கடற்புலிகளின் வளர்ட்சியும் போரில் திருப்புமுனைகளும்
சிங்கள தேசத்து படைத்துறையின் முதுகெலும்பாக இன்று விளங்குவது , அதன் கடலாதிக்கம்தான். வடதமிழீழத்தில் கடற்கரையோரமாக அமைக்கப்பட்டிருக்கும் படைமுகாம்களுக்கான சகல விதமான் விநயோகங்களையும் , ஆபத்துக்காலகட்டங்களில் அவசர உதவிகளையும் கடற்படையே வழங்கி , படைமுகாம்களைப் பாதுகாத்து , பராமரித்து வருகின்றது.
சிங்களப் படைத்துறைக்கும் வடதமிழீழதக் கரையோரமுள்ள படைமுகாம்களுக்குமிடையே தொப்புள்கொடிபோல நின்று செயற்படும் சிங்களக் கடற்படையின் பலம் சிதைக்கப்பட்டால் , எமது விடுதலைப் போராட்டம் பாரிய திருப்புமுனை ஒன்றைச் சந்திக்கும்.
ஈழத்தமிழினம் ஆவலுடன் எதிர்பார்க்கும் , இத்திருப்புமுனைக்குரிய காலம் கனிந்து வருவதைத்தான் , கடந்த மாதம் வெற்றிகரமாக நடந்து முடிந்த , கிளாலிக் கடல்நீரேரித் தாக்குதலும் பருத்தித்துறைப் பெருங்கடற் தாக்குதலும் சுட்டிக்காட்டியுள்ளன.
கடற்புலிகளின் வளர்ட்சியால் ஏற்பட்டுவரும் இத்திருப்புமுனை , எமது விடுதலைப்போரின் பரிமாணத்தை – தமிழினத்திற்கு சார்பான முறையில் – மாற்றியமைக்கும் என்பது திண்ணம்.
எமது விடுதலைப்போரில் ஒரு முக்கிய பாத்திரத்தை வகித்துக்கொண்டிருக்கும் கடற்புலிகள் அமைப்பைக் கட்டி வளர்ப்பதில் தேசியத்தலைவர் மேதகு வே . பிரபாகரன் அவர்கள் பேரார்வம் காட்டிவருகின்றார்.
சிங்களக் கடற்படையுடன் ஒப்பிடும் போது , பலமும் – வளமும் குறைந்த நிலையிலும் எதிரியை வெற்றிகொள்வதற்குரிய தந்திரோபாயங்க்களையும் – தாக்குதல் திட்டங்களையும் வரைந்து கடற்புலிகளின் பலத்தைப் பெருக்க , தேசியத்தலைவர் தீவிர கவனம் செலுத்துகின்றார்.
ஆனையிறவுச் சமரையடுத்து 1991 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் , விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் என்ற பெயர்மாற்றத்துடன் வேகங்கொண்ட கடற்புலிகளின் செயற்பாடுகள் , இந்த இரண்டு வருடத்தில் , போரின் போக்கையே தீர்மானிக்கும் அளவுக்கு ஒரு நிர்ணய சக்தியாக வளர்ந்துவிட்டது.
அதுவும் கடந்த மாதம் கிளாலிக் கடலேரியிலும் , பருத்தித்துறைப் பெருங் கடலிலும் – நான்கு நாள் இடைவெளிக்குள் – கடற்புலிகள் மேற்கொண்ட இரண்டு தாக்குதல்களின் தன்மைகளும் , கடற்புலிகளின் பலத்தை எடுத்துக்காட்டியுள்ளன.
இலங்கைத்தீவில் இரண்டு இராணுவங்கள் என்ற கருத்துடன் , இரண்டு கடற்படைகள் என்றும் மதிப்பிடத்தூண்டும் அளவுக்கு , கடற்புலிகள் ஒரு சக்தியாக உருவாகிவிட்டனர்.
கடற்புலிகளின் இந்த வளர்ட்சி , சிங்களப் பேரினவாதிகளைக் கலக்கமடையச் செய்துவிட்டது. அவர்களது கலக்கத்திற்கு காரணமுண்டு.
ஈழப்போர் – 2 சிங்கள அரசுக்குப் போதித்த பாடங்களுள் ஒன்று. கடல்வழித் தொடர்பு இல்லாத படைமுகாம்கள் ( எல்லைப்புரங்ககுள் தவிர ) நிலைத்திருக்க முடியாது என்பதுதான் ( கொக்காவில் , மாங்குளம் , ஆனையிறவு அதற்க்கு உதாரணங்கள் ).
