சக்கை லொறி சீதனத்திற்கு……….
மாவீரர் துயில் கொள்ளும் இல்லம். அந்த மாமணிகள் தம் அழியாத உடல்கொண்டு உரையாடுகின்றனர்.
இன்று மீண்டும் ஒரு வியப்பு; மகிழ்ச்சிப் பெருக்கு!
“உண்மையாடி? அப்படிச் செய்தாளா?”
“செய்ய நினைத்தாள்; செய்ய வில்லை”
“ஏன்”
“அதுதான் பெண்ணினத்தின் சாபக்கேடு”
எழுந்த வியப்பும் மகிழ்வும் மங்கிக் குறைந்தன. ஆனால் ஒரு மௌன உறுதிப்பாடு மேலும் சுடர்விட்டது.
“கலங்காமல் சொல். அம்மா நடந்ததை விரிவாகச் சொல்” கூட நின்ற மறவனின் குரலும் கலந்துகொண்டது; கணீ ரென்றன ஏனைய திலகங்களின் குரலும்.
“அது நடந்தபின் சில காலம் களமாடியே இங்கு வந்தேன். ஆனால் அந்த அநீதியை, அக்கிரமத்தை மறக்கக் முடியாது!”
“அதைத்தான் சொல்லடி!” உரிமைக்குரல்கள் மேலும் இடித்தன.
“அது அரசியற் களமல்ல. எம் சமுதாயக்களம். அந்நிய எதிரியிலும் கூடிய கொடுமை இங்கு தான்!”
“சொல் நீ”
“அங்கு எம் ஊரில் ஒரு கல்யாணம்!
சாதகம் பார்த்து, பெண்ணின் நிற வடிவு பார்த்து,
அந்த ஆண்மையற்ற மாப்பிளைக்கு வீடு, காசு இலட்சம், நகையாக பவுண் பல சேர்த்துக் கொடுத்து,
வேதம் ஒலிக்க, மேளம் முழங்க, இதற்குள் கொடுத்த நகையில் ஏதோ குறை என உள்ளே குழப்பம் எழ,
கூடப்பிறந்த தங்கை தன் கைக்காப்பைக் கழற்றிக் கொடுத்தாளாம்!”
“பின் என்ன நடந்தது!”
பெண்ணின் கழுத்தில் அவன் தாலி கட்டக் குனிந்த அந்த வேளையில்தான், நெஞ்சம் குமுறி நின்ற தங்கை கூவினாளாம்.
“அதை அக்கா, நீ அவன் கழுத்தில் கட்டு”
“அப்போ?” ஆவற்குரல் ஒன்று இவ்விதம் துடித்தது.
” மணப்பெண்ணும் தன்னுள் இதனையே எண்ணினாள்; ஆனால் செய்யவில்லை. குனிந்த பெண்ணாகவே இருந்தாள்!
ஆனால் மணப்பந்தல் கெம்பிற்று! பெண்வீட்டார் குனிந்த பதுமைகளாயினர். ஆண் வீட்டார் இரணியர் ஆகினர். தரகர் உட்பட!”
“பின் என்ன நடந்தது?”
கெஞ்சிக்கூத்தாடிய பெண்வீட்டாரை ஏசிவிட்டு, பெற்ற சீதனத்துடன் கட்டிய பெண்ணையும் இழுத்துச் சென்றானாம் மணமகன். தனது பெற்றோர் சுற்றத்துடன்!
இனி அவள் அந்த வீட்டுக்கு வேலையாள்; நிரந்தர அடிமை தான்.
“பிரலாபம் வேண்டாம், செய்ய வேண்டியதைச் சொல்!”
மாவீரரின் முழக்கம் இவை!
இவ்வேளை ஒரு தரகர் தவறுதலாக விட்ட காகிதத்துண்டு காற்றிலே பறந்து, அதிலிருந்த குறிப்பு
1. வெளிநாட்டு மாப்பிள்ளை. வடிவான பெண்ணாக இறுகக் வேணும். பதினைந்து லட்சம் கொடுத்தால் எடுக்கலாம்.
2. பெடியள் பலர் சண்டையிலை செத்ததாலை இங்க உள்ளவை பெருங் கிராக்கி எழுப்பினம். எண்ணாத சீதனம் கொடுத்தால்தான் மாப்பிள்ளை எடுக்கலாம். எண்டாலும் பார்ப்போம்………..
“துரோகிகள்! பேட்கள்!” என முழங்கியது அந்த புனித சூழல். “இதற்கு வழியென்ன?” என மேலும் ஒரு ஆர்த்தல் முழக்கம்.
அந்த புதிய வனிதையே பதில் சொன்னாள்.
“அன்று இதனை இடித்துக் கூவியதற்கே என்னை அக்காவின் மணப்பந்தர் ஒதுக்கியது. ஆனால்”
“அந்தத் தங்கை நீதானா?”
“ஆமாம். ஆனால் அது பெரிதல்ல. இனிச் செய்ய இருப்பதையே சொல்கிறேன்.”
“சொல்! சொல்!” என்றன அனைத்தும்.
“இதுபற்றி நெடுகப் பேசிவரும் பிரச்சாரர்களை இனித் தூணில் கட்டிவிட்டு….. செயல் வெளிவரட்டும்; தீவிர செயல்! தீயதைத் தகர்த்தெறியும் நடைமுறை!”
“அதற்கு?”
“ஒற்றைத் துவக்கும் கட்டுத் துவக்கும் போதாது, ‘சிங்கிள் சொட்’டும், ‘ஓட்டோ அடி’யும் போதாது! சீதனத் தகர்ப்பிற்கு இனி வேண்டுவது சக்கை லொறிதான்!”
“ஆம், சக்கை லொறிதான்!”
மாவீரர்களின் ஒருமித்த ஒலி இவ்வாறு எழுந்தது. எம் இதயத்திலும் இது கேட்கிறது அல்லவா?
ஆக்கம்:- நாக பத்மநாதன்
விடுதலைப் புலிகள் (1993) இதழிலிருந்து தேசக்காற்று.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”