வான்கரும்புலிகள் ரூபன், சிரித்திரன் வீர நினைவுகளில்….
‘காற்றிலேறியே விண்ணையும் சாடுவோம்’ என வானிலும் எங்கள் வீரம் வரலாறு கண்ட வீரத்தின் அடையாளங்களாக வான்புலிகளில் முதல் வான்கரும்புலியாய் போனான் லெப்.கேணல்.சிரித்திரன்.
சிரித்திரன் பெயரைப் போலவே சிரித்த முகம். வீரத்தை விழிகளில் சுமந்த விசித்திரம் அவன். தமிழீழ வான்புலிகள் சரித்திரத்தில் சிரித்திரனும் ஒரு விடி நட்சத்திரம். விடிவெள்ளிகளின் ஒளிக்கதிர்கள் பார்வையில் சிறுபுள்ளயே. எனினும் அதன் வீரியம் என்பது உலகைவிடவும் ஒளிபொருந்தியது. அப்படியே எங்கள் சிரித்தினும் வீரத்தின் விவேகத்தின் ஆற்றலின் ஆதாரம்.விடுதலையின்றேல் வாழ்வில்லை போராட்டமே வாழ்வென்று ஆகியிருந்த காலத்தின் கட்டளையை ஏற்றுச் சிரித்திரனும் புலி வீரனாகியது 1996ம் ஆண்டு. யாழ்மண்ணிலிருந்து வேரறுக்கப்பட்டு வீழ்ந்த வீரம் வன்னியில் புதுப்பிக்கப்பட்ட தருணமது.
விழவிழ எழும் வீர மரபைக் கொண்ட வீரத்தின் வேர்களின் வழியில் தன்னையும் இணைத்த சிரித்திரன் விசுவமடுவில் அமைந்திருந்த மாறன் 1 பயிற்சி முகாமில் தனது அடிப்படைப் பயிற்சியைப் பெற்றுக் கொண்டான்.
முதல் கள அனுபவம் கிளிநொச்சி ஊடறுப்புச் சமராகும். சமர் முனையில் சிரித்திரன் சிறந்த வீரனாய் தனது திறனை வெளிக்காட்டிய போராளி. போர்க்களத்தையே அதிகம் விரும்பிய தாய்மண் விரைவில் வெல்லப்பட வேண்டுமென்பதற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த காரியப்புலியவன்.
முதல் கள அனுபவம் முடிந்து வந்த வீரன் 1998 இல் விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியில் பயிற்சிக்குத் தெரிவாகினான். சிறப்பாய் பயிற்சிகள் முடித்து விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி’ வீரனாகினான். கவசங்களை உடைத்து எதிரியை நிலத்திலிருந்து விரட்டி விடியலைத் தேடி விழித்திருந்த தென்றல் அவன்.
RPG என்ற ஆயுதத்தை சிறிலங்காப் படையினருக்கு அறிமுகம் செய்தவர்கள் புலிகள். ஏனெனில் புலிகள் இவ்வாயுதத்தைப் பாவிக்கத் தொடங்கிய பின்னரேயே சிறிலங்கா படை RPGஐ பாவிக்கத் தொடங்கியது.
யாழ் மண் எதிரியிடம் பறிபோன பின்னர் வன்னியில் 1996 நடுப்பகுதியில் RPGகொமாண்டோப் பயிற்சிகள் நடைபெற்று RPG அணியொன்று உருவாக்கப்பட்டது. முல்லைத்தீவு முகாம் மீதான தாக்குதல் நடந்து கொண்டிருந்த காலத்தில் அந்த RPG அணியானது கிளிநொச்சியைக் கைப்பற்ற முனைந்த சத்ஜெய நடவடிக்கையில் இராணுவத்தினருக்கு எதிராக களமிறக்கப்பட்டது.
சிறு அணியாக உருவாக்கம் பெற்றிருந்த RPG அணியானது அப்போது சிறப்பான பெயர் எதுவும் சூட்டப்பட்டிருக்காமல் ஒரு படையணியின் சிறு அணியாகவே செயற்பட்டிருந்தது.
சத்ஜெய சமரில் எதிரி அதிகம் டாங்கிகளைப் பயன்படுத்திக் கொண்டே படை முன்னேற்றங்களை மேற்கொண்டான். அந்தக் காலத்தில் எதிரியின் டாங்கிகளை எதிர்பார்த்த அளவு அழித்தொழிக்கும் வலுவை RPG படையணி கொண்டிருக்கவில்லை. அப்போது தான் RPG கொமாண்டோ அணியை புதிதாய் வடிவமைக்கும் நோக்கம் தலைவர் பிரபாகரன் அவர்களால் வித்திடப்பட்டது. எப்போதுமே எதிர்காலத்தேவைகளை முற்கூட்டியே உணர்ந்து செயற்படும் தலைவரின் நேரடியான கவனிப்பில் உருவாகியதே RPG கொமாண்டோ அணி. (விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி)
இம்ரான் பாண்டியன் படையணியின் கீழ் ‘கவசத்தை உடைப்போம் நாட்டினை மீட்போம்’ எனும் சுலோக வாக்கியங்களைக் கொண்டு ‚’விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி’ உருவாக்கம் பெற்றது. 1997 தொடக்கத்தில் முதலாவது ‘விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி’ ஆரம்பிக்கப்பட்டு பயிற்சிகள் நடைபெற்று ‚’விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியின் வரலாறு ஆரம்பமாகியது.