ஆனால் , இன்று அந்தக் கடல்வழித் தொடர்புக்கு ஆதாரமாக இருந்துவரும் சிங்களக் கடற்படைக்கே , சோதனைக்காலம் தொடங்கிவிட்டது.
ஆனையிறவுச் சமரின் பின் , குடாநாட்டுக்கான சகல தரைப்பாதைகளையும் துண்டித்து , யாழ் – குடாநாடு மீது ஒரு முழுமையான இராணுவ முற்றுகையை இட்டு , பொருளாதாரத் தடையைப் பூரணமாக அமுல்படுத்தி – பொதுமக்களைப் பட்டனிபோட்டு , அவர்களின் உறுதிப்பாட்டை உடைப்பதுடன் புலிகள் இயக்கத்தையும் அழித்து , விடுதலைப் போராட்டத்தையும் ஒடுக்க அரசு பெருமுயற்சி செய்தது. இதனைக் கண்ட குடாநாட்டு மக்களில் ஒரு பகுதியினர் இடிந்துபோய் பீதியில் இருந்தனர்.
புலிகள் இயக்கத்தின் இறுதிக்காலம் நெருங்கிவிட்டது எனப் பேரினவாதிகள் அகமகிழ்ந்திருன்தனர்.
அப்பொழுதுதான் , கடற்புலிகள் கடலிலே காவியம் படிக்கத் தொடங்கினர். கிளாலிக் கடல்நீரேரி பிரதான பெரிய களமாகவும் , போராட்டத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கக் கூடிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும் மாறத் தொடங்கியது.
படையினரின் பயமுறுத்தல்களையும் அரசின் தடைச் சட்டங்களையும் புறந்தள்ளிவிட்டு , கடல்நீரேரி ஊடாக மக்கள் பயணம் போகத்தொடங்கியபோது , அதனைத் தடுக்கச் சிங்களக் கடற்படை செயலில் இறங்கியது. கடல்நீரேரியைக் கட்டுப்படுத்துவதற்க்கென சங்குப்பிட்டி இறங்குதுறைக்கருகில் உள்ள நாகதேவன்துறையில் , ( ஞானிமடம் ) ஓரு கடற்படைத் தளத்தை அது அமைத்துக் கொண்டது. ” 50 கலிபர் ” துப்பாக்கியுடன் ” ராடர் ” கருவிகள் பொருத்தப்பட்ட நீருந்து விசைப்படகுகளைக் கடற்படையினர் கடல் ரோந்திற்கு பயன்படுத்தினர். உல்லாசப் பயணம் போவதுபோல , நாகதேவன்துறையிலிருந்து ஆனையிறவு இராணுவத்தளத்திற்கு , கடல்நீரேரி வழியாக அடிக்கடி கடற்படையினர் ரோந்துசென்றனர்.
இவ்விதம் பல விசைப்படகுகள் சேர்ந்து கடல்நீரேரியில் ரோந்து போகத் தொடங்கினர்.
இத்தகைய ரோந்துத் தொதரர் ஒன்றை 29.12.1991 அன்று தாக்கிய கடற்புலிகள் 09 கடற்படையினரைக் கொன்று , அவர்களது ஆயுதங்களையும் கைப்பற்றினர். இவ்வாறான தாக்குதல்கள் கடல்நீரேரியில் தொடர்ந்தன.
அதன்பின் ஆனையிறவுக்கான கடல்ரோந்து தடைப்பட்டது.
அதன்பின் , இரவு நேரங்களில் மக்களின் படகுப்பயணத்திற்கு பாதுகாப்பளித்து வந்த கடற்புலிகளின் விசைப்படகுகளுக்கும் சிங்களக் கடற்படையின் விசைப்படகுகளுக்கும் இடையே , நேரடிக் கடற்சண்டைகள் நடைபெறத் தொடங்கின. இந்தச் சண்டைகளில் கடற்புலி வீரர்கள் காட்டிய வீரமும் அபாரத்துணிச்சலும் சிங்களக் கடற்படையைக் கதிகலங்கச் செய்தன. இறுதியில் , 26..08.1993 அன்று நடந்த கடற்சண்டையும் , கரும்புலித் தாக்குதலும் கடல்நீரேரியில் சிங்களக் கடற்படையைத் தூரவிலகியிருக்கச் செய்துவிட்டது.
