உலங்கு வானூர்தி மீதான தாக்குதல்
இலக்குகைத் துகளாக்கி உயிரேந்தி மீண்ட தேசத்தின் புயல்கள்….
கனகராயன்குளத்தில் இருந்த தற்காப்பு சமர்நிலையை தந்திரோபாய பின் நகர்வாய் மாங்குளத்துக்கு எமது படையணிகள் மாற்றியிருந்தன.
அன்று இரவு, தளபதியோடு கதைத்துவிட்டு உறங்க நினைத்த எமக்கு உறக்கம் வரவே இல்லை. எப்படித்தான் வரும்; எமக்குரிய அந்த இலக்கு அழிக்கப்படும் வரை.
எமது கரும்புலிகளின் விசேட அணி. வானம் இருண்டு கிடந்தது. விடியலுக்கு உரிய எந்தத்தடயமும் அதில் தென்ப்படவில்லி. நேரம் {31.12.1997} அதிகாலை 3:30 மணியிருக்கு. இருளோடு இருளாக தளபதிகள், சக போராளிகள் விழிகசிந்து – கையசைத்து வழியனுப்ப. அவர்களின் பார்வையில் இருந்து மெல்ல மெல்ல இருளோடு கரைந்து கனகராயன்குளத்தின் ஊடாக நகர்ந்துகொண்டிருந்தோம்.
அது எதிரியின் கொலை வலயம். எந்நேரமும் எதிரி தயார் நிலையில் இருக்கும் பிரதேசம் அது நிலமட்டத்தொடு உருமறைக்கப்பட்ட முன்னணிக் காவலரண்கள், முட்கம்பி வேலிகள், பற்றையோடு பற்றையாயாக இலகுவில் இனம்கண்டு கொளமுடியாத பொறிக்கண்ணிகள். இவை ஒருபுறமிருக்க உள்நுழைய முடியாத முட்பற்றைகள், இருகல் காடுகள், நீர்நிறைந்து பாய்ந்துகொண்டிருந்த காட்டாறுகள்; இவை இன்னும் எமக்கு பாதசமாய் இடையூறாகவே இருந்தன. ஏனெனில் இவற்றின் ஊடக எமது ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் சத்தமின்றி கொண்டு செல்வது கடினமான பணியேதான்.
முன்னணிக்காவல் நிலையைக் கடந்து இராணுவப் பிரதேசத்திற்குள் நுழைந்துவிட்டோம். அங்கும் அமெரிக்கப் பயிற்சி பெற்ற சிறப்புப் படையணிகள். தேடுதல் நடத்துவதற்க்காய் அடிக்கடி செல்லும் ரோந்துப்பாதைகள், அதன் இடைக்கிடை அமைந்திருக்கும் மினி முகாம்கள் , மற்றும் பகல்நேரக் கண்காணிப்பு நிலைகளைக் கடந்து விஞ்ஞானகுளத்தின் தெருவோரப் பற்றைக்குள் தங்கினோம். காலை, மதிய உணவுகளை உண்டு இருட்டும் வரை காத்திருந்தோம். அதுவரை விஞ்ஞானகுளப் பாதையால் செல்லும் இராணுவ விநியோக வாகனங்களைப் பார்த்துக் கொண்டிருக்க, எமக்கு அருகாய், மிக அருகாய் இராணுவ ரோந்து அணி ஒன்று பற்றைக்குள்ளால் சென்றுகொண்டிருந்தது.
நாம் கடந்து வந்த கனகராயன்குளப் பக்கமாய் ஒரே வெடிச்சத்தங்களும், எறிகணைகளும் சீறிச்செல்லும் ஒளியுமே சரமாரியாகக் கேட்டவண்ணமிருந்த்து. பின்னர்தான் தெரிந்துகொண்டோம். கனகராயன்குளத்தை நோக்கி சிங்களப்படைகள் சென்றுகொண்டிருப்பதாய். அந்த விஞ்ஞானகுளப் பற்றைக்குள் இருளும்வரை தங்கியிருக்கும் பொழுது முதல் நாள் நினைவுகள் நினைவில் வந்து கலந்தன.
