பற்று
அது ஒரு துரோகியின் குடும்பம்.
முக்கிய கும்பல் ஒன்றைச் சேர்ந்தவன் அந்தத் துரோகி.
இந்தியர்களின் காலத்தில் பாரதூமான துரோக வேலைகளை அவன் செய்து கொண்டிருந்தான்.
அவனது இந்தத் துரோக வேலைக்கு , தெரிந்தோ தெரியாமலோ அவனது குடும்பமும் அதற்கு உடந்தையாய் இருந்தது.
தங்களது வீட்டில் விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான ஆயுதங்கள் புதைத்து வைக்கப்படுவதைத் தடுக்காத அளவுக்கு அது இருந்தது.
இந்தியர்கள் வெளியேறிய பின்….
அதே ஊரைச் சேர்ந்த வீரனொருவன் தந்த ஆதாரபூர்வமான தகவல்களின்படி – அந்த ஆயுதங்கள் மீட்கப்படதுடன் அந்தக் குடும்பமும் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டது.
தேசத்தின் நன்மை கருதி மட்டும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அது.
அவர்கள் எதிரியின் ” பிரதான நகரிக்குப் ” போய்விட்டார்கள் குடும்பமாகவே.
தங்களைப் பற்றிய தகவல்களை எங்களுக்குத் தந்தது யாரென்பது , அவர்கள் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும்.
அந்த எங்கள் வீரன் பின்பொரு நாளில் , கரும்புலி நடவடிக்கை ஒன்றுக்குத் தெரிவாகினான்.
தெரிவாகியவன் , அங்கு அனுப்பி வைக்கப்பட்டான்.
போய்ச் சேர்ந்தவன் , அதற்குரிய அலுவல்களை அங்கு கவனித்துக் கொண்டிருந்தான்.
ஏதோ அலுவலாக அவன் வீதியில் போய் கொண்டிருந்த காலை வேளை….
நூறு , இருநூறு என்று அகப்பட்ட தமிழர்களையெல்லாம் அள்ளிக் கொண்டுபோகும் படலத்தில் எதிர்பாராத விதமாகச் சிக்குண்டு , அவனும் உள்ளே போக வேண்டிய துரதிஸ்ரம் நிகழ்ந்துவிட்டது.
மனதுக்குள் ஆயிரம் போராட்டங்களோடு கம்பிக் கூட்டுக்குள் அவன் நின்றிருந்த வேளை , அந்த நிலையத்துக்குள் நுழைந்தான் அவன் !
தலைக்குள் மின்னல் வெடித்த அதிர்ச்சி , அது வெளியேற்றப்பட்ட அந்தத் துரோகியின் குடும்பத்தைச் சேர்ந்த ஓருவன் !
மெல்ல நழுவி ஆட்களுக்குள் மறைந்துவிட இவன் முனைவதற்கிடையில் அவன் ஏதேச்சையாகக் கண்டுவிட்டான். இருவரது பார்வைகளும் பயங்கரமாக மோதிக் கொண்டன…!
இவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்த நொடியில் எல்லாமே முடிந்து விட்டது என்றொரு விரக்தி உணர்வுதான் ஏற்பட்டது.
அவன் தன்னை நினைக்கவில்லை. தாயகத்தை நினைத்தான். அதற்கு மேலாகத் தான் செய்யவந்த காரியத்தை நினைத்தான். அதற்கும் மேலாகத் தன்னை அனுப்பி வைத்தவர்கள் தன்னில் வைத்திருந்த நம்பிக்கையை நினைத்தான்……
அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அடுத்த கணங்களில் என்ன நடக்கப் போகின்றது என்பதை நினைக்கையில்…..
யாழ்பாணத்திலிருந்த , அந்த எங்கள் வீரனது விட்டுக்கு ஒரு கடிதம் வந்தது.
அவன் இங்க பிடிபட்டு உள்ளுக்க நிண்டவன். நல்ல காலம் நான் கண்டபடியால அங்க கதைச்சு வெளியில எடுத்துவிட்டனான். அவன் இங்க வாய்பார்த்துக் கொண்டு திரிஞ்சு திரும்பவும் மாட்டுப்படப் போறான். இவனைக் கவனமாக நிக்கச் சொல்லி விடுங்கோ.
கரும்புலித் தாக்குதலை நடத்துவதற்கு முன்னர் கூட வந்திருந்த பெரியவர் ஒருவருக்கு நம்பிக்கையோடு சொன்னானாம்.
எங்கட போராட்டம் தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவருத்தன்ர மனச் சாட்சியையும் உலுப்பிவிட்டிருக்குதையா , இந்தப் போராட்டம் நிச்சயமாக வெல்லும் !
– உயிராயுதத்திலிருந்து……
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”