தமிழின அழிப்பு நினைவு நாள்
தமிழீழத்தில் முல்லை மாவட்டம் முள்ளிவாய்க்கால் மண்ணிலே 2009 வைகாசி 18ம் தேதி பன்னாட்டு சக்திகளும் – சிறிலங்கா அரசும் மேற்கொண்ட பல்லாயிரக் கணக்கான மக்களை உயிர்ப்பலி கொண்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் தமிழின அழிப்பின் 06ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.
தமிழர் இனவழிப்பு நினைவு நாள் – வைகாசி (மே) 18
தமிழீழ தேசத்தின்மீது காலங்காலமாக அன்னியரால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகளின் உச்சம்தான் 2009ம் ஆண்டு வைகாசி (மே) மாதம் 18ம் நாள் முள்ளிவாய்க்காலில் நடந்த பேரவலமாகும். இந்நாளே தமிழர் இனவழிப்பு நினைவுநாள் என தமிழீழ மக்களால் நினைவு கொள்ளப்படுகின்றது.
ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டத்தைத் தலைமைதாங்கி நடாத்திக்கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் சிறிலங்கா அரசுக்குமிடையில் மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கையை சிறிலங்கா அரசுதரப்பு படிப்படியாக மீறிக்கொண்டிருந்த நிலையிலும், தமிழ்மக்கள் வேண்டிநின்ற அரசியல் தீர்வைப் பெறுவதற்கான எந்தவொரு முயற்சியையும் சிறிலங்கா அரசுதரப்பு செய்யாமல் காலத்தை வீணடித்துக்கொண்டிருந்த நிலையிலும், பன்னாட்டுச் சமூகம் காட்டிய மெளனத்தை சிங்கள ஆட்சியாளர்கள் சாதகமாக்கிக் கொண்டு தமிழ்மக்கள் மேல் கொடிய போரைத் தொடுத்தார்கள்.
தென்தமிழீழத்தில் வெளிப்படையாகத் தொடங்கிய போர் தமிழரின் பூர்வீக நிலங்களெங்கும் விரிந்தது. சிறிலங்காப் படையினரின் வல்வளைப்புக்கள் விரிவடைந்து தமிழரின் நிலங்களை கையகப்படுத்தியது. எமது மக்கள் தமக்கான பாதுகாப்பைத் தேடி ஆயிரமாயிரமாக இடம்பெயர்ந்தார்கள். இருக்க இடமின்றி, உண்ண உணவின்றி, மருத்துவ உதவியின்றி மரங்களின் கீழும் வீதியோரங்களிலும் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர். இத்தகைய மனித அவலங்கள் எதனையும் கருத்திற் கொள்ளாது தொடர்ச்சியான விமானத்தாக்குதல்கள், எறிகணைத்தாக்குதல்கள், பல்குழல் பீரங்கித் தாக்குதல்கள், போர் நெறிகளுக்கு மாறான கொத்துக்குண்டுத் தாக்குதல்கள், இரசாயன எரிகுண்டுத் தாக்குதல்கள் எனச் சிங்கள அரச படைகளினால் திட்டமிட்டுப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டு வந்தன.
பன்னாட்டு ஆதரவுடன் 2002 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சமாதானச் சூழலை ஒருதலைப்பட்சமாக முறித்துக்கொண்ட சிங்கள அரசின் கொடிய போரைத் தடுக்க பன்னாட்டுச் சமூகம் சரிவரச் செயற்படவில்லை. மாறாக சிலநாடுகள் தமிழ்மக்களுக்கெதிரான கொடிய இனவழிப்புப் போருக்குப் பக்கபலமாக நின்றன. எமது மக்கள் புலம்பெயர் நாடுகளிலும், தமிழகத்திலும் பல்லாயிரக்கணக்கில் திரண்டு நின்று நீதிகேட்டு நடாத்திய போராட்டங்களைக் கண்டுகொள்ளாது இனவழிப்பை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த உலகம் அப்போது நீதியின் வழியில் நடக்கவில்லை.
தொண்டு நிறுவனங்கள் உட்பட நடுநிலையான அமைப்புக்களையோ சுதந்திரமான ஊடகவியலாளரையோ அனுமதிக்காது தன் கொடுமைகளை உலகம் அறியாது இருக்க இருட்டடிப்புச் செய்துகொண்டு மிகப்பெரும் காட்டுமிராண்டித்தனத்தைத் தமிழர்மீது கட்டவிழ்த்துவிட்டது சிங்கள அரசு. இறுதியில் நவீன மானுடவரலாறு கண்டிராத மாபெரும் அழிவொன்றை முள்ளிவாய்க்காலில் ஏற்படுத்தி ஓய்ந்தது.
