தமிழினத்தின் மீதான அடக்குமுறைக்கு எதிராக அஞ்சாமல் குரல் கொடுத்தவர்
தமிழினத்தின் மீதான அடக்குமுறைக்கு எதிராக அஞ்சாமல் குரல் கொடுத்த மாமனிதர் குமார் பொன்னம்பலம்.
இன்றைய காலகட்டத்தில் தமிழ்ப் புதினப் பத்திரிகைகளை வாசிக்கும் பொழுது பலவிதமான இன்னல்கள், இடையூறுகள் மத்தியிலும் சில நினைவுரைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனாலும் சட்டத்திற்கு அடிபணிந்து சட்டத்தின் வாயலுக்கு பயமுற்று பகிரங்கப்படுத்தாமல் இருக்கும் பல உண்மைகள் மறைக்கப்படுகின்றன மறைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பயம் காரணமாக மறந்தும் விடுகிறார்கள்.
மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்கள் நினைவாக இந்த நாட்டில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் பல நினைவுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. நினைவு மலர்கள் பல வெளிவந்துள்ளன என்பதை பலர் அறிந்திருக்கமாட்டார்கள் என்ற காரணத்தினால் வெளிநாடுகளில் வெளிவந்த நினைவுரைகளின் ஒரு சில பகுதிகளை வெளிப்படுத்துவது மாமனிதருக்குச் செய்யும் நன்றிக்கடனாகும்.
புகழ்மிக்க வாழ்க்கை! திரு.பழ.நெடுமாறன், தென் செய்தி வெளியீடு, சென்னை
புகழ்பெற்ற ஈழத் தமிழர் தலைவர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்களின் புதல்வராய் பிறந்து “இவன் தந்தை எந்நோற்றான் கொல்’ என்னும் வள்ளுவத்திற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் குமார் பொன்னம்பலம் ஆவார். தந்தையைப் போல இவரும் இலங்கையின் மிகச் சிறந்த வழக்கறிஞராகத் திகழ்ந்தார். மனித உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.
சிங்கள இராணுவம், சிறப்பு அதிரடிப்படை, சிங்களப்பொலிஸ் ஆகியவற்றின் கொடுமைகளுக்கு ஆளாகித் தவித்த ஆயிரக்கணக்கான தமிழர்களுக்காக நீதிமன்றங்களில் தொடர்ந்து போராடினார். அரசுக்கு எதிரான வழக்குகளில் 98 வீதமான வழக்குகளை அவர்தான் நடத்தினார் என அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளது இவரது ஒப்பற்ற தொண்டுக்குச் சான்றாகும்.
தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து பல அறிக்கைகளை அவர் அளித்துள்ளார். செம்மணி புதைகுழி போன்ற பல அட்டூழியங்களை அம்பலப்படுத்தினார். சிறைகளில் சித்திரவதை, கேள்விமுறையின்றி கைது செய்யப்படுதல், சட்டவிரோதமான படுகொலைகள், காணாமல் போதல் போன்ற தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு அட்டூழியங்களை ஐ.நா. மனித உரிமைக் கமிசன் முன் ஆதாரபூர்வமாக அளித்து சிங்கள அரசின் முகமூடியைக் கிழித்து எறிந்தார். பெல்ஜியத் தலைநகரான பிரசெல்ஸில் இயங்கும் ஐரோப்பிய பாராளுமன்றம், இலண்டனில் உள்ள ராயல் நிறுவனம் மற்றும் பல்வேறு உலகளாவிய மனித உரிமை அமைப்புகள் ஆகியவற்றுக்கு நேராகச் சென்று புகார்களை அளித்தார்.
இதன் விளைவாக சந்திரிகாவின் கடுங்கோபத்திற்கு ஆளானபோதிலும் இறுதிவரை உயிரைப் பற்றிக் கவலைப்படாமலும் யாருக்கும் அஞ்சாமலும் தமிழர்களுக்காகத் தொண்டாற்றினார்.
