நடப்பு நொடிக்கதை
சேவல் கூவியது.
‘நான் எழும்போது இந்தச் சேவல் எத்தனை பெரிய அன்போடு என்னை வாழ்த்துகிறது……’ என்று கதிரவன் பூரித்துப்போனான்.
மாலை வந்தது.
கதிரவன் மேற்குத்திசையின் மூலையில் கவிழ்ந்தான். சாயும்போது,
‘நான் விழுகிறேனே; என்னைத்தாங்க யாருமே வரமாட்டார்களா?’ என்று ஏங்கினான்.
சேவலை அவன் எதிர்பார்த்தான்.
வரவில்லை.
விழுந்துகொண்டே கதிரவன் சொன்னான்:
“எழும்போது தாங்க வருகிறவன் எல்லாம், விழும்போது தாங்க வருவதில்லை.”
நட்பு……….
கடலோரத்தில் நண்டு நடந்துகொண்டிருந்தது. மணலில் பதிந்த நண்டின் கால்தடத்தை அலை அழித்துக் கொண்டே இருந்தது.
நண்டுக்கு ஒன்றும் புரியவில்லை.
ஒரு நாள் நரி கடற்கரையோரம் நண்டின் கால்த்தடம் இருக்கிறதா என்று தேடி அலைந்தது.
வளைக்குள் இருந்து ஓரக்கண்ணால் எட்டிப்பார்த்த நண்டுக்கு அலை தன் கால் தடத்தை அழித்த காரணம் இப்போதுதான் தெளிவானது.
அலையின் நட்பை அடிமனத்தால் போற்றியது நண்டு.
தனக்குள்ளேயே அது சொல்லிக் கொண்டது.
‘முன்பே காப்பான் அன்பே நட்பு’
– உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன்.
(1993ம் ஆண்டு வரைந்தது………………)
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”