இப்படையணியின் சீருடை நெடுக்கு வரிச்சீருடையாகும். ஏனைய படையணிகளிலிருந்து இப்படையணியானது வித்தியாசமாகவே அறிமுகமானது. இப்படையணியின் முதல் களம் ஜெயசிக்குறு களமாகும். ஜெயசிக்குறு ஆரம்பித்து முடிவதற்கிடையில் விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி வீரர்கள் அதிகளவில் வீரச்சாவடைந்தார்கள். எனினும் புதிய புதிய அணிகள் வேகவேகமாகப் பயிற்சிகளை முடித்துக் களத்தில் நின்றார்கள். ஜெயசிக்குறு வெற்றியில் இப்படையணியின் பங்கும் காத்திரமானது.
கிளிநொச்சிச் சமரில் வீரச்சாவடைந்த மேஜர் நவச்சந்திரன், ஓயாத அலைகள் மூன்றில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் மணிவண்ணன், சமாதான காலத்தில் சுகவீனமடைந்து சாவடைந்த லெப்.கேணல் சுட்டா போன்றோர் விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியின் தளபதிகளாக இருந்தார்கள்.
வன்னியின் மீட்பில் கவசப்படையணியின் பங்கு உணரப்பட்டு தலைவரால் உருவாக்கப்பட்ட இப்படையணியின் பொறுப்பாளராக நியமனம் பெற்று இறுதிவரை ‚’விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியின் வேராக விழுதாக வாழ்ந்து வீரச்சாவடைந்தார் தளபதி லெப்.கேணல்.அக்பர் அவர்கள். ‚’விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியின் வரலாற்றில் அக்பர் அவர்களைத் தவிர்த்து வரலாற்றை எழுத முடியாத அளவு அக்பர் அவர்களின் அயராத உழைப்பும் அர்ப்பணிப்பும் ஆணிவேராகியதை என்றென்றும் வரலாறு சுமந்து கொண்டே செல்லும்.
இவ்வாறு பல தளபதிகள் போராளிகள் மாவீரர்களின் தியாகத்தால் உருவாகிய ‚’விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியில் சிரித்திரனும் இணைந்து கொண்டதும் கவசங்களை உடைத்ததும் இன்னொரு வரலாற்றின் பரிணாமம் தான்.
யுத்தம் சமாதானம் இரண்டிற்கும் இடைப்பட்ட காலமொன்றை சர்வதேசத்தலையீடு உருவாக்கிய காலம். 2001 சிங்கள ஆளஊடுருவும் படையணி ஆதிக்கம் வன்னி நிலத்தை அச்சுறுத்திக் கொண்டிருந்தது. அது RPG கொமாண்டோக்களின் தேவைகளும் அவசியமும் குறைந்த காலம்.
சிங்கள ஆள ஊடுருவும் படையணியின் ஆதிக்கத்தை எதிர்க்க வேண்டிய சவால் நிறைந்த நேரமது. RPGகொமாண்டோவில் இருந்த போராளிகள் தரைக்கரும்புலியாவதற்கு தங்களை இணைக்குமாறு தலைவருக்கு கடிதம் எழுதிவிட்டுக் காத்திருந்தார்கள். அவர்களில் சிரித்திரனும் தரைக்கரும்புலியாக தலைவருக்கு கடிதம் எழுதிவிட்டுக் காத்திருந்தான்.
கரும்புலிகளுக்கு நிகரான ஆள ஊடுருவும் படையணியின் உருவாக்கத்தை தலைவர் தனது நேரடி நெறிப்படுத்தலில் ஆரம்பிப்பதற்கான தருணமும் வந்தது. அப்போது திடீரென ஒருநாள் கரும்புலிகளுக்காக கடிதம் எழுதிய போராளிகளைச் சந்தித்தார். கரும்புலியாக விரும்பிய அனைவரையும் புதிதாக உருவாக்கம் பெறும் ஆளு ஊடுருவும் அணிக்கான பயிற்சிக்கு தயாராகுமாறு அழைத்தார்.
தலைவன் அருகாமையில் தலைவனின் கண்காணிப்பின் கீழ் அமைந்த அந்த சிறப்பு அணியில் எங்கள் சிரித்திரனும் இணைந்து கொண்டான். குறித்த நேரத்தில் செய்து முடிக்கப்பட்ட வேண்டிய தெரிவுப்பயிற்சிகளில் சிரித்தின் தனது திறனை வெளிப்படுத்தி தெரிவாகி சிறப்புப் பயிற்சியினை முடித்திருந்தான்.