தாயகத்தில் சிங்கள இனவாத அரசின் கொடூரமான போர் முடிந்து மூன்றாண்டுகள் நிறைவடையும் இந்நேரத்தில் பன்னாட்டுச் சமூகம் சிறிலங்கா மீது சிறிதளவேனும் அழுத்தமாகச் செயற்படத் தொடங்கியுள்ளது. உலக நாடுகளின் உதவியுடன் சிறிலங்கா அரசு மூர்க்கத்தனமாக தமிழ்மக்கள் மீது தனது போரைத் திணித்திருந்தது எனவும் ஐக்கிய நாடுகள் சபை தமிழ்மக்களின் உயிரிழப்புக்களைத் தடுக்கத் தவறியுள்ளது எனவும் பன்னாட்டு ஊடகங்கள், மனித உரிமை அமைப்புக்கள் பகிரங்கமாகவே தமது விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் நடந்துமுடிந்த ஐக்கிய நாடுகள் சபையின் 19ஆவது மனித உரிமை கூட்டத் தொடரில் சிறிலங்கா அரசுக்கு எதிரான தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. பன்னாட்டுச் சமூகம் சிறிலங்கா அரசுமீது அழுத்தத்தைக் கொடுக்க முற்படும் இச்செயற்பாடு கொடிய இனவழிப்பை எதிர்கொண்டு நிற்கும் எமது தமிழினத்துக்கு ஓரளவு ஆறுதலைத் தந்துள்ளது. எனினும் தமிழ்மக்கள் வேண்டி நிற்கும் விடுதலையும் உரிமைகளும் இத்தீர்மானத்தில் உள்ளடக்கப்படவில்லை என்பதோடு தமிழர்களுக்குப் பாதகமான பல அம்சங்களையும் கொண்டுள்ளது என்பதை வேதனையோடு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
இனவழிப்பை நிகழ்த்தியவர்களே நடாத்திய கண்துடைப்பு விசாரணை அறிக்கையை முதன்மைப்படுத்தி அதன்வழியே தமிழர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்கும் வழிமுறையை முன்மொழியும் இத்தீர்மானம் எமது மக்களுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுக்காது. குறிப்பிட்ட விசாரணை அறிக்கையை தளத்திலும் புலத்திலும் தமிழ்மக்களின் பிரதிநிதிகள் ஏற்கனவே நிராகரித்திருந்தனர் என்பதையும் பன்னாட்டுச் சமூகம் நினைவிற்கொள்ள வேண்டும்.
சிறிலங்கா அரசின் கட்டமைப்புக்குள்ளேயே உள்ளகப் பொறிமுறையொன்றை தமிழர்களுக்குரிய அரசியல் தீர்வாகப் பரிந்துரைக்கும் இத்தீர்மானம் நடந்துமுடிந்த முள்ளிவாய்க்கால் பேரவலத்தையும், கடந்த பல்லாண்டுகளாக நடைபெற்றுவரும் – இப்போதும் தொடர்ந்துகொண்டிருக்கும் இனவழிப்பு நடவடிக்கைகளையும் கவனத்திற்கொள்ளவில்லையென்றே சொல்ல வேண்டும். மேலும் பன்னாட்டுச் சமூகம் வரலாற்றிலிருந்து பாடங்களைப் படிக்கவில்லையென்றே கூறவேண்டும்.
1983 ஆம் ஆண்டு தென்னிலங்கையில் நிகழ்ந்த இனவழிப்பு நடவடிக்கைகளின் பின்னால் அடுத்த ஆண்டு கூடிய ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமை விவகார அமர்வில் சிறிலங்கா தொடர்பாக விவாதிக்கப்பட்டு, தீர்மானமொன்றை நிறைவேற்றினர். அது தமிழரின் நிரந்தர பாதுகாப்புப்பற்றியோ அரசியல் தீர்வு பற்றியோ போதிய கரிசனை கொள்ளாமல் சிறிலங்காவின் உள்ளகப் பொறிமுறையை மையமாக வைத்தே இருந்தது. அதன்பின்னர் இன்றுவரையான காலப்பகுதியில் இலட்சத்துக்குமதிகமான மக்களைப் படுகொலை செய்யவும், தமிழரின் பூர்வீக நிலங்களில் பெரும்பகுதியை விழுங்கவும், இலட்சக்கணக்கான தமிழ்மக்களை நாட்டைவிட்டு வெளியேற்றவுமே சிறிலங்காவின் உள்ளகப் பொறிமுறை சிங்களப் பேரினவாதத்துக்கு உதவியுள்ளது.