அமெரிக்க பிரமுகர்கள் கண்டனம்
அமெரிக்கக் காங்கிரஸ் உறுப்பினர்களான சுயி.டபிள்யூ.கெல்லி, நிரா.எம்.லோவே, பில்.பாங்கெரல், பிராட் ஷெர்மன், ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் இவான்ஸு ஆகியோரும் அமெரிக்க வழக்கறிஞர்கள் சங்கம், நீதிபதிகள், வழக்கறிஞர்களின் சுதந்திர மையம், மனித உரிமைகளுக்கான வழக்கறிஞர்கள் குழு ஆகியவையும் தமிழ்த் தலைவர் குமார் பொன்னம்பலம் படுகொலையைக் கடுமையாகக் கண்டனம் செய்துள்ளனர்.
பொன்னம்பலம் என்றுமே வாழ்வார் ….
“ஆங்கிலத்தில் வெளிவந்த நினைவுரையின் மொழிபெயர்ப்பு”
மர்மமான துப்பாக்கிதாரிகளால் சுடப்படவேண்டியிருந்ததானது குமார் பொன்னம்பலத்திற்கு இந்த வேளையில் எள்ளளவும் எதிர்பார்க்கப்பட்டிராத செய்தியாகும். ஏனெனில், குறிப்பாக அவர் தனது நோக்கத்திற்காகப் போராடிக் கொண்டிருந்த அந்தப் பிரசித்தமான காலகட்டத்திற்கும் மிகப்பிந்திய காலத்திலேயே இது நிகழ்ந்தது.
தலைகவிழ்ந்து மரணித்த நிலையில் இருக்கும் பொன்னம்பலத்தின் படம் எமது மனங்களில் எப்போதுமே பதிந்திருக்கும். ஆனால் நாம் அறிந்துள்ள குமார் பொன்னம்பலமோ எமது அலுவலகங்களில் பிரவேசித்து அனைவருடனும் ஏன் ஒவ்வொருவருடனும் கூட சிநேகபூர்வமாக அளவளாவும் குமார் பொன்னம்பலமாகத் தானிருப்பார்.
தீங்கே தராத, அன்பு நிறைந்த, இரக்கம் நிறைந்த மனிதர் ஒருவரின் சோகமான முடிவு அது.
அவர் கொல்லப்படவேண்டுமென விரும்பிய அவருக்கிருந்த இந்தக் கசப்பான எதிரி யார்? அதை எமக்கு நினைத்துப் பார்க்கவே இயலாதுள்ளது.
செய்தியாளர்களுக்குக் குமார் பொன்னம்பலம் ஒரு இரட்சகர். ஏனெனில் எவருக்கும் செய்திப் பஞ்சம் ஏற்படுவதுண்டு. ஆனால் குமாருடன் ஏற்படுத்தும் ஒரு தொலைபேசி அழைப்பில் அவர் கவலையெல்லாம் ஒழிந்துவிடும். பல விடயங்களில், குறிப்பாகச் சிறுபான்மையினர் விடயங்களில் குமாரின் கண்ணோட்டங்கள் மிக ஆழமானதாகவும் இருந்தன. ஆனால் வனப்பு மிக்க அவரது ஆளுமையிலிருந்து வெளிப்படும் மேற்கோள் ஒன்றின் காரணமாகச் செய்தியின் பிரதி எப்போதும் மகிழ்விப்பதாகவே இருக்கும்.
மனித முகங்களை மறக்காதவர் குமார். அவர்களிடமிருந்து செய்தியொன்றைப் பெற்றுக்கொண்ட புதிதாய் நியமனம் பெற்ற, அனுபவமில்லாத ஒரு செய்தியாளர் கூட அடுத்த தடவை குமாரைச் சந்திக்கும் போது அடையாளம் காணப்பட்டதன் அறிகுறியாக இலேசான ஒரு புன்முறுவலை நிச்சயமாக அவரிடம் காணலாம். உறவு வளர்ந்து வருகையில் குமாரே பல செய்திகளுடன் பெரும்பாலும் புத்தகங்கள் பற்றிய விளம்பரச் செய்திகளுடன் தொலைபேசியில் அழைப்பார். அவர் கூறும் விடயங்கள், செய்தியாளர் விவேகமானவராயிருந்தால் நன்கு பயன்படும்.