இக்காலத்தில் திறமையாகச் செயற்பட்ட சிரித்திரனின் திறமையை அவதானித்த ரட்ணம் மாஸ்ர் தலைவரின் பாதுகாப்புப் பணியில் சிரித்திரனை இணைத்துக் கொண்டார். அவனது ஆற்றலும் எடுத்த காரியத்தை சாதிக்கும் வல்லமையும் தலைவரின் பிரத்தியேக உதவியாளராகத் தெரிவு செய்யப்பட்டு தலைவரின் நன் மதிப்பையும் அன்பையும் பெற்றான் எங்கள் சிரித்திரன்.
சிரித்திரன் என்றால் அவனை யாரும் மறந்துவிடமாட்டார்கள் அந்தளவு எல்லோருக்கும் பிடித்த போராளி. அவனது சிரித்த முகம் , அவனில் சிறப்பாயமைந்த பண்புகள் , எல்லோரையும் எளிதில் கவர்ந்துவிடும் பன்முக ஆற்றலுமே எல்லோரிடத்திலும் அவனை அடையாளப்படுத்தியது.
சிறந்த சண்டைக்காரன் மிகப்பெரும் ஆற்றலையெல்லாம் அள்ளி வைத்திருந்த பெருமைக்குரியவன் ஆனாலும் தனது கரும்புலிக் கனவை கைவிடாமல் தலைவரின் பிரத்தியேக செயலாளர் பணியின் இடையிலும் தனது கரும்புலியாகும் விருபத்தை தெரிவித்துக் கொண்டேயிருந்தான். குறைந்த இழப்பில் பெரும் இழப்பை எதிரிக்கு வழங்கி பெரிய வெற்றிகளைக் குவிக்கும் சிந்தனையே அவனது செயல்கள் ஒவ்வொன்றின் பின்னாலும் இருந்தது.
தனது தரைக்கரும்புலியாகும் எண்ணத்தை தலைவருக்கு எழுதிவிட்டு கரும்புலியாகும் கனவோடு தான் தனது பணிகளைச் செய்து கொண்டிருந்தான். வெளியில் தென்றலாய் சிரிப்பவன் உள்ளுக்குள்ளே எரிமலையை வளர்த்துக் கொண்டேயிருந்தான்.இதயத்தில் ஈரமும் விழிகளில் நெருப்பையும் ஒன்றாய் கொண்ட தேசப்புயல் அவன்.
சிரித்திரனின் இனிமையான சுபாவம் , அன்பு , ஆழுமை , ஆற்றலை அவதானித்த தலைவர் சிரித்திரனையும் மேலும் சில போராளிகளையும் வெளிநாட்டுக் கட்டமைப்பிற்குள் பணிக்கு அனுப்புவதற்கு முடிவெடுத்தார். காரணம் சிரித்திரனின் வல்லமையும் ஆற்றலும் தமிழீழ தேசத்திற்கு மேலும் பயனையும் பன்முக ஆற்றலையும் கொண்டவர்களை உருவாக்கும் திறiனையுடையது. அத்தகைய திறமையாக தலைவரின் எண்ணத்திற்கு ஏற்ப சிரித்திரன் தன்னை ஆற்றலாளன் ஆக்கியிருந்தான். தலைவர் அதிகளவில் அவனிடமிருந்து எதிர்பார்த்தார். ஏனெனில் அவனது ஆற்றல் அந்தளவு பெறுமதியானவை.
ஆனால் தனது பணியை தாயகத்தை விட்டுப் புலம் பெயர்ந்து செய்ய மறுத்து மண்ணில் நிற்பதையே விரும்பினான். தனது முடிவில் தளம்பாமல் ஒரே முடிவாக தாயகத்தில் இருந்து பணி செய்யப்போகிறேன் என்றே வெளிநாட்டுப் பயணத்தை மறுத்திருந்தான். கடைசியில் அவனது விருப்பமே நிறைவேறியது. அவன் வெளிநாடு சென்றிருந்தால் ஆயிரம் சிரித்திரன்களை அவனால் உருவாக்கியிருக்க முடியும். ஆனால் தான் நேசித்த தலைவனை தளபதிகளை போராளிகளைப் பிரிய விரும்பாமல் அவர்களுடனேயே வாழ விரும்பிய இனியவன்.
இக்காலத்தில் தான் சிரித்திரனின் ஆற்றல் அவதானிக்கப்பட்டு வான்புலிகள் அணியில் இணைவதற்கான அழைப்பு வந்தது. வான்புலிகளின் தேவையை உணர்ந்த சிரித்திரன் மகிழ்ச்சியோடு வான்புலிகள் பயிற்சிக்குச் சென்றான். பின்னால் உலகையே வியக்க வைக்கும் வான்கரும்புலியாகப் போவானென்று யாருக்கும் தெரியாது. ஆனால் அவன் கரும்புலியாகவே தன்னை வளர்த்துக் கொண்டான்.
வான்புலிகளின் வரலாறு 1985 – 1986களில் உருவாக்கம் பெற்று விமானம் கட்டும் பணிகளும் ஆரம்பித்த காலமது. மெல்ல மெல்ல கால ஓட்டத்தோடு புலிகளின் வான்புலிகள் அணியானது உயிர் பெற்று உருவாக்கப்பட்டது. முதல் முதலாக 1998 மாவீரர் நாள் மாவீரர் உரையில் தலைவர் பிரபாகரன் அவர்களால் வான்புலிகள் படையணி தொடர்பான அறிவிப்பு அறிவிக்கப்பட்டது. 2000ம் ஆண்டு வான்புலிகள் ஆண்டாக விடுதலைப்புலிகளால் பிரகடனப்படுத்தப்பட்டு வான்புலிகள் வரலாறு எழுதப்படத் தொடங்கியது.
