புதிய காற்று எம் தலைவன்
கடந்த காலங்களைப் போல் அல்லாமல், நிகழ்காலங்கள் பல்வேறு மாற்றங்களோடு ஒளிர்கிறது. பழைய மரபுகள் உடைத்தெறியப்பட்டு புதிய புனல் தாவிப்பாய்கிறது. அகராதிகள் உடைக்கப்படுகின்றன. அங்கே புதிது புதிதான சிந்தனைகள், படைப்புகள் தமது பரிவாரத்தை செலுத்துகிறது. அசைக்க முடியாத நம்பிக்கையும், ஆணவத்தை உடைத்தெறியும் அணிகலனுமாய் புதிய நிகழ்வுகள் தமது புரவியின்மீது புறப்பட்டு, வாள் வீசிக் கொண்டு வருகிறது. கடந்த காலங்களில் இருந்து கற்றுக் கொண்டவைகளே, நிகழ்காலத்தில் இந்நிலைகளை அடைய காரணமாக இருந்தது. அவை அடங்கிக்கிடக்கும் ஆத்மாவை நெருப்பால் தீயிட்டுக் கொளுத்தியது. கிளர்ச்சிகாரனாய் தம்மை அடையாளப்படுத்தியது.
அழிவுக்கான ஆரம்பம் என அடைமொழியால் பழையவர்கள் இதை பழித்தார்கள். இந்த அற்புதமான கிளர்ச்சியை தவறென தமக்குத் தாமே உரை எழுதிக் கொண்டார்கள். அவர்கள் தமக்கு கற்பித்துக் கொண்ட எண்ணங்களை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என விரும்பினார்கள். புதுமையைக் கண்டு அவர்களின் மனங்கள் சஞ்சலப்பட்டது. ஆகவே அவர்கள் அந்த கிளர்ச்சிக்காரனை யாதும் அறியாதவன் என்று பழிப்புரை சொன்னார்கள். மரபுகளை உடைக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்கள். எம்மைப்போல் இவர்கள் அறியவில்லை என அங்கலாய்த்துக் கொண்டார்கள். தாம் போராளிகளின் பரம்பரையை சுட்டிக்காட்டி, இங்கிருந்து எமது ஈட்டி புறப்பட்டது என்று பழமையின் இடிப்பட்ட கோட்டையை கையெடுத்து கும்பிட்டார்கள். வீழ்த்தப்பட்ட தமது அரசையும், உடைந்து போன தமது வாளையும் இவர்கள் உளமாற ஏற்று வழிபடத் தொடங்கினார்கள். இவர்களை அடக்கிப்போட அல்ல, அதிலிருந்து கற்றுக் கொண்டதை புதிதாக கொண்டுவந்த அந்த போர் வீரனை இவர்கள் மரபு மீறியதாக தம் மனம்போல் திட்டித் தீர்த்தார்கள்.
மன்னனுக்கெதிராய் தடை மீறுதல் சரியா? என மனமுடைந்து பேசினார்கள். இவர்கள் மரபுகளின் மனசீக காதலர்கள். அடிமைகளின் சேவகர்கள். தமது வாழ்வை உடைத்துக் கொண்டு, அடிமை தொண்டாற்ற ஆர்வம் காட்டுபவர்கள். கிழட்டுத் தனத்தை இவர்கள் கீழே தள்ள விரும்பவில்லை. பழைய நினைவுகளே இவர்களின் இன்பக் கோட்டையாக இனித்தது. கந்தைத் துணிகளில் சிங்காரம் பார்க்கும் சின்ன புத்தியை இவர்கள் கொண்டிருந்தார்கள். கொண்ட எண்ணத்தை கொள்கை என அறிவித்தார்கள். ஆனால் கொத்தளத்திற்குள் இவர்கள் வீழ்ந்து கிடப்பதை அடையாளம் காட்டியபோது, இதுவும் ஒரு தந்திரம் என சமாளித்தார்கள். இதையெல்லம் மீறித்தான் யுக கிளர்ச்சியாய் எழுந்து வந்த புயல்காற்றை இவர்களால் புரிந்து கொள்ள முடியாமல் தவிர்த்தார்கள். அந்த இனிய காற்றை பார்த்தபோதெல்லாம் இவர்களுக்குள் அச்சம் ஆட்கொண்டது. அந்த புதிய காற்று பழையவைகளைப் பார்த்து சலிப்புற்றது. புதியவையிலிருந்து ஒரு விடுதலையை கொண்டுவர அது தம்மை அர்ப்பணித்தது. இது தமது கொள்கை அல்ல, தமது மண்ணின் கொள்கை என தமக்குள் சொல்லிக் கொண்டது.