1980களின் பிற்பகுதியில் குமார் தனது இறுதிக்காலத்தில் காணப்பட்டதை விட வேறுபட்ட ஒரு நபராகக் காணப்பட்டார். இறுதிச் சில வருடங்களின் போது நிச்சயமாக இரு தரப்புகளிடமிருந்தும் அங்கீகாரம் மறுக்கப்பட்ட அவரெடுத்த அரசியல் நிலைப்பாட்டிலிருந்து தோன்றிய வெறுப்புணர்வொன்று அவரிடம் காணப்பட்டது. 1980களின் பிற்பகுதியில் அரசியல் முன்னேற்றம் கருதி அவர் எடுத்த முயற்சிகள் தோல்விகண்ட போது, தான் ஆதரிக்கும் அரசியல் சித்தாந்தம் இறுதியில் ஜெயிக்கும் என்ற நம்பிக்கையோடு அத்தோல்விகளை அலட்டிக் கொள்ளாமல் எதிர்கொண்டார்.
நம்பமுடியாத அளவு செல்வம் படைத்தவர் எனக் குமார் அறியப்பட்டிருந்தார். சில மேர்ஸிடஸ் வகைக் கார்களை அவர் சொந்தமாகக் கொண்டிருந்த போதிலும், அவரணிந்த தங்கக் கைச்சங்கிலியைத் தவிர, அவரது ஆடையணிகள் கிட்டத்தட்ட அக்கறை எடுத்துத் தேர்ந்து அணியப்படாத எளியனவாகவே இருந்தன. முன்னோடி வடிவமைப்புக்கொண்ட ஆடைகளை அணிவதன் மூலமோ அல்லது ஆதரவாளர்கள் புடைசூழ வலம் வருவதன் மூலமோ தன்னை விளம்பரப்படுத்துவதை அவர் ஒருபோதும் நாடவில்லை.
தமிழன் என்பதற்கு ஓர் அடையாளமாக விளங்குவதே குமாரின் நோக்கமாக இருந்தது. வேட்டியொன்றை உடுத்திக் கொண்டு நெற்றியில் திருநீறையும் அணிந்து கொள்வார் அவர். இராணி வீதியில் உள்ள தனது வீட்டின் மதிற்சுவர் மீது சுவாமி அறையொன்றை நிருமாணித்திருப்பதோடு தனது கடிதத் தலைப்பிலும் “ஓம்’ எனும் அடையாளத்தைப் பொறித்திருந்தார் அவர். ஒரு வகையில் பார்த்தால் தனது தமிழ்த் தன்மையைப் பறைசாற்ற அவர் எடுத்த தளராத முயற்சிக்கே அவர் உயிர் விலையாகிப் போனது.
தன்னைக் கொலை செய்யக்கூடிய பகைவர்கள் தனக்கில்லையென்றே அவர் நம்பினார். தமது பிரதிநிதியாக இருக்கக் கூடிய அளவுக்கு அவரின் செயற்பாடுகளைப் புலிகள் தமக்குகந்தவையாக ஏற்றிருக்காவிடினும் புலிகளோடு அவர் “நல்லுறவையே பேணிவந்தார். அவரது கருத்துகளுக்காகத் தெற்கு அரசியல்வாதிகள் அவரைக் கொல்லப் போவதில்லையெனத் தெரிந்து வைத்திருக்கும் அளவுக்கு அவர்களுள் பெரும்பாலானோரைப் போதுமான அளவு நெருக்கத்தோடு அவர் அறிந்திருந்தார்.
அவரது அபிப்பிராயங்களைவிட்டு அவர்கள் அவரைப் பகிரங்கமாகத் திட்டக் கூடுமேயொழிய நிச்சயமாகக் கொல்ல நினைத்திருக்க மாட்டார்கள்.
பணமும் அந்தஸ்தும் இருந்தால்தான் அதிகாரம் வரும் என்று சொல்லக்கூடிய வேறொரு யுகத்தில் அவரது கூர்மதிக்குப் பொருந்திவரும் விதத்தில் அதிகார உயர் வர்க்கக் குழாமில் தனக்கெனத் தனியானதோர் இடத்தை அவர் பிடித்திருக்கக் கூடும். ஆனால் பாராளுமன்ற அரசியலின் இன்றைய முரட்டுத்தன்மை வாய்ந்த குளறுபடியான உலகத்தில் அவருக்கு இடமிருக்கவில்லை.