இதைவிட தமிழர் தரப்புக்கும் சிறிலங்காத் தரப்புக்குமிடையில் காலத்துக்குக் காலம் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள், ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கைகள் என்பவற்றைப் பார்த்தால் அனைத்துமே சிங்களப் பேரினவாதத் தரப்பால் முறிக்கப்பட்டு தமிழ்மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளமை தெளிவாகத் தெரியும். சிறிலங்கா அரசுடன் நேரடியாக பேசிப்பயனில்லை என்ற வரலாற்று உண்மையை உணர்ந்தே பன்னாட்டுச் சமூகம் 2002 ஆம் ஆண்டு எமக்கும் சிறிலங்காத் தரப்புக்குமிடையில் நிடுநிலையாளராகப் பணியாற்ற முன்வந்தது. அவ்வாறு பன்னாட்டுச் சமூகத்தின் மேற்பார்வையில் எழுதப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கைகூட சிறிலங்காத் தரப்பாலேயே ஒருதலைப்பட்சமாக மீறப்பட்டது.
உலகின் ஆலோசனைகளுடன்கூடிய உள்ளகப் பொறிமுறைகளைச் சிங்கள ஆட்சியாளர்கள் மிக இலாவகமாக தமது அதிகாரத்தைப் பயன்படுத்தித் தூக்கியெறிந்தமைக்கு சுனாமியின் பின்னரான பொதுக்கட்டமைப்பு வசதிக்கான பொறிமுறை (P-TOMS Post Tsunami Operational Management Structure) ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
இப்போது மீண்டும் சிறிலங்காவின் உள்ளகப் பொறிமுறைமூலமான தீர்வைநோக்கித் தமிழர்களைத் தள்ளுவதைப் பன்னாட்டுச் சமூகம் செய்யத் தொடங்கியுள்ளது. தமிழ்மக்கள் பட்ட துன்பங்களையும், அவர்கள் சிறிலங்கா அரசால் ஏமாற்றப்பட்ட வரலாற்றையும் நன்கு தெரிந்துகொண்டும், அதைவிட தாமே சிறிலங்கா அரசால் ஏமாற்றப்பட்ட அனுபவங்களைக் கொண்டிருந்தும்கூட தொடர்ந்தும் சிறிலங்காவின் உள்ளகப் பொறிமுறைமூலமான தீர்வைத் தமிழ்மக்கள் மேல் திணிக்க முயல்வது எமது மக்களுக்கு விசனத்தையே ஏற்படுத்துகின்றது.
போர் ஓய்ந்ததாக அறிவித்து மூன்று ஆண்டுகளாகும் இந்நிலையில் தமிழர் நிலங்களில் படையினரின் செயற்பாடுகள் குறைக்கப்படவில்லை. நிலப்பறிப்புக்களும் சிங்களக் குடியேற்றங்களும் தொடர்ந்தவண்ணமே உள்ளன. மக்களின் அன்றாட அசைவியக்கம் இன்றும் படைத்தரப்பால் கட்டுப்படுத்தப்படுகின்றது. பலவிடங்களில் சிவில் நிர்வாகக் கட்டமைப்புக்களை சிறிலங்காப் படைத்தரப்பே நடத்தி வருகின்றது. போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் தம்மை நம்பிய தமிழ்மக்களைக் கைவிட்டது போலவே இன்றும் எமது மக்களை பன்னாட்டுச் சமூகம் கைவிட்டுள்ளது என்றே உணர்கின்றனர்.
இந்நிலையில் விரைவானதும் நிரந்தரமானதும் நீதியானதுமான தீர்வொன்றை தமிழ்மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கவே பன்னாட்டுச் சமூகம் உழைக்க வேண்டும். மாறாக முழுமையற்ற பொறிமுறைகளை முன்மொழிவதும் சிறிலங்கா அரசிடமே தமிழ்மக்களின் பாதுகாப்பையும் அவர்களுக்கான தீர்வை வழங்கும் பொறுப்பையும் ஒப்படைப்பதும் திட்டமிட்ட இனவழிப்பை நிகழ்த்திக்கொண்டிருக்கும் சிறிலங்கா அரசதரப்புக்கு காலஅவகாசத்தையும் பாதுகாப்பையும் கொடுப்பதாகவே அமையும்.
