நீலன் காலத்தின் பதிவு !
எதிரியின் குகையெங்கும்
உலாவந்த பெருநெருப்பு.
எட்டாத தூரமெல்லாம்
எளிதாய் ஏறிவந்த
எரிமலையின் குடியிருப்பு.
‘நீலன்”
தமிழ் நெஞ்சமெங்கும்
நீறாய்ப் பூத்திருக்கும் நினைவுகள்.
ஆண்டுகள் போனாலும் – அவை
அழியாது…அழியாது….
தமிழ் விழியெங்கும்
நினைவாகும் நினைவு அது.
காலனாய் தமிழர் கதை முடிக்க
காசுக்கு விலைபோன
கருடனின் திரைகிழிக்கப்
புலனாய்வுப்புலிவீரர் திறனாய்ந்து
மட்டுநகர் பலிபோகும் துயர் அறுக்க
துணிந்தெழுந்த தூயவர்கள்.
தோற்றுப் போனோம் என்றவர்
மூச்சுப்போகப் புலிகள்
புலனறியும் திறனறிய
உலகப்புலனாயும் திறனெல்லாம்
ஒன்றாகி உறவாகி….
எத்தனை கூடல்கள்….!
உறவாக….உயிராக….உணர்வாக….
இன்னும் பலவாக
எங்கள் உயிர்க்கூட்டின் நுனிவரையும்
உழுது முடித்து நேசமாம் பாசமாம்
நடிப்புகள் விலையாகி…..
நிஜம் புரிந்து
புலியின் திறன்அறிந்தோர் பிசகினர்.
நீலன் என்ற நாமத்தின் பின்னிருந்த
நிதர்சனங்கள் காலத்தின் பதிவு.
எங்கள் கண்களில்
அந்தக் காவியத்தின் திறனெல்லாம்
நினைவாகி….நினைவாகி….
நீள்கிறது….பயணம்….
கவியாக்கம்:- சாந்தி ரமேஷ் வவுனியன் (2004)
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”