ஆழ்கடலே !
ஆழ்கடலே ஆர்த்தெழுந்து
மீள்குடியை ஏன்- அழித்தாய்
ஊர் விடியும் வேளையிலே
உறவுகளில் உயிர் குடித்தாய்
பாருலகில் பைந்தமிழர்
படுதுயர்க்கோர் எல்லையில்லை
பேரழிவை ஏன் தொடுத்தாய்
பெண்கடலே நீ உரைப்பாய்
பெயரளவில் பெண்கடல் நீ
பெரும் சீற்றம் கொண்டது – ஏன்
பால்வடியும் பாலரையும்
பசியாறிக் கொண்டது- ஏன்
உன்னை எம் அன்னையென்றே
உலாவருவோம் உன்மடியில்
அலைமடியால் ஓங்கி
அனர்த்தம் ஏன் விளைவித்தாய்
அன்னை நீ ஆழித்தாய்
ஜயகோ கொடுமை – என்றேன்
பின்னர் உணர்ந்து கொண்டேன்
பிரளயத்தின் காரணத்தை.
தன்னவரை இழந்து மக்கள்
தனித்திங்கு துடிக்கையிலே
தென்னகத்தார் தெருவெல்லாம்
திருவிழாக் கோலம் கண்டேன்
அண்ணல் துடித்தெழுந்தான்
அணைத்தெடுத்தான் தன்னவரை
மன்னன் இவனென்று- இம்
மண்டலமே கண்டதம்மா
என்னை நானுணர்ந்தேன்
என் நாமம் நானறிந்தேன்
கண்ணை இமைகாக்குமென்று
கண்ணெதிரே கண்டு கொண்டேன்
தன்னை உணர்ந்த தமிழினத்தின் தற்குறியே
உன்னை நீ உணர்ந்து – ஊன்றி
உன் காலில்
மன்னவன் பணிதொடரும்
மக்கள் தம் மறு வாழ்வில்
அன்னவன் பின்னே
அனைவரும் அப்பணி தொடர்வோம்
அண்ணல் வழிநின்று
ஆண்டபரம்பரை – நாம்
மண் மீட்க புறப்படுவோம்
மாகடலே சூளுரைப் பேன்
அன்னை நீ ஆடிவிட்ட
அகோர தாண்டவத்தால்
மரணித்த மக்களெல்லாம்
மாவீரர் ஆவாரம்மா
– சுவிசிலிருந்து சுபாஸ்.