கடற்கரும்புலி கப்டன் மணியரசன்
கடலன்னையின் புதல்வர் கடற்கரும்புலி கப்டன் மணியரசன்…..
மணியரசன்!
“பதினைந்தும் நிரம்பாத பாலக வயதில், தாயகத்துக்காய் தன்னையிர்ந்த கரும்புலி; என கருவில் விளைந்த பிள்ளை” என்று, தமிழீழத் தாயை தலைநிமிர்ந்து சொல்லவைத்த அடலேறு அவன்.
அந்தத் துடியாட்டமும், துடுக்கான பேச்சுக்களும் எங்களது நெஞ்சுக் கூட்டுக்குள் அவனது நினைவுகளைப் பதிவிட்டுப் போய்விட்டன.
இந்தச் சின்ன வயதிலும், பிறைச்சந்திரன் போல ஒரு மெல்லிய மொட்டை, அகவைக்கு ஏற்ற அளவில் குழந்தை வளர்ச்சி, குறும்புச் சிரிப்போடு ஓர் உருண்டை முகம். நிமிர்ந்த லாவகமான திடகாத்திரமான உடல்வாகு. எங்கள் கண்ணெல்லாம் அந்த வண்ணக்கோலம்.
மணியரசன் குறுகுறுத்தவன். பஜிரோவில் வருகின்றவர் வீட்டிற்குள் போய் அலுவல் முடித்து விட்டு, போன வேகத்திலேயே திரும்பிவந்தால் கூட, பஜிரோ அடுத்த பக்கமாகத் திரும்பி நிற்கும். “ஆரடா தம்பி பஜிரோவைத் திருப்பி விட்டது?” வந்தவர் தேடினால், ஒதுக்குப் புறமாக மணியரசன் தலையைச் சொறிந்து கொண்டு நிற்பான். அது மோட்டர் சைக்கிளானால், ஒரு “8” அடித்துவிட்டுத் திரும்பி நிற்கும். உள்ளே போனவர் வெளியில் வந்தால், எதோ முக்கிய வேலையில் முழ்கியிருப்பவனைப் போல, தூரத்திலிருந்து ஓரக்கண்ணால் பார்ப்பான். முகாமிற்குப் புதிதாகக் கொண்டுவரப்படும் ஒரு பொருள், துண்டுகளாகப் பிரித்து மேசையில் வைக்கபட்டிருக்கும், யாருடைய வேலை இது என்று யாரும் கேட்பதில்லை.
மணியரசன் குறுகுறுத்தவன் தான்; குழப்படிக்காரன் தான், ஆனால் எவருடைய கோபத்திற்கும் ஆளாகின்றவனல்ல.
ஒரு தடவை அவனோடு பழகியவர்களுக்கு, இன்னொரு தடவை அவனை நினைவுபடுத்தத் தேவையில்லை. எல்லோருடைய நினைவுகளிலும் நிலைத்துவிடும் வசீகரம் அவனிடமிருந்தது, மிகக் குறுகியகாலத் தொடர்புசாதன வேலையில், கவன் சேர்த்து வைத்திருந்த முகம் தெரியாத நண்பர்கள் பலர். எந்த நிலையத்தில் தகவல் பகிர்வதனை வேலை செய்பவராக இருந்தாலும், அவனோடு கதைக்காமல் அவர்கள் அலைவரிசையை மூடிக்கொண்ட நாட்கள் மிகக் குறைவு. மணியரசா! உனது அன்பின் வீச்சுத் தூரம், தமிழீழத்தின் எல்லைகளைத் தொட்டிருந்ததடா!
மணியரசனுக்கு ஒரு பொழுது போக்கு, மற்றவர்களைக் கிண்டல் செய்து கொண்டிருப்பது. அவனிருக்குமிடத்தில் வாய்திறக்க அநேகமானவர்களுக்குப் பயம். ட்ரக் ஓடும் ஐம்பது வயது ஐயாவிலிருந்து, புதிதாக இயக்கத்திற்கு வரும் சின்னப் பையன் வரை, வயது வேறுபாடின்றி, எல்லோருமே அவனுடைய அறுவைக்கு இலக்கு, ஆனாலும் மணியரசா! “இயக்கம் பொமர் வாங்கினா, அதை இறக்க எங்களிட்டை ஒரு ‘றண்வே’ இருக்கு” என்று, மயிரில்லாத உன் முன்பக்கத் தலை அறுவைக்கு உள்ளாகும்போது கூட, மேல் மயிரைத் தட்டிவிட்டு, உருமறைப்புச் செய்து கொண்டு, புன்னகையோடு அந்தக் கிண்டலை ஏற்றுக்கொள்ளும் உனது நட்பின் பண்பு உயர்ந்தது.
ஊரிலும், பள்ளிக்கூடத்திலும் கனியூட் என்று செல்லமாக அழைக்கப்பட்ட வேதநாயகம் ராஜரூபன் தான் எங்கள் மணியரசன்.
குடும்பத்தில் கடைசித் தங்கைச்சிக்கு நேரே மூத்த இவன். 7ஆவது பிள்ளை.
மணற்காடு றோமன் கத்தோலிக்க மகாவித்தியாலத்தில் படிக்கும்போது, அதன் உதைப்பந்தாட்டக் குழுவொன்றில் சிறந்த ஒரு விளையாட்டு வீரனாக இருந்தான். படிப்பிலும் கெட்டிக்காரனாம்.
அப்பா தொழிலுக்குப் போகும்போது, இடைக்கிடை அவரோடு கடலுக்குப் போகிறவன், திறமையான நீச்சல்க்காரனாகவும் ஆகியிருந்தான்.
1991இன் நடுப்பகுதியில் இவன் இயக்கத்திற்கு வரும்போது 8ஆம் வகுப்போடு படிப்பை இடையில் நிறுத்திவிட்டுத் தான் வந்தான்.
அவன், எல்லாத் திறமைகளும் ஒருங்கிணைந்திருந்த ஒரு போராளி. இந்தத் தேசம் அவனிடமிருந்து பெற்றுக்கொள்ள நிறையவே இருந்தது; அவற்றை வழங்கும் ஆற்றலையும் அவன் கொண்டிருந்தான். ஆனால் , ஒரு கரும்புலித் தாக்குதல்தான் அவனுடைய பிரதான குறியாக இருந்தது. கடைசியிலும் அதைத்தான் அவன் செய்தான்.
கடற்கரும்புலிகளின் 1வது பயிற்சி வகுப்பில் பயிற்சி எடுக்கும்போதே, பயிற்சிகளில் ஆர்வம் நிறைந்தவனாகவும், பரிட்சைகளில் அதிக புள்ளிகள் பெற்றவனாகவும் திகழ்ந்தான்; சிறந்த ஒரு விடுதலை வீரனாக முளைவிட்டான்.
அவனுடைய தெளிவான பேச்சு தன்மையும், விடயங்களைக் கிரகித்துக்கொள்ளும் வேகமும் தான் அவனை தகவல் பரிவர்த்தனை வேலைக்கு ஏற்றவனாக இனம் காட்டின. தகவல் தொடர்புச் சாதனம் கற்பிக்கும் பாடத்திட்டமானது பொதுவாக, “இவ்வளவு காலப்பயிற்சி” என வரையறுக்கப்பட்டது. ஆனால், மணியரசன் அதனைக் கற்றுக் கொண்டுவிட்ட நாட்களை விரல் மடிப்பிற்குள் அடக்கிவிடலாம்.
இரண்டே வருடகால அவனுடைய போராட்ட வாழ்வின் மிகப்பெரும்பாலான நாட்கள், தொடர்பு சாதனம் பார்க்கும் வேளையிலேயே அவனை ஈடுபடுத்தின. அந்தப் பணியின் முக்கியத்துவத்தையும், இன்றியமையாமையையும் அவன் புரிந்துணர்ந்திருந்த போதிலும், சண்டைக்குப் போகவேண்டுமென்ற ஆதங்கமே அவனிடம் மேலோங்கியிருந்தது. கங்கை அமரன் வன்னிக்குப் புறப்பட்டால் தானும் வரபோவதாக நச்சரிப்பான்; பிருந்தன் மாஸ்ரர் கிளாலிக்கு வெளிக்கிட்டால், தன்னையும் கூட்டிச் செல்லுமாறு அடம்பிடிப்பான். தன்னோடு நிற்கும்போதே, சண்டைக்கு அனுப்பும்படி மணியரசன் தனக்கு எழுதும் கடிதங்களை வாசிக்கவேண்டிய வில்லங்கம், தளபதி சூசைக்கு இருந்தது.
அவனது ஆசை ஓரளவு பூர்த்தியாக வர – வடமராட்சியிலுள்ள தலைமைத் தளத்தில் பகல் முழுவதும் ‘ செற் ‘ கதைத்துக் கொண்டிருப்பவன் , இரவுகளில் – கிளாலியின் சண்டைமுனையில் ஒரு எல்.எம்.ஜீயுடன் வலம்வரத் துவங்கினான்.
இறுதிக் காலத்தில்…. முழுமையாக, கிளாலியின் மக்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொழுதுகளிலும், ஒரு கரும்புலித் தாக்குதலிலே மணியரசனுடைய பிரதான குறியாக இருந்தது. எங்களுக்குள் சுழன்று திரிந்த அந்த இனிய நண்பன், அதைத்தான் செய்து முடித்தான்.
அவனுடைய கடைசி நாட்களில் அவன் மிகுந்த உற்சாகமாக இருந்தன.
தனது முகம்தெரியாத நண்பர்களிடம் வானலைகளினூடாக விடைபெற்றான். அந்த தொடர்பு சாதனத்திடமிருந்தும் விடைபெற்றான்.
கிளாலிக் கடலில் சிதைந்து போன நிலையிலும், மதன் அதிகமாய் மிதந்து வந்தபோது, நாங்கள் பக்குவமாய் எடுத்து வந்து துயிலுமில்லத்தில் விதைக்கையில், கண்ணீரோடு மதனுக்கு மண் போட்டான். அந்த நேரத்தில் எனக்கு மண் போடும் பாக்கியம் ஒருவருக்கும் கிடைக்காது என்று நினைத்திருப்பானோ….?
தோரணம் கட்டி பந்தல் போட்டு மதனுக்கும், வரதனுக்கும் அஞ்சலி செய்த போது, வீதி வீதியாகத் திரிந்து பார்த்தான். இன்னும் நாலு நாளில் தனக்கும் இப்படித்தான் செய்வினம் என்று நினைத்திருப்பானோ….?
இப்போது அவன் போய்விட்டான்; எங்களால் எட்ட முடியாத தொலைவுக்கு. எங்களைக் கிண்டல் செய்துகொண்டிருக்க அந்த அறுவைக்காரன் இப்போது இல்லை. இயக்கம் ‘பொமர்’ வாங்கினால் இறக்கி ஓட அந்த ‘றண்வே’ யும் இப்போது இல்லை.
விடுதலைப்புலிகள் (புரட்டாசி, ஐப்பசி 1993) இதழிலிருந்து தேசக்காற்று.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”