புலிகளின் குரல் வானொலி
புலிகளின்குரல் வானொலி தமிழீழ தேசியத்தலைவரினால் உத்தியோக புர்வமாக தொடக்கிவைக்கப்பட்ட நாள் 1990 ஆம் ஆண்டு கார்திகை மாதம் 21 தேதி.
புலிகளின் குரல் வானொலிச் சேவையின் ஓராண்டு பூர்த்தி நாளை முன்னிட்டு தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில்……
“எமது எதிரியான சிங்கள அரசும் அதன் கைக்கூலிகளான தமிழ்த் துரோகக் குழுக்களும் எமக்கு எதிராக மிகவும் கேவலமான விஷமப் பிரச்சாரங்களை ஆற்றி வருகின்றன. எதிரியின் பொய்ம்மையான கருத்துப் போருக்கு எதிராக உண்மையின் ஆயுதமாக எமது வானொலியின் குரல் ஒலிக்க வேண்டும். ஒரு சத்திய யுத்தத்தின் போர் முரசாக புலிகளின் குரல் ஒலிக்க வேண்டும்” என்றார்.
ஈழப் போராட்டத்தை வேகப்படுத்திய புலிக் குரல்
ஈழத் தமிழர்களின் வாழ்வில் கார்த்திகை மாதம் பல வழிகளிலும் சிறப்பினைப் பெற்றுள்ளது என்று கூறினால் மிகையாகாது. விடுதலைக்காக தன் மூச்சை நிறுத்திய ஓர் உயிரின் இறப்பும், விடுதலை வேண்டிய தமிழர்களினை வேகப்படுத்திட ஓர் உயிரின் உயிர்ப்பும் இம் மாதத்தில் தான் அரங்கேறின. ஈழத்தில் முன்பொரு காலத்தில் இந்த இரு பெரும் வரலாற்று நிகழ்வுகளுக்கும் அப்பால் புலிகளின் குரல் வானொலி, தமிழீழ காவல் துறை முதலியவையும் இந்த கார்த்திகை மாதத்தில் தான் ஆரம்பித்து வைக்கப்பட்டன. தாயக மக்களின் உண்மைக் குரலாய், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் எண்ணக் குரலாய் புலிகளின் குரல் ஈழத்தின் வட கிழக்கெங்கும் தன் ஒலி வீச்சு எல்லையை விரிவுபடுத்தியிருந்தது.
சிறிய பொருளினைச் சந்தைப்படுத்துவது முதல், ஒரு வியாபாரத்தினைப் பெருக்குவது வரை விளம்பரம் என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதே போல ஒரு அமைப்பினது கொள்கைகளை, சிந்தனைகளை, அவ் அமைப்புச் சார்ந்த சமகால மாற்றங்களை மக்களிடத்தே கொண்டு செல்வதற்கு ஒரு ஊடகம் என்பது அவசியமாகும். விடுதலை அமைப்பினது போராட்ட நோக்கத்தை மக்களிடத்தே கொண்டு செல்லவும், விடுதலை அமைப்பிற்கும் மக்களுக்கும் இடையேயான தொடர்பாடல்களைக் கட்டியெழுப்புவதற்கும் ஊடகம் என்பது அவசியம் என்பதனை உணர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்களது சிந்தனையின் பயனாக 1986களின் பிற் பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டினை மையப்படுத்தித் தொடங்கி வைக்கப்பட்டது தான் நிதர்சனம் எனும் பெயர் கொண்ட தொலைக்காட்சியாகும்.