அவரது கருத்துகள் எதுவாயிருப்பினும், குமார் பொன்னம்பலத்தைப் போன்ற ஓர் அரசியல் வாதி பாராளுமன்றத்திற்கே அழகூட்டுபவராய் இருந்திருப்பார். மக்களின் செல்வாக்குக் கிடையாத விடயங்களுக்கு ஆதரவளிப்பவராக தோல்வியுற்ற விடயங்களுக்கு உயிரூட்டி முன்கொண்டு வருபவராக இருந்திருப்பார். கட்சியின் கைப்பாவையாகத் தரந் தாழ்ந்து போயிருக்கும் இன்றைய பாராளுமன்ற உறுப்பினர்களைப் போலல்லாது ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் உயர்வாய் மதிக்கப்படுகின்ற ஒரு துடிப்பான நிறுவனமாக சட்டசபையை மாற்றியமைக்கும் தனிவழி செல்லும் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக அவர் இருந்திருப்பார்.
வ.வ. பாபு,
ஒருங்கிணைப்பாளர்,
அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை
மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம் எல்லாப் புகழும் தரும்.
ஈழத்தமிழர் தலை நிமிர்ந்து நிற்க செயல்பட்ட தமிழரே! உம் இழப்பு ஈடு செய்ய இயலாதது! உம்மை அழித்தவர்கள் உம் உடலை மட்டுமே அழித்துள்ளனர். நீங்கள் தமிழ் இனத்திற்கு சிறப்பாக ஈழத்தமிழருக்கு செய்த சிறந்த பணியால் பெற்ற புகழையே அல்லது ஈழத்தமிழரிடையே நீங்கள் ஏற்படுத்திய தன்மான உணர்வை, சுதந்திர உணர்வை அவர்களால் எக்காலத்துக்கும் அழிக்க முடியாது. உங்கள் பெருமையும் புகழும் தமிழீழத்து தமிழர் என்பவரோடு மட்டுமல்லாது, உலக வாழ் தமிழர் மனமெல்லாம் என்றென்றும் எக்காலத்துக்கும் நிலைத்து நின்று வாழும் என்பதில் எந்தவிதமானஐயப்பாடும் இல்லை. அன்னார் திரு. குமார் பொன்னம்பலம் அவர்களது இழப்பு உலகத்தமிழர் இழப்பு!
மறைந்த தமிழ் மகாத்மாவுக்காக முன்னாள் தமிழ் அரசியல் கைதி .
செங்கதிர் போல் ஒளி வீசிய செந்தமிழ் செல்வரே. தங்கத் தமிழ் மணியே, தரணியில் உதித்த வெண் நிலவே , தாய்க்கு இன்றும் குமார் பொன்னம்பலம் தமிழுக்கு என்றும் எங்கள் தமிழ் ஞானப்பல(ழ)ம்.
அடிமை விலங்கை உடைத்தெறிந்து என்றென்றும் அகிலம் போற்றும் சட்டத்தரணியாக நின்ற எங்கள் அன்பே உருவான இன்பத் தமிழ் தியாகியே! நீங்கள் ஆயுதம் ஏந்தாமல் படையின்றி தனியொரு மரமாய் அநீதிக்கெதிராக அசைந்தாடும் நாவால் சொல் அம்புகளால் அஹிம்சா வழியில் போர் தொடுத்த அற்புத தீரரே.
தமிழ் மக்களின் வாழ்வு ஓங்கவே என்றும் ஈடில்லா உங்கள் உடல் , ஆவி, பொருள் எந்தனை உயர்வாக உன்னத தமிழுக்கு கொடுத்து உரிமைக்குரல் விடுத்த உத்தம சீலரே! தமிழர்களின் தன்மானம் காத்த தகையே!
நீண்டதொரு தசாப்தமாக தமிழ் மக்களுக்கெல்லாம் நிழல்கொடுத்து நிமிர்ந்து நின்ற எங்கள் ஆலமரத்தை நிர்மூலப்படுத்தி விட்டனரே இனவாத நீசர்கள்.
பாடுபட்டு உழுதாலும் பார்தனில் இனி எங்களால் ஈடு செய்ய முடியாது உங்கள் புனித இடத்தை. இடுக்கண் வந்த போதும் இடராமல் தரணியெங்கும் மிடுக்கோடு நடைபோட்ட அஞ்சனா மைந்தரே. நாடு கேட்டீர்கள் தமிழ் மக்களுக்கு சரி சமத்துவமாக கோடு போட்டு வந்தீர்கள் பைந்தமிழ் உரிமைக்காக.