வான்புலிகளின் வேராகவும் அந்தப் படையணியின் உருவாக்கத்திலும் முக்கிய பங்காக இருந்து இயங்கியவர் தளபதி கேணல் சங்கரண்ணா அவர்கள். சென்னையில் பொறியியல் கல்லூரியில் ஏறோனோட்டிக்ஸ் பிரிவில் BA படித்து முடித்த தளபதி சங்கரண்ணா அவர்கள் கனடா நாட்டிற்குச் சென்று கனடா விமான நிறுவனத்தில் பொறியியலாளராகப் பணி புரிந்தார்.
வெளிநாட்டு வாழ்வை விட்டு தாயகம் திரும்பியவர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைந்து புலியாகிப் பல போராளிகளை வளர்த்தெடுத்ததோடு நின்று விடாமல் வான்புலிகளின் தோற்றமும் அவராகினார். வான்புலிகள் உருவாக்கத்தில் உறக்கம் மறந்து இறுதிவரை உழைத்த வீரன் தளபதி சங்கரண்ணா. 2001 செப்ரெம்பர் தியாகி திலீபனின் நினைவுநாளில் சங்கரென்ற இமயம் இலங்கையரசின் ஆழ ஊடுருவும் படையணியால் நடாத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவடைந்தார். எனினும் வானுயர்ந்த புலிவீரம் வான்புலிகள் வளர்சியில் வெகவேகமாக முன்னேற்றமடைந்து வளர்ந்தது.
விமானப்பயிற்சியை முடிப்பதற்கு சாதாரணமாக 2வருடங்கள் வரை செல்லும். ஆனால் சிரித்திரனும் அவனுடனான போராளிகளும் இரவு பகல் ஓய்வு ஒளிவின்றி இயங்கி 3மாதத்தில் பயிற்சியை முடித்துக் கொண்டார்கள். அதுவும் வன்னி நிலத்திலேயே வான்புலிகள் பயிற்சியினையும் பயின்று பயிற்சியை நிறைவு செய்தார்கள்.
பின்னாளில் வான்புலிகளின் வரலாறும் பயிற்சிகள் எங்கே பெற்றிருக்கலாம் என்ற இராணுவ ஆய்வாளர்களின் புனைவுகளும் கற்பனைகளும் ஊடகங்களை நிறைத்தது. எனினும் எவராலும் கண்டறிய முடியாது வான்புலிகளின் வீரம் நிமிர்ந்தது தான் உண்மை வரலாறு.
உலகில் எங்குமே நிகழ்ந்திராத மாற்றத்தை புலிகளின் வான்புலி வீரர்கள் நிகழ்த்திக்காட்டினர். வானோடிக்கான பயிற்சியில் சிரித்திரனின் ஆற்றலை நேரிலிருந்து பார்த்த சாட்சியங்கள் இன்றும் அவனை அதிசயிக்கும் அதிசயமாய் அவன் நிமிர்ந்து நிற்கிறான்.
சிங்கள தேசத்தினால் வன்னி வான்பரப்பில் பறக்க அனுப்பப்படும் ஆளில்லாத வேவு விமானங்களின் தொல்லைகள் அதிகரித்திருந்த காலமது. இவ் ஆளில்லா விமானங்களை சிங்கள தேசம் மிகப்பெரும் செலவில் கொள்வனவு செய்திருந்தது. இவ் ஆளில்லா வேவு விமானத்தை அழிக்க சிரித்திரனும் சக வான்புலி ஒருவரும் மேற்கொண்ட தாக்குதல் பற்றி சிங்கள தேசம் கூட செய்தியை வெளியில் விடாமல் இயந்திரக்கோளாறென்று கதையை முடித்த சம்பவம் ஒன்று வன்னி வான்பரப்பில் நிகழ்ந்திருந்தது.
தனது நவீன தொழில்நுட்பத்தினை எவராலும் அழிக்க முடியாதென்று இறுமாந்திருந்த சிங்கள தேசத்திற்கு எங்களால் எதுவும் முடியும் என்று செய்து நிரூபித்துக்காட்டிய சம்பவம் :-
அன்றொருநாள் வன்னி வானில் திமிரோடு பறந்த ஆளில்லா வேவுவிமானத்தை சிரித்திரனும் அவனது தோழனும் சுட்டு வீழ்த்தியிருந்தார்கள். அந்த ஆளில்லா விமானத்தை புலிகளின் விமானத்திலிருந்தே சுட்டு வீழ்த்தியிருந்தார்கள் என்பதனை இன்று வரை சிங்கள தேசம் கூட அறிந்திருக்காத உண்மை.
இத்தாக்குதலானது மிகவும் ஆபத்தும் சவாலும் நிறைந்தது. புலிகளின் விமானப்பறப்பு அடையாளம் காணப்பட்டால் அவர்களின் தரையிறக்கும் இடம் அடையாளம் காணப்படும். அடையாளம் காணப்படும் போது கிபிர் விமானங்களின் தாக்குதலுக்கு உள்ளாகும் நிலமையும் உருவாகும்.
