எம் தலைவன் கிழக்கு திசை
நிகழ்த்தப்பட்ட மாந்த பேரவலத்தை நினைத்துப் பார்க்கும் நாளுக்கு வந்திருக்கிறோம். ஹிரோஷிமா-நாகசாக்கி வீசப்பட்ட அணுகுண்டின் வெளிச்சம் அகிலத்தையே ஆட்டிப் படைத்தது. இரண்டாம் உலகப்போரின் வெற்றியை அமெரிக்கா தக்கவைத்துக் கொள்ள ஜப்பானின் நகரங்களின்மீது வீசிய அணுகுண்டு குறித்த தகவல்கள் அந்த மக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த பாதிப்பை அவர்கள் ஏற்றுக் கொண்ட பின்னர்தான் அந்த பாதிப்பில் கிடைத்த அவலங்களை பார்த்த பின்னர் தான் அடடா என்று கதறினார்கள். அவர்களின் அழுகுரலை பதிவு செய்ய ஊடகங்கள் அருகில் இருந்தது. நிகழ்த்தப்பட்டது மாந்த நாகரீகத்தின் சிதைவு. இது மன்னிக்க முடியாத மாபெரும் குற்றம் என மாந்த நேயத்தின் அக்கறை கொண்டவர்கள் எல்லாம் எதிர்த்து நின்று குரல் கொடுத்தார்கள்.
ஆனால் கிளிநொச்சியிலிருந்து முல்லைத்தீவுக்கும், முல்லைத் தீவிலிருந்து முள்ளி வாய்க்காலுக்கும் கடத்திச் செல்லப்பட்டு, பொய்யாக இது பாதுகாப்பு வலையம் என அறிவித்து, ஒட்டு மொத்த மக்களை ஒரே இருப்பிடத்திற்கு கொண்டு வந்து சேர்த்தப்பின்னர், அந்த மக்கள் மீது வான்வழியாகவும், தரைவழியாகவும் நடத்திய தாக்குதல் இதுவரை நடைபெற்ற யுத்தங்களின் நியாயங்களை மீறிய படுபாதகமாக இருந்தது. யாராலும் தட்டிக் கேட்க முடியாத, எடுத்துச் சொல்ல முடியாத, மாந்த பேரவலம் நிகழ்ந்து முடிந்தது. இது மாந்த நேயத்தை மட்டுமல்ல, ஒரு இனத்தையே அழிக்க படுபாதக செயல் என்பதை எடுத்துரைப்பதற்கு அங்கே ஏடுகள் இல்லை, அதை எழுதுவதற்கு ஊடகவியலர் இல்லை. அந்த இடத்தைக் கொண்டுபோய் காட்டுவதற்கு சிங்கள பேரினவாத அரசு தயாராக இல்லை. ஆனால் ஜப்பானிய நாகசாக்கி-ஹிரோஷிம்மா மக்களுக்கு தெரியாமலேயே அவர்கள் செத்துப் போனார்கள். ஆனால் எம் சொந்த மக்களுக்கு நிகழ்த்தப்பட்டது, அவர்கள் செத்துப் போவோம் என்று தெரிந்தே பாதுகாப்பு வலையத்திற்கு சென்றார்கள்.
அங்கே அவர்கள் முதியோர், பெண்கள், குழந்தைகள் என்ற பாகுபாடு இல்லாமல் இரத்த சகதியில் மூழ்கடிக்கப்பட்டார்கள். கேட்பதற்கு நாதியற்ற மக்களாய் அவர்கள் அங்கே கதறி துடித்தார்கள். காப்பதற்கான ஒரு கரம் வேண்டும் என்று அவர்கள் இந்த இந்திய நாட்டை நம்பி உதவி கேட்ட போது, அவர்கள் உதவி செய்ய மறுத்தாலும் பரவாயில்லை, உதவி கேட்டவர்களை கொன்றொழித்தார்கள். கிராமங்களில் சொல்வார்களே, இரவிலே உறங்க இடம் கொடுத்து, சோறு போட்டு, எதிரியிடம் காட்டிக் கொடுத்த கொடுமை போல, நான் காப்பாற்றுகிறேன், நான் காப்பாற்றுகிறேன் என்று சொல்லிக் கொண்டே எமது மக்களை கடந்த ஆண்டு இதே மே திங்களில் 10ஆம் தேதி முதல் தொடங்கிய கடும் தாக்குதல், எமது தேசிய ராணுவம் தாங்கள் கருவிகளை மவுனிக்கச் செய்கிறோம் என்று கூறியப் பின்னரும் கடும் தாக்குதல் நடத்தி 15, 16, 17, 18 தேதிகளில் ஒரு மிகப்பெரிய இன அழிப்பை நடத்தி முடித்தார்கள்.