பொன்னாடை விரும்பாத கண்ணான எம் தமிழ் மன்னா, கண்ணோரம் நீர் திரள நெஞ்சு கனம் தாங்காது விண்ணுலகம் மேவிய உங்கள் முன் விம்மலுடன் விதைப்பது. அச்சமில்லை அச்சமில்லை ஆயிரமாயிரம் அடி விழுந்தாலும் அண்ணலே தங்கள் பாதச் சுவடுகளில் பயணித்திடுவோமென அணையா எங்கள் கண்ணீர் அஞ்சலியை கவியில் வடித்து அரைக் காலம் கடந்து காணிக்கையாக்குகின்றோம் இன்று.
‘தொகுப்பு’
கே.எம்.ரி.
தமிழரின் உரிமைக்காக குரல் கொடுத்த மாமனிதர் குமார் பொன்னம்பலம்.
தலைநகரில் தமிழர்களுக்காக குரல் எழுப்பிக் கொண்டிருந்த ஒரு தன்மானத் தமிழனின் உயிர் சதிசெய்து பறிக்கப்பட்டது. சர்வதேசம் எங்கும் அடிக்கடி பறந்து சிங்கள அரசின் தமிழர் படுகொலைகளையும் இனப்படுகொலைகளையும் ஆக்கிரமிப்புகளையும் அம்பலப்படுத்தி வந்த ஒரு தேசப் பற்றாளன் சதிகாரர்களால் அழிக்கப்பட்டுவிட்டான். இந்தப் படுகொலையானது கொழும்புத் தலைநகரில் தமிழருக்காக ஆதரவுக்குரல் எழுப்பக் கூடாது என்பதை மறைமுகமாக கூறியுள்ளது. ஆனால் கொழும்பில் தமிழ்க் குரல் அடக்கப்பட்டதால் தனது அநியாயங்களும், மனித உரிமைமீறல்களும் அமுங்கிப் போய்விடுமென சதிகாரர்கள் எண்ணினால் அது நிச்சயமாகவில்லை. கொழும்பிலிருந்து எழுந்த குமார் பொன்னம்பலம் எனும் ஆத்மா அடக்கப்பட்டுவிட்டதாலும் அவரது மறைவின் மூலம் எழுந்துள்ள எழுச்சியானது சர்வதேச ரீதியில் தமிழ்த் தேசிய இனத்திற்குச் செய்யும் அட்டூழியங்களை இனங்காட்டும் என்பது நிச்சயம். வடக்குக் கிழக்கில் அரசாங்கங்களால் கைது செய்யப்பட்டு தமிழர்கள் சித்திரவதைகளை அனுபவித்தபோதும், கொழும்பில் காரணமின்றி கைது செய்யப்பட்டபோதும், சிறைக்கூடங்களில் தமிழ்க் கைதிகள் அடக்கப்பட்டபோதும் துணிந்து சென்று வாதாடி அவர்களை மீட்டவர் குமார் பொன்னம்பலம் அவர்கள் தான்.
ஒரு முறை தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த போது அரசின் தமிழர் விரோதப் போக்குகளை வெளிக்கொணர்ந்ததாலும் சிங்கள இராணுவத்தின் அட்டூழியங்களை அம்பலப்படுத்தியதாலும் பேட்டியின் பின் உளவுத்துறையினரால் கடுமையான விசாரணைக்கு குமார் பொன்னம்பலம் உட்படுத்தப்பட்டார். இவ் விசாரணை நடவடிக்கைகள் சிலவேளைகளில் குமார் பொன்னம்பலத்தின் எதிர்காலத்திற்கே கேள்விக் குறியாக அமையுமோ என நண்பர்கள் எதிர்பார்த்தவேளை, அவர் அரசின் சவாலை உறுதியாக எதிர் கொண்டார்.தன் மீதான விசாரணையின் போது ஒரு கட்டத்தில் அவர் நான் ஸ்ரீலங்காவில் நடைமுறையில் இருக்கும் சட்டங்களுக்கு எதிராக நடந்துகொள்ளவில்லை. சட்டம் தடைசெய்த எதனையும் நான் செய்யவில்லை. நீதித்துறையிடம் எனது பிரச்சினையை விட்டுவிடுங்கள். அவர்கள் விசாரித்து தண்டனை வழங்கட்டும் என்றார். அதேவேளை, ஸ்ரீலங்கா அரசு தமிழர்கள் மீது பாரபட்சம் காட்டுகிறது. மற்ற சமூகத்தினரை விட தமிழ்ச் சமூகம் வேறுபடுத்தி பார்க்கப்படுகிறது என அதே நீதித்துறையின் மீது அடிப்படை மனித உரிமைமீறல் வழக்கொன்றையும் தாக்கல் செய்தார்.