வான்புலிகளின் விமானமும் பாதுகாப்பாக தரையிறங்க வேண்டும் அதேநேரம் தரையிறங்கும் இடமானது எதிரி அறியாமல் பாதுகாக்கப்பட வேண்;டும். எல்லா பாதுகாப்பையும் கருத்தில் கொண்டே தாக்குதலை நிகழ்த்த வேண்டும்.
ஆளில்லா வேவு விமானங்கள் வீதியில் வேகமாக செல்கின்ற இரு சக்கர ஊர்தியின் இலக்கத்தைக் கூட துல்லியமாகக் கணிக்கக் கூடிய தொழில்நுட்பத் திறனைக் கொண்டது. இத்தனை சிறப்புகளைக் கொண்ட ஆளில்லா வேவு விமானம் வன்னியின் வான்பரப்பில் பறந்து கொண்டிருந்தது.
ஒரு விமானம் பறத்தலில் ஈடுபடும் பகுதியில் அந்த விமானத்தின் உயரத்திற்கு மேல் பறந்து தாக்குவது என்பது இலகுவானது அல்ல. ஆனால் வான்புலிகளால் எங்கும் செல்லவும் வெல்லவும் முடியும் என்பதனை சிரித்திரனும் அவனது தோழனும் நிரூபித்துக் காட்டினர்.
எதிரி விமானம் பறந்து கொண்டிருந்த சமநேரம் சிரித்திரனும் , அவனது தோழனும் தங்கள் விமானத்தை எதிரி விமானத்திற்கு மேலாக உயரப்பறந்து மேலிருந்து ஆளில்லா வேவுவிமானத்தைச் சுட்டுவீழ்த்தித் தரையிறங்கினார்கள்.
சிங்கள தேசம் இயந்திரக்கோளாற்றினால் வீழ்ந்ததாகச் சொல்லி தனது இழப்பை வெளியில் தெரியாமல் மறைத்துக் கொண்டது. இந்த மர்மம் பற்றி ஆய்வுகளும் அறிக்கைகளும் பல வடிவங்களின் அப்போது ஆராயப்பட்டது வேறுகதை.
வார்த்தைகளை விடவும் வரலாற்றைப் படைத்தவர்கள் புலிகள். அவ்வரலாற்றின் சுவடுகளில் சத்தமின்றிச் சாதித்துவிட்டு தரையிறங்கிய சிரித்திரனும் அவன்கூட அத்தாக்குதலில் இணைந்திருந்த தோழனும் அன்றைய ஆய்வுகளின் கதாநாயகர்கள். ஆனால் அந்த வேர்கள் வெளியில் வராமல் வெற்றியைத் தந்துவிட்டு அமைதியானார்கள்.
1998 மாவீரர் நாளன்று வான்புலிகள் பயிற்சியை முடித்த வான்புலி மறவர்கள் விமானத்திலிருந்து முதல் முதலாய் முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் பூத்தூவி தங்கள் முதல் பயணத்தை ஆரம்பித்திருந்தார்கள். அன்றைய நாள் தலைவரினால் அதிகாரபூர்வமாக வான்புலிகள் படையணியின் உருவாக்கம் பற்றிய அறிவிப்பு நிகழ்ந்தது.
வான்புலிகள் உருவாக்கப்பட்டு முதல் முதலாக எரித்திரியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட 2 விமானங்கள் முதல் முதலாக வான்படையை உருவாக்கிய எங்கள் தலைவனும் தளபதிகளும் நேரில் பார்வையிட்டு வான் புலிவீரத்தின் அடையாள முகங்களை வாழ்த்தி வரவேற்றார்கள். அவ்விமானங்கள் பின்னர் வரிநிறம் பூசப்பட்டு தாக்குதலுக்கு தயார் செய்யப்பட்டது.
சிறிய ரக விமானம் நெடுந்தூரம் சென்று வருவதற்குப் போதியளவு எரிபொருள் போததது. ஆனால் தாக்குதலுக்குச் சென்று திரும்புவதற்குத் போதியளவு எரிபொருளை மீதப்படுத்த அவர்கள் மேற்கொண்ட உத்திகளை உலகம் அறிந்ததில்லை.
விமானத்தை வழங்கிய நிறுவனத்தால் கூட நெடுந்தூரத்துக்கான பயணத்தினைச் செய்ய முடியாதெனத் தெரிவிக்கப்பட்டும் வான்புலிகள் எரிபொருளை சேமிக்கும் வகையில் விமானத்தை மேலேற்றிப் பறந்து வெற்றியுடன் தாக்குதல்களை நடாத்திவிட்டுத் திரும்பும் வீரத்தையும் வித்தியாசமான உத்தியையும் எவரும் அறிந்திருக்கவே இல்லை. வான்புலிகளின் தோற்றமும் தாக்குதல் வியூகங்கள் வெற்றிகள் உலகிற்குப் புரியாத புதிர்களாகவே அமைந்தது.
