மீண்டும் பிறப்பேன் விடுதலைக்காக போராடுவேன்
மீண்டும் பிறப்பேன் விடுதலைக்காக போராடுவேன்.
ஈழவளத் திருநாட்டின் யாழ்ப்பாண மாநகரில் வீரமும் தியாகமும் உள்ள கிராமம் என்றால் அது உரும்பிராயையே குறிக்கும். அப்படியான அக்கிராமத்தின் பிரபல பாடசாலையான உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலய அதிபரான பொன்னுத்துரை அன்னலட்சுமி தம்பதிகளுக்கு 1950ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ஆம் திகதி பிறந்தவரே….
ஈழவளத் திருநாட்டின் யாழ்ப்பாண மாநகரில் வீரமும் தியாகமும் உள்ள கிராமம் என்றால் அது உரும்பிராயையே குறிக்கும். அப்படியான அக்கிராமத்தின் பிரபல பாடசாலையான உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலய அதிபரான பொன்னுத்துரை அன்னலட்சுமி தம்பதிகளுக்கு 1950ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ஆம் திகதி பிறந்தவரே, தற்சமயம் தமிழ் மக்களிள் நெஞ்சங்களில் நிலைத்து வாழும் தியாகி பொன்.சிவகுமாரன் ஆவார்.
சிவகுமாரன் ஆரம்பக் கல்வியைத் தமது தந்தையார் கற்பித்த உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயத்தில் சிறந்த முறையில் கற்று வந்தார். அவரது எட்டாம் வயதில் அதாவது 1958ம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரம் காரணமாக கொழும்பு வாழ் யாழ்ப்பாண மக்கள் கொலை செய்யப்பட்டும் அடி, உதை வாங்கியும், சொத்துக்கள், உறவினர்களை இழந்தும் கப்பல் மூலம் அகதிகளாக பருத்தித்துறைக்கு வந்து சேர்ந்தனர். அந்தத் துக்ககரமான நிகழ்வு சிவகுமாரனின் இதயத்தில் ஆழமாகப் பதிந்தது. அகதிகளாக வந்த மக்களிடம் நடந்தவற்றை விபரமாகவும் அவதானமாகவும் கேட்டறிந்தான். இவ்விடயம் அவனுக்குக் கவலையையும் ஆவேசத்தையும் கொடுத்தது.
1961 இல் தமிழ் மக்களின் உரிமைக்காக தந்தை செல்வா தலைமையில் சத்தியாக்கிரகம் யாழ்ப்பாணம் கச்சேரி முன் நடைபெற்றது. இதில் அவர் தன் பெற்றோருடன் கலந்து கருத்துரைகளையும் சத்தியாக்கிரகத்தையும் உன்னிப்பாகக் கவனித்தார். அப்போது அவருக்கு வயது 11. தமிழ் மக்களின் விடிவுக்கு எவ்வாறு வழி கிடைக்கும் என்ற சிந்தனை அப்போதே அவர் இதயத்தில் பதிந்தது. தொடர்ந்து தனது மேற் படிப்பை யாழ் இந்துக் கல்லூரியிலும், யாழ் தொழில் நுட்பக் கல்லூரியிலும் கற்றுத் தேர்ச்சியடைந்தார்.
அப்போது அதாவது 1970ல் கலாசார உதவி மந்திரி சோமவீர சந்திரசிறி உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாசாலையில் நடைபெறும் கலைநிகழ்ச்சிக்கு பிரதம விருந்தினராக வருகை தர ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் ஏற்பாட்டாளருடன் சிவகுமாரன் தொடர்பு கொண்டு தமிழ் மக்களைப் பழிவாங்கும் அரசாங்கத்தின் அமைச்சரை வரவேற்க வேண்டாம். உபசரிக்க வேண்டாம். அதுவும் நான் படித்த பாடசாலையில் அமைச்சருக்கு உபசரிப்பா? எனக் கேட்டார். உபசரிப்பாளர் அவரது கோரிக்கையைச் செவிசாய்க்கவில்லை. அன்று மாலை கலாசார நிகழ்வில் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றினார் அமைச்சர் சோமவீர சந்திரசிறி. அப்போது அவரின் மோட்டார் வாகனம் குண்டு வெடிப்பில் சிதறிச் சேதத்துக்குள்ளாகியது.