தமிழீழத் தேசியத்தலைவரை சந்திக்கும் பொன்னான பொழுதுக்குள் பிரவேசித்துக் கொண்டிருந்தோம். ஒரு கரும்புலித்தாக்குதலுக்காய் செல்லும்போது அவரிடம் விடைபெற்றுச் செல்வது எமக்கெல்லாம் ஒரு ஆத்மதிருப்தியைத் தந்தது. மலருகின்ற தமிழீழத்தில் மகிழ்வோடு வாழ்வதான ஒரு புதிய உத்வேகம் , ஒரு புதிய புத்துணர்வு, எம்மை ஆட்கொள்ளும் கணங்கள் அவை. அவரோடு மகிழ்ந்து பேசி, கூடிக்கலந்து, உண்டு உறவாடி, வயிறு குலுங்க குலுங்க சிரித்து, பல கோணங்களில் படங்கள் எடுத்து, விம்மிடும் நெஞ்சுடன் அவர் எம்மை வழியனுப்பிவைக்கும் அந்தக் கணம் வரையான காலமே, பூமிப்பந்தின் பொன்னான காலமாகும்.
தனது அழகான கையசைப்பால் தாக்குதல் திட்டத்தை தெளிவுபடுத்தி, அதற்கான நகரவே, அதன் வியூகத்தைச் சொல்லிவைத்து, வெற்றியோடு சென்று வாருங்கள் என்று தன் கையசைத்து இரண்டு விரல்களையும் காட்டிய போது வெற்றிபெற்ற திருப்தி எமக்கு அப்போதே ஏற்பட்டது.
எந்தவித மாதிரிப் பயிற்சியும் இன்றி திடீர் என எம்மால் மேற்கொள்ளப்படும் தாக்குதல் இதுவாகும்.
கரும்புலி மேஜர் குமுதன் அண்ணாவின் தலைமையில் எமது அணி தெரிவு செய்யப்பட்டது.
வானம் இருளாகிக் கொண்டிருக்க சேறு நிறைந்த சதுப்பு நிலத்தின் ஊடாக நடந்த விஞ்ஞானகுளம் காவல் நிலையைக் கடந்து, எதிரியின் வாகனங்களின், காவல்நிலைகளின் வெளிச்சத்துக்கு மறைந்தும், மோப்ப நாய்களின், எதிரிகளின் கண்களில் மண்ணைத் தூவியவாறு நகர்ந்தோம்.
காமாண்டர் மட்டுமல்ல அந்த ஜீப்பும் வெறியோடு அந்த வீதியால் விரைந்துகொண்டிருண்டதது. மீண்டும் அதே வீதியால் தான் அது வரும்….. வந்தது. நல்ல இலக்குத்தான் ஆனால் நாம் தாக்கவில்லை. ஏனெனில் எமக்குரிய இலக்கு அதைவிடவும் பெறுமதி வாய்ந்தது.
அந்த வீதியால் தண்டனையில் ஒரு இராணுவத்தினன் ஓடிக்கொண்டிருந்தான். அந்தகரும் இருட்டிலும் எங்கள் எழில் கொஞ்சும் வனப்பு மிக்க விஞ்ஞானகுளத்தின் அழகை கூர்ந்து அவதானித்தபடி அதன் இப்போதைய சீரழிந்த நிலையை பார்த்த மனவேதனையுடன் இராணுவப் பாதணிகளால் எதிரியை ஏமாற்றியபடி வீதியாலேயே சென்றோம்.
பின்னர் இராணுவ நிலைகளின் ஊடாகவே கற்கிடங்கினைக் கடந்து வயல்வெளிகளில் சதுப்பு நிலங்களில் ஊடாக நகர்ந்து கொண்டிருந்தோம். எமது இரவுப் பார்வைச் சாதனமும் செயலிழந்துபோக, நிதானமான, நீண்டநேர அவதானிப்போடு நகரவேண்டி இருந்தது.
அது, மறக்கமுடியாத மிகவும் வேதனையான நகர்வுதான். வரம்பில் நடந்தால் சறுக்கி விழுந்தும். சேற்றில் நடந்தால் பெரிய சத்தம் கேட்கும். காலணிகளோடு காலைத் தூக்கித் தூக்கி வைத்து நடக்க அதிக சக்தி தேவைப்பட்டது. மழை பெய்துகொண்டே இருந்தது. மண்ணை அடிக்கடி முத்தமிட்ட படியேதான் சுமையோடு நகரவேண்டியிருந்தது. ஏனெனில் கால்வைக்கும் இடம் சேராய் இருக்கும். இல்லாவிடில் நீர் நிறைந்த சிறிய கிடங்க்குகளாய் இருக்கும்.
