தீயினில் எரியாத தீபங்கள்
ஈழம் காக்க ஈகம் செய்த ஈகியர்களுக்கு வீரவணக்கம்
தாயகத்தின் விடியலுக்காய் தங்களையே ஆகுதியாக்கிய ஈகச்சுடர்களின் அணைத்து மனங்களிலும் உறைந்துள்ள காலம் கடந்த ஈகம் …
கு.முத்துக்குமார்
2009 சனவரி 29 ஆம் நாள் முத்துக்குமார் என்ற பத்திரிகையாளர், திரைத்துறை தொழில்நுட்பவியலாளர் சென்னை நுங்கம்பாக்கத்தில் நடுவண் அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சாஸ்திரி பவனுக்கு முன்னால், ஈழத்தமிழர்களை வாழ்த்தி முழக்கமிட்டும், அவர்களைக் காப்பாற்ற கோரியும் மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீயை பற்ற வைத்து தமது உயிரை மாய்த்துக் கொண்டார். முன்னதாக தமது இறுதி அறிக்கையை அங்குக் கூடியிருந்தோரிடையே வழங்கினார். அது அவரது ஆழ்ந்த அரசியல் அறிவையும், கொள்கை உறுதியையும் பறைசாற்றியது. அவருக்கு வயது 26 சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகில் உள்ள கொழுவைநல்லூர். சென்னை அருகே கொளத்தூரில் அவரது சகோதரி தமிழரசியின் வீட்டில் தங்கிப் பணி செய்தார்..
ஈழத் தமிழர்களுக்காக தனது உயிரை தற்கொடையாக்கிய வீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் வீரவணக்கம் செலுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழீழத்தில் சிங்களப் பேரினவாத அரசின் இன அழிப்புப் போருக்கு எதிராக தமிழீழ மக்கள் நடாத்தி வரும் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் சிங்கள அரச படைகளின் கொடூரமான தமிழின அழிப்புப் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், ஏழு கோடி தொப்புள்கொடி உறவுகளான தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் முகமாக தீக்குளித்து தனது இன்னுயிரை அர்ப்பணித்த வீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கு தமிழீழ மக்கள் சார்பிலும், எமது விடுதலை இயக்கத்தின் சார்பிலும் வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.
உலகத் தமிழினத்தின் வரலாற்றில் அன்புத் தம்பி முத்துக்குமாருக்கு என்றுமே அழியாத இடம் உண்டு.அன்புத் தம்பியின் குடும்பத்துக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
- ஈழத்தமிழர்களைக் காக்கவே உயிர்விடுகிறேன் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்……
- முத்துக்குமரா! தமிழீழத்திலிருந்து புதுவை இரத்தினதுரை……
தமிழீழ மக்களுக்கான ஏழு கோடி தமிழக உடன்பிறப்புக்களின் தொடர்ச்சியான போராட்டங்கள் உலகத்தின் மனச்சாட்சியைத் தட்டி நிற்கின்றன. உங்களின் தொடர்ச்சியான போராட்டங்களுக்கு உலகத் தமிழினத்தின் வரலாற்றில் குறிப்பாக தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமே தனித்துவமான இடம் உண்டு.
எமது மக்கள் சிங்கள அரசின் கொடுமையான இன அழிப்புப் போருக்கு முகம் கொடுத்து நிற்கும் இவ்வேளையில் உங்களின் எழுச்சி கண்டு மன ஆறுதலும் உற்சாகமும் அடைகின்றோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளப்பட்டி ரவி
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவர் சனவரி 31 2009, சனிக்கிழமை அன்று திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை நகரின் பேருந்து நிலையம் அருகில் தீக்குளித்தார். உடல் கருகிய நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பின்னரும் பலனின்றி பிப்ரவரி2, 2009 அன்று மரணமடைந்தார்.
சீர்காழி இரவிச்சந்திரன்
சீர்காழி காங்கிரஸ் கட்சியின் நகரச் செயலர் இரவிச்சந்திரன் 2009 பிப்ரவரி 7 அன்று அதிகாலை 1.30 மணியளவில் உடலில் தீயைப் பற்ற வைத்துக் கொண்டு, தமிழ் வாழ்க….. தமிழீழம் வெல்க…… ராஜபக்சே ஒழிக….. காங்கிரஸ் ஒழிக…….. எனக் குரல் கொடுத்துக் கொண்டே தம்மைத் தாமே எரித்துக் கொண்டார். அன்று மாலை 4 மணியளவில் அவர் மருத்துவமனையில் இறந்தார்.