காருக்கு குண்டு வைத்தார் என்ற குற்றத்தில் சந்தேகத்தின் பேரில் சிவகுமாரன் பொலிசாரினால் கைது செய்யப்பட்டார். நீதிமன்றில் வழக்குத் தாக்கலானது. சிவகுமாரன் சார்பில் நீதிமன்றில் ஆஜராக சட்டத்தரணிகள் தயங்கிய வேளையில் சட்டத்தரணி பொ.காங்கேயன் அவர்களின் அனுசரணையுடன் பிரபல நியாயவாதியும் அடங்காத் தமிழர் முன்னணித் தலைவருமான முன்னாள் வவுனியா பாராளுமன்ற உறுப்பினர் திரு.சி.சுந்தரலிங்கம் ஞ.ஊ. அவர்கள் ஆஜரானார்.
திரு.சுந்தரலிங்கம் அவர்களின் வாதத்திறனால் குற்றம் நிரூபிக்க முடியாத பட்சத்தில் சிவகுமாரன் விடுதலையானார்.
1972ம் ஆண்டு பிரதம மந்திரியாக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்காவின் அரசாங்கத்தில் கல்வி அமைச்சராகவிருந்த பதியுதீன் முகமது அவர்களால் கொண்டு வரப்பட்ட தரப்படுத்தல் சட்டத்தை சிவகுமாரன் கடுமையாக எதிர்த்தார். இதன் விளைவாக தமிழ் இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என அனைவருக்கும் தெரிவித்த தமிழ் மாணவர் பேரவை என்ற அமைப்பை ஆரம்பித்து கிராமங்கள் தோறும், சனசமூக நிலையங்கள் தோறும் தரப்படுத்தலால் தமிழ் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என கருத்தரங்குகள் மூலம் மக்களுக்குத் தெளிவுபடுத்தினார்.
1972ம் ஆண்டளவில் ஆட்சியாளரின் எடுபிடியான யாழ்ப்பாண மாநகர மேயர் அல்பிரட் துரையப்பாவின் மோட்டார் வாகனம் யாழ் பிரதான வீதியில் நிறுத்திவிடப்பட்டிருந்தது. துரையப்பா வாகனத்தை விட்டு வெளியே போய் சிறிது நேரத்தில் மோட்டார் வாகனம் குண்டு வெடிப்பில் நொருங்கியது. துரையப்பா மயிரிழையில் உயிர் தப்பினார். இச்சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு யாழ் சிறைச்சாலையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டார். யாழ் சிறைச்சாலை யில் விளக்க மறியலில் இருந்த காலத்தில் இவரின் தீவிர போக்கை அவதானித்த அரசாங்கத்தால் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சிவகுமாரன் மாற்றப்பட்டார். அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து கவிதைகள், பாட்டுக்களை எழுதி தன் உணர்வை வெளிப்படுத்தினார்.
1974 ஜனவரி மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் நல்லூரில் இருந்து சங்கிலி அரசனின் ஊர்தி சுலோகங்களுடன் புறப்படத் தயாரானது. இதனைச் சிவகுமாரன் முன் நின்று நடாத்தினான். இதில் முப்படைவரினும் அஞ்சமாட்டோம்| என்ற சுலோகத்துடன் ஊர்தி புறப்பட ஆயத்தமானது. முப்படைவரிலும் அஞ்சமாட்டோம் என்ற வாக்கியத்தை அகற்ற வேண்டும். இது அகற்றினால் தான் ஊர்தி செல்ல அனுமதிக்கப்படும் என்று பொலிசார் ஊர்வலத்தைத் தடை செய்தனர். இந்த வாக்கியம் எடுக்கமாட்டோம். ஊர்தி செல்ல விடாது தடுத்தால் சத்தியாக்கிரகம் செய்வோம். எதிர்விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டும் என சிவகுமாரன் பொலிசாருடன் வாதிட்டான். முடிவில் ஊர்தி அதே வாக்கியத்துடன் செல்ல அனுமதிக்கப்பட்டது.
