எழுச்சிப் பாடகர் குட்டிக்கண்ணன்
குட்டிக்கண்ணா போய் வா…!
குட்டிக்கண்ணன் அவரது தாய்மண் திருகோணமலை. 1990ல் ஸ்ரீலங்கா படையினரின் தாக்குதல்கள் மற்றும் தமிழினச்சுத்திகரிப்பால் அவன் குடும்பம் இடம்பெயர்ந்து வன்னிக்கு வருகின்றது.
தாயின் அன்பும் அரவணைப்பும் இவனுக்கு கலைகளை ஊக்கப்படுத்தி இவன் கிராமத்தில் ஓர் அரங்கத் திறப்பில் முதல் பாடலை பாடுகிறான்.
இவனது தாய் அன்று ஓர் பாடலை தேர்வாக்கி கொடுக்கிறாள். இவனது குரலில் தமிழீழத்தில் ஒலித்த முதல் பாடல்……………
ஐந்தடி கூட்டுக்குள்ளே
ஐம்பது பேரை போட்டடைத்தான்
அம்மா என்று சத்தமிட்டால்
அடியும் உதையும் தாராதவன்.
இது இவனை தமிழீழத்தில் ஓர் கலைஞனாக (பாடகனாக) அறிமுகம் செய்கின்றது.
இவன் வற்றாப்பளை மகாவித்தியாலயத்தில் 6ம் தரம் (வகுப்பில்) கல்விகற்றும் தேசத்திற்காக உழைக்க 11 வயது அளவில் அவன் விடுதலைப்புலிகளின் கொள்கைமுன்னெடுப்புப்பிரிவு வீதி நாடகக்குழுவில் இணைந்து பாடகனாகவும் நடிகனாகவும் மாறினான். அதில் சிறுவனான அவனின் குரலில் வந்த தெருவழிநாடகப்பாடல்கள் மக்கள் உள்ளங்களில் உணர்வேற்றின.
அவனது குடும்பம் வறிய குடும்பம். மிக வறியநிலையில் வற்றாப்பளை கேப்பாபுலவில் வாழ்ந்தது. அந்த நிலையில் அவன் நாடகங்களில், பாடகனாகவும் நடிகனாகவும் இருந்தான். சிறுவனின் குரல் எழுச்சியாக இருந்தது. இசைப்பாடல்களை கொள்கை முன்னெடுப்புப்பிரிவு தொகுதிகளாக வெளியிட்டபோது தெருவழி அரங்குகளில் அவன் பாடிய பாடல்களும் புதிய பாடல்களும் இடம்பிடித்தன. இசையின் நுணுக்கங்கள் இல்லாத போதும் மக்களின் உள்ளங்களில் எழுச்சியை ஏற்படுத்தும் வகையில் எழுச்சியாகப்பாடியது அவனின் வெற்றி. அவன் கண்ணன் தமிழீழத்தில் பல கண்ணன்கள் இசையுலகில் இருக்க இவன் குட்டிக்கண்ணன் என்று பெயர்பெற்றான். அவனின் சிறுவன் குரல் வளம் இருக்கும் வரை சிறுவனாக பாடினான். ஆடினான் மக்கள் மனங்களை கொள்ளை கொண்டான்.
இன்றும் ஓர் தனித்துவமான இடங்களின் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை (விடுதலை விரும்பிகள்) இவன் பாடல்.
இவனது சங்கிதம் கேள்வி ஞானம் மட்டுமன்றி முறையாக சங்கிதத்தை சங்கீத பூசனம் பாலசிங்கம் ஆசிரியரிடம் கற்று அது இவனது வளர்ச்சிக்கு ஓர் அங்கமாக திகழ்ந்தது என்பதை யாரும் மறக்க முடியாதது.
தேசத்தின் விடியலின் கனவுகள் சுமந்து இவன் நடித்த தெருவழி நாடகங்கள் இன்றும் மக்கள் மனங்களை விட்டு அகலாத அந்த நாடகங்கள் இவன் திறனை உரைத்து வரலாற்று ஏட்டில் பதிந்துகொள்ளும்.
அவைகள்……………..
இரும்புத்திரை,
ஒளி பிறந்தது,
கூடுகலைந்த மேகங்கள்,
வீரம் விளைந்த பூமி
ஆகிய நாடகங்கள் மக்களால் பெருதும் வரவேற்றக்கப்பட்ட தெருவெளி நாடகங்கள்.
இரும்புத்திரை எனும் நாடகத்தில் இவன் அழுது அழுது பாடிப் பாடி நடித்ததை எம்மால் எப்படித்தான் மறக்க முடியும்…………?