உலக போர் முறைகளுக்கெல்லாம் எதிராக, உலக போர் சட்டங்களை தூக்கி காலில் போட்டு மிதித்த பெரும் கொடுமையை சிங்கள-பாசிச ராசபக்சே அரசு செய்து முடித்தது. அவர்களின் கரம் கோர்த்து களத்திலே இருந்து மகிழ்ந்தது பார்ப்பனிய பாசிச இந்திய அரசு. போர் நிறைவெய்தும்வரை ராசபக்சே குடும்பத்தின் செல்ல நாய்க்குட்டியாக திரிந்த சரத்பொன்சேக, போர் நிறைவு பெற்று அவரை சிறையில் போட்டப் பின்னால் ராசபக்சேவின் நரி தந்திரத்தை உரித்து வைக்கத் தொடங்கினார். போர் நெறிமுறைகளுக்கு மாறாக, வெள்ளைக் கொடி ஏந்தி சமாதானத்திற்காக வந்த எமது போராளிகளை கொன்று போட யார் கட்டளையிட்டது? என்ற கேள்விக்கு சரத் அளித்த பதில் நம்மை திடுக்கிட வைத்தது. கோத்தபய தான் கட்டளையிட்டார் என்று சொல்லியதின் மூலம் மகிந்தாவின் குடும்பம் எமது தமிழ் தேசியத்தின் அடையாளத்தை அழிக்க வெறியோடு களத்தில் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் இவ்வளவு அநியாயங்கள் ஒவ்வொருநாளும் தொடர்ந்து நிகழ்த்தப்பட்ட பின்னரும், எமது தமிழ் மறவர்கள் கைகளை பின்னால் கட்டி, கண்களை துணியால் கட்டி, பிடரியில் துப்பாக்கியால் சுட்டி கிடத்திய கோரம் ஊடகங்களில் வலம் வந்தபோது, அது பொய்.
திட்டமிட்டு அவர்கள் வடிவமைத்திருக்கிறார்கள் என்று பதறிய மகிந்தாவின் குடும்பம், ஐ.நா.வின் பதிலால் அடங்கிப்போனது. இல்லை இது நிகழ்த்தப்பட்ட உண்மையான படப்பிடிப்புத்தான் என்பதை ஐ.நா. அறிவித்தது. இவர்களுக்கெல்லாம் இந்த நாட்டின் மக்கள் தொகையில் பாதியை குறைத்து கணக்குக்காட்டி, மீதியை கொன்றொழிக்கும் திட்டத்திற்கு இந்தியாவின் அயலுறவுத் துறை அமைச்சர் பிரணாபும் துணைபோனார். இதன்மூலம் தமிழின அழிப்பின் கூட்டாளியாக இந்தியா வென்றது என்கின்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. ஒரு இனத்தை அவ்வளவு விரைவில் அழித்துவிட முடியுமா? என்பதுதான் நமது கேள்வி. நமது இனத்திற்கான ஒரு பாரம்பரியம் இருக்கிறது. நமது இலக்கியங்களும், இலக்கணங்களும் மூத்து நின்று, முதிர்ச்சிப் பெற்றிருக்கிறது. அடங்க மறுத்தலின் அடையாளங்களாய் எமது வீர மறவர்கள் இலக்கியங்களிலே களம் கண்டிருக்கிறார்கள்.
