சத்து
அவனுக்குரிய தாக்குதல் காலம் துவங்கிவிட்டிருந்தது.
ஏற்க்கனவே சில நாட்கள் போய் வந்துவிட்டான்.
தொடர்ந்தும் நாளாந்தம் போய் வந்து கொண்டிருக்கிறான்.
அன்று காலையிலும் கூட போய் விட்டுவந்து தான் நின்றான்.
தாக்குதல் நடக்கவில்லை,
நடாத்த முடியவில்லை.
இலக்கு வரவேண்டும். வந்து , நேரே சந்திக்க வேண்டும். சந்தித்துத் தாக்கு தூரத்திற்குள் கச்சிதமாக உட்பட வேண்டும்.
அப்போதுதான் துல்லியமாக அடிக்க முடியும்.
இப்படியாக எல்லாம் சரிவந்து பொருந்துகிற சந்தர்ப்பத்தையே அவன் ஒவ்வோரு நாளும் எதிர்பார்த்துப் போனான்.
அன்று காலையும் கூட அத்தகைய சந்தர்ப்பம் நழுவிப் போய்விட்டது.
அன்று மாலையோ, அடுத்த காலையோ, அல்லது மறுநாளோ அது நடந்துவிடக்கூடும்.
தான் தங்கியிருந்த விட்டுக்கு அவன் திரும்பிவிட்டிருந்தான்.
அவர்களுக்கு எதுவும் தெரியாது.
மதியச் சாப்பாட்டுக்காக மேசையில் அவனும் விட்டுக்காரர்களும் , அமர்ந்தார்கள்.கூடவே அவனது நண்பனொருவனும்.
அம்மா சாப்பாடு பரிமாறும் போது , முட்டை பொரித்துத் தருமாறு கேட்டான்.
ஒன்றுமே பேசாமல்போன அம்மா முட்டையை அரை அவியலாக எடுத்து வந்தாள்.
” முட்டையைப் பொரித்துத் தரச் சொல்லியல்லோ அம்மா நான் கேட்ட னான்…. நீங்கள் அவிச்சுக் கொண்டு வாறியள்…. ”
அந்த அப்பாவி அம்மா சொன்னாள்.
” பொரிச்சா சத்தெல்லாம் போயிடுமடா தம்பி , அதுதான் அவிச்சு வந்தனான். சத்து இருக்கும் , உடம்பில சேரும்….. சாப்பிடு…. ”
இதற்கு இரண்டொரு நாளின் பின் இந்தத் தீவை உலுக்கிய அந்த வீரன் – அருகில் இருந்த நண்பனைப் பார்த்து உதிர்ந்த நமட்டுச் சிரிப்பின் காத்திரமான அர்த்தம் , மற்றவர்களுக்குப் புரிந்திருக்க நியாயமில்லைத்தான் !
– உயிராயிதத்திலிருந்து …..
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”