இதேவேளை, நடந்துமுடிந்த மனத உரிமை கூட்டத்தொடரில் தாயகத்தில் எமது மக்களின் அரசியல் பிரதிநிதிகளாக விளங்குபவர்கள் கலந்துகொள்ளாது தவிர்த்தமையை நாம் வேதனையோடு பார்க்கின்றோம். தமது அரசியல் நலன்களுக்காக மட்டுமே செயற்படும் அரசுகளை விடவும், எமது அரசியற் சிக்கல் தொடர்பில் நியாயமாகச் செயற்படக்கூடிய பல்வேறு தரப்பினரும் பங்குகொள்ளும் ஓரிடத்தில் எமது தாயகத்து உண்மை நிலைமைகளை தாயகத்திலிருந்தே வந்து சொல்வதென்பது மிக முக்கியமான தாக்கத்தை வழங்கியிருக்கும். சிறிலங்கா அரசின் பொய்ப்பரப்புரைகளை மிக இலகுவாக முறியடிக்கக்கூடிய வாய்ப்பாகவும், அதேவேளை எதிர்காலத்தில் எமக்குச் சாதகமாக பல நிகழ்வுகள் நடக்க ஏதுவான நிலைமையை ஏற்படுத்தியிருக்கும் என்றே நாம் கருதுகின்றோம்.
மிக நீண்ட போராட்டத்தில் நாம் எண்ணற்ற தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் செய்திருக்கிறோம். அன்னியப் படைகளின் கொடுமைகளில் நாம் எமது நிலங்களையும் இலட்சக்கணக்கான உயிர்களையும் இழந்திருக்கிறோம். உலகமே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க பல்லாயிரக்கணக்கான எமது மக்கள், உணவின்றி, உறைவிடமின்றி, மருத்துவ உதவிகளின்றி அவலப்பட்டு மரித்தார்கள். இவ்வளவு அவலங்கள், தியாகங்களின் பின்னால் நாம் சோர்ந்து போகக்கூடாது. எமக்கான நீதியையும் விடுதலையையும் பெறும்வரை நாம் ஓய்ந்துபோகக்கூடாது. அனைவரும் ஒன்றிணைந்து எமது விடுதலைப் பயணத்தைத் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டிய நேரமிது.
பூகோள அரசியலில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை உன்னிப்பாகக் கவனித்து எமது போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய தருணமிது. தற்போதைய நிலையில் எமது போராட்டம் பன்னாட்டுச் சமூகத்தின் அதிகரித்த கவனத்தைப் பெற்றுள்ளது. சில பன்னாட்டு ஊடகங்களினதும் தன்னார்வத் தொண்டர்களினதும் செயற்பாடுகள் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இதைவிட எமது மக்களின் தொடர்ச்சியான செயற்பாடுகள் தொடர்ந்தும் எமக்குச் சாதகமான மாற்றத்தை உலகில் ஏற்படுத்தி வருகின்றது.
எமது மக்கள் அமைப்புக்களாகவும் தனிப்பட்டவர்களாகவும் பன்னாட்டுச் சமூகத்தினர் மத்தியில் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளில் இச்செயற்பாடுகள் பன்னாட்டுச் சமூகத்தில் கணிசமானளவில் எமக்குச் சாதகமாக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்ற போதுங்கூட சில குழப்பங்களையும் பன்னாட்டுச் சமூகத்துக்கு ஏற்படுத்தியுள்ளது. அமைப்புக்களும் தனிப்பட்டவர்களும் எமது மக்களுக்கான நிரந்தரத் தீர்வு தொடர்பில் பன்னாட்டுச் சமூகத்துக்கு விடுக்கும் வேண்டுகோள் முரண்பட்டவைகளாக அமைவதும், ஒன்றையொன்று விமர்சிப்பதுமாக இருப்பதும் எமக்குப் பாதகமான விளைவுகளையே தந்துள்ளது. இந்த முரண்பட்ட தீர்வு வேண்டுகைகள் தொடர்பில் பல பன்னாட்டுச் சக்திகள் தமது கரிசனையை வெளியிட்டுமுள்ளன.
