மாவீரர் கல்லறையின் நினைவில் நினைந்துருகி….
தமிழீழ மாவீரர்களின் துயிலும் இல்லக் கோவில்களின் உணர்வில் உறவுகளின் உள்ளங்களில் மலர்ந்தவை கவிச் சோலையாக ….
அமைதியாய் தூங்கும் மாவீரர்களே
எம் தமிழ் ஈழத்திற்காக
உயிரையே கொடுத்துவீட்டீர்கள்
என்ற பெருமையில் தூங்குகின்றீர்களா?
உங்கள் உயிர்களின் விலை
என்ன தெரியுமா?
நாளை மலரும் தமிழீழம் தான்
அது எமது கையில் கிடைக்கும் போது
முதலில் உங்கள் கல்லறையில்தான்
சமர்பிக்க வேண்டும்.
அதுவரை அமைதியாக துயில்
கொள்ளுங்கள் மாவீரர்களே.
திருமதி. மணியம் வசந்தி
கிறினி – பிரான்ஸ்
சிந்தனை சிறகடித்த உள்ளங்கள்
விழி இமையாய் தமிழ் இனத்தைக் காத்தவர்.
விடியலை கணப் பொழுதாய் எட்டிட விரைந்தவர்
மானிட வாழ்வியலில் உச்சத்துக்கு உரியவர்
ஈழத் திருநாட்டின் விடிவெள்ளி
காலமெல்லாம் போற்றுதற்குரியவர்
கல்லறையிலே விடிந்து வரும்…
தாயக நினைவளையுடன் பூரிக்கும் வீரர்.
தரணி
வில்நெவ் – பிரான்ஸ்
அஞ்சிப் பணிந்து அடிமையாய்ச் சாகாமல்
நெஞ்சுரத்தோடு நீதிக்காய்ப் போராடி
துஞ்சிய எங்கள் சகோதர – சகோதரிகள் துயிலும்
பஞ்சின்மென் பாசறை பார்க்கின்றோம் அந்தோ.
இறந்தாரில்லை அவர்கள் இனியும்
பிறந்தால் தமிழன் தனிநாட்டில் தான் பிறப்பர்.
மறந்தும் பிறன்கேடு சூழாது தமிழர்க்காய்த்
துறந்தார் உடலினைத்தான் தூசவர்க்கு
இவ்வுடல்கள்.
சின்னையா சிவஞானசுந்தரம்
பேர்லின் – ஜேர்மனி.
கல்லறைக்குள் அடங்கி வீட்டீரோ?
கண்ணீருக்குள் நிறைந்து விட்டீடோ?
சொல்லற்கரியதுங்களது ஈகமே.
தோன்றிடும் விரைவில் தமிழீழமே.
வல்லமை தாரீர் உம் வழி நடக்க,
வலிமை சேர்ப்போம் சாவையும் கடக்க,
நல்விதையானீர் நாட்டு விடுதலைக்கு.
நனவாகும் கனவு நிச்சயம் நாளைக்கு.
திருமதி. அ.றிச்சாட்
சின்டேல்பிங்கின் – ஜேர்மனி
காலத்தால் அழியாத கல்லறைகள்
நீங்கள் காண்பது எகிப்திய பிரமிட்டுக்கள் அல்ல
அதைவிட மேலான உயர்ந்த உத்தமர்கள்
துயிலும் அமைதியான இல்லங்களில்
அமைந்திருக்கு நினைவுச் சின்னங்கள்
மண்ணுக்காய் நாளை வரும் இளம் முல்லைகளுக்காய்
தம் இன்னுயிரை விதைத்து குருதிச் சேற்றால்
தாய்மண்ணை ஈரமாக்கிய ஈழத்தாயின் மைந்தர்கள்
துயிலும் இல்லமிது….
இவை கல்லறைகள் அல்ல காலம் காட்டும் வரலாறுத் தடம்
எத்தனையோ வீரத்தியாகங்கள் இந்த உலகில் நிகழ்ந்தாலும்
அவை அத்தனையும் எம் புளிவீரரின் தியாகத்திற்கு ஈடாகாது
இது மண்மீட்பு வேள்வியில் கனலாகிப் போன
உத்தமர்களின் காணிக்கைக் கல்லறைகள்.
நயினை பாரதி
பேர்ண் – சுவிஸ்
அண்ணன் வளர்த்தெடுத்த
அருமைக் குஞ்சுகள்
தங்கள் கடமை முடித்து
அமைதியாய் உறங்குகின்றன.
