மன்னிப்பு இல்லை
எத்தனை ஷெல்கள் எல்லாம்
தாக்கியே நின்ற போதும்
எத்தனை தோட்டா ரவைகள்
துளைத்திட வந்த போதும்
எத்தனை விமானக் குண்டு
பாய்ந்துமே வீழ்ந்த போதும்
எத்தனை இரவு தன்னைப்
பயத்துடன் கழித்த போதும்
எத்தனை துன்பம் வந்து
பசித்திட இருந்த போதும்
நித்தமும் வறுமைக் கோட்டில்
வாழ்ந்துமே வந்த போதும்
இத்தனை அரக்கர் நின்றும்
தப்பிய மக்கள் கூட்டம்
செத்துமே மடியத் தானோ?
சிதைந்துமே அழியத் தானோ?
உறவினர் எங்கே? எங்கே?
உற்றத்தார் சுற்றம் எங்கே?
இருந்திட்ட மனைகள் எங்கே?
இதமான மரங்கள் எங்கே?
தரணியின் உயிரை மாய்க்க(ப்)
பிறந்திட்ட அலையே! நீயும்
சிறந்தவை இவைகள் என்று
சீண்டியே பார்த் தனையோ!
தாயில்லைப் பிள்ளை யுண்டு
தந்தைக்கு மகனு மில்லை
சேயில்லைத் தாயு முண்டு
சேர்ந்திட்ட துணையு மில்லை
காயில்லைக் கனியு மில்லை
பிஞ்சுடன் பூவு மில்லை
மாய்த்திடப் பிறந்த அலையே!
மன்னிப்பே உனக்கு இல்லை.
– தி.குன்றன்.