ஈழப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் போராட்டச் சம்பவங்களை, கள நிலமைகளை. அரசியல் நகர்வுகளை, போராட்டப் பிரச்சாரங்களை மக்களிடத்தே கொண்டு சென்று சேர்ப்பதற்கு நடு நிலையான ஊடகம் ஒன்று இல்லையே என்று ஆதங்கப்பட்ட புலிகள் அமைப்பினரின் முதல் முயற்சியாகப் புலிகளின் குரல் எனும் பெயர் கொண்ட பத்திரிகை 1988ம் ஆண்டின் நடுப் பகுதியில் பிறக்கின்றது. காலவோட்ட மாற்றத்தில் புலிகளின் குரல் எனும் பத்திரிகையினைப் திரு.பிரபாகரன் அவர்களின் சிந்தனைக்கு அமைவாக புலிகளின் குரல் எனும் பெயரில் வானொலியாக மாற்றம் செய்து மக்களுக்கு நடு நிலையான செய்திகளைப் பகிரும் முதலாவது ஒலிபரப்பு முயற்சியினை 21.11.1990 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் தொடங்குகின்றார்கள்.
ஸ்ரீலங்கா அரசின் அழுத்தங்களுக்கு அடி பணியாது ஈழ மக்களுக்காய் களமாடும் வீரர்களின் நினைவுகளையும்,சம கால அரசியல் சம்பவங்களையும் உள்ளடக்கிய ஒரு மணி நேர ஒலிப்பரப்பாக புலிகளின் குரல் வானொலி ஈழத்தின் வடக்குப் பகுதியில் 1990ம் ஆண்டின் இறுதிக் நாட்களில் இரவு எட்டு மணி தொடக்கம் ஒன்பது மணி வரை தன் ஒலிபரப்பினைத் தொடங்குகின்றது. பின்னர் மக்களின் பேரபிமானம் பெற்ற வானொலியாக இவ் வானொலி மாற்றம் பெற்றுக் கொண்டதும் காலையும், இரவும் எனத் தன் சேவையினை விரிவுபடுத்துகின்றது. குறுகிய மூல வளங்களை உள்ளடக்கியும், சீரான மின்சார வசதிகள் இன்றியும் மக்களுக்கு ஒரு நேர்த்தியான ஒலிபரப்பினை வழங்க வேண்டும் எனும் பிரபாகரன் அவர்களின் சிந்தனைக்கமைவாகப் புலிகளின் குரல் வானொலி மக்கள் மனங்களைக் கவரும் வண்ணம் நாளொரு பொழுதாகத் தன் பணியினைச் சிறப்புற ஆற்றத் தொடங்குகின்றது.
ஆரம்ப காலங்களில் ஈழத்தில் மின்சாரமின்மையால் மக்கள் பற்றரிகளின் உதவியோடும், சைக்கிள் டைனமோ மின்சாரத்தின் உதவியோடும் தான் வானொலிப் பெட்டியை முடுக்கி விட்டு புலிகளின் குரல் ஒலிபரப்பினைக் கேட்கத் தொடங்கினார்கள். வட பகுதி மக்களுக்கு நடு நிலையான செய்திகள் சென்று சேரக் கூடாது எனும் இராணுவத்தினரதும், அரசாங்கத்தினதும் இறுக்கமான கொள்கை காரணமாக யாழ்ப்பாணத்தை மையமாக வைத்துப் புலிகளின் குரல் ஒலிபரப்பு பண்பலை 98 அதிர்வெண்ணில் (98KHZ) இல் ஒலிபரப்பாகும் போது இராணுவத்தினர் விஷமத்தனாமாக அவ் ஒலிபரப்புச் சேவையினைக் குழப்பும் நோக்கில் தமது வானொலிச் சேவையினைப் புலிகளின் குரல் ஒலிபரப்பாகும் அதே அலை வரிசையில் ஒலிக்கச் செய்வதும்; சமயோசிதமாகச் செயற்படும் புலிகளின் குரல் ஒலிபரப்புத் தொழில் நுட்பவியலாளர்கள் பண்பலை 92 அதிர்வெண்ணிற்ற்கு மாற்றுவதும் ஈழத்தில் புலிகளின் குரல் செய்தி ஒலிபரப்பாகும் வேளையில் இடம் பெறும் சுவாரஸ்யமான நிகழ்வுகளாகும்!