பெயர் தெரியாத ஒரு வீதியைக் கடந்து முட்பற்றைக்குள் ஒய்வு எடுப்பதற்காய் தயார் செய்யும்போது பத்து மீற்றரில் ஆமி ரோச் அடித்துக்கொண்டிருந்தான். அவன் காட்டுமிருகங்கள் என்றுதான் நிட்சயமாக நினைத்திருப்பான். நாம் உடனே அங்கிருந்து நகர்ந்து 300 மீற்றரில் மீண்டும் பற்றைக்குள் தங்கினோம். மழை மனம்திறந்து கொட்டோ கொட்டென்று கொட்டிக்கொண்டிருந்தது. எங்களுடன் சேர்ந்து ஆயுதங்களும் வெடிமருந்துகளும் நனைந்து கொண்டேயிருந்தது.
இப்படித்தான், 1998ம் ஆண்டினுள் மட்டுமல்ல , அந்த அதியுயர் பாதுகாப்பு வலயத்தினுள்ளும் நுழைந்துகொண்டிருந்தோம்…..
01.01.1998 அதிகாலை 5:30 மணி. காடுகளின் ஊடே வானம் ஆனந்தக் கண்ணீர் விட்டு எம்மை நனைக்க….. 75 வயது வயோதிபரின் நடுக்கத்தில் பல்லு கிடுகிடுக்க…. அருவிகள், காடுகள் தெரியாமல் காடே வெள்ளக்காடாய் கிடக்க விழுந்து விழுந்து எழுந்தபடியும் அருவி நீரோட்டத்துக்கு எதிர்நிச்சல் போட்டும் நகர்ந்தோம்.
இடையிடையே மழை என்று கூடப்பாராமல் எதிரி ரோந்து சென்ற தடயங்கள். அதனைப் பின்தொடர்ந்து எதிரியின் போலிக் காவல் அரணிற்கு அருகில் சென்று மதிய உலர் உணவை முடித்துவிட்டு பல மினிமுகாம்களையும் காடுகளில் ஊடே இடைக்கிடை அமைத்திருக்கும் கம்பித் தடைகளை, முட்கம்பி வேலிகளை, பொறிகிடங்குகளை, இலகுவாக கடந்து, எமக்குரிய அந்த இலக்குக்குரிய முகாமின் முன்னணிக் காவல் நிலையில் இருந்து 75 மீற்றரில் ஒரு பற்றைக்குள் தங்கினோம். (அந்த முகாம்தான் ஐயசிக்குறுப் படைநடவடிக்கைகான களக்கட்டளைத் தலைமையகம்.) ஒரு பெல் 212 உலங்கு வானூர்த்தி, எம் தலைக்கு மேலால் சென்று அம்முகாமில் இறங்கி அவசரமாக மேலெழுந்து சென்றது. “உறுமீன் வருமட்டும் வாடிநிற்கும் கொக்காக” நாம் காத்திருந்தோம்.
நாளையும் உலங்கு வானூர்த்தி வரும்; அப்படி வராதுவிட்டால் வரக்கூடியவாறான ஒழுங்குகள் செய்து தருவதாய் தளபதிகள் சொன்னது நினைவுக்கு வந்து போனது.
இரக்கமில்லாமல் மழை மூன்றாவது நாளாயும் பெய்துகொண்டே இருந்தது. எல்லோரும் மழையில் தொடர்ந்து நனைந்தபடியால் சக நோய் காற்றைப்போல இருமிக்கொண்டே இருந்தார்கள். நானும் தான் ஒருவர் இருமும் போது அருகில் இருப்பவர் ” டேய் இருமிக்கொ ண்டிரக்காத ஆமிக்கு கேட்டிடும்” என்று சொல்லி முடிப்பதற்குள், சொன்னவரே இரண்டு தடவை இருமிவிடுவார்.
02.01.1998 காலை பற்றைக்குள் ஒளிந்திருந்தபடியே துப்பாகிகளை துப்பரவாக்கியவண்ணம் இருந்தோம். முற்பகல் 11:30 மணியிருக்கும், எதிரியின் எல்லா ரோந்து அணியும், தமது பணியினை முடித்து அந்த முகாமுக்குள் நுழைய; அவர்களின் பின்னால் அதே பாதையால் நாம் அம்முகாமின் தடைகளையும் – காவல் நிலைகளையும் கடந்து, உள்ளே இருந்த இராணுவ கண்காணிப்பு நிலையையும், ரோந்து அணியையும் கடந்து, தம் கடன் கழிக்கவரும் எதிரிகளின் கண்களிலும் வேட்டைக்கும் வேறு தேவைக்குமாக சுற்றித்திரிபவர்களின் கண்களிலும் படாமல் சாதுரியமாக நகர்ந்து….