கல்லறைகள் இவர்களின்
ஞாபகப் பூங்கா ஆனால்
இவர்களின் வீரம்
இன்னும் உறங்கவில்லை
தமிழீழம் கிடைக்கும்
வரைக்கும் உறங்காத வீரர்கள்.
றவித்தா சிவகுமாரன்
குன்சன்கஹவுசன் – ஜேர்மனி
சுற்றும் பூமியில் தமிழீழத்தின்
சூரியப் புதல்வர்கள் உறங்குமிடம்!
சூறாவளியானாலும் பெரும் புயல்காற்றாலும்…
அசைக்க முடியாதவர்கள்! இவர்கள்….!
எம் இனவிடுதலைத் தீயை கொழுந்து விட்டு
எரிய வைத்தவர்கள்! இரத்தக்கடலில் நீந்தி
எம் தேசமிட்டவர்கள்!
உறங்கிக்கிடந்த தமிழீழத்தின் உயரிய
இலட்சியத்தை
உலகறிய வைத்த உன்னத உத்தமர்கள்
உறங்குமிடம் !!
க.சிவா
சூரிச் – சுவிஸ்
வெஞ்சமர்கள் ஆடி வெற்றிகளை ஈட்டி
அவ்வெற்றிக்கு வித்தான எம் – கண்மணிகள்
துயில்கொள்ளும் போற்கோவில்கள் இவை
பண்டைய வரலாற்றின் வழிவந்த செந்தமிழரின்
கருவறைகள் இவை – தேசத்தை மீட்க
விதையாகிப் போனவரின் மனை இது – இவைகள்
மீண்டும் விழுது விடும் – நாளை விடியப் போகும்
எம் சுதந்திர பூமியில் எழுந்து நிற்கும்.
மத்தொனி சிவலிங்கம்
லண்டன் – பிரித்தானியா
இளமைக் கல்வியை மறந்து
இல் வாழ்வின் சுகபோகம் துறந்து
தாய் மண்ணைக் காப்பதற்காய்
தன்னுயிரை தந்து விட்ட
எம் ஈழ மாவீரர்களுக்கு,
நாங்கள் கட்டிய பொற்கோவில்கள்.
நீங்கள் புதைக்கப்படவில்லை
விதைக்கப்பட்டுள்ளீர்கள் – உங்களை
சிரம் தாழ்த்தி வணங்குகின்றோம்.
மீண்டும் இம் மண்ணிலே பிரபதற்காக.
கல்லுக்கும் இதயம் இருந்தால்
கசிந்து உருகட்டும்
சொல்லுக்குள் அகப்படாது
உங்கள் தற்கொடை வாழ்வு
போராட்டத்திற்கு வெளியே நிற்கும் வெளியானையும்
நிறுத்தி விழி நனைந்து நெஞ்சுருகும் நிகழ்ச்சி
வெல்வோம் உங்கள் இலட்சியத்தை
வீழ்த்துவோம் எதிரியின் மமதையை
வல்லமை தாருங்கள் இருள் சூழ்ந்த
தமிழீழம் மீண்டும் பயனுற வாழ்வதற்கு.
கழுத்தினில் நஞ்சையும்
நினைவினில் விடுதலையும் சுமந்த
அர்ப்பணப் பூக்களே, கார்த்திகை தீபங்களே
சிரம் தாழ்த்தி கரம் குவித்து அஞ்சலிக்கின்றோம்.
திரு.திருமதி பிரான்சிஸ் சகாயம்
யூலிச் – ஜேர்மனி.
நீர் காண்பது புதைக்கப்பட்ட நிலம் அல்ல
அது விதைக்கப்பட்ட நிலம் – இங்கே உறங்குவது
தமிழ் மண்ணுக்கு உரமான மாவீரர்கள்
மரியாதைக்குரிய மைந்தர்கள் இவர்கள்
தோல்விகளால் இவர்கள் தூக்குமாட்டி மடியவில்லை
தோல்வியே கூடாது தமிழுக்கு என்று சொல்லி
மரணத்தை நோக்கி வீறுநடை போட்டவர்கள்
தேசத்தின் பிரியத்தால் சாவைக் காதலித்தவர்கள்
இங்கே துயில் கொள்கிறார்கள் – இவர்கள்
இதயாலயத்தில் வைத்து பூசிக்கப்பட வேண்டியவர்கள்
ஆம் இவர்களை பூசிக்க புத்தாடை உடுத்தி புனிதமாக
பாதணிகளை விலத்தி ஒரு நிமிடம் மெளனியுங்கள்.
கி.சு.உமாசுதன்
நூறனபேக் – ஜேர்மனி.