தமிழர் நிலத்தைத் தேடி வந்து தாக்கி உயிர்களைப் பலியெடுத்துக் கொண்டிருந்த அரசின் தலைமை மையத்தினுள் „’காற்றிலேறியே விண்ணையும் சாடுவோம்’ என விடுதலைப்புலிகளின் வான்புலிகள் 26.03.2007அன்று கட்டுநாயக்கா இராணுவ விமானப்படைத்தளத்தின் மீது தாக்குதலை நடாத்தி வான்புலிகளின் இருப்பை உலகிற்கும் அதேவேளை இலங்கையரசிற்கும் அறிவித்தனர்.
இதுவே முதல் முதல் புலிகள் உரிமையேற்ற முதல் வான்தாக்குதல் ஆகும். அந்தத் தாக்குதலில் சிரித்திரனும் விண்ணிலேறி வீரனாய் நீலப்புலியுடையில் வானோடியாய் போனான். எங்கள் நிலத்தில் வந்து எங்கள் குடிமனைகளையும் குழந்தைகளையும் அழித்தவர்களின் வானில் நின்று தாக்குதல் மேற்கொண்டு திரும்பிய வான்புலிகளில் எங்கள் சிரித்திரனும் ஒருவன்.
22.10.2007 அன்று அனுராதபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட எல்லாளன் நடவடிக்கையில் வான்புலிகளின் பங்கும் அளப்பரியது. திங்கள் அதிகாலை அனுராதபுரத்தினுள் ஊடுருவிய 21 சிறப்பு ஆண் பெண் கரும்புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் அனுராதபுரம் வான்படைத்தளம் புலிகளின் கட்டுப்பாட்டினுள் வீழ்ந்தது. புலிகளின் வான்படையினர் துணையாக அனுராதபுர வான்படை மையத்தினுள் குண்டுகளை வீசி சேதத்தை விளைவித்தனர்.
திங்கள் பகல் 11மணிவரையும் கரும்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அனுராதபுரத்தளத்திற்கு ஆதரவு வழங்க வவுனியாவிலிருந்து அனுப்பப்பட்ட பெல் 212 உலங்குவானூர்தி மிகிந்தலைப்பகுதியில் வைத்து விமான எதிர்ப்பு அணியினரின் தாக்குதலுக்கு உள்ளாகி இலங்கையரச வானோடிகளும் உலங்குவானூர்தியும் அழிந்து போனது. இலங்கையரசின் வான்படைபலமானது பெரும் வீழ்ச்சி கண்டது இப்பெரும் அழிவில்தான்.
22.10.2007 அன்று 21 விசேட கரும்புலிகள் அணிக்கு ஆதரவாக தாக்குதலில் ஈடுபட்டு எல்லாளன் வாழ்ந்த மண்ணில் புலிவீரத்தை அறியச்செய்த மாவீரர்களின் தியாகத்தில் உலகமே திகைத்தது. அந்த வரலாற்று வெற்றியில் சிரித்திரனும் பங்கேற்றுத் தளம் திரும்பியிருந்தான்.
வான்புலிகள் ஐரோப்பிய நாடுகளில் பயிற்சி பெற்றிருக்கலாம் என தனது இராணுவ ஆய்வில் இராணுவ ஆய்வாளரெனப்படும் இக்பால் அத்தாஸ் கட்டுரையெழுதியிருந்தார். அதேபோல மேலும் சில ஊடகங்கள் மலேசியாவில் பயிற்சிகள் பெற்றிருக்கலாம் எனவும் ஆளாளுக்கு ஆய்வுகள் செய்து கொண்டிருந்தார்கள்.
எல்லா ஆய்வுகளையும் விஞ்(மி)சிய வான்புலிவீரத்தை இதுவரையில் எந்த ஆய்வுகளும் ஆராட்சிகளும் அதன் அடி முடியைக் கண்டறியவில்லை. தென்னிலங்கையை கலங்கடித்து தென்னிலங்கையில் மட்டும் 7 தடவைகள் சென்று தாக்குதலை நடாத்திவிட்டுத் திரும்பினர் வான்புலிகள்.
அனைத்து நவீன வளங்களையும் அறிகருவிகைளயும் பொருத்தி வானிலேறும் வான்புலிக்கலங்களைத் தேடிக்கொண்டிருந்தது சிங்கள தேசத்தின் தொழில்நுட்பம். அவற்றையெல்லாம் தாண்டி கட்டுநாயக்கா , அனுராதபுரம் ,கொலன்னாவை என வான்புலிகளின் வீரம் உலகை வென்றிருந்தது.
ஓரிடத்திலிருந்து மேலெழும் விமானம் திரும்பி வருகிற போது போதிய எரிபொருளைக் கொண்டிராது. எனினும் பிறிதொரு இடத்தில் தரையிறங்கி பாதுகாப்பாக வான்கலங்களையும் கொண்டு வந்து சேர்க்கும் திறன் வான்புலிகளுக்கானது. சாவல்களைத் துணிச்சலோடு ஏற்று சாதிக்கவும் , முடியாதென்ற எல்லாவற்றையுமே மனபலத்தால் செய்து முடித்துக் காட்டிய புலிவீரத்தின் வரலாற்றில் வான்புலிகள் வீரமும் வித்தியாசமானது.
