சாகும்வரையிலான உண்ணாவிரதம்
இந்நிலையில் தலைவர் பிரபாகரன் என்ன செய்யப்போகிறார் என்பது ஒரு பெரும் கேள்விக்குறியாக இருந்தது. ஆயுதப் போராட்ட இயக்கத்தின் தளபதி, சிங்களப்படைகளின் சிம்ம சொப்பனமான தலைவர் பிரபாகரன், அனைவரும் எதிர்பார்த்ததிற்கு மாறாக தமிழகக் காவற்துறையினர் தங்களிடம் இருந்து பறித்த தகவல் தொடர்புச் சாதனங்களைத் திரும்பித்தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நீர், ஆகாரம் இன்றி சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை 1986ம் ஆண்டு கார்த்திகை 22ம் நாள் தொடங்கினார்.
அவரின் இந்தச் செயல் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. தலைவர் பிரபாகரனின் மன உறுதியைப் புரிந்துகொண்ட இந்திய அரசு கோரிக்கையை ஏற்றுத் தகவல் தொடர்பு சாதனங்களைத் திருப்பிக் கொடுத்தது. உண்ணாவிரதம் கைவிடப் பட்டது. இவ் உண்ணாவிரதம் குறித்து அப்போது சில பத்திரிகையாளர்கள் தலைவர் பிரபாகரனிடம் வினாத்தொடுத்தார்கள்.
பத்திரிகையாளர் :
உங்களுடைய அகிம்சைப் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்திருக்கும் போது இலங்கையிலும் அகிம்சை முறையிலே போராடலாமே, ஆயுதம் ஏந்திப் போராட வேண்டய அவசியம் ஏன்? என்று கேட்டார்கள். தலைவர் பிரபாகரன்” உலகிலேயே தன்னுடைய சுதந்திரத்தைப் பெறுவதற்கு அகிம்சை முறையில் போராடி வெற்றி பெற்ற நாடு இந்தியா. எனவே அகிம்சைப் போராட்டத்தின் மகத்துவத்தைப் புரிந்திருக்கிற இந்தியாவில் எனது அகிம்சைப் போராட்டத்திற்கு வெற்றிகிடைத்திருக்கிறது. ஆனால் மனித நேயமற்ற இனவெறிச் சிங்கள அரசிடம் அகிம்சை முறை எடுபடாது. எனவேதான் தமிழீழத்தில் நாங்கள் ஆயுதம் ஏந்திப் போராடுகிறோம்” என்றார்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”