ஈழத்தமிழருக்காக தீக்குளித்து மாண்ட சீர்காழி இரவிச்சந்திரனின் இறுதி மடல்
தமிழ்நாடு நாகை மாவட்டத்தில் உள்ள சீர்காழியில், ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுமாறு கோரி தீக்குளித்த காங்கிரஸ் கட்சியின் நகரச் செயலரான “வீரத் தமிழ் மகன்” ரவிச்சந்திரன் 07/02/09 மாலை உயிரிழந்தார்.
தீக்குளிப்பதற்கு முன்பு தனது இல்லத்தில் இரு பக்கம் கடிதம் எழுதி வைத்திருந்தார். இறுதி மடலில் எழுதப்பட்டிருந்ததாவது,என் பெயர் எஸ். இரவிச்சந்திரன். த.பெ. சுந்திரமூர்த்தி, 1 ஏ, பிடாரி தெரு, சீர்காழி.
தமிழ் ஈழத்தை காப்பாற்றுவோம். தமிழர்களை தலை நிமிரச்செய்வோம். தமிழனை வாழ வைப்போம்.
என்றும் அன்புடன் ரவிச்சந்திரன்..
ஈழத்தமிழர் வாழ வழிசெய்யாத இந்திய அரசை வன்மையாக கண்டிக்கிறேன். மானங்கெட்ட தமிழக அரசே என் உயிர் துறந்தால் தரமுடியுமா? என் அருமை தமிழர்களே..
இலங்கை அரசே என் உயிர் தருகிறேன். போரை நிறுத்த வேண்டும் என்று எழுதியிருந்தார்
07/02/09 சனிக்கிழமை அதிகாலை 1:00 மணியளவில் “வீரத் தமிழ் மகன்” ரவிச்சந்திரன் தனது தலையில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
உடலில் தீ எரிந்துகொண்டிருக்கும் போது, “தமிழ் வாழ்க!… தமிழீழம் வெல்க!… காங்கிரஸ் ஒழிக!… ராஜபக்ச ஒழிக!… என ஓங்கிக் குரல் கொடுத்துக் கொண்டே எரிந்திருக்கிறார் .
அவரின் பெற்றோர் உடனேயே தீயை அணைத்ததுடன், உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு படையினர் “வீரத் தமிழ் மகன்” ரவிச்சந்திரனை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சீர்காழி மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த “வீரத் தமிழ் மகன்” ரவிச்சந்திரன் –
தமிழீழம் வெல்க!
தமிழ் வாழ்க!
தமிழ் மக்களை காப்பாற்றுங்க!
ராஜபக்ச ஒழிக!
காங்கிரஸ் ஒழிக!
போரை நிறுத்துங்கள்!
என வலியின் வேதனையிலும் முழக்கமிட்டார்.
சீர்காழி அரசு மருத்துவமனையில் முதல் கட்ட மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு மேலதிக மருத்துவத்துக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு மாலை 3:45 நிமிடமளவில் “வீரத் தமிழ் மகன்” ரவிச்சந்திரன் உயிரிழந்தார்.
மறுநாள் 08/02/09 , அவரின் இறுதி சடங்கில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துக்கொண்டு வீர வணக்கம் செய்தனர்.
அமரேசன்
சென்னை வண்ணாரப்பேட்டை நமச்சிவாயம் தெருவைச் சேர்ந்தவர் அமரேசன் (வயது 65). இவர் 2009 பிப்ரவரி 8 அன்று, சுங்கச்சாவடி பேருந்து நிலையம் எதிரில் தனது உடலில் மண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே அமரேசன் உயிரிழந்து விட்டார்.
ஜோதி என்கிற தமிழ்வேந்தன்
கடலூர் குழந்தை காலனியை சேர்ந்தவர் ஜோதி என்கிற தமிழ்வேந்தன் 2009 பிப்ரவரி 18, மதியம் 2.30 மணியளவில் கடலூர் நீதிமன்ற அலுவலகத்துக்குள் மண்ணெண்ணெய் கேனுடன் வந்தவர் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பியபடியே தீக்குளித்தார். கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் தமிழ் வேந்தன். சிகிச்சை பலனின்றி இரவு 1.20 மணியளவில் மருத்துவமனையில் மரணமானார்.
