பூநகரியில் தீக்குளித்த புலிகள்
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
12.11.1993
பூநகரிச் சமர்.
தமிழீழத்தில் நிகழ்ந்த சமர்களுக்கெல்லாம் தாய்ச் சமர்.
படை அமைத்தலில், படை நகர்த்தலில் இது ஒரு புதிய பரிமாணம்.
போர் முறைக்கும், போர் யுத்திக்கும், போர்த் திறனுக்கும் இது ஒரு புதிய படிக்கல். புலிகளின் படையணிகள் ஒன்றிணைந்து, தேசிய ரீதியில் அணிசேர்ந்து, எதிரியைச் சந்தித்த பெரும் சமர். உலக வரலாற்று ஏட்டில் ஒப்புவையற்ற போர் நிகழ்வாக இந்தச் சமர் பதிவைப் பெறுகிறது.
இந்தப் போர் நிகழ்வை திட்டமிட்டு நெறிப்படுத்திய பெருமை எமது தலைவனைச் சாரும். ஓய்வின்றி, உறக்கமின்றி, ஒருமுக நோக்குடன் ஓராண்டு காலமாக கட்டி எழுப்பிய திட்டம் பூநகரியில் பூகம்ப நிகழ்வாகச் செயல் வடிவம் எடுத்தது.
எதிரியின் இரும்புக் கோட்டைக்குள் புலிப்படை புயலாகப் புகுந்தது.
கடற்புலியாக, கரும்புலியாக, வரிப்புலியாக, பெண் புலியாக எல்லாப் புலிகளும் எல்லா முனைகளிலும் எதிரியுடன் மோதின.
பூநகரி கூட்டுப்படைத்தளம் ஒரு ரணகளமாக மாறியது.
ஒவ்வொரு முனையிலும் கடும் சண்டை மூண்டது. ஒவ்வொரு முனையிலும் ஒவ்வொரு தளபதிகள் முன்னின்று வழிநடத்த, புலிப்படை வீரர்கள் முன்னேறிப் பாய்ந்தனர். வீராவேசத்துடன் போரிட்டனர். ஒவ்வொரு முனையிலும், ஒவ்வொரு அத்தியாயமாக, ஒப்பற்ற வீரகாவியம் படைக்கப்பட்டது.
எதிரிப் படையணி சீர்குலைந்தது. சிதறி ஓடியது. சிதைந்து போனது. எதிரியின் பாசறை, எதிரியின் கல்லறையாக உருமாற்றம் எடுத்தது.
சிங்கள இனவாத அரக்கர் சேனையின் ஆயிரம் தலைகள் உருண்டன. அதிலிருந்து பிரவாகம் எடுத்த இரத்த ஆறு யாழ். நீரேரியைச் செங்கடல் ஆக்கியது.
அந்தக் காலத்தில், இந்தக் கடற்பரப்பில் சிங்கள இனவாத அரக்கர் படையின் ஆதிக்கம் இருந்தது. அப்பொழுது எல்லாம் இந்தக் கடலில் தமிழனின் இரத்தம் ஆறாக ஓடியது.
அன்று அந்த அரக்கர் படை கிளாலிக் கடலில் நரவேட்டை ஆடியது. வாள் தீட்டி வந்து இரத்தப்பலி எடுத்தது. இரவில், நடுநிசி மௌனத்தில், உடல் உறையும் குளிரில், உயிரைக் கையில் பிடித்தபடி பயணம் செய்த எமது மக்களை வழிமறித்து வெறியாட்டம் ஆடியது. அப்பாவிகள் என அவலக் குரல் எழுப்பி, கைகூப்பிக் கும்பிட்டு, உயிர்ப் பிச்சை கேட்டவர்களைக் கண்டதுண்டமாக வெட்டிச் சரித்தது.
அன்று எமது மக்களின் மரண ஓலம் பூநகரி வானைப் பிளந்து அதிர்ந்தது. அந்தச் சாவோலம் கேட்டு, சதிராடி மகிழ்ந்த அரக்கர் படை பூநகரி மண்ணில் பிணங்களாய் விழுந்தனர்.
பழிக்குப் பழி எடுத்து, பகைவனைக் கொன்றழித்து, பகைமுடித்த எமது வீரமறவர்களின் வெற்றி முழக்கம் இன்று பூநகரி வானில் அதிர்ந்தபடி இருக்கிறது.
பூநகரிப் பெரும் சமர் எதிரியை நிலைகுலைய வைத்தது. அரச படைத் தலைமையை அதிரவைத்தது. இராணுவ வாதிகளை தலைகுனிய வைத்தது. சிங்களப் பேரினவாதப் பேய்க்கு முண்டுகொடுத்து நிற்பவர்களை திண்டாடச் செய்தது. போர்க்கலையில் எவரும் புலிகளுக்கு நிகரில்லை என உலகத்தாருக்கு உணர வைத்தது.
பூநகரியில் தீக்குளித்து, புலிகள் இயக்கம் புதிய பலத்தோடு எழுந்தது. விசைப் படகுகள், தாங்கிகள், பீரங்கிகளுடன் என்ருமில்லாப் பெரும் தொகையில் எதிரியின் ஆயுதங்கள் புலிகளின் கைக்கு மாறியது.
யாழ்ப்பாணத்தின் கழுத்தை இறுக்கிய எதிரியின் பிடி தளர்ந்தது. முள்வேலி முற்றுகையின் முதுகெலும்பு உடைந்தது. கடல் நீரேரியின் கடல் ஆதிக்கம் கடற்புலிகளின் கைக்கு வந்தது.
பூநகரி மண்ணில் பதியப்பட்ட இந்தச் சரித்திரச் சமர், புலிகள் இயக்கத்தின் புரட்சிகர ஆயுதப் போரை ஒரு புதிய படிநிலைக்கு முன்னோக்கி நகர்த்தியது. ஒரே பாய்ச்சலில், இரண்டாவது கட்ட ஈழப்போர் ஒரு புதிய வளர்ச்சிப் போக்கை எட்டிப் பிடித்தது. தமிழீழத் தாகத்தின் விடுதலைப் பாதைக்கு ஒரு உறுதியான அடிக்களையும் நாடிவிட்டது.
இந்த மாபெரும் வரலாற்றுச் 460 வரையிலான வீரவேங்கைகள் சாதனையைப் படைத்தனர்.
சுதந்திரத் தமிழீழத்தில், எமது மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழ வேண்டும் என்பதற்காக தமது இன்னுயிரை ஈகம் செய்த இந்த மாவீரர்கள் எமது இதயக் கோவிலில் பூசிக்கப்படவேண்டியவர்கள்.
காலத்தால் செத்துவிடாது, என்றென்றும் சரித்திரமாய் வாழும் இந்த வரலாற்று நாயகர்களை தமிழீழ தேசம் சிரம் தாழ்த்தி வணங்குகிறது.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”