உலங்கு வானூர்த்தி தரையிறங்கும் மேடையில் இருந்து 150 மீற்றரில் இருந்த பற்றைக்குள் மறைந்திருந்தோம். அப்போது தாக்குதலை எவ்வாறு நடத்த வேண்டுமென்ற வியூகத்தினை குமுதன் அண்ணா தெளிவுபடுத்தினார்.
எமக்கு அருகில் நின்ற மரத்தினை இரண்டு இராணுவத்தினர் காற்சட்டையுடன் தறித்துக்கொண்டிருந்ததனர். அருகில் தெரிந்த கிணற்றில் 15க்கு மேற்ப்பட்ட இராணுவத்தினர் குளித்துக்கொண்டிருந்ததனர்.
நேரம் சரியாக நண்பகல் 1:26 ஹெலியின் ஒலி எமது உள்ளத்தில் மட்டுமல்ல உணர்விலும், ஏன் உடலின் ஒவ்வொரு அனுவிலுமே புதிய ஒரு புத்துணர்வை ஊட்டிக்கொண்டிருந்தது. அதன் சத்தம் எம்மை அண்மிக்க அண்மிக்க அந்த இனிமையான உணர்வு எம்முள் கூடிக்கொண்டே இருந்தது.
“MI.17” உலங்கு வானூர்த்தி அரைவட்டம் அடித்து மேடையில் இறங்குகிறது. பற்றைக்குள் இருந்து வேகமாய்…. மிக வேகமாய் 110 மீற்றர் துரத்தி நொடியில் கடந்து…. அதே வேகத்தில் நிலை எடுத்து…. எம்மவர்கள் இலகு ரக உந்துகணை செலுத்திகளால் தாக்கவும். நான் “T.81 LMG” யால் தாக்கவும், எரிந்தபடி மேலெழுத்த ஹெலி அதே வேகத்தில் தீப்பிழம்பாகிச் சிதற கருமண்டலமாய் போக நேரம் சரியாக நண்பகல் 1:27 அந்தக் கணநேரத்தில் அதை பார்த்துக்கொண்டே நிற்க….
கரும்புலி மேஜர் குமுதன் அண்ணரின் கட்டளை எம்மை வேகமாய் பின்னோக்கி நகர வைத்தது. குளித்துக் கொண்டும், மரம் தறித்துக்கொண்டும், ஹெலியில் பொருட்கள் இறக்க வந்து நின்றவர்கள், ஒருவரையுமே காணமுடியவில்லை. திடீர் அதிர்ச்சியால் சிலர் செத்துக்கூட இருக்கலாம்.
நீண்ட நேரத்துக்கு பின்னர்தான் எதிரிக்கு நின்று போன மூச்சு மீண்டும் வந்திருக்க வேண்டும். ஏனெனில் அதன்பின்தான் எதிரியோடு சேர்ந்து எறிகணைகளும் – எறிகுண்டுகளும் – ரவைகளும் எம்மைத் துரத்திக்கொண்டிருக்க…. “MI -24” தாக்குதல் வானூர்த்தியும் எம்மைத் தேடிக்கொண்டிருந்தது. அவர்களின் முகாமிற்குள்ளேயே அவற்றை எல்லாம் ஏமாற்றியபடி நகர்ந்தோம். அன்று இரவு 12:40 மணிக்கு எதிரியின் முன்னணிக் காவல் நிலைகளைக் கடந்து முட்பற்றைக்குள் தங்கினோம்.
பொரித்த அப்பளத்தை தண்ணீரில் நனையவைத்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் எல்லோருடைய காலும் அவிந்து கிடந்தது. சிலருக்கு புண்கள் கூட வந்துவிட்டன. அந்த ரண வேதனையோடுதான் நகர்ந்தோம். இப்படியாக 60 கி.மீ தூரத்தை இராணுவ பிரதேசத்தினுள்ளாலேயே நடந்து – கடந்து, எந்த இழப்பும் இன்றி (1998) இவ்வாண்டின் முதலாவது கரும்புலித் தாக்குதலை வெற்றிகரமாக மேற்கொண்ட உள்ளப் பூரிப்போடு வந்து சேர்ந்தோம்.
விடுதலைப்புலிகளின் எறிகணைத் தாக்குதலால் ஹெலி சேதமானதாய் செய்திகள் சொன்னபோது, சிங்கள அரசை நினைக்க பரிதாபமாக இருந்தது. அதையும் மீறி நகைச்சுவையாகவும் இருந்தது.
நினைவுகளுடன்:- கரும்புலி மேஜர் அறிவுக்குமரன் (கருவேங்கை)
விடுதலைப்புலிகள் (ஆவணி, புரட்டாசி 1998) இதழிலிருந்து தேசக்காற்று.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”