வவுனியா கூட்டுப்படைத்தளம் மீதான வான்புலிகளின் தீரமிகு தாக்குதலை நடாத்தியதற்காக „நீலப்புலி மறவர்’ விருதினை வான்புலிவீரர்களுக்கு வழங்கி மதிப்பளித்துக் கௌரவித்தார் தேசியத்தலைவர்.
அதேபோல களனிதிச அனல்மின் நிலையத்தின் மீதான தாக்குதல் உட்பட 5தடைவைக்கு மேல் வான்தாக்குதல்களை நடாத்தி சிங்களத்திற்கு பெரும் பொருளாதார அழிவையும் இழப்பையும் ஏற்படுத்திய வான்புலிகளுக்கு ‚’நீலப்புலி’ விருதினையும் , இத்தாக்குதல்களுக்கு துணையாக செயற்பட்டு தாக்குதல் நடாத்திய துணை வானோடிகளுக்கு ‚’மறவர்’ விருதினையும் வழங்கினார் தலைவர். இப்படித்தான் வான்புலிகளின் வரலாறு எழுதப்பட்டுக் கொண்டிருந்தது. தரை கடல் பலத்துக்கு நிகராக எங்கள் தலைவன் படைத்த வான்புலிகளின் சாதனைகளை வெற்றிகளை என்றென்றும் பெருமையுடன் நினைவு கொள்கிறோம்.
ஈழத்தமிழர் வரலாற்றில் கண்ணீரையும் துயரையும் அவலத்தையும் தந்த மறக்க முடியாத ஆண்டு 2009. தமிழனத்தின் அரசியல் வெளியில் பெரும் வெற்றிடத்தையும் இட்டு நிரப்ப முடியாத இழப்புகளையும் தந்த 2009ம் ஆண்டில் வீரமும் எங்கள் விடுதலையின் அடையாளங்களும் ஒன்றாய் அழிக்கப்பட்டு ஏதிலிகளாக நாங்கள் ஆகிப்போன விதியை எழுதியதும் இதே வருடம் தான்.
அவலங்கள் நிறைந்த 2009இல் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மெல்ல மெல்ல எதிரியின் கையில் இழக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஒரு விடுதலையமைப்பிற்கு எதிராக உலகம் கூட்டுச்சேர்ந்து 30ஆண்டுகால விடுதலைப் பயிரை அதன் வீரியத்தை வீரத்தை பலியெடுத்துக் கொண்டிருந்தது.
எதிரியின் கொலைவலயத்தினுள் வன்னி நிலம் முழுமையாகி இழக்கப்பட்டு எஞ்சிய முல்லைத்தீவும் இதோ அதோ என்ற நிலமையில் இருந்த போது மாற்று வழி ஏதோவொன்றைத் திறக்க வேண்டுமென்று திட்டமிடலில் இறங்கியது வான்புலிகள் அணி.
புதுக்குடியிருப்பு எதிரியிடம் பறிபோனால் மீள்வதற்கான வழிகள் யாவும் போய்விடும் என்பதனை உணர்ந்த வான்புலிகள் கேணல் ரூபன், லெப்.கேணல்.சிரித்திரன் இருவரும் ஏதாவது செய்ய வேண்டுமென்று முன்வந்து வான்கரும்புலிகளாகினார்கள்.
கேணல் ரூபன் தனது கடைசிப் பயணத்திற்கு தயாராகிய நேரம் தான்நேசித்த மக்களுக்கு தனது இறுதி மடலை எழுதிவிட்டு தோழன் சிரித்திரனோடு புறப்பட ஆயத்தமானான். 2002களிலிருந்து ஒருநாள் வானேறி பகைவன் பலத்தையழிப்பேனென்று சொல்லிக் கொண்டிருந்த ரூபன் கனவும் அன்று கைகூடும் நாளாக….!
விமானத்தை வானேற்றக்கூட பொருத்தமான வான்தளமோ வசதியோ எதுவுமில்லாத சுற்றிவர எதிரியின் கொலைவளையத்தினுள் இருந்து கொலைஞர்களின் கோட்டையில் பேரிடியை இறக்கும் கனவோடு நந்திக்கடல் வெட்டையிலிருந்து புறப்பட்டார்கள் சிரித்தின்,ரூபன். 3லட்சத்துக்கும் மேலான மக்கள் , போராளிகள் சாட்சியாக கேணல் ரூபன், லெப்.கேணல். சிரித்திரன் வானேறினார்கள்.
அந்த நேரத்து மனவுணர்வுகளையும் அவர்களது தூய்மையான தேசத்தின் மீதான அன்பையும் விடுதலைக் கனவையும் இன்றுவரை உலகம் புரிந்ததில்லை. அவர்கள் புரியாத புதிர்களாகவே என்றும்….! ஆனால் எங்களால் புரிந்து கொள்ளப்பட்ட புனிதங்களாக நெஞ்சம் முழுதும் அவர்கள் நினைவுகள்…..!
