சலுகைகளுக்காக…….. எவரிடமும் நாம் கைநீட்டமாட்டோம்.
சலுகைகளுக்காக…….. எவரிடமும் நாம் கைநீட்டமாட்டோம்.
எனது அன்புக்குரிய மக்களே!
இந்த தற்காலிக போர்நிறுத்த நடவடிக்கையின் பயனாக எமது பிரச்சினைக்கு ஒரு இறுதியான அரசியற் தீர்வு ஏற்படும் என்பதில் எமக்கு நம்மிக்கை இல்லை. இனவெறி கொண்ட சிங்கள – பௌத்த தலைமைக்கு அப்படி திடீரென மனமாற்றம் ஏற்படுமென நாம் எதிர்பார்க்கவில்லை. தமிழருக்கு நீதி வழங்க வேண்டும் என்ற தார்மீக சிந்தனைக்குப் பதிலாக, தமிழர்களை மீண்டும் ஏமாற்றி ஆயுதப் புரட்சிப் போராளிகளை அடிபணியச் செய்யவேண்டும் என்பதே அரசின் அந்தரங்கத் திட்டமாகும். 35 வருட அரசியல் வரலாற்றில் மீண்டும் மீண்டும் ஏமாந்துபோன கசப்பான அரசியல் வரலாற்றுப் பாடங்களில் நாம் நிறையக் கற்றுத் தெளிந்திருக்கிறோம். ஆகவே பேச்சுக்கள் என்ற இந்த இராஜதந்திரப் பொறிக்கிடங்கில் நாம் சிக்குப்படப் போவதில்லை என்பதை நான் உறுதியாக திட்டவட்டமாக உங்களுக்கு எடுத்துரைக்க விரும்புகிறேன்.
எமது விடுதலைப் போராட்டத்தில் நாம் அளப்பரிய தியாகங்களைச் செய்திருக்கிறோம். தாங்கமுடியாத துன்ப, துயரங்களை அனுபவித்திருக்கிறோம். ஆயிரமாயிரம் அப்பாவி மக்களின் உயிர்களைப் பறிகொடுத்திருக்கிறோம். எமது வீடுகள், சொத்துக்கள், செல்வங்களை இழந்திருக்கின்றோம். பெருந்தொகையான இளம் போராளிகளை களத்தில் பலிகொடுத்திருக்கின்றோம். சகிக்க முடியாத அளவிற்கு நாம் அவமானப் படுத்தப்பட்டிருக்கின்றோம். சிங்களப் பயங்கரவதமானது எமது தேசிய ஆன்மாவில் விழுத்திய வடுக்கள் என்றுமே மாறப்போவதில்லை.
இத்தனை கொடுமைகளுக்குப் பின்னர், இத்தனை உயிரழிவுகள், பொருளழிவுகளுக்குப் பின்னர், இத்தனை வீரச்சாவுகளுக்குப் பின்னர் நாம் சிங்கள அரசிடம் மண்டியிட்டு சலுகைகளுக்காக கைநீட்டப்போவதில்லை.
தர்மமும், உண்மையும் இறுதியில் வெற்றியளித்து, தமிழ்த் தாயில் கருக்கொண்டுள்ள வரலாற்றுக் குழந்தையான தமிழீழம் என்றோ ஒருநாள் பிரசவமெடுக்கும் என்பது எனது நம்பிக்கை.
எம்மிடம் ஆத்மா பலமும், ஆயுத பலமும் இருக்கிறது. மக்கள் பலமும் எமது கரங்களைப் பலப்படுத்துமானால் எமது இலட்சியம் வெற்றியடைவதை யாராலும், எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதை உறுதியுடன் கூற விரும்புகின்றேன்.
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.
(1995ம் ஆண்டு மக்களுக்கு விடுத்த செய்தியிலிருந்து தேசக்காற்று)
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”