போராட்டக் கொள்கைகளைத் தாங்கி, தலைவர் பிரபாகரனின் சிந்தனையின் வடிவமாக ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்த புலிகளின் குரல் 1990ம் ஆண்டின் பின்னர் ஈழ மண் சந்தித்த அத்தனை இடப் பெயர்வுகளையும் தாங்கி மக்களோடு மக்களாக இடம் பெயர்ந்து தன் சேவைகளை மக்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தது.புலிகளின் ஆட்சேர்ப்பிற்காவும், போராட்டம் பற்றிய பிரச்சாரப் பரப்புரைகளுக்காகவும் புலிகளின் குரல் ஆரம்பிக்கப்பட்டதாக ஒரு சிலர் விஷமத்தனமான பரப்புரைகளில் ஈடுபட்டு நின்ற சமயத்தில்; சமூக நிகழ்சிகளை,செய்தி அலசல்களை,விளையாட்டுச் செய்திகளை, விளம்பரங்களைத் தாங்கி ஒலிக்கின்ற ஒலிபரப்பான தமிழீழ வானொலியினைப் புலிகளின் குரல் நிறுவனத்தினர் ஆரம்பித்து இப் பிரச்சாரச் செய்கைகளுக்கெல்லாம் முற்றுப் புள்ளி வைத்தனர்.
இராணுவ விமானங்களின் குண்டு வீச்சுத் தாக்குதல்கள்,பீரங்கித் தாக்குதல்கள் எனப் பல நடவடிக்கைகளிற்கு மத்தியிலும் போராளிகளுக்கும், மக்களுக்கும் ஈழ மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கின்ற – தேசியத் தலைவரின் எண்ணங்களைத் தாங்கி வருகின்ற ஒரு வானொலிச் சேவையினை வழங்கிய பெருமை அதன் பணிப்பாளர் திரு. தமிழன்பன் அவர்களையும், பணியாளர்களையுமே சாரும்! ஒரு முறை அறிவிப்பாளர் கிருஸ்ணபிள்ளை திருமாறன் அவர்கள் ஜெயசிக்குறுச் சமர் இடம் பெற்ற வேளையில் 1998ம் ஆண்டின் நடுப் பகுதியில் வன்னியின் கொக்காவில் பகுதியில் அமைந்திருந்த புலிகளின் குரல் வானொலிக் கலையகத்தில் தமிழீழ வானொலிச் சேவையின் மாலை நேரச் செய்தியறிக்கைக்கு தயாராகிக் கொண்டிருந்தார்.
அந் நேரம் இடம் பெற்ற விமானக் குண்டு வீச்சில் புலிகளின் குரல் கலையகத்தின் ஒரு பகுதி சேதமடைந்தாலும், வானொலியினை நிறுத்தாது “குண்டு விழுந்தால் என்ன! வீடு குலுங்கி இடிந்தால் என்ன! உடல் துண்டு பறந்தால் என்ன! நாங்கள் துடித்து மகிழ்ந்தால் என்ன! – – – – – தாகம் தணியாது! எங்கள் தாயகம் யார்க்கும் பணியாது!” எனும் பாடலை ஒலிபரப்பி ஒலிபரப்பினை நிறுத்தாது அழிவுகளின் மத்தியிலும், அச்சத்தின் மத்தியில் இருந்தும் மக்களுக்கான சேவையினை வழங்கிய பெருமையினை எப்படி வர்ணிப்பது? இந்தளவு தூரம் தலைவரின் சிந்தனையிற்குச் செயல் வடிவம் கொடுக்கின்ற ஊடகத் துறையினையும் புலிகள் அமைப்பினர் நேசித்தார்கள் என்றால்;! அந்த ஊடகத்தின் வீரியம் எப்படி இருந்திருக்கும் என்று ஊகித்துப் பாருங்களேன்!
