திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்
“தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து வீரச்சாவடைந்தவர்.
அவருக்கு உதவியாளராக இருந்த முன்னாட்போராளி கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்கள் அந்தப் பன்னிரண்டு நாட்களையும் தொகுத்து ‘திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்’ என்ற புத்தகமாக வெளியிட்டிருந்தார். அத்தொடரை, திலீபனின் உண்ணாநோன்புக் காலமாகிய இக்காலத்தில் தருகிறோம்.”
தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ். மாவட்ட அரசியற் பிரிவுப் பொறுப்பாளர் திலீபன் அவர்கள், 15.09.1987 அன்று, நல்லூர்க் கந்தசாமி கோயிலின் முன்பாக, ஐந்து கோரிக்கைகளை முன்வைத்துச் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.
இந்திய வல்லாதிக்கத்தின் கண்களைத் திறப்பதற்காக அவர் மேற்கொண்ட அந்தத் தியாகப் பயணத்தில், 12 நாட்கள் ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல், மனக்கட்டுப்பாட்டுடன் இருந்து, தமிழ் பேசும் மக்களின் விடுதலைத் தீயைக் கொழுந்து விட்டு எரியச் செய்தபின், 26.09.1987 அன்று ஈகச்சாவு அடைந்தார்.
அந்த ஈகப் பயணத்தில் 12 நாட்களும் அவரின் அருகிலிருந்து, வேதனைக்கடலில் மூழ்கி, ஈகை வேள்வியில் சங்கமமாகி, நேரில் கண்ட உண்மை அனுபவங்களை கட்டுரைத் தொடராக உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.
இந்த நூல் எழுதப்பட்ட சூழ்நிலை மிகவும் சிக்கலானது. இந்திய வல்லாதிக்கத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினார் மிகவும் உக்கிரமாக மோதிக்கொண்டிருந்த காலகட்டம் அது…… இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், அ.இ.அ.தி.மு.க ஆட்சி நீக்கப்பட்டு, ஆளுநர் ஒருவரின் பொறுப்பில் விடப்பட்டிருந்த காலம் அது… தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்கங்கள் பலவற்றைத் தப்பான வழியில் செலுத்தி, இயக்கங்களுக்கிடையே மோதலை ஏற்படுத்துவதற்காக “றோ” வின் நரி மூளை மிகத் தீவிராமாக வேலை செய்துகொண்டிருந்த காலம் அது. இந்நூலை நான் எழுதுவதற்காகக் கிட்டு அண்ணாவின் அழைப்பை ஏற்று இந்தியா சென்றபோது, வேதாரண்யம் காவல் அதிகாரிகளினால் 1988 மாசி மாதம் கைது செய்யப்பட்டேன். அக்காவல் நிலையத்திலிருந்த எல்லோருமே தமிழர்கள் என்பதனால் என்னை அவர்களிடம் அடையாளம் காட்டியபோது, நான் மிருகத்தனமாக அவர்களால் தாக்கப்பட்டேன்.