தம்மைவிட தமது நாடு பெரிதென எண்ணி, தாம் வாழ்வது சில நாட்கள் தான். ஆனால் நாடு தொடர்ந்து இருக்குமே? என்பதை நம்பிக்கையோடு இளைஞர்களுக்கு எடுத்துரைத்தது. அவர்கள் பனிபிரதேச எஸ்கிமோக்களோடு பனி குகைக்குள் மகிழ்வோடு வசிப்பார்கள். பாலைவனங்களில் வாழும் அகரின் சந்ததியோடு நிறைவோடு நடப்பார்கள். பாலைவனமும் பனிமலையும் இவர்களுக்கு ஒன்றானது. தமது வாழ்வை இருவேறு துருவங்களுக்குள்ளும் இணைத்துக் கொள்ளும் அரிய தத்துவத்தை அந்த புதிய காற்று இந்த இளைஞர்களுக்கு போதித்தது. சீறி எழுந்த அந்த புலிநிகர் தமிழர் கூட்டம் புறப்பட்ட போது, இந்த புவி மண்டலமே திரும்பிப் பார்த்தது. என்ன நிலையோ! ஆனால் என் நாடு வேண்டும் என்பதிலே அவர்கள் தம்மை சமரசப்படுத்திக் கொண்டது கிடையாது. தமது அழகிய தாய்நாட்டை ஆழமாய் நேசித்தார்கள். அந்த மண் துகள்களை மனமார நுகர்ந்து பார்த்தார்கள். அதில் கொட்டிக் கிடக்கும் தமது மூதாதையரின் நடைகளை அவர்கள் நம்பிக்கையோடு நினைத்துப் பார்த்தார்கள்.
தமக்கான தம் தாய்நாட்டை தூளியில் கட்டி தாலாட்டினார்கள். அவர்களின் தாலாட்டு சத்தத்தால் இந்த பூமியே நெகிழ்ந்து போனது. அந்த தாலாட்டின் நிறைவு, ஒரு சௌந்தரிய தரிசனம். அந்த புதிய காற்று பிறந்ததை உலகமே நம்பிக்கையோடு உற்று நோக்கியது. தமிழினம் தமக்கான காற்று என்று வாரி எடுத்து அணைத்துக் கொண்டது. எதுவும் இயற்கையாக நடைபெறுகிறது. எதையும் யாராலும் உருவாக்க முடியாது. இது காலத்தின் நிர்பந்தம். வரலாற்றின் கட்டளை. போராட்டத்தின் பிரதிபலிப்பு. எவராலும் மறுத்துரைக்க முடியாத மகத்தான காற்றாய் அது தம்மை உருமாற்றிக் கொண்டது. பழையவைகளிலிருந்து தம்மை மாறுபடுத்தி காட்டியது. சிலர் புதியதை எதிர்த்தார்கள். பழைய மொந்தையிலே பருகுவதைத்தான் தமக்கான போராட்ட பாதை என தொடர்ந்து சொன்னார்கள். அனைத்தும் உடைத்தெறியப்பட்டது.
ஒரு வரலாற்றின் இயக்கத்தை புறக்கணித்துத் தள்ளி மரபின் மடியை தமதாக்கிக் கொள்ளும் மடையர்களுக்கு இந்த புதுமை எரிச்சல் ஊட்டியது. ஒருசாரார், இவை மரபுக்கு எதிரான அழிவு ஆற்றல் என்று வாதாடினார்கள். ஆனால் இளைஞர்களோ, இது எம் விடுதலையை அறிவிக்கும் புதிய காற்று என புரிந்து கொண்டார்கள். இந்த இரண்டு ஆற்றல்களும் நேர்எதிர் நின்று மோதியபோது, புதியவை சுடர் கொளுத்தும் அறிவாய் சிரித்து நின்றது. அந்த அறிவு சுடருக்கு முன்னால் மரபுகளின் இருள் மண்டியிட்டது. பழைமையிலே உறைந்து சங்க கால பிணங்களை தோண்டி எடுத்த அவர்களின் மனம், நிகழ்காலத்தின் புதிய காற்றால் புரிதலைக் கண்டது.
