன் படைத்தரப்பு தன் பலவீனத்தை அறியுமா? சர்வதேச சமூகம் நிலைமைகளைப் புரிந்து கொண்டும் வாளாதிருக்குமா? எமது அளப்பெரிய அர்பணிப்புகளுக்கு நியாயமான பதில் வேண்டும். தளபதி ராதா போன்றோரின் கனவு ஈடேற வேண்டும்.
தளபதி ராதா யாழ். இந்துக் கல்லூரியில் கல்வி பயிலும் நாட்களில் சிரேஷ்ட மாணவத்தலைவனாகவும், கடேற் படையணியின் அணித் தலைவனாகவும், சாரணிய இயக்கத்தின் அணித் தலைவனாகவும் தேர்வு செய்யப்பட்டு கல்லூரிக்கு பெருமை சேர்த்தவர்.
கல்வியிலும், விளையாட்டுத் துறையிலும் பெயர் பெற்று விளங்கி ஆளுமையுள்ள சிறந்த மாணவனாக கல்லூரி அதிபர் மற்றும் ஆசிரியர்கள், சக மாணவர்கள், கல்லூரி சமூகம் என அனைவராலும் பாபன்புடன் பாராட்டப்பட்ட சிறந்த தலைவனாகவே வாழ்ந்தார் என்பது எங்கள் தளபதி ராதாவின் பிரகாசமிக்க இன்னொரு வரலாற்றுப் பக்கமாகவும் அமையப்பெற்றுள்ளது.
அத்தகைய உயர் பண்பு கொண்ட ராதாவால் இனங்காணப்பட்ட தலைமையில், விடுதலை இயக்கத்தில் இன்றுவரை ஆயிரமாயிரம் இளைஞர்கள் இணைந்து விடுதலைக்காக தம் இன்னுயிர்களை அர்ப்பணித்ததில் நியாயம் இருக்கிறது.
மன்னார் மாவட்ட தளபதியான லெப். கேணல் விக்டர் அவர்கள் வீரச்சாவடைந்த போது ஏற்படப்போகும் இடைவெளியானது தளபதி ராதாவால் மிக விரைவாகவே நிவர்த்தி செய்து வைக்கப்பட்டது.
இவ்வாறு யாழ். மாவட்ட தளபதியான கேணல் கிட்டுஅவர்கல் ஆபத்தான காயங்களுக்குள்ளானபோது அவரது பணியினை மிக விரைவாக செய்து முடித்த தளபதி ராதா அவர்களிநிழப்பனது ஜீரணிக்க முடியாத இடைவெளி ஒன்றினை ஏற்படுத்தியதுடன் இன்றுவரை அது நெஞ்சை அழுத்துவதாகவே தெரிகிறது.
இவ்வாறு தனது அசாத்தியமான திறமைகளினால் எதிரியைத் தோற்கடித்த போராளிகள், மக்களின் மனங்களை வென்று எம் தலைவர் அவர்களின் மனதில் நீங்காத இடம் ஒன்றைத் தக்கவைத்த ராதா அவர்களின் எண்ணம் நிறைவாக வேண்டும்.
தளபதி விக்டர் அவர்களின் வீரச்சாவின் பின் எமது மகளிர் படையணியின் வளர்ச்சிக்காகப் பல்வேறு திட்டங்களை வகுத்துக் கொடுத்தார் சகல துறைகளிலும் தாமே தம்மை வழிப்படுத்திச் செல்லக்கூடிய ஆளுமைபெற வேண்டும் என்பதில் கருத்தூன்றி செயற்பட்டார்.
ஆயுதங்கள் தொடக்கம் வாகனங்கள் வரை தாமே தேறிவரும் ஒரு சூழலை உருவாக்கி எதிர்காலத்தில் பெரும் மரபுப் படையணியாக நிற்பதற்கான நம்பிக்கையினை ஊட்டியவர் தளபதி ராதா.
சமூக மற்றும் மத ரீதியிலான முரண்பாடுகளையும், மாற்று இயக்க உறுப்பினர்களுடன் ஏற்படுகின்ற முரண்பாடுகளையும் மிக மென்மையான அணுகுமுறையினுடாக சீர்செய்வதில் அக்கறை காட்டினார். நேர்மையான அணுகுமுறையைப் பிரயோகித்தார். கற்பித்தார்.
சமூக மற்றும் மதத் தலைவர்களைச் சந்திக்கும் போதும், மாற்று இயக்க குழுத்தளைவர்களைச் சந்திக்கும் போதும் உயர் பண்புகளை வெளிக்காட்டினார்.
ஊருக்கு ஊர் பேசுகின்ற பேச்சு வழக்கினையும், நகைச்சுவைக் கதைகளையும் உன்னிப்பாகக் கேட்டு மகிழ்ந்து, மெய்மறந்து சிரிக்கும் தளபதி ராதா, போராளிகளின் இழப்பு மட்டுமல்லாது, மக்களின் இழப்பினையும் சமமாக மதித்து வேதனையோடு கண்கலங்கி நிற்கும் போது அவரிடமிருந்து குழந்தை உள்ளத்தை சூழநின்ற நண்பர்களால் மட்டுமே அறிய முடிந்தது.
தளபதி ராதா அவர்களின் வரலாறு நீண்டது. அமகாலத்தொடு பின்னிய வரலாற்றுடன் அவரது 16வது ஆண்டு நினைவு நாளில் சில குறிப்புகள் மட்டுமே இங்கு பதிவாகிறன.
இன்றைய அமைதிக்கான போழுதுகளுக்காய் ஆயிரம் ஆயிரம் நம்பிக்கை நட்சத்திரங்களை எம் விடுதலை வானில் விதைத்துவிட்டோம்.
இனிமேலும் புலிகளைப் போரில் வெல்ல முடியாது என்பதைப் படைத் தரப்பினருக்கும், சிங்களப் பேரினவாதிகளுக்கும் உணர்த்திய பின்பே அவர்களால் யுத்த நிறுத்தமும், சமாதானமும் விரும்பப்பட்டன.
தம்மால் விரும்பியபோதெல்லாம்டமில் இளைஞர்கள் – யுவதிகளை சுற்றிவளைக்கலாம் கைது செய்யலாம் என்ற நிலை மாறி,
தமிழ் மக்கள் துணிந்தால் எமது மண்ணிலேயே எதிரியைச் சுற்றிவளைக்கவும், சரணடையச் செய்யவும் கூடிய எமக்குச் சார்பான போர்ச் சூழல் உருவாகியுள்ளது என்ற பேருண்மை புரியவேண்டும்.
பேரினவாதிகள் தமது இனவாதப் போக்கினைக் கைவிட வேண்டும். படைத்தரப்பு தமது வரட்டுப் பிடிவாதத்தைக் கைவிட வேண்டும், அதுவரை நாம் பொறுமை காப்போம். தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாசைகள், அமைதி வழியே நிறைவேற்றப்பட வேண்டும். தளபதி ராதா போன்று ஆயிரம் ஆயிரம் வீரர்களின் கனவு நனவாக ராதா வான்காப்பு அணியோடு இணைந்த எமது ஏனைய படையணிகளும் அமைதிக்கான அணிவகுப்பில் வளம் வரும்.
லெப்.கேணல் ராதா அவர்கள் குறித்த தனது மனப்பதிவுகளை பகிர்ந்துகொள்ளும் தளபதி கேணல் பானு.
எரிமலை (ஆவணி 2003) இதழிலிருந்து தேசக்காற்று.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”