மீண்டும் மீண்டும் எழுவோம்
ஆழிக்கடல் பேரலையே
நீ
அந்நியனின் பிறப்பா?
இல்லை
தமிழினத்தை அழிக்கவென்றே
எம் கடலில் குடிகொண்டிருந்தாயா?
அழகாய் எம் மண்ணை நீ
தொட்டு தொட்டு சென்றாய்
எம் மண்மீது
நீ கொண்ட காதலை
நொடிக்கொரு முறையும் உணரவைப்பாய்
நீ எம் மண்மீது காதல் கொண்டது
எம் இனத்தையும்
விடுதலை இலட்சியத்தையும் அழிப்பதற்கா?
உன் ஒரு நொடி கோபத்தால்
எத்தனை ஆயிரம்
உயிர்கள்
காலத்தால் அழியா சொத்துக்கள்.
இன்று
அத்தனையும் எங்கே?
அம்மா அம்மா என்று உனை நம்பி
பல ஆயிரம் உயிர்கள்
ஆசையாய் வந்த எமக்கெல்லாம்
அள்ளி அள்ளி தந்தாய்
கோபம்
ஏன் அம்மா
உனக்கிந்த கோபம்?
எம் இனம்
போரால் அகதி ஆனோம்
பொருளாதார தடையால்
அல்லல்பட்டோம்
இன்று
உன்னால் எம் தேசமே
அழிந்து விட்டது
அந்நியன்
உன்னை விலைபேசி விற்பான்
என்று
உனை காக்கும் பணியில்
நாம்
வினாடிகளை தவறவிட்டதில்லை
இன்று
அந்த வினாடிகள்
ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு
உயிர்கள்…
நாம்
மண்ணை நேசித்தோம்
உன்னை சுவாசித்தோம்
அதனால் தானோ
எம் காதுகளுக்குள் ஓலக்குரல்கள்
ஒலிக்க தவறுவதில்லை
விடுதலையை
வென்றெடுக்க விலைமதியா
உயிர் தந்தோம்
எம்
துயர் அறிந்திருந்தும்
எம் முன்னே
நீ
வந்தாய்
நாம்
அழிய பிறந்தவர்கள்
அல்ல
ஆளப்பிறந்தவர்கள்
நீ
ஒரு நொடி கோபப்பட்டாய்
அதற்கு
நாம் இரையானோம்
நாம் விடுதலையை வேண்டி நிற்கும் இனம்
எவரும்
உதவிக்கு வரவில்லை
எம் மக்களே எமக்குதவினர்
எம்மை
தீவிரவாதிகள் என்று கூறியவர்கள்
இன்று
எம் புனரமைப்பு பணி கண்டு
தலை குனிந்து விட்டனர்
நாம்
தனி அரசுக்கு நிகரானவர்கள்
என்று எம்மை
பாராட்டியும் விட்டனர்
ஆழிக்கடல் பேரலையே
நீ
எம் தலைவன் முன்
தீச்சுவாலை போல்
எதிரியையும் ஓடவைத்தோம்
உன்னையும் முறியடித்தோம்
எந்த அழிவையும்
கண்டு நாம்
ஓயப்போவது இல்லை
வெகு விரைவில்
ஈழம் விடியும்
உன் மடிமீது
புலிக்கொடி பறக்கும்
உலகத்தமிழினமே தலை நிமிர்ந்து நிற்கும்
அதுவரைக்கும் பொங்காதே
பொறுத்திரு
இறப்பது தமிழ் இனமாக இருப்பினும்
பெறுவது தமிழ் ஈழமாக இருக்கட்டும்.
– சுவிசிலிருந்து புதியவன்.