“தமிழ்நாட்டிற்கு எதற்காக வந்தாய்? ஆயுதம் கொண்டு போகவா? கண்ணிவெடிவைக்க வெடிமருந்து கொண்டு போகவா?”… என்று அடிக்கடி கேட்டுக் கேட்டு மிருகம் போல் அவர்களில் ஒருவன் தாக்கிய போது, என் மூக்கிலிருந்து இரத்தம் பீறிட்டுக்கொண்டு வந்தது. உடம்பின் சகல பகுதிகளிலும் ஏற்பட்ட குண்டாந்தடிக் காயங்களால் உடம்பே பற்றி எரிவது போல் இருந்தது. இந்திய வெறியர்களுக்கு வடம் பிடிக்கும் இவனைப் போன்ற ஒரு சில தமிழர்கள் வரை, உலகத் தமிழனுக்கு வெகு விரைவில் விடிவு ஏற்பட்டு விடாது என்பதை இப்போது நான் எண்ணிக்கொண்டேன்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழ்நாட்டு முகாம்கள் எங்கெங்கே இருக்கின்றன என்றும், அவைகளில் யார், யார் இருக்கின்றார்கள் என்றும், வேறு ஒரு உப அதிகாரி (எஸ்.ஐ) என்னிடம் மிரட்டிக் கேட்டான் நான் அதற்கு எதுவித பதிலும் கூறாமல் இறுதிவரை நிற்கவே, இவனும் அவனுடன் சேர்ந்து என்னை மிருகம் போல் தாக்கினான்
“ஒடையிலே என் சாம்பர் கரையும்போதும்
ஓண் தமிழே சல சலத்து ஒடவேண்டும்…”
என்ற தமிழ்க் கவிஞனின் வரிகள்தான் எனக்கு அப்போது நினைவுக்கு வந்தன. காக்கை வன்னியன்…… எட்டப்பன்……போன்றவர்களின் நாமம் அழிந்து விடாமல் இருக்க, இன்னும் நமது இனத்தின் பலபேர் இருந்து கொண்டிருக்கிறார்கள்…
“அங்கே எமது ஆட்களைக் கண்ணிவெடி வைத்துக் கொல்கிறீர்கள்… இங்கே வெடிமருந்து….. ஆயுதங்கள் வாங்க வருகிறீர்கள்……உங்களையெல்லாம் நாயைச் சுடுவதுபோல் சுட்டுத்தள்ள வேண்டும்” என்று அவன் ஊறினான். “உன் அப்பன் என்ன இந்திக்காரனா?” என்று, துணிந்து கோபத்துடன் கேட்டேன். அடுத்த நிமிடமே என் நெஞ்சிலும், வயிற்றிலும் அவர்கள் இருவரும் மாறி மாறிக் குத்துவிட்டார்கள்: நான் மயங்கிவிட்டேன்!
அடுத்தநாள் காலைவரை எதுவித உணவோ, தண்ணீரோ அற்றநிலையில், குளிர்ந்த தரையில் படுக்கவிடப்பட்டேன்…… காலையில் திருத்துறைப்பூண்டியிலுள்ள நீதிமன்றத்தில் நான் நிறுத்தப்பட்டேன். கடவுச்சீட்டு இல்லாமல் நாட்டுக்குள் நுழைந்த குற்றம் என் மீது சுமத்தப்பட்டு, 15 நாட்கள் வரை திருச்சி மத்திய சிறைச்சாலையில் வைத்திருக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். காவல் நிலையத்தில் எனக்கு நிகழ்ந்த கொடுமைகளைக் கூற முயன்ற போது, நான் மேற்கொண்டு பேச அனுமதிக்கப்படவில்லை……
திருச்சி மத்திய சிறையிலிருந்து பிணையில் விடுவிக்கப்பட்டு, சென்னை சென்ற நான், கிட்டு அண்ணாவின் உத்தரவின்படி திலீபன்பற்றிய இந்நூலை எழுதத்தொடங்கினேன். எழுத்துச்சுதந்திரம்… பேச்சுச் சுதந்திரம்……நடமடும் சுதந்திரம் என்பன அப்போது தமிழ்நாடு மாநிலத்தின் ஆளுநராக இருந்த அலெக்சாந்தர் என்பவரால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மட்டும் தடைசெய்யப்பட்டிருந்தது. எது எப்படி இருந்தபோதும், திலீபனின் உண்ணாவிரதம் பற்றிய இந்நூலை மிக விரைவில் எழுதிமுடித்துவிட வேண்டும் என்ற முயற்சியில், இரவு பகலாக முழுமூச்சுடன் ஈடுபட்டேன்: என் முயற்சிக்குத் துணையாக, திரு. ராஐன் இருந்தார்.
1988 ஆடி மாதமளவில் மதுரை, சென்னை போன்ற தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் அமைந்திருந்த எமது இயக்கத்தின் வசிப்பிடங்கள், தமிழ்நாட்டுக்காவல் துறையினரால் முற்றுகை இடப்பட்டு, நாம் அனைவரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டோம்.