1974 ஜனவரி 10ம் திகதி யாழ் முற்றவெளியில் வீரசிங்கம் மண்டபத்தின் முன்பு தமிழாராய்ச்சி மகாநாடு இறுதிநாள் நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பெரும் திரளான தமிழ் மக்கள் கலந்து கொண்டனர். இதனைப் பொறுக்க மாட்டாத சிங்களப் பொலிசார் ஆ.ஸ்.P. சந்திரசேகரா தலைமையில் அப்பாவித் தமிழ் மக்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். மின்சாரக் கம்பி அறுந்தது. தமிழ் மக்கள் சிதறி ஓடினர். துப்பாக்கிப் பிரயோகத்திலும் மின்சாரம் தாக்கியும் தமிழ் சுவைக்க வந்த 9 அப்பாவித் தமிழர்களின் உயிர்கள் பறிக்கப்பட்டன. இதனை நேரில் கவனித்த சிவகுமாரன் ஆக வேண்டிய உதவிகளை மக்களுக்குச் செய்து கொடுத்து விட்டு விரக்தியுடன் காலம் தாழ்த்தி வீடு சேர்ந்தார். அன்று கண்ட சம்பவம் அவரை மேலும் தீவிரவாதியாக்கியது. இதற்குக் காரணமான ஆ.ஸ்.P. சந்திரசேகராவை தீர்த்துக் கட்ட கங்கணம் கட்டினார். ஆ.ஸ்.P. சந்திரசேகராவின் நடமாட்டங்களைக் கவனித்தார். ஒரு நாள் நல்லூர் கைலாய பிள்ளையார் கோயிலுக்கு அருகில் ஆ.ஸ்.P. சந்திரசேகரா தனது ஜீப் வண்டியில் வந்து கொண்டிருந்தார். இவரை எதிர்கொண்டு சிவகுமாரன் கைக்குண்டை ஜீப் வண்டியில் எறிந்தார். குண்டு வெடிக்கவில்லை. உடனே கையில் இருந்த துப்பாக்கியால் சந்திரசேகராவைச் சுட்டார். ஜீப் வண்டியில் உள்ளே படுத்துத் தப்பித்துக் கொண்டார் சந்திரசேகரா. சிவகுமாரன் தலைமறைவானார்.
சிவகுமாரனை தேடி வீடு வீடாக உரும்பிராயில் சல்ல டை போட்டனர். இத்தேடுதல் வேட்டையில் சுமார் 5000 பொலிசார் ஈடுபட்டனர். சிவகுமாரனின் குடும்பத்தினர் தீவிர விசாரணைக்காக யாழ். பொலிஸ் நிலையம் கூட்டிச் செல்லப்பட்டனர். சிவகுமாரனின் தந்தை நீர்வேலியிலும், தாய் உரும்பிராயிலும் சகோதரர்கள் அரியரட்ணம் உரும்பிராய் பட்டினசபையிலும், சிவயோகன் சுன்னாகத்திலும் கைது செய்யப்பட்டு தனித்தனியே யாழ் பொலிஸ் நிலையத்தில் சிவகுமாரன் இருப்பிடம் பற்றி விசாரிக்கப்பட்டனர். சகோதரி சிவகுமாரி வீட்டில் வைத்து விசாரணை செய்யப்பட்டார்.
சிவகுமாரன் இருப்பிடம் பற்றி அறியமுடியவில்லை. அன்று மாலை கைது செய்யப்பட்ட குடும்பத்தினர் விடுவிக்கப்பட்டனர். சிவகுமாரனைப் பிடிக்க முடியாத பொலிசார் சிவகுமாரன் பற்றிய தகவல் தருபவர்களுக்கு ரூபா 5000 சன்மானம் வழங்கப்படும் என பத்திரிகை மூலம் விளம்பரப்படுத்தினர்.
மானமுள்ள எந்தவொரு தமிழனும் காட்டிக் கொடுக்க முன்வரவில்லை. சிவகுமாரன் மறைவிட வாழ்வில் இருந்து கொண்டு தன் குடும்பத்தவரை இடைக்கிடை சந்தித்து வந்தார். அந்த நாட்களில் தான் உயிருடன் பொலிசாரிடம் பிடிபடக்கூடாது என்ற கொள்கையை முன்வைத்து தானே சயனைட் கழியைத் தயாரித்து காகத்திற்கு வைத்துப் பரிசீலித்து வெற்றி கண்டார். அதாவது எதிரியின் கையில் உயிருடன் பிடிபடக் கூடாது என்ற கொள்கை அவரிடம் இருந்தது. போராட்டத்திற்கு பணம் தேவை. இப்பணத்தைப் பெறுவதற்கு முயற்சிகள் பல செய்தான். அநேக மக்கள் இரகசியமாகப் பண உதவிகள் வழங்கினர். மேலும் பணத்தேவை காரணமாக 5.6.1974 கோப்பாய் கிராம வங்கிக்குச் சென்ற சமயம் பொலிசாரின் சுற்றி வளைப்புக்கு ஆளானார். நீர்வேலி பூதர்மடத்தடிக்கருகில் கோப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் நேருக்குநேர் போரிட்டு பொலிஸ் அதிகாரியைத் துப்பாக்கியால் சுட முயன்ற போது அந்தப் பொலிஸ் அதிகாரி நான் ஐந்து பிள்ளைகளின் தந்தை. என்னைச் சுட வேண்டாம் என மன்றாட்டமாகக் கேட்டான். இரக்கமுள்ள சிவகுமாரன் துப்பாக்கியைக் கீழே போட்டுவிட்டு தன்வசமுள்ள சயனைட்டை உட்கொண்டான். நன்றி கெட்ட அந்தப் பொலிஸ் பொறுப்பதிகாரி மீண்டும் சிவகுமாரனைத் தாக்கி கைது செய்தான். யாழ். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆஸ்பத்திரியைச் சுற்றி பொலிஸ் காவல் சிவகுமாரன் படுத்திருந்த கட்டிலுடன் விலங்கிடப்பட்ட நிலையில் இருந்தார்.