அன்பான மக்களே! எமது இனத்தின் விடிவுக்காக எமக்கிடையிலான பிணக்குகளை மறந்து ஒன்றாகச் செயற்பட வேண்டிய தருணமிது. எமது பிரச்சனைகளையும் அரசியல் வேட்கையையும் செவிமடுத்துக் கேட்கும் பன்னாட்டுச் சமூகத்துக்கு நாமே பல்வேறு செய்திகளையும் முரண்பட்ட தீர்வுகளையும் வழங்கிக் கொண்டிருக்கும் நிலை எமக்குப் பாதகமாகவே அமையும். உலகத்தின் கவனம் இன்று எமது மக்கள்மீது திரும்பியிருக்கும் நிலையில் எமக்கான தீர்வாக நாமனைவரும் ஒரேவிடயத்தை அனைத்துலகச் சமூகத்துக்குச் சொல்ல வேண்டும். இதுவே ஆரோக்கியமான வழிமுறையாக அமையும்.
பல்லாண்டுகளாக சிங்கள – பெளத்த பேரினவாதத்தால் நசுக்கப்பட்டு இனவழிப்பை எதிர்கொண்டிருக்கும் எமது இனம், கடந்த காலங்களில் அனைத்து வழிமுறைகளிலும் முயன்றும் சிங்கள ஆட்சியாளரிடமிருந்து குறைந்தபட்ச உரிமைகளைக்கூட பெறமுடியாமல் ஏமாற்றப்பட்ட வரலாற்றைக்கொண்ட எமது இனம், வேறு வழியின்றி ஆயுதப்போராட்டத்தைக் கையிலெடுத்து அதன்வழியே தனக்கான பாதுகாப்பையும் தனியரசுக் கட்டமைப்பையும் குறிப்பிட்ட காலம் பேணிய எமது இனம், சிறிலங்கா அரசில் எப்போதோ நம்பிக்கை விட்டுப்போய் பன்னாட்டுச் சமூகத்தை நடுநிலையாக வைத்து அரசியல்தீர்வை எட்ட நினைத்து அதிலும் ஏமாற்றப்பட்ட எமது இனம், மானுடவரலாற்றில் மிகக்கொடுமையான இனவழிப்பை எதிர்கொண்டுள்ள எமது இனம் தனக்கான நிரந்தரமான அரசியல்தீர்வாக முன்வைக்க வேண்டியது சிறிலங்கா என்ற அரசகட்டமைப்புக்குள் அல்லாமல் சுயாதீனமாகத் தம்மைத்தாமே ஆளும் உரிமையுடன்கூடிய அரசியல்தீர்வையேதான்.
இதற்காகத்தான் பல்லாயிரக்கணக்கான எமது மாவீரர்கள் தமது உயிரைத் தியாகம் செய்தார்கள். இந்த இலட்சியத்துக்காகத்தான் இலட்சக்கணக்கான எமது மக்கள் எமது போராட்டத்தில் தோளோடு தோள் நின்றார்கள்.
எனவே தனிப்பட்டவர்களும் அமைப்புக்களும் எமது மக்களுக்கான அரசியல்தீர்வாக பன்னாட்டுச்சமூகத்துக்கு முன்மொழிவது எமது மக்களுக்கான தன்னாட்சியுரிமையுடன் கூடிய நிர்வாகக் கட்டமைப்பாகவே இருக்க வேண்டும். அதைநோக்கியே எமது வேண்டுகைகளும் வேலைத்திட்டங்களும் அமைய வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்த குரலாக எமது அரசியல் வேட்கையை வெளிப்படுத்த வேண்டும் என்பதே எமது அவாவாகும்.
அதேவேளை எமது போராட்டத்தின் ஆணிவேராகவிருக்கும் தாயகத் தமிழர்களின் தற்போதைய இன்னலைத் துடைத்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் அனைவரையும் நினைவிற்கொள்வதோடு எமது புலம்பெயர்ந்த மக்கள் தொடர்ந்தும் இப்பணியை முன்னெடுக்க வேண்டும் என வேண்டி நிற்கின்றோம்.
இறுதி யுத்தமென்று கூறிக்கொண்டு எமது மக்கள்மேல் பகைவர் தொடுத்த கொடிய போரில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகொள்ளும் இவ்வேளையில், அவர்களின் குடும்பங்கள், உறவினர்கள், நண்பர்களின் துயரத்தில் நாமும் பங்குகொள்கின்றோம்.
பல்லாயிரக்கணக்கான மாவீரர்களதும் மக்களதும் தியாகத்தால் கட்டியெழுப்பப்பட்ட எமது போராட்டத்தைத் தொடர்ந்தும் வலுவாக முன்னெடுத்து எமது இறுதி இலட்சியத்தை அடையும்வரை தொடர்ந்து போராடுவோமென இந்நாளில் உறுதியெடுத்துக் கொள்வோமாக.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”