தியாகி பொன். சிவகுமாரன்
முதல் தமிழீழ தற்கொடையாளர் தியாகி பொன் சிவகுமாரன்
எமது தேசத்தின் நாளைய தூண்களான மாணவர்கள் நாளை எம் நாட்டைக் கட்டியெழுப்பும் இளைய சிற்பிகள். எமது தேச விடியலிற்காய் தம் உயிரை அர்ப்பணம் செய்தவர்களில் மாணவர்களின் பங்கு அளப்பரியது.
தமிழீழ விடுதலைப் போராட்டம் வளர்ச்சி பெறுவதற்கு ஊன்றுகோலாக இருந்து. இப்போராட்டம் பெருவிருட்சமாக வளர்வதற்கு காரணமானவர்கள். உலகத்தின் புருவத்தை உயர்த்தி தமிழீழவிடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக உலகெங்கும் குரல் கொடுக்கக் கூடிய அளவிற்கு ஆணிவேராக இருந்தவர்கள். இற்றைக்கு மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் தாயகத்தை மீட்டெடுக்கும் ஆயுதப் போராட்டத்திற்கு வித்திட்டவர்கள் அன்று மாணவர்களாக இருந்த தேசியத் தலைவரும் அவர் தம் தோழர்களுமே.
இம்மாணவ விடிவெள்ளிகளுள் முதன்மையானவர் உரும்பிராயைச் சேர்ந்த பொன். சிவகுமாரன் அவர்கள் ஆவார். 1950 ஆகஸ்ட் 26இல் இவர் பொன்னுத்துரை அன்னலட்சுமி தம்பதிகளின் மகனாகப் பிறந்தார். தமிழின உணர்வும் விடுதலை வேட்கையும் இவரிடம் குடிகொண்டிருந்தது. 1958 ஆம் ஆண்டின் இனக்கலவரத்தில் இவரது மூத்த சகோதரி பருத்தித்துறை துறைமுகத்தில் உடுத்த துணியுடன் வந்திறங்கியபோது, தன்னுடைய அக்கா ஏன் இவ்வாறு கண்ணீருடன் வந்திறங்க வேண்டும் என்ற கேள்வி இவருள் எழுந்தது. எட்டுவயதிலேயே இவ்வாறான சிந்தனை இவர் மனதில் உதித்தது.
இவர் தனது தாயிடம் சென்று ?ஏன் அம்மா அக்கா இப்படி கண்ணீர் வடித்த படி இங்கு வர நேர்ந்தது? சிங்களவர்கள் அடித்தால் இப்படி அடிவாங்கிக் கொண்டு நாம் ஓடி வரவேண்டுமா? இது வெட்கம் இல்லையா? நாமும் திருப்பி அடித்தால் என்ன?? என்று கேட்டானாம்.
இயற்கையிலேயே இவரிடம் திறமைகள் பல குடிகொண்டிருந்தது. 1960ஆம் ஆண்டில் தனது பத்து வயதில் ?தினப் புழுகு? என்ற பெயரில் ஒரு கையெழுத்துப் பத்திரிகையை நடாத்தினான். அதில் இவர் ?பி.எஸ்.கே? என்ற பெயரில் எழுதினார். இதே காலகட்டத்தில் 1970இல் சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தது. இனவாதியான சிறீமா அம்மையார் தமிழர்கள் மீது அளவிறந்த அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டார். இளைய சமுதாயத்தின் குறிப்பாக தமிழ் மாணவர் சமூகத்தின் உயர் கல்வியில் சிறீமா அரசு கைவைத்தது. தமிழர்களை கல்வியில் பின்தங்க வைக்கவேண்டும் என்கிற சதித்திட்டத்தோடு ?தரப்படுத்தல்? நடைமுறையை பல்கலைக்கழக கல்வியில் புகுத்தியது. தமிழ் மாணவன் ஒருவன் பல்கலைக்கழகம் செல்ல வேண்டுமாயின் 250 புள்ளிகள் பெறவேண்டும். அதேவேளை சிங்கள மாணவன் பல்கலைக்கழகம் செல்ல வேண்டுமாயின் 229 புள்ளிகள் பெற்றால் போதும். இதைக்கண்டு குமுறி எழுந்தது தமிழ்ச் சமுதாயம். தமிழ் மாணவர் பேரவை பிறந்தது.
1970ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் நாள் தமிழீழமெங்கும் சிங்கள் வஞ்சகக் கொடுமையை எதிர்த்து தமிழ் மாணவர் சமதாயம் வரலாறு காணாத ஊர்வலத்தை தமிழீழத்தில் நடத்தியது. இதை முன்னின்று நடத்தியவர்களில் பொன். சிவகுமாரனும் ஒருவர். இதனால் இவன் மாணவ சமூகத்தினதும் தமிழ் மக்களினதும் அன்பையும் ஆதரவையும் பெற்றார். சிவகுமார் தலைமையில் தமிழ் இளைஞர்கள் திரள்வதை கண்ட சிங்கள அரசு உரும்பிராய்க்கு வந்த சிங்கள உதவி அமைச்சர் ஒருவருக்கு கைக்குண்டு வீசியதாக சந்தேகத்தின் பெயரில் 1970இல் சிவகுமாரனை கைது செய்தது. இத்தனை கொடுமைகளை சிங்கள அரசு செய்த போதும் தனது கல்வியைக் கைவிடாது பல்கலைக் கழக கல்விப் பரிட்சையில் சித்தியடைந்தான்.
அந்தக் கால கட்டத்தில் இவரது தந்தை ?தம்பி நீர் இங்கிலாந்திற்குச் சென்று அங்கு படி? என்று அறிவுரை கூறினார். ஆனால் நாட்டுப்பற்றும் ஈகமும் மிக்க சிவகுமாரன் ?அப்பா நான் எங்கும் போகமாட்டேன். இந்த நாட்டில் இருந்துகொண்டே எனது இனத்தின் விடுதலைக்காகப் போராடுவேன்.
என் உடலில் உயிர் இருக்கும் ஒவ்வொரு சொட்டு இரத்தமும் இந்த தமிழ் மண்ணிற்கே சொந்தமாகும் என்று கூறினார். இவர் தாயிடம் அடிக்கடி கூறுவராம்? அம்மா உள்ள உயிர் ஒன்றுதான். அது போகப் போவதும் ஒரு தடவைதான். அப்படிப் போகும் இந்த உயிரை. ஒரு புனித இலட்சியத்திற்காக கொடுப்பதில் என்ன தவறு?
தமிழராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள் சிவகுமாரன் மனதைப் பலமாகப் பாதித்தது. தமிழராய்ச்சி மாநாட்டில் சிறீலங்கா பொலிசாரின் அடாவடித்தனமான மக்கள் விரோத தாக்குதல்களுக்கும் மத்தியில் அவர்களின் அட்டகாசங்களால் அவதிப்படும் வயோதிபர்களையும் மங்கையர்களையும் மழலைகளையும் வெளிநாட்டுப் பேராளர்களையும் காப்பாற்றுவதில் இளைஞர்கள் ஈடுபட்டிருந்தனர். அன்று சிவகுமாரனால் மானம் காப்பாற்றப்பட்ட பெண்கள் பலர், உயிர் காக்கப்பட்ட வயோதிபர்கள் பலர். தன்னுயிரைப் பற்றிக் கவலைப்படாமல் சக தமிழ் மக்களின் உயிரைக் காப்பாற்ற முன்னின்று உழைத்தான். அப்போது கம்பி வேலிக்கு பக்கத்தில் ஏழு தமிழர்கள் உயிர் மீட்கப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். கம்பி வேலியின் மீது சிங்களக் கடையர் காவற்படை அறுத்து வீழ்த்திய மின் கம்பி யொன்று மின்சாரத்தைப் பாய்ச்சியதால் ஏற்பட்ட துர்அனர்த்தம் இது.
அகப்பட்ட தமிழர்களில் சிறுவன் ஒருவன் தியாகி பொன் சிவகுமாரனைப் பார்த்து? அண்ணை என்னைக் காப்பாற்றுங்கோ நான் சாகப் போகின்றேன்? அவலக் குரல் எழுப்பினான். ஆனால் இறுதியில் அச்சிறுவனை சிவகுமாரனால் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. இவன் கைகொடுத்து தூக்கப் போக அவனது நண்பர்கள் போகாதே அதில் மின்சாரம் பாய்கிறது எனத் தடுத்துவிட்டனர். அவன் கண்முன்னை தமிழீழத்தின் குருத்தொன்று மரமாகி காயாகி கனியாகி விதையாக முன்பே கருகி விடுகின்றது.
தமிழினப் படுகொலைக்கு காரணமாக இருந்த பொலிஸ் அதிகாரி சந்திரசேகராவை கொல்லும் முயற்சியினால் சிவகுமாரனைத் தேடி சிங்களக் காவற்படை வலைவிரித்தது. மாவீரன் தலைக்கு ஐயாயிரம் இலங்கை ரூபாய்கள் விதித்தது சிங்களம். தமிழின உணர்வும் விடுதலை வேட்கையும் மிகுந்த தியாகி சிவகுமாரன் சிங்களக் கைக்கூலியும் பெற்றோல் நிலைய அதிபருமான நடராசாவால் காட்டிக் கொடுக்கப்பட்டான். எதிரியிடம் உயிருடன் பிடிபடக் கூடாது என்கிற வீரமரபின் முதல் வித்தாய் சயனைற்றை அணைத்துக் கொண்டான்.
இதுவும் அவன் தயாள குணத்தாலேயே ஈகச் சாவடைந்தான். இறுதிக்கணத்தில் இவ்வீரன் தன் தாயிற்கு குறிப்பிட்டதாவது ?அம்மா, என்னைப் பிடிக்க வந்த காவற்படை அதிகாரி நான் ஐந்து பிள்ளைக்காரன் என்னை ஒன்றும் செய்துவிடாதே எனக் கெஞ்சினான். அதனால் நான் ஒன்றும் செய்யவில்லை?
கடைசி நேரத்தில் இவனிற்கு தாகம் ஏற்பட்டது. அப்போது மருத்துவமனை ஊழியர் ஒருவர் தண்ணீர் கொண்டு வந்து புகட்ட முற்பட்ட போது அதைக்கூட் சிங்களக் காவற்படை அனுமதிக்கவில்லை.
தியாகி பொன். சிவகுமாரனின் ஈகச்சாவு கேட்டு தமிழீழம் எழுச்சி கொண்டது. தமிழீழ மாணவர் சமதாயம் தாயகம் மீட்பு என்கிற அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு ஆக்கபூர்வமாய்க் குதித்தது. சாவிலும் ஒரு சமூக மறுமலர்ச்சி செய்தான் மாவீரன் சிவகுமாரன். வீட்டை விட்டே பெண்கள் வெளியேறுவதை விரும்பாத சமூகத்தில். ஆயிரக்கணக்கில் மாணவிகளும், இளைஞிகளும் தியாகி பொன். சிவகுமாரன் இறுதி நிகழ்வில் திரண்டனர்.
தியாகி பொன் சிவகுமாரன் மறைந்த நாளாகிய ஜுன் 5ற்கு மறுநாள் ஜுன் 6ஆம் நாள் தமிழீழ மாணவர் எழுச்சி நாளாக பிரகடனப்படுத்தி தாயகம் அடங்கலாக தமிழீழ மக்கள் வாழும் தேசங்கள் எங்கும் தமிழீழ மக்களால் கொண்டாடப்படுகின்றது.
தியாகி பொன். சிவகுமாரன் சாதிக்க முயற்சித்தவற்றை தமிழீழத் தேசியத்தலைவரும் அவர்தம் தோழர்களும் சாதித்தனர். இன்று அவனின் கனவான தமிழீழத் தாயகத்தை நோக்கி தமிழீழத் தேசியம் வீறுநடைபோடுகின்றது.
இன்று மாணவர் சமூகம் பொங்குதமிழாய் உலகப் பரப்பெங்கும் பொங்கியெழுந்து தமிழீழத் தேசியத் தலைமையை வலுச்சேர்த்து நிற்கின்ற காலகட்டமிது. கடல்கடந்து வாழுகின்ற தமிழீழ மாணவர் சமூகத்தின் ஆதரவு தாயக நிர்மாணிப்பிற்கு இன்று பெருமளவு தேவையாக உள்ளது. காலம் இட்ட கட்டளையை நிறைவேற்ற வரலாறாகிப் போன மாணவப் போராளியின் நினைவுமீட்புநாளில் தாயகத்திற்கு வளம் சேர்க்க இளையதலைமுறையினர் அனைவரும் உறுதியெடுத்து, புலத்திலிருந்து நிலத்திற்கு வந்து செயற்பட வேண்டிய தருணமிது.
நினைவுப்பகிர்வு:- போராளி செ. கதிர்நிலவன்.
பொன். சிவகுமாரின் நீளும் நினைவுகளாய்……………….
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”