குமார் பொன்னம்பலத்தை மிகச் சாதாரண மனிதர் என்றே கூறலாம். பல தடவைகள் அவரது நண்பர்கள் அவரது பாதுகாப்பில் அக்கறை செலுத்த வேண்டும் எனக் கூறியபோதிலும், அவர் சாதாரணமாகவே கொழும்பு வீதிகளில் நடமாடினார். அவர் தான் சந்திக்கக் கூடிய இன்னல்களையும், சிக்கல்களையும் என்றுமே எண்ணிப்பார்க்கவில்லை.எல்லோரையும் நம்பினார். அவருக்கு ஏராளமான சிங்கள நண்பர்கள்: வயது வித்தியாசம் இன்றி எல்லோருடனும் பழகக் கூடியவர். அவரது தமிழ் வார்த்தைப் பிரயோகம் மிக அழகானது.பேசும்போது கூட மிகச் சாதாரண சொற்றொடர்களையே பாவிப்பார். ஆனால், வானொலி,தொலைக்காட்சி பேட்டிகளில் மிக ஆழமான வசனங்களை அவர் கையாள்வது வழக்கம்.
ஆனால், இன்று நாம் அவரை இழந்துவிட்டோம். தமிழீழ விடுதலைப்போர் மற்றுமோர் தியாகத்தை தன்னகத்தே ஏற்றுக் கொண்டது. குமார் பொன்னம்பலம் அவர்கள் எம்மைவிட்டுச் சென்றிருக்கலாம். ஆனால் அவரது துணிவு, அவரது செயற்பாடு, அவரது இலக்கு, அவரால் ஏற்பட்ட எழுச்சி இன்று தமிழ் மக்களை மிகுந்த நெகிழ்விற்கும், ஓர் ஆவேசத்திற்கும் இட்டுச் சென்றுள்ளது. இதையே உலகளாவிய ரீதியில் அவருக்காக எழுப்பப்படும் அனுதாபச் செய்திகளும் கருத்துகளும் கூறிநிற்கின்றன.
ஜனநாயகக் குரல் ஓய்ந்தது.
இலங்கைத் தமிழர்களது பாரம்பரிய ஜனநாயகக் கட்சிகளின் வரிசையில் இடையறாது ஒலித்துவந்த ஒரு ஜனநாயகக் குரல் ஓய்ந்துவிட்டதாக தமிழர்கள் கருதுகிறார்கள்.
பேரினவாதப் போக்குடையவர்களால் தமிழ் மக்களுக்கு எதிராக கருத்துகள் தெரிவிக்கப்படும்போது அதற்கு எதிராக துணிவுடன் கருத்து தெரிவிக்கும் ஆளுமையை குமார் பொன்னம்பலம் பெற்றிருந்தார். வெறும் பத்திரிகைகளுக்கு விடுக்கும் அறிக்கைகளுடன் மாத்திரம் அவர் பணி நின்றுவிடவில்லை. நேரடி விவாதங்களின் போதும் அவர் துணிவுடன் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
1977 ஆம் ஆண்டு முதலாவது தடவையாக பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்ட குமார் பொன்னம்பலம் அதன் பின்னர் 1982 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிட்டார். எனினும் இரண்டிலுமே அவர் வெற்றிபெறவில்லை.
அரசியல் அபிலாசைகளுக்காக வாய்மூடி மௌனியாக இருப்பதைவிட தனது சமூகம் தன்மானத்துடன் வாழ குரல் கொடுப்பதே மேலானது என்று நவீன சித்தாந்தத்தை கடைப்பிடித்திருக்கிறார். இதன் விளைவாக இவர் எதிர் விமர்சனங்களுக்கும் கண்டனத்துக்கும் ஆளாகிய சம்பவங்கள் உண்டு.
1938 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் திகதி பிறந்த குமார் பொன்னம்பலம் இயற்கை விஞ்