எதையும் எதிர்கொள்ளும் நிகழ்காலத்தின் நம்பிக்கையாக எல்லோர் விழிகளும் ஒரே திசை நோக்கி பார்த்தது. அவர்களுக்கு ஒன்று புரிந்தது. மரபு என்பது மரணித்துவிட்டது. புதியதொன்றுதான் இப்போது நம்மை புலரசெய்யப்போகிறது என. காரணம், மரபுகளை உடைத்தெறிந்து, தமது மக்களை அடிமை விலங்கிலிருந்து உடைத்தெறிந்து மீட்க இந்த புதிய காற்று, புதிய முயற்சிகளை மேற்கொண்டது. அதற்காக பல்வேறு மீட்பு படைகளின் வரலாறை வாழ்க்கை முழுவதும் வாசித்தறிந்தது. மக்களின் விடுதலைக்காக சிறைபட்டவர்களையும், சிலுவையில் அறையப்பட்டவர்களையும், குருதி கொட்டியவர்களையும், உயிர் ஈகம் செய்தவர்களையும் இந்த காற்று உற்றுப்பார்த்து உணர்ந்தது.
அவமானப்பட்டவர்கள், கேலிக்குள்ளாக்கப்பட்டவர்கள், இந்த சிந்தனைக்கு முன்னால் புதிதாக தோன்றினார்கள். இதிலிருந்து புறப்பட்ட மகத்தான ஒரு சிந்தனை எந்த ஒரு மனிதனும் பிறக்கும்போதே வாயில் வெள்ளிக்கரண்டியோடு பிறக்கவில்லை என்பதை உணர முடிந்தது. ஆக, மக்கள் வரலாற்றில் போராட்டங்களின் மூலமே பசுமை விளைந்ததை அது தீர்மானித்தது. மக்களின் விடுதலை போராட்டத்தின் மூலம் தான் நிறைவு பெறும் என்பதை தமது இன உறவுகளுக்கு பிரகடனம் செய்தது. தமக்கான தமது சிந்தனைக்குரிய ஒரு ஆட்சியை நிலைக்குரிய தன்மைக்குள் கொண்டு வருவதே விடுதலையின் அடையாளம் என ரூசோவின் தத்துவம் தமிழீழ மண்ணில் எதிரொலித்தது. தனியார் சொத்துரிமை அங்கு தகர்த்தெறியப்பட்டது.
ஏற்ற தாழ்வற்ற, இயற்கையோடு பொருந்திய வாழ்வை அந்த காற்று தமது மண்ணில் தீர்மானித்தது. அரசியல் ஏற்றத்தாழ்வுகள் அங்கே உடைத்தெறியப்பட்டது. மக்களின் மகிழ்ச்சி நிறைந்த வாழ்வே மகத்துவமிக்கதாக போற்றப்பட்டது. இத்தனைகாலம் இருண்ட பள்ளத்தாக்கில் வாழ்ந்த எம் தமிழ் உறவுகள் கண்ணை கூசும் ஒளி வெள்ளத்தை கண்டு மகிழ்ந்தார்கள். அவர்களின் மூடிய விழிகள் திறக்கப்பட்டது. இருள் விலகியது. ஒளி பிறந்தது. பெண் அடிமையும், சாதிய ஒடுக்குமுறையும், தமிழீழ மண்ணிலிருந்து சமாதி நோக்கி ஓடின. சமத்துவத்தை கொண்டுவர சமகால காற்று அங்கு சூறாவளியாய் சுழன்று வீசியது. பெரியவர்கள் எல்லாம் தம்பி என்றழைத்தார்கள். சிறியவர்கள் எல்லாம் அண்ணா என்று அழைத்தார்கள். முதியவர்கள் எல்லாம் தமது பிள்ளை என்றார்கள். ஒட்டுமொத்த தமிழ் உறவுகளுக்கும் உயிராய், உறவாய், உணர்வாய் ஓங்கி நின்ற மகத்தான நம்பிக்கையின் காற்று தமிழீழ மண்ணில் தமது பாதத்தை பதிய வைத்தபோது, உலகத்திற்கே நம்பிக்கை வந்தது.