கொழும்பு நகரம் வான்புலிகள் வரவில் விழித்துக் கொண்டது. சிங்களத்தின் வான்படைத் தலைமையகம் மற்றும் கட்டுநாயக்கா வானூர்த்தித் தளத்தை அழிக்கும் கனவோடு ரூபன், சிரித்திரன் எதிரியின் மையத்தை நெருங்கியிருந்தனர்.
கொழும்பு மாநகரம் பயத்தில் உறைந்தது. வெளிச்சம் நிறைந்த தெருக்கள் இருளில் நிறைந்தது. சிரித்திரன் , ரூபன் வரவில் சிங்களம் திகைத்தது. மரண வாசனையைக் கொழும்பு உணர்ந்தது. சாவின் பயத்தைக் சிங்கள தேசம் நுகர்ந்தது. தமிழனித்தின் வரலாற்றை அதன் வீரத்தை 30ஆண்டு விடுதலைப் போராட்டத்தை அழித்துவிடும் முனைப்போடு ஆயிரக்கணக்கில் வன்னியைத் தின்று கொண்டிருந்த படைகளின் நெஞ்சிலும் ரூபன், சிரித்திரன் பூகம்பச்சுழியாய் பயமுறுத்திக் கொண்டிருக்க வான்புலிவீரர்கள் இருவரும் வானிலே வரலாறு படைத்திட சிங்கள வான்பரப்பில்….!
வெற்றிச் செய்திக்காகக் காத்திருந்தது வன்னிமண். வான்கரும்புலிகள் இருவரும் எதிரியின் இலக்கை மிகவும் அண்மித்திருந்தார்கள். இலக்கை எட்டும் தொலைவில் புலிகளின் வானுர்தி சிங்களதேசத்து வானில்….! சிரித்திரன், ரூபன் கனவு நனவாகும் கணங்கள் இலக்கு மிக அண்மையாகியிருந்தது.
எல்லாம் சரியாக அமைந்து இறுதிக்கட்டத்தில் தாயகக்கனவோடு தமிழரின் சேனையின் வீரத்தைச் சுமந்து புறப்பட்ட வான்கலம் எதிரியின் வானெதிர்ப்பு ஆயுதங்களால் அழிக்கப்பட்டு எங்கள் ரூபனும், சிரித்திரனும் தாயகத்திற்கான பயணத்தில் தங்கள் உயிர்களைத் தந்து எதிரி தேசத்தில் உயிரை விதைத்து காற்றிலேறி விண்ணையும் சாடும் வீரத்தை எழுதிவிட்டு அமைதியாகிப் போனார்கள்.
அவர்களது தாக்குதல் நினைத்தபடி வெற்றியில்லாது போனாலும் சிங்கள தேசத்தை சேதப்படுத்தி அச்சமூட்டி எங்கள் வீரத்தை அடையாளப்படுத்திவிட்டு இருவரின் மூச்சும் சிங்கள தேசத்தில் நிறைந்தது.
தலைவனின் நிழலில் வளர்ந்து வென்றுவரப்போன சிரித்திரனையும் ரூபனையும் எங்கள் தேசம் இழந்தது. ஒருகணம் சுவாசத்துடிப்பெல்லாம் நின்றுவிட்டாற்போலவே அவர்களது தியாகம் அவர்களை நேசித்த எல்லோரின் நெஞ்சிலும் துயரிடி.
வானில் பறந்தவர்கள் வானிலே தங்கள் வீரத்தையெழுதிய விலாசம் மறந்த விடிவெள்ளிகள். தங்களின் தாக்குதலில் போர்க்கள நிலமையில் மாற்றம் வருமென்று நம்பிப்போன இரு வீரர்களின் நம்பிக்கையும் கானலாகிப் போனதையும் அறியாமல் ஒருநாள் ஈழம் விடியும் எனும் கனவோடு போன ரூபன் , சிரித்திரன் கனவுகள் உலகெங்கும் வியாபித்துக் கிடக்கிறது.
இறுதியாய் சிரித்திரன் ,ரூபன் சொல்லிவிட்டுப் போன வார்த்தைகளும் , எங்கள் முன்னால் விதைத்துச் சென்ற கனவுகளும் இன்னும் ஆறாத , மாறாத காயத்தைத் தந்த போதும் அவர்கள் கனவை நனவாக்கும் வேகத்தோடும் விடுதலையின் மீதான தாகத்தோடும் நகர்கிறது.
ஒவ்வொரு மாவீரரின் நெஞ்சிலும் மூண்ட நெருப்பு ஒருநாள் பிரளமாய் எங்களை ஏமாற்றி எங்கள் தேசத்தை அழித்தவர்கள் வீடுகளில் நிச்சயம் இடியாகும். அழிவைத் தந்த ஒவ்வொரு வீட்டிலும் எங்களது விடுதலைக்காய் இழக்கப்பட்ட லட்சக்கணக்கான உயிர்களின் பேரோசை ஒலித்தபடியே இருக்கும்….அது விடுதலையடையும் வரையும் விழித்தபடியே….! உயிர்த்தபடியே….!
நினைவுப்பகிர்வு:- சாந்தி ரமேஷ் வவுனியன்.
மின்னஞ்சல் முகவரி (rameshsanthi@gmail.com)
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”