இவ்விதம் கிளாலிக் கடல்நீரேரி ஊடாக ஓரு போக்குவரத்துப் பாதையைத் திறந்த கடற்புலிகள் , சிங்களக் கடற்படையுடன் இடைவிடாது மோதி , வீரச்சாதனைகள் பல புரிந்து , இறுதியில் கடல்நீரேரியில் மேலாதிக்கம் பெற்றுவிட்டனர். இந்தவகையில் கிளாலிக் கடல்நீரேரியில் கடற்புலிகள் நிகழ்த்திய கடற்சண்டைகள் , எமது போராட்ட வரலாற்றில் முக்கிய இடத்தை பெற்றுக்கொள்ளும்.
கடற் சண்டைகளைப் பொறுத்தளவில் , கிளாலிக் கடல்நீரேரியைப் போன்று ஆழங்குறைந்த கடல்களில் நடைபெறும் படகுச் சண்டைகள் ஓரு பரிமாணத்திலும் , ஆழக்கடலில் நடைபெறும் கடற் சண்டைகள் இன்னொரு பரிமாணத்திலும் இருக்கும்.ஆழங்குறைந்த கடலில் அலைகள் குறைவாக இருக்கும். எனவே சாதாரண படகுகளையும் சண்டைப்படகாக பயன்படுத்த முடியும். அத்துடன் ” டோரா ” போன்ற சக்திவாய்ந்த பீரங்கி படகுகளை ஆழங் குறைந்த கடலில் ஓடமுடியாது. இவை கடற்புலிகளுக்குச் சாதகமான விடயங்கள். ஆனால் ஆழக்கடலில் பாரிய அலைகள் இருக்கும். அந்த அலைகளுக்கு ஈடுகொடுக்கக்கூடிய அளவுக்குப் படகுகளும் பாரம்கூடியதாகவும் – பாரியதாகவும் – வலிமை உடையதாகவும் இருக்கவேண்டும். அப்பொழுதுதான் பொங்கும் அலைகளின் மத்தியிலும் குறிபிசகாது எதிரிப் படகுகளுடன் மோதமுடியும். இவ்விதமான பாரிய படகுகளைக் கொள்வனவு சேயும் வசதிகளோ தற்போது கடற்புலிகளிடம் இல்லை. இதற்க்கு நிறைந்த தொழிநுட்பத்துடன் பெருமளவில் பணமும் தேவை. ஆனாலும் ஆழக்கடளிலும் அதிரடித் தாக்குதல் செய்வதற்குரிய சக்தியுடனேயே கடற்புலிகள் உள்ளனர். அவ்விதம் பல அதிரடி நடவடிக்கைகளைச் செய்து , சிங்களக் கடற்படைக்கு கணிசமான இழப்புக்களையும் – இடைவிடாத தலையிடியையும் கொடுத்துவருகின்றனர்.
சிங்களக் கடற்படையைப் பொறுத்தளவில் , ஆலக்கடளிலும் கடற்புலிகள் ஆதிக்கம் பெற்றுவிடுவார்களோ என்ற அச்சம்தான் , தற்போது மேலோங்கியுள்ளது. ஆயினும் சிங்களக் கடற்படைக்குச் சவாலாக ஆழ்கடலில் நேரடிச் சண்டைகளில் ஈடுபடக்கொடிய அளவிற்கு கடற்புலிகளின் சக்தி பெருகினாலே போதும். அது போரின் போக்கையே தலைகீழாக மாற்றிவிடும் என்பது , இராணுவ ஆய்வாளர்களின் எதிர்பார்ப்பு.
இன்றைய நிலையில் , வடதமிழீழத்தில் உள்ள அனைத்துப் படைமுகாம்களின் பாதுகாப்பும் ( எல்லைப்புறத்தைத் தவிர ) சிங்களக் கடற்படையின் பலத்திலே தங்கியுள்ளது. கடற்படையின் உதவி இல்லாமல் வடதமிழீழத்தின் படைமுகாம்களைப் பராமரிப்பது என்பது , சிங்கள அரசுக்கு இயலாத ஒன்று. படைமுகாம்களுக்குத் தேவையான உணவு , ஆயுதத்தள பாடங்கள் மற்றும் அனைத்துப் பொருட்களும் கடற்படைமூலமே விநியோகிக்கப்படுகின்றன. அத்துடன் படைமுகாம்கள் புலிகளால் தாக்கப்படும் போதும் கடல் வழியே தான் சிங்களப் படைகளுக்கு உதவிகள் வந்துசேருகின்றன.