பாசம் என்ற கூட்டுக்குள்ளே
பதுங்கி வாழலாமா?
தேசம் என்ற சொந்தம் காக்க
மறந்து போகலாமா?
ஆசை இங்கு யாருக்கு இல்லை
அனுபவிக்க தேசம் இல்லை
ஆட்டம் போடும் இராணுவத்தை
அழித்திடத்தான் மனதுமில்லை
வேடிக்கை பார்க்குதே சில உள்ளங்கள் – இங்கே
வாடிக்கை ஆனதால் துயர் கோலங்கள்……..என் அன்னை பூமியில் ஏன் இந்த சோகம்
இதயங்கள் மாறல்லை யார் செய்த பாவம்
இந்தப் பாடல் குட்டிக்கண்ணனே தெருவழி நாடகங்களில் பாடினான் ஆயினும் “போர்ப்பறை“ இறுவட்டில் தவமலரின் குரலில் ஒலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழீழ கவிஞர்களின் வைர வரிகள் இவன் குரலில் பலரின் மனக்கதவைத் திறந்து விடுதலைப் பயணத்தில் நடைபோட வைத்தது என்பதும் நிசத்தமான உண்மை.
இவனிடம் சிலநேரம் கூறுவது என்னால் மறக்க முடியாத ஓர் நிகழ்வு…….
ஓர் கலைநிகழ்ச்சியில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இவனை அழைத்து; பாராட்டி தான் வைத்திருந்த பேனாவை எடுத்து இவனிடம் கொடுத்து சில அறிவுரைகளும் கூறினார். அது யாராலும் இலகுவில் மறக்க படும் சம்மவம் இல்லை. அதுவும் இவனுக்கு சற்று உந்துதலும், இவனது தேச உழைப்பிற்கு ஓர் அங்கிகாரத்தைக் கொடுத்தது.
இவன் குடும்பப் பின்னணியில் இடம்பெயர் வாழ்வில் வறுமை வாட்ட போர்நிறுத்த உடன்பாடு அவனது குடும்பத்தை தாய்மண் திருமலை நிலாவெளிக்கு செல்ல வழிவகுத்தது. அங்கு ஓரளவு வசதியுடன் வாழ்க்கை போகத்தொடங்க அவன் குட்டிக்கண்ணன் என்ற நிலையில் இருந்து குரல் மாறியது. இந்த மாற்றத்துடன் அவன் பெரிதாக பேசப்படவில்லை.
திருகோணமலையில் போர்நிறுத்த காலத்தில் மீண்டும் சிங்கள அரசின் இனச்சுத்திகரிப்பு தொடங்க மீண்டும் அவன் வன்னிக்கு வந்தான். பாடசாலை மாணவனாக உயர்தரத்தில் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் கல்வி கற்ற நிலையில் விடுதலைப் போராட்டத்தில் இணைந்தான். குட்டிக்கண்ணன் தகுதியை குரலில் இழந்த அவன் பெரிய கண்ணனாக பாடல் பாட தன்னை தயார்படுத்திக்கொண்டு விடுதலைப் போராட்டத்தில் இணைந்து போராளியாகி களத்தில் குதித்தான். போராளி சிலம்பரச(ன்)னாக உருவெடுத்துக் கொண்டார்.
சிறுவனில் மக்கள் குரலால் எழுச்சிகொள்ள வைத்த அவன் விடுதலைப் போராட்டத்தகுதிக்கான வயதை அடைந்ததும் தனது பாடல்களில் ஒலித்த குறிக்கோளை களத்தில் காட்டத்தொடங்கினார்.அவ்வாறு களத்தில் எதிரியுடனான போரில் அவன் வீரச்சாவைத் தழுவினான்.
ஆயினும் உன் பாடல் இன்றும் தமிழீழத்தின் விடுதலை நோக்கிய எதிர்கால சிற்பிகளின் நெஞ்சங்களில் நிறைந்த வண்ணம்தான் உள்ளது.
ஓர் நாள் வருவோம் உன் கல்லைறை நோக்கி விடியலின் செய்தியுடன் நிம்மதியாக உறங்கிடு தோழனே.
ஒளிவீச்சு மற்றும் கானா பிரபா அவர்களின் வலைப்பூவில் இருந்து ஏனைய தகவல்களுடன் தொகுத்து தேசக்காற்று.
நினைவுகள் மீட்டல்களுடன்:- அ.ம.இசைவழுதி.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”