புறநானூறு இலக்கியம் எமது வீரத்தன்மையை இந்த மண்ணிற்கு விளக்கிக் கூற எழுதப்பட்டிருக்கிறது. கடந்த காலத்தை அவர்கள் புரவி ஏறி கரங்களிலே வாள் தரித்து, சண்டையிட்ட காட்சிகளை நாம் காணவில்லை. ஆனால் நாம் வாழும் காலத்திலே புறநானூற்றின் வீரத்தை பின்னுக்குத் தள்ளி, இந்தியா எனும் மாபெரும் ஆற்றல் வாய்ந்த ராணுவத்தை விரட்டி அடித்த மாபெரும் வீர மறவர்களின் வரலாற்றை நாம் கண்களால் கண்டோம். நமது பகைவன்கூட நம்மைக் கண்டு அஞ்சி நடுங்கியபடி வந்தான். ஆனால் நாம் நேர்மைக் குறித்த சந்தேகம் அவனுக்கு ஏற்பட்டது கிடையாது. நமது இன உறவுகள் துடிதுடித்து மாண்டபோதுகூட, கொண்ட கொள்கையில் துளிக்கூட சமரசம் செய்து கொள்ளாமல் அறம் காத்து சமராடிய அறத்தின் பாதுகாவலனாக எமது தேசிய ராணுவம் இருந்தது. எமது மக்களை விட மேலானது ஒன்றும் இல்லை என்பதிலே இருவேறு கருத்துக்களுக்கு அவர் இடம் தரவில்லை. நிகழ்வுகள் ஒவ்வொன்றிலும் எந்த அளவிற்கு சமர் களத்திலே வீரம் சொறிந்தார்களோ, அதைவிட மேலாக அவர்கள் அறம் சொறிந்து களமாடினார்கள்.
களமாடிய அந்த அறவீரர்களின் வித்துடல்களை எமது மண்ணின் மானத்திற்காக அந்த மண்ணிலே உரமாகிய எமது கார்த்திகை பூக்களை, எமது மானத்தின் அடையாளத்தை காத்து நிற்பதற்காக தம்மையே எரித்துக் கொண்ட அந்த கற்பூர தீபங்களை தாம் புதைக்கப்பட்ட மண்ணிலிருந்து எடுத்தெறிந்து, தமது வக்கிரத்தை வெளிக்காட்டிய மகிந்தாவின் கேவலம், இன்று இல்லாவிட்டாலும் நாளை வரலாற்றில் கருப்பு புள்ளியாய் நிலைத்து நிற்கும் என்பதை அவர்களுக்கு புரிய வைக்கும் தருணம்தான் இந்த மே 17 தினம் என்பதை நாம் மறக்கக்கூடாது. நமது வாழ்வு, நமது தேவை குறித்து நாம் சிந்திக்கும்போது கடந்த காலங்களில் நடத்திய போராட்டங்கள், சற்றேறக்குறைய 60 ஆண்டுகளாக நிகழ்ந்து கொண்டிருந்த நமது உரிமைக்கான சமர், நமது வாழ்வியலின் உயர்வுக்காக நடத்தப்பட்டது.
கல்வி, வேலைவாய்ப்பு, மொழி, கலாச்சார பண்பாட்டு சீரழிவுகளிலிருந்து நம்மை காத்துக் கொள்வதற்காக, நம்மை மதிக்காக சிங்கள பேரினவாதத்தை எதிர்த்து நாம் களம் காண்போம். ஆனால் முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கு பிறகு, நாம் தமிழீழம் தான் தீர்வு. அதைத்தவிர வேறு பேச்சுக்கே இடம் கிடையாது. இது எமது உரிமைக்கான களமல்ல, எமது உயிர் வாழ்வதற்கான களம் என்பதை எதிரிக்கு எடுத்துரைக்கும் நாளாக இதை நாம் அடையாளப்படுத்தி பார்க்க வேண்டும். எந்த இடர் வந்தாலும் நமது பயணத்தின் தொடர் தடைப்படக் கூடாது. உலக வரலாற்றில் மாபெரும் சாம்ராஜ்ஜியங்களை கட்டி ஆண்ட எத்தனையோ பேர் அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறார்கள். நிகழ்கால வரலாற்றில் அதுதான் சாத்தியமானது. அதுதான் உண்மையும்கூட.