1999ம் ஆண்டு கார்த்திகை மாதம் நான்காம் திகதி முதல் புலிகளின் படை நடவடிக்கைகள் தாக்குதல்கள் தொடங்கும் போது இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதி மக்கள் எந்தப் பிரதேசங்களை நோக்கி இடம் பெயர வேண்டும் எனும் தகவல்களையும், முதன் முதலாக ஈழப் போராட்ட வரலாற்றில் ஒரு நேரடி ஒலிபரப்புப் போன்று புலிகளின் ஓயாத அலைகள் மூன்று வரலாற்றுச் சமரின் ஆறு நாள் அதிரடித் தாக்குதல்களை நேரடிச் செய்திகளாக உடனுக்குடன் பகிர்ந்து கொண்ட பெருமையும் புலிகளின் குரலையே சாரும்! இலங்கை வானொலி வரலாற்றில் தொலைபேசியூடாக அழைத்துப் பாடல் கேட்கின்ற ரெலிபோன் விருப்ப நிகழ்ச்சியினை வயர்லெஸ் வோக்கி டோக்கி மூலம் செய்து காட்டிய முதலாவது வானொலி புலிகளின் குரலாகும்.
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் மாவீரர் நாள் உரை இடம் பெறும் கார்த்திகை மாதம் 27ம் திகதியன்று மாலை 05.40 மணியளவில் இலங்கை இராணுவத்தினரால் திட்டமிட்டு மாவீரர் நாள் நிகழ்வுகளைக் குழப்பும் வகையில் இடம் பெறும் விமானக் குண்டு வீச்சுத் தாக்குதல்களிற்கு மத்தியிலும் நிமிர்ந்து நின்று மக்கள் மத்தியில் வரலாற்றுச் சிறப்பு மிக்க உரையினைக் கொண்டு சென்று சேர்க்கின்ற அயராத பணியினைச் செய்ததும் இந்தப் புலிகளின் குரல் தான்! 23 தடவைகள் விமானக் குண்டு வீச்சிற்கு புலிகளின் குரல் கலையகம், மற்றும் ஒலிபரப்புக் கோபுரங்கள் அகப்பட்டாலும் “விழ விழ எழுவோம்!” என நிமிர்ந்து நின்று ஈழ மக்கள் வாழ்வோடு இரண்டறக் கலந்திருந்தது புலிகளின் குரல்.
போராட்டம் தொடர்பான நிகழ்வுகளை விட, பாடசாலை மாணவர்களின் உள அறிவினை மேம்படுத்தும் போட்டி நிகழ்ச்சிகள், பொது அறிவுத் தேடலை விரிவுபடுத்தும் நாளாந்த அவதானிப்பு போட்டி வினாக்கள் எனப் பல சிறப்பான நிகழ்வுகளையும் தன்னகத்தே தாங்கி வலம் வந்து கொண்டிருந்த புலிகளின் குரல் 1999ம் ஆண்டு சிங்கள மொழியிலான சேவையினை “கொட்டி ஹண்ட சிங்கள விக்காசிய” எனும் பெயரில் சிங்கள இராணுவத்தினருக்கு கள நிலமைகளைச் சொல்லும் நோக்கில் ஆரம்பிக்கின்றது. நாடகங்கள், நாட்டுப்புற கலைப் பாடல்கள், வரலாற்று நினைவு மீட்டல்கள் எனப் பல சுவையான சம்பவங்களைத் தாங்கி வந்த புலிகளின் குரல் போராளிகளுக்குள்ளும், பொது மக்களுக்குள்ளும் பொதிந்திருந்த இலக்கியத் தேடலுக்கும் உந்து சக்தியாக விளங்கியிருக்கிறது.