இந்த விநியோகங்களுக்கும் – உதவிகளுக்கும் ஒருவிளைவிக்கக் கூடிய அளவிற்கு , கடற்புலியாளின் நடவடிக்கைகள் ஆழக்கடலில் தொடர்ச்சியாக் அமையுமாயின் , கடலோரப் படை முகாம்களில் சிலவற்றை அகற்றவேண்டிய நிர்ப்பந்தம் சிங்கள அரசுக்கு எழலாம்.
பருத்தித்துறைப் பெருங்கடலில் 29.08.1993 அன்று ” டோறா ” சண்டைப்படகு மூழ்கடிக்கப்பட்டதன் பின் , இந்த அச்சம் சிங்களப் படைத்துறையினரின் மத்தியில் எழுந்துள்ளது. கடற் கரும்புலிகளின் பாய்ச்சலுக்கு சிங்களக் கடற்படையின் பாரிய கப்பல்களும் உள்ளாகலாம் என்ற பயம் , சிங்களக் கடற்படையையும் ஆட்கொண்டுவிட்டது.
அத்துடன் கடற்படையிடம் இருக்கும் ஒவ்வொரு சண்டைப்படகும் பலகோடி ரூபா பெறுமானமுள்ளது. பருத்தித்துறைக் கடலில் மூழ்கடிக்க்கப்பட்ட ” டோறா ” சண்டைப்படகின் பெறுமதி 30 கோடி ரூபா என , சிங்கள தேசத்துப் பத்திரிகை ஒன்று கூறியுள்ளது.
இவ்விதமாக பெருங்கடலிலும் சிங்களக் கடற்படை தொடர்ச்சியான இழப்புகளைச் சந்தித்து , தனது கடலாதிக்கத்தை இலக்குமாக இருந்தால் , படைமுகாம்களுக்கான விநியோகங்களை கடற்படை முழுஅளவில் செய்யமுடியாது போக வாய்ப்புண்டு. இந்தப் பொறுப்பை சிறீலங்காவின் வான்படையால் பிரதியீடு செய்யமுடியாது. எனவே படைமுகாம்களில் ஆட்குறைப்புச் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் படைத்துறைத் தலைமைக்கு ஏற்ப்படலாம். இதன் பொருள் , ஒன்றில் படைமுகாம்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும். அல்லது சிங்களப் படைகள் தாம் கைப்பற்றி வைத்திருக்கும் நிலப்பகுதியிலிருந்து கணிசமான பகுதியைவிட்டு பின்வாங்கவேண்டியிருக்கும்.
‘ சமிந்ர பெர்னாண்டோ ‘ என்ற சிங்கள விமர்சகர் , 05.09.1993 ‘ ஐலண்ட் ‘ வார இதழில் இப்படி எழுதியிருக்கிறார் :
” விநியோக வசதிகளுக்காகக் கடற்படையையே நம்பியிருக்கும் கரையோர இராணுவ முகாம்களை அப்புறப்படுத்தும் வகையில் அரசாங்கத்தை நிர்ப்பந்திப்பது தான் , கடற்புலிகளின் செயற்பாடுகளின் பிரதான இலக்காக இருக்கின்றது. தொடர்ச்சியான முறையில் கடற்படைமீது அழிவுகளை ஏற்படுத்தினால் , கரையோர இராணுவ முகாம்களை அகற்றுவதைத் தவிர அரசுக்கு மாற்றுவழி இல்லாதுபோகும் என , புலிகளின் தலைமை நம்புகின்றது. ”
தமிழீழக் கடலிலே கடற்புலிகள் மேலாதிக்கம் பெற்றால் அது கரையோரச் சிங்களப்படைமுகாம்களுக்கு சாவுமணி அடிக்கும். அதனால் கணிசமான பகுதி நிலமும் சிங்களப் படைகளிடமிருந்து விடுவிக்கப்பட்டுவிடும். அத்துடன் சிங்கள அரசு தமிழீழ மக்கள் மீது திணித்துள்ள சகலவிதமான பொருளாதாரத் தடைகளையும் – மீன்பிடி மற்றும் போக்குவரத்துத் தடைகளையும் – பிசுபிசுக்கச்செய்துவிடும்.
இந்தப் பொற்காலத்தை தமிழீழ மக்களின் கைகளுக்கு விரைவாகக் கிடைக்கச்செய்யும் இலட்சியத்தோடு , கடற் கரும்புலிகளின் துணையுடன் கடற்புலிகள் அயராது பாடுபடுவர்.
கடலிலே காவியம் படைப்போம்
– விடுதலைப்புலிகள் இதழ் (பங்குனி – சித்திரை, 1992)
இணைய தட்டச்சு முதல் முதல்ப்பதிப்பு உரிமம் தேசக்காற்று.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”