தமது 17வது அகவையில் ரசிய காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட அந்த இளைஞனைப் பார்த்து காவல்துறை அதிகாரி சொன்னான், தம்பி நீ யாரை எதிர்த்து நிற்கிறாய் தெரியுமா? மாபெரும் ஆற்றல் வாய்ந்த ஜார் அரசை இந்த ரசிய சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தியை என்றபோது, அந்த இளைஞன் சொன்னான், இது பார்ப்பதற்குத்தான் பிரம்மாண்டமாக இருக்கிறது. ஓங்கி ஒரு குத்துவிட்டால் இந்த கோட்டை சரிந்து விழுந்துவிடும். காரணம் உள்ளே செல்லரித்துப் போயிருக்கிறது என்றான். அவன்தான் ரசிய சாம்ராஜ்ஜியத்தை மக்கள் திரள் போராட்டங்களால் புரட்டிப்போட்ட மாபெரும் போராளி மாவீரன் விளாதிமிர் இலியீச் லெனின். ஆக, மகிந்தாவின் இந்த செல்லரித்துப் போன சாம்ராஜ்ஜியத்தை ஓங்கி குத்துவிடுவதற்காக சபதம் எடுக்க வேண்டிய நாள் தான் இந்த மே 17.
நமக்கான வாழ்வை, நமக்கான வளத்தை, நமது உரிமையை சூறையாடிய போதுகூட நாம் சகித்துக் கொண்டோம். ஆனால், இப்போது நமது வாழும் உரிமையையே சிதைக்க நினைக்கும் இந்த அட்டை சிங்கத்தின் ஆட்டத்தை ஒடுக்குவதற்கான நாளாக இந்த மே 17 இருக்க வேண்டும். இது நிகழுமா? என்ற சந்தேகம் நம் மனதிலே ஒரு துளிக்கூட எழக்கூடாது. காரணம் வரலாற்றில் இப்படி வீழ்ந்த ஆதிக்க வாதிகளின் எண்ணிக்கை ஆங்காங்கே சிதறிக் கிடக்கிறது. ஹிட்லரும், முசோலினியும் மாபெரும் வீரர்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் மக்கள் ஆற்றலின் முன்னால் அவர்களின் அட்டைக் கத்தி மடங்கிப்போனது. அவர்களின் துப்பாக்கித் தோட்டாக்கள் வெறும் கூடுகளாய் வீழ்ந்து நொறுங்கியது. இந்த உலகின் மக்கள் ஆற்றலைவிட மேலானது ஒன்றுமில்லை.
ஆகவே, நாம் உறுதியாக சபதம் எடுக்க வேண்டிய தருணத்திலே இருக்கிறோம். எமது தேசிய தலைவர் அறம் வழிக் கொண்ட நாயகர், அயராத உழைப்பாளி, அளவிட முடியாத பண்பாளர், அள்ளி பருக முடியா அன்புச்சுரங்கம், அவரின் வழி நடத்தலும், அவரி விழி பார்வையும் நம் பயணத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த ஒரு மகிந்தா அல்ல, இந்த மகிந்தாவோடு ஆயிரம் மகிந்தாக்கள் ஒன்றிணைந்தாலும் நமது தேசிய அடையாளத்தை மாற்றி அமைக்க எவராலும் முடியாது. நமது தேசிய அடையாளத்தைக் காக்க, எம் தலைவர் எல்லா காலத்திலும் களம் அமைக்க தயாராகவே இருக்கிறார். நாம் தயார் என்ற எண்ணத்தை வெளிப்படுத்துவதற்கான நாளாகவே இந்த மே 17ஐ நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். விதைக்கப்பட்ட நமது மாவீரர்களின் திசைகளை நோக்கி நமது கரங்களை உயர்த்தி சபதம் எடுப்போம். எம் தலைவன் கிழக்கு திசையாய் சிரித்துக் கொண்டிருக்கிறார். அவர் விழிப்பின் அடையாளமாய் நம்மோடு நடந்து கொண்டிருக்கிறார். கண் மலர்ந்தது போதும். கண் விழி. கிழக்கு திசையை நோக்கி நடந்து செல்.
– கண்மணி.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”