குறுகிய வீச்செல்லைக்குள் இருந்த புலிகளின் குரல் சமாதான காலத்தில் (2002ம் ஆண்டு) நோர்வே நாட்டின் அனுசரனையின் கீழ் பெற்றுக் கொள்ளப்பட்ட ஒலிபரப்புச் சாதனங்களின் உதவியோடு இலங்கையின் வடக்கு கிழக்கிற்கும் தன் ஒலிபரப்பு வீச்செல்லையினை விரிவுபடுத்துகின்றது. 2005ம் ஆண்டு இணையத்திலும் தன் சேவையினை இணைத்து உலக நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளும் புலிகளின் குரலை உரத்துக் கேட்கும் நிலையினை உருவாக்கியது. காலையில் தேசியத் தலைவரின் சிந்தனைகளோடு தன் ஒலிபரப்பினைத் தொடங்கும் புலிக் குரல், மாவீரர் பாடல், கணப் பொழுது, செய்தியறிக்கை, வீரச் சாவு அறிவித்தல், சாவு அறிவித்தல், மற்றும் துயர் பகிர்வோம் ஆகிய நிகழ்ச்சிகளோடு நாளிதழ் நாழி எனும் பெயரில் சுவையும் சுவாரஸ்யமும் கலந்து பத்திரிகைச் செய்திகளையும் வழங்கி வந்திருக்கின்றது.
போர்க் கால சூழ் நிலையினைக் கருத்திற் கொண்டு ஒன்றாய் எழுவோம் எனும் நிகழ்ச்சியும், புறப்படுங்கள் போர்க்களம் எனும் நிகழ்ச்சியும், போராட்டத்திற்காக ஆட்களைத் திரட்டும் நோக்கில் உருவாக்கப்பட்டிருந்தது. பின்னாளில் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் கவிதைகளைத் தாங்கி நாடு எனும் நிகழ்ச்சியும், யோகரட்ணம் யோகியின் உரையினைத் தாங்கி வரும் தமிழர் பாடு நிகழ்ச்சியும் ஈழத்தின் இறுதி யுத்தக் கள நிலமைகளைக் கருத்திற் கொண்டு இணைத்துக் கொள்ளப்பட்டது. இரவு நேரத்தில் கணப் பொழுது, கருத்துக் களம், உலக வலம், கருத்துப் பகிர்வு, செய்தி வீச்சு, அகமும் புறமும், எனும் நிகழ்ச்சிகளோடு தொடர் நாடகங்களையும் மக்களுக்கு வழங்கி மக்கள் மனங்களில் இன்றும் நினைவலைகளாக அடித்துக் கொண்டிருக்கின்ற பெருமையும் இந்தப் புலிகளின் குரலையே சாரும்.
23 தடவைகள் விமானக் குண்டு வீச்சிற்கு உட்பட்டும், பல தடவைகள் இடப் பெயர்வுகளைச் சந்தித்தும் இறுதி யுத்த காலம் வரை வன்னி மக்கள் பின்னே நகர்ந்து சென்று ஈழப் போரின் இறுதி நாட்களான 15.05.2009 வரை வன்னிப் பகுதியில் ஓயாது ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்து புலிகளின் குரல். இன்று தமிழர்களின் வாழ்வியற் கலை கலாச்சார விடயங்கள் வன்னி மண்ணில் சிதைக்கப்பட்ட பின்னரும், ஈழ மக்கள் வாழ்வோடு மட்டுமல்ல அகில மெங்கும் பரந்து வாழுகின்ற தமிழ் மக்கள் வாழ்வோடும் இரண்டறக் கலந்து இணையம் மூலம் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. பல தடைகளின் மத்தியில் விடுதலையின் உணர்வின் குரலாக ஒலித்து நிற்கும் புலிகளின் குரல் ஈழத்தில் வாழும் பெரும்பான்மையான தமிழர் உள்ளங்களில் அவர் தம் இளமைக் காலத்தின் நினைவின் குரலாக ஞாபகச் சுவடுகளில் பொதிந்திருக்கிறது என்பதில் ஐயமில்லை!
வானொலி ஒலிபரப்புத் துறையில் கடந்து வீறு நடை போட்டுக் கொண்டிருக்கிறது இந்த வானொலி!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”