உங்கள் உயிரிலும் உதிரத்திலும் கலந்தது
எங்கள் சுதந்திரமும் நிம்மதியும் எல்லாமும்.
நீங்கள், முகமறியா உறவுகளுக்காகவே
உங்களை வருத்திக் கொண்டீர்கள்.
தாயவள் விடுதலைக்காகவே சாவைச் சுமந்தீர்கள்.
அதனால், உயிர் பிரிந்த உடல்களாய்
அவள் கருவறைக்குள் மீண்டும் புகுந்து கொண்டீர்.
எங்களினம் உள்ளவரை உமக்குச் சாவு இல்லை
பரந்த வெளிமீது நாளை சுதந்திரக் காற்று வரும்
நெஞ்சு நிறைய சுவாசித்து நிம்மதியாய் உறங்கிடுவீர்.
ந.ஹேமராஜ்
லண்டன் – பிரித்தானியா
நிழலாடும் மனித வாழ்வின் நிஜம் தேடிச் சென்றவரே!
களமாடும் கடமைதனை கடைசிவரை உளமாரச் சுமந்தவரே!
கண்மூடிய கடைசி வேளையிலும் இலட்சியக்கருவை ஏந்திய கவிதைகளே!
கண்மூடிக் கல்லறையிலும் நிம்மதியாய் உறங்கிடாத காவியங்களே!
விண்ணோடு நீர் விதைத்துச் சென்ற விடியல் விளையும் நேரம் – உம்
கண்ணோடு கலந்திட்ட தமிழ்த்தாயின் காயங்கள் ஆறும்.
பொன்னான எதிர்காலம் புளியாலே எம் மண்ணில் உருவாகும்.
அந்நாளில் உம் கண்கள் நிம்மதியாய் நித்திரையைத் தழுவும்.
செல்வி. சா.சிவகெளரி
ஐடே – நோர்வே.
ஐயிரண்டு மாதங்கள் கருவறையில் இருந்தீர்கள்
பின்பு அன்னை மண்ணில் தவழ்ந்தீர்கள்.
தளிர் நடை பயின்று தமிழ்த் தாய் மொழி
வாய் மொழிந்தீர்கள்.
இளமைக்கால இனிமைகள் தான் சுமந்தீர்கள்?!
இல்லை.
தாய்மண்ணின் மானம் காக்கப் புறப்பட்டீர்கள்.
இளம் சிறுத்தையாக உருவெடுத்தீர்கள்.
தமிழ் மண்ணைக் காத்து விடிவு தந்து விட்டு
நீர் உறங்குகின்றீர்.
நாளை மலரப் போகும் தனித் தமிழீழத்திற்கு
உமது கல்லறைகள் வரலாறு ஆக்கப்படும்.
இசைஞானவதனி ஜெயராஜா
எல்ஸ்டோவ் – ஜேர்மனி.
நிம்மதியாக உறங்கிய
கருவறைகள்
வெடியோசை கேட்டு
தலை நிமிர்ந்து பார்க்கின்றன.
மீண்டும் தானுறங்கும் மண்
மீட்க எழப்போகின்றன.
வே.பி. இன்பன்
பிரான்ஸ்
அமையும் தமிழீழத்தின்
அத்திவாரம்…
“அண்ணனின் பாசறையில்
அரிந்தெடுத்த வைரங்கள்
அமைத்தன தமிழீழத்தின்
அத்திவாரக் கற்களாய்.”
செ.ஆனந்தன்
பெரடேசியா – டென்மார்க்
கல்லறைகள் கண்களுக்கு
கற்களாகப் புலப்படவில்லை.
கரும் பாறைகளைப் போல்
நெஞ்சை நிமிர்த்தி
எமது எல்லைகளை விட்டு
அகலாத எதிரிகளை
வீழ்த்தி ஈழ
சரித்திரத்தில் அழியாப்
புகழுக்கு வித்திட்ட
மாவீரர்களின் வித்து !
மகா
பாரீஸ் – பிரான்ஸ்
தாய்மண்ணின் விடுதலையின் தாகத்துடன் மாவீரர்கள் முதல் எம் மக்கள் விதைத்து சென்ற தேசத்தின் விடியலின் கனவு என்றும் அழியா புகழுடன் நாளும் யாரும் அறியா மாவீரரின் புகழ் உரைத்து வீசும் தேசக்காற்றுக்கு உங்கள் ஆவணங்களை அனுப்பி விடுதலையின் விடுதலையின் தாகத்தை விதைத்து வருங்காலத்தின் விருட்சங்களுக்கு உறுதுணையாய் உங்கள் ஒத்துழைப்பு நாளும் எதிர்பார்கின்றோம்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”