ஒன்றும் அறியாதவர்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த தமிழர்களின் வீரம், கொப்பளித்தது. சுட்டு வீழ்த்தப்பட்டவர்கள் சுடர் முகம் தூக்கி துப்பாக்கி ஏந்தினார்கள். ஒடுக்கப்பட்டவர்கள் வீறுகொண்டு களத்திற்கு வந்தார்கள். அந்த காற்று தம்மையும், தமது உறவுகளையும் புலி என அழைத்தது. புலிகளைக் கண்ட சிங்கங்கள் சிதறி ஓடின. ஊரெல்லாம் தேடி பகைவர்களை ஒன்றிணைத்து புலி வேட்டையாட புறப்பட்டு வந்தன. தமது அடிமை சிந்தனையை தகர்த்தெறிந்த புலிகள், புயலாய் நின்றார்கள். தமக்கானதல்ல வாழ்வு, தம் மண்ணுக்கானது என்பதை அவர்கள் பதிவு செய்தார்கள். அங்கே சீர்மிகு சிந்தனை சிறப்பாக ஆட்சி செய்யத் தொடங்கியது. அந்த சிந்தனை, உலக உறவுகளை ஒன்றிணைத்தது. கயவாளிக் கூட்டங்கள் அந்த மக்களைக் கண்டு அஞ்சி நடுங்கியது. அவர்களிலிருந்து மீண்டும் மீண்டுமாய் அந்த காற்றின் வேகம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
தமிழ் உறவுகளின் துன்பத் துயரங்கள் தீர்க்கப்படும்வரை அந்த காற்றின் பணி ஓயப்போவது கிடையாது. இவர்கள் தமது பகைவர்களிடம் கருணையை கையேந்தி பெறும் காலநிலைக்கு ஒருபோதும் வரப்போவதில்லை. இந்த மாந்தகுலம் அனுதாபங்களைக் கொண்டு வாழ்வதல்ல. அது போராட்டங்களினாலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறது. போராட்டங்களினாலேயே வளர்ந்து கொண்டிருக்கிறது. ஒருகாலத்தில் போராட்டங்கள் முற்றுபெறுமேயானால், அன்றே அது தமது வாழ்வை முடித்துக் கொள்ளும். இயற்கையை கண்டு அஞ்சி நடுங்கி, கையேந்தி நின்றிருக்குமேயானால், இந்த மாந்த வாழ்வு குகைக்குள்ளேயே முடக்கப்பட்டிருக்கும். ஆனால் போராட்டங்களினாலேத்தான் இன்று விண்ணையும் கடலையும் கட்டி ஆளும் மாபெரும் ஆற்றலாய் மாந்தம் உயர்ந்து நிற்கிறது.
இதை உணர்ந்த காற்று, வேகமாய் தம்மை உள்வாங்கிக் கொண்டு களத்திலே தம்மை அர்ப்பணித்தது. தொடர்ந்து வீசிக்கொண்டிருக்கும் இந்த காற்று புதிய காற்று. அது பழைமைகளை உடைத்தெறியும் காற்று. அந்த காற்று எம் தலைவனின் வடிவமாய் இங்கே தனிநிகர் பொலிவோடு சிரித்துக் கொண்டிருக்கிறது. இந்த காற்று தான், நம் தாய் தமிழின் உயிர்காற்று. தமிழர்களின் படைப்பாற்றலை, தமிழர்களின் படை ஆற்றலை, தமிழர்களின் தத்துவத்தை இந்த மண்ணுக்கு அறிவித்த மகத்தான காற்று. தமிழீழம் படைக்கும்வரை இந்த காற்றுக்கு ஓய்வில்லை.
– கண்மணி.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”