இதற்கிடையில் தளபதி கிட்டுவுக்கும் இந்திய அரசுக்கும் இடையில், தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இதில் “றோ” அமைப்பினரும் கலந்துகொண்டனர்
தமிழ்நாட்டில் நாம் தொடர்ந்தும் எமது வசிப்பிடங்களை வைத்திருக்க வேண்டுமானால், பேச்சுவார்த்தையின்போது அதையாவது விட்டுக்கொடுக்க வேண்டும் என்று, இந்திய வல்லாதிக்கத்தின் அதிகாரிகள், சிலர் எதிர்பார்த்தனர். அதற்காகவே வீட்டுக்காவலில் எம்மை வைத்துப் பணியவைக்க அவர்கள் முயன்றிருக்க வேண்டும்.
எமது மக்களின் எதிர்காலம் ஒன்றுக்காக, எதையும் விட்டுக்கொடுக்க முடியாத நிலையில், எமது கொள்கைகளில் உறுதியாக இருந்த எம்மை, 08.08.1988 அன்று அதிகாலை பன்னிரண்டு மணியளவில் நித்திரையால் எழுப்பிக் கைது செய்து கொண்டு சென்றார்கள், பேச்சுவார்த்தையில் நாம் பணியவேண்டுமென்பதற்காக ஏற்படுத்தப்பட்ட இரண்டாவது நெருக்குதல் இதுவென்று உணர்ந்து கொண்டோம். ஆனால், தளபதி கிட்டுவையும் அவருடன் இருந்த சிலரையும், அவர்கள் இந்தத் தருணத்தில் கைதுசெய்யாமல், தொடர்ந்தும் வீட்டுக் காவலிலேயே வைத்திருந்தனர்.
அப்போது இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி அவர்கள், சென்னைக்குச் சுற்றுப்பயணம் செய்யவிருந்ததால் முன்னேற்பாடாக எம்மைக் கைதுசெய்வதாகச் சில உளவுப்படை அதிகாரிகள் கூறினர். ராஜீவ் தமிழ்நாட்டுக்கு வரும் வேளைகளிலெல்லாம் சிலகாலமாக எமது இயக்க உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு, அவர் போனபின் விடுவிக்கப்படுவது வழக்கமாகையால் நாமும் இதுபற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் சிறையில் இருந்தோம். ஆனால், பேச்சுவார்த்தைகள் முற்றாகத் தோல்வியடைந்ததும், தளபதி கிட்டுவையும் அவர்கள் சிறையில் போட்டார்கள். அதுமட்டுமன்றி, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் எம்மீது பொய்க் குற்றங்களையும் சுமத்தியிருந்தனர்.
நடக்கமுடியாத நிலையில் எம்மில் சிலர் சென்னைச் சிறைச்சாலையில் இருந்தனர். அதுபோல் ஒரு சிலர் மதுரைச் சிறைச்சாலையிலும் இருந்தனர். மதுரைச் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்தவர்களில் பலர் உறுப்புக்களை இழந்த நிலையிலோ அல்லது பாரிய காயங்களுக்கோ சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தவர்களாகும். இவர்களை ஈவிரக்கமற்ற முறையில் இந்திய வல்லாதிக்க அரசின் கைக்கூலிகள், கைகளில் மாட்டப்பட்டிருந்த குளுக்கோஸ் வயர்களைக் கழற்றி எறிந்துவிட்டு அம்புலன்சில் ஏற்றிசென்று சிறையில் தள்ளியதை, நாம் ஒருபோதும் மறந்துவிடமாட்டோம்.
இந்தியத் தேசிய பாதுகாப்புச் சட்டமானது ஒரு நபரை எதுவித நீதிமன்ற விசாரணையும் இன்றி, சிறைச்சாலையில் நிபந்தனையற்ற முறையில் ஒருவருடம் வரை தடுத்து வைப்பத- -ற்கு இடமளிக்கிறது. 1988, ஆவணி மாத இறுதிவாரத்தில் கிட்டண்ணாவும், அவருடன் இருந்தவர்களும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்க் கைது செய்யப்பட்டு, எம்முடன் கொண்டுவந்து சென்னை மத்திய சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டனர்.
பேசுமட்டும் அவருடன் பேசிவிட்டு தமது எண்ணப்படி இறங்கி வரவில்லை என்பதற்காக அவரது பாதிக்கப்பட்ட உடல் நிலையைக்கூட எண்ணிப் பார்க்காமல், ஈவிரக்கமற்ற முறையில் அவரைச் சிறையில் தள்ளியது இந்திய ஏகாதிபத்தியத்தின் “புளிச்சல் ஏவறை”யை எமக்கு மிகத் தெளிவாக எடுத்துக்காட்டும் ஒரு செயலாகும்.
தமிழ்நாடு முழுவதும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 154 பேர் (பெண்கள் உட்பட) அப்போது கைதுசெய்யப்பட்டிருந்தனர். இப்படித் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டேர் மீது, பாரிய பொய்க் குற்றங்களில் முக்கியமானது:
சென்னையிலுள்ள பௌத்த விகாரையை வெடிவைத்துத் தகர்க்கும் நோக்கத்துடன் நண்பர்களுடன் சேர்ந்து திட்டம் போட்டதுமல்லாமல், அத்திட்டத்தை நிறைவேற்றச் செல்கையில் தாம் சந்தேகத்துடன் நெருங்கிய போது நான் தப்பமுயன்றது……
இதில் ஒரு முக்கிய விடயம் என்னவென்றால், இதே குற்றத்துக்காக எம்மில் பலரின் பெயர்கள் போடப்பட்டிருந்ததுதான். இதில் இன்னுமொரு அதிசயம் என்னவென்றால்,
சென்னையில் ஒரு பௌத்த விகாரை இருப்பதே எனக்குச் சிறையில் இருக்கும்போதுதான் தெரியும். வின்சன்ட் என்ற எமது போராளி ஒருவருக்கு கண்;ணிவெடி ஒன்றின் மூலம் முழங்காலின் கீழ் துண்டிக்கப்பட்டிருந்தது: அவரால் நடக்கவே முடியாது ஆனால், மூளை கெட்ட அதிகாரிகள் சிலர் அவர்மீதும் சில பொய்க் குற்றச்சாட்டுகளைச் சோடித்திருந்தனர். அவைகளில் ஒன்று, பௌத்த விகாரையில் வெடிவைப்பதற்குத் தயாராக நின்றபோது காவல் துறையினரைக் கண்டுவிட்டு ஓடமுயன்றார்: காவல் துறையினர் அவரைத் துரத்திப் பிடித்துக் கைது செய்தனர் என்பதுதான். என்ன கற்பனை இது?
எம்மைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உள்ளே தள்ளிய இந்திய அரசு, வெளியுலகிற்குத் தான் சுத்தமான அரசு என்பதைக் காட்டுவதற்காக “சதா சிவம் விசாரணைக் கொமிஷன்” என்ற விசாரணைக் குழு ஒன்றை நியமித்து, அதனிடம் எமது விசாரணையை ஒப்படைத்தது.
26.09.1988 அன்று திலீபன் தியாக மரணமடைந்த முதலாண்டு நினைவு தினத்தன்றுதான் – இந்த விசாரணைக் குழுவினர், முதன்முதலாக எம்மை விசாரிக்க அழைத்திருந்தனர். அன்று சாட்சியமளிக்கச் சென்றவர்களில் நானும் ஒருவன். அன்று நாம் திலீபனின் நினைவாக ஒருநாள் முழுவதும் உண்ணாவிரதத்தைச் சிறையில் ஆரம்பித்திருந்தோம். அந்த நிலையில் கைகளில் விலங்கிடப்பட்டவாறு நாம் விசாரணைக் குழு முன்பாக அழைத்துச் செல்லப்பட்டோம்.
தமிழ்நாட்டு அரசியற் கட்சிப் பிரமுகர்கள் சிலர் எமக்காக சதாசிவம் விசாரணைக் குழு முன்னிலையில் சாட்சியமளித்தனர். அவர்களில் ஒருவர்தான் திரு.ஆற்காடு வீரசாமி. அவர் எடுத்துக் கூறியவற்றில் ஒன்று மட்டும் இன்னும் என் மனத்தில் அப்படியே பதிந்திருக்கிறது
“போனவருடம் இதே தினத்தன்று உண்ணாவிரதத்தை மேற்கொண்டு தியாக மரணமடைந்த திலீபன் அவர்கள், ஐந்து கோரிக்கைகளை முன்வைத்துத் தன் போராட்டத்தை இந்திய அரசுக்கு எதிராக நடத்தினார். அவைகளில் ஒன்று, சிறையிலிருக்கும் தமிழ்க் கைதிகளை விடுவிக்கவேண்டும் என்பது. ஆனால் அவர் இறந்தபின் கூட இந்திய அரசு அதை நிறைவேற்றவில்லை. அன்று இந்திய அரசிடம் திலீபன் இக்கோரிக்கையை விடுவித்தபோது, தமிழ்க் கைதிகள் சிறீலங்காச் சிறைகளில் இருந்தனர். ஆனால், இன்று தமிழீழ விடுதலைப் புலிகளை இந்திய அரசு இந்த மண்ணிலேயே, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், பழிவாங்கும் நோக்குடன் கைது செய்து சிறையில் வைத்திருக்கிறது. அன்று இலங்கைச் சிறையிலிருந்த அரசியல் கைதிகளை இதேநாளில் லிடுவிக்கும்படி, திலீபன் இந்திய அரசிடம் கேட்டான். இன்றும் அதே நாளில் இந்தியாவில் இருக்கும் இலங்கை அரசியல் கைதிகளை விடுவிக்கும்படி நாம் கேட்கவேண்டிய நிலை உள்ளது. திலீபன் உண்ணாவிரதம் இருந்து ஈகை மரணமடைந்த இந்தத் துக்கநாளில், தமிழீழ விடுதலைப் புலிப் போரளிகளை (கிட்டு உட்பட) விடுதலை செய்ய வேண்டும்மென்று, தாழ்மையுடன் வேண்டுகிறேன். எமது நாட்டிற்கு எம்மால் சிகிச்சைக்காக அழைத்துவரப்பட்டவர்களை நாமே சிறையில் போடுவது அநீதியானது” என்று, அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த நூலின் அச்சுவேலைகள் இந்தியாவில் முடிவுற்று 26.09.1988 அன்று, திரு. வை. கோபாலசாமி (நாடாளுமன்ற உறுப்பினர்) அவர்களின் தலைமையில் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றபோது, அதற்காக உழைத்தவர்களில் நண்பர்கள் வோல்டர், ராவ், முத்துராஐh, மூத்த உறுப்பினர் பேபி அண்ணா (இளங்குமரன்), முரளி, ராஐன், போன்றோர் முக்கியமானவர்கள்…… அவர்களுக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.
இந்நூலை வெளியிடும்போது நான் சென்னை மத்திய சிறையில் இருந்தேன். ஆகவே, வெளியீட்டு விழா முடிந்ததும் இதன் பிரதிகள் சிலவற்றை என்னிடம் பல கஷ்டங்களுக்கு மத்தியில் கொண்டுவந்து தந்த திரு. வை. கோபாலசாமி அவர்களுக்கும் என் நன்றிகள் உரித்தாகுக, இந்நூலை நான் எழுதிய போதும் இதை மிக ஒழுங்கான முறையில், பிரசுரத்திற்கு ஏற்றவாறு தட்டச்சில் பொறித்துத்தந்த, தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் திரு. தேவர் அவர்களின் சேவையையும் என்னால் ஒரு போதும் மறக்கமுடியாது. மீண்டும் இந்நூலின் இரண்டாம் பதிப்பை வெளியிடும் முயற்சியில் என்னைச் சில வருடங்களுக்கு முன் தூண்டிய திரு. ராதேயன் (முன்னால் “ஈழநாதம் வாரமலர்” ஆசிரியர்) அவர்கட்கும் எனது நன்றிகள் உரித்தாகுக.
கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன்
மாவடி வீதி,
ஐந்து சந்தி
யாழ்ப்பாணம்,
தமிழீழம்.
புரட்டாதி,1992.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”