சிவப்பிரகாசம்
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும்; தமிழர்கள் நலம் காக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி தி.மு.க. இளைஞர் அணி சார்பில் பிப்ரவரி 21, 2009 மாலை சென்னை, மாவட்ட தலைநகர்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் இளைஞர் சங்கிலி போராட்டம் இடம்பெற்றது. அப்போது, செல்லம்மாள் கல்லூரி அருகே நின்றிருந்த தரமணி மகாத்மா காந்தி நகர் வினைதீர்த்த விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த சிவப்பிரகாசம் (55) என்பவர் 2 லிட்டர் பெட்ரோலை எடுத்து வந்து தன் மீது ஊற்றி உடலில் தீ வைத்துக் கொண்டார். காவல்துறையினர் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனாலும் அவர் பிப்ரவரி 22 இல் உயிரிழந்தார்.
கோகுலகிருஷ்ணன்
சிவகாசி ஆணையூர் பஞ்சாயத்து அய்யம்பட்டியைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன் (வயது 55), பிப்ரவரி 25 2009 காலையில் திமுக கொடி, மண்ணெண்ணெய் கேன், கடிதம் சகிதம் கையில் வைத்துக்கொண்டு விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் இலங்கை தமிழர்களுக்காக தீக்குளிக்கப் போகிறேன் என்று குரல் கொடுத்தபடியே மண்ணெண்ணெயை தன் மீது ஊற்றிக்கொண்டு தீ பற்ற வைத்துக்கொண்டு தன் உயிரைத் தியாகம் செய்துள்ளார். இலங்கையைச் சேர்ந்தவரான கோகுலரத்தினம் 1989 ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு எதிலியாக வந்து, பின்னர், இந்தியக் குடியுரிமை பெற்று அரசு சார்பில் சிவகாசி அடுத்த ஆனையூர் காந்திநகரில் உள்ள சிலோன் குடியிருப்பில் வாழ்ந்து வந்தார்.
சீனிவாசன்
வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த வள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான கூலித் தொழிலாளி சீனிவாசன். இலங்கையில் நடந்து வரும் போரில் அப்பாவித் தமிழர்களை காப்பாற்றக்கோரி பிப்ரவரி 26 2009, இரவு 10.50 மணியளவில் தனது வீட்டருகே இருந்த தே.மு.தி.க. கொடி கம்பத்துக்கு அருகில் தன் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். மார்ச் 2, 2009 அன்று மாலை 4 மணியளவில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
சதாசிவம் சிறீதர்
சென்னை ஓட்டேரி கே.எம். தோட்டம் 9 ஆவது தெருவில் வாழ்ந்து வந்த சதாசிவம் சிறீதர்(எழில்வளவன்) (வயது 33), 99 ஆவது வட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி அமைப்பாளராகப் பொறுப்பு வகித்து வந்தவர். இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்துச் சென்னையில் மார்ச் 4 2009 அன்று, தீக்குளித்த சீறிதரன் மருத்துவ சிகிச்சை பலனின்றி மார்ச் 5 அன்று உயிரிழந்தார்.
நாகலிங்கம் ஆனந்த்
கடலூர் அருகே உள்ள அன்னவள்ளியை சேர்ந்தவர் நாகலிங்கம் மகன் ஆனந்த்(23). விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டரான இவர் ஈழத் தமிழர்களை பாதுகாக்க வலியுறுத்தி 2009 மார்ச் 15 ஞாயிற்றுக்கிழமை மாலை தீக்குளித்தார். புதுவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மார்ச் 17 செவ்வாய் காலை உயிரிழந்தார்.
இராசசேகர்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள காட்டுநாகலேரியை சேர்ந்தவர் இராசசேகர் (வயது 24). பா.ம.க.வைச் சேர்ந்த இவர் மார்ச் 15 அன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4:00 மணியளவில் தனது வீட்டு வாசலில் முன்பாக உடல் முழுவதும் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இராஜசேகர் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி மார்ச் 17 செவ்வாய் காலை இவர் உயிரிழந்தார்.
பாலசுந்தரம்
புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்களம் பகவான் தெருவைச் சேர்ந்தவர் பாலசுந்தரம். மார்ச் 22, 2009, மதியம் 12 மணியளவில், தனது வீட்டிற்கு வெளியே மண்ணெண்ணெய்யை தனது மேல் ஊற்றி தீயிட்டுக்கொண்டார். சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மாரிமுத்து
விருதுநகர் மாவட்டம், சிவகாசி காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 62). காங்கிரஸ் தொண்டரான இவர், ‘இலங்கைத் தமிழர்களை சோனியாகாந்தி காப்பாற்ற வேண்டும்’ என்று கடிதம் எழுதி வைத்து விட்டு, மார்ச் 22 2009 இரவு, வீட்டு வாசலில் உள்ள காங்கிரஸ் கொடிக்கம்பத்தின் முன்பு நின்று கொண்டிருந்தபோது உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட மாரிமுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சிவானந்தன்
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவானந்தன் (வயது 46), சென்னை வடபழனியில் உள்ள தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலக வாயில் அருகே ஏப்ரல் 17, 2009 இரவு இலங்கையில், இராணுவத்தின் தாக்குதலில் அப்பாவித் தமிழர்கள் உயிரிழப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என முழக்கங்கள் எழுப்பியவாறு தன் மீது மண்ணெண்ணெயை உடல் மீது ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். இவர் தமிழர் தேசிய இயக்கத் தொண்டராவார்.
சுப்பிரமணி
ஈழத்தமிழர்களை காக்கக் கோரி பண்ருட்டியைச் சேர்ந்த அதிமுக தொண்டரான சுப்பிரமணி (வயது 43). ஏப்ரல் 23 2009 அன்று கொளத்தூர் பாளையம் என்ற இடத்தில் ஈழத்தமிழர்களுக்காக உயிர்விடுகிறேன் என்று தீக்குளித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ராஜா
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தி 2009 பிப்ரவரி 7 மலேசியவில், இலங்கை தமிழ் இளைஞர் ராஜா (வயது27) என்பவர் தீக்குளித்து இறந்தார். ராஜா தீக்குளித்த இடத்தில் பெரிய டைரி, பணப்பை, தீப்பெட்டி ஆகியவை கிடந்தது. அந்த டைரியில் ராஜா உருக்கமான கடிதம் ஒன்றை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு எழுதி இருந்தார். அதில் இலங்கையில் நிரந்தர போர் நிறுத்தம், உடனடி பேச்சு வார்த்தை மூலம் அப்பாவி தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ அமெரிக்காவின் புதிய அதிபர் ஓபாமா உடனே இலங்கை செல்ல வேண்டும். அவருடன் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், நார்வே சமாதான தூதர், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரும் செல்லவேண்டும். என்றும் எழுதப்பட்டிருந்தன.
முருகதாசன்
சுவிட்சர்லாந்தில் ஐக்கிய நாடுகள் அவையின் முன்றலின் முன்பாக 2009 பிப்ரவரி 12 வியாழக்கிழமை இரவு 8:15 தொடக்கம் 9:45 நிமிடம் வரையான நேரத்துக்குள் லண்டனைச் சேர்ந்த ஈழத்தமிழரான துன்னாலை வர்ணகுலசிங்கம் முருகதாசன் என்ற 27 வயது இளைஞர் இன அழிப்பில் இருந்து ஈழத்தமிழ் மக்களை காப்பாற்றக்கோரி தீக்குளித்து இறந்தார்.
7 பக்கங்களுக்கு “உலக சமூகத்துக்கு தமிழினத்தின் சார்பில் என் ஆத்மார்த்த வேண்டுகோள்” என்ற தலைப்பில் ஒரு மரண சாசனம் எழுதி வைத்து விட்டு ஈகப்பேரொளி முருகதாசன் தீக்குளித்தார். முத்துக்குமாரின் இறுதி அறிக்கை போலவே, இதுவும் ஆழமான கருத்துகளை வெளிப்படுத்தியது.
அப்துல் ரவூப்
இந்த ஈகியர்களுக்கு முன்பாகவே ஈழத்தமிழருக்காக தீக்குளித்து உயிர் ஈகம் செய்தவர் அப்துல் ரவூப்.
ஈழத்தில் தமிழர்களைக் கொன்றழிக்கும் சிங்களநாட்டின் சிங்களக் கால்பந்து அணியினரைத் தமிழ்நாட்டில் விளையாட அனுமதித்ததைக் கண்டித்து பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக் குடிக்காடு அப்துல் ரவூப் 1995 டிசம்பர் 14ஆம் நாள் தீக்குளித்து மாண்டார்.
வீரமங்கை தோழர் செங்கொடி
தமிழக, காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கை எதிர்த்து முழக்கமிட்டபடி தீக்குளித்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் செங்கொடி உயிரிழந்தார். இந்நிலையில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் உயிரை காப்பாற்ற அரசுக்கு உருக்கமான கடிதம் எழுதி வைத்து தன்னுயிர் ஈகம் செய்தார் செங்கொடி.
“தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியதுபோல் என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிரை காப்பாற்ற பயன்படும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன் – இப்படிக்கு தோழர் செங்கொடி”.
என்று அவரால் எழுதப்பட்ட கடிதம் அனைவரையும் படிக்கச் சொல்லி படபடத்துக் கொண்டிருந்தது.
ஈழத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பு போருக்கு எதிராக போர் குரல் எழுப்பி தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த வீரமறவர்களுக்கு வீர வணக்கம்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”