இச்செய்தி அறிந்த தாய், தந்தை, சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள், தமிழ் மக்கள் வைத்தியசாலைக்குச் சென்றனர். சிவகுமாரன் அந்த நிலையிலும் தன்னைச் சுடவேண்டாம் என மன்றாடிய பொலிஸ் பொறுப்பதிகாரியை நான் சுடவில்லை. என்னைக் காப்பாற்றுவதற்கு வைத்தியசாலையில் வைத்தியர்கள் எவ்வளவோ பாடுபடுகின்றார்கள். ஆனால் அது வீண்வேலை. நான் இன்னும் சிறிது நேரத்தில் இறந்து விடுவேன். அம்மா நீங்கள் ஒருவரும் அழ வேண்டாம். நான் மீண்டும் பிறப்பேன். விடுதலைக்காகப் போரிடுவேன். இன்னும் ஆயிரம் சிவகுமாரன்கள் பிறப்பார்கள் என்றான். எதிரியிடம் உயிருடன் பிடிபடக் கூடாது என்ற கோரிக்கைக்காகவே நான் சயனைட்டை உட்கொண்டேன் என தாய் தந்தையிடம் கூறினான். அம்மா என் நகங்கள் நீலநிறமாக மாறிக் கொண்டு வருகின்றது. இன்னும் சிறிது நேரத்தில் என் உயிர் பிரிந்து விடும் என்றான். டாக்டர்கள் பலரின் முயற்சியும் பயனளிக்கவில்லை. 5.6.1974 புதன் கிழமை மாலை 5.30 மணியளவில் சிவகுமாரனின் உயிர் பிரிந்தது. இனத்துக்காக, மண்ணுக்காக பாடுபட்ட சிவகுமாரன் மறைந்துவிட்ட செய்தி காட்டுத் தீயைப் போல எங்கும் பரவியது.
சிவகுமாரனின் பூதவுடல் மரண விசாரணைக்குப் பின்பு பொலிஸ் பாதுகாப்புடன் அவரின் இல்லத்துக்குக் கொண்டுவரப்பட்டது. யாழ் நகரமே சோகத்தில் ஆழ்ந்தது. மக்கள் சாரிசாரியாக அஞ்சலி செலுத்த வந்தனர் பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்விமான்கள் எல்லோரும் அஞ்சலி செலுத்தினர். உரும்பிராயில் மூன்று தினங்கள் துக்கம் அனுஸ்டிக்கப்பட்டது. 7.6.1974 அன்று இறுதி ஊர்வலம் அவன் இல்லத்தில் இருந்து ஆரம்பமானது. 3 மைல் நீளமான அந்த ஊர்வலத்தில் பெரும் எண்ணிக்கையான ஆண்கள், பெண்கள், மாணவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பூதவுடல் சென். மைக்கல் தேவாலயத்திலும், உரும்பிராய் பட்டினசபையிலும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டன. பொலிசார் கறுப்புக் கொடிகளைக் கழற்றினர். மீண்டும் மக்கள் பொலிசார் முன்நிலையில் கறுப்புக் கொடி கட்டிப் பொலிசாரை நிந்தித்தனர். உரும்பிராய் வேம்பன் மயானத்தில் அஞ்சலிக்கூட்டம் நடைபெற்று பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்விமான்கள், இளைஞர்கள் அஞ்சலி உரை நிகழ்த்தினர். தந்தையார் சிவகுமாரனின் பூதவுடல் வைக்கப்பட்ட சிதைக்கு தீமூட்டினார். சரித்திரத்தில் என்றும் இல்லாதவாறு மயானத்திற்கு பெண்கள், குழந்தைகள் உட்பட எல்லோரும் வந்தது இதுவே முதல் தடவையாகும்.
அன்றைய தினமே மக்களால் தியாகி பொன்.சிவகுமாரன் என அழைக்கப்பட்டார். ஆயுதப் போராட்டத்தின் முதல் போராளி என்ற வகையிலும், எதிரியிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்ற விளக்கத்தினைத் தெளிவுபடுத்திய வகையிலும் அத்தியாகியைதமிழ்மக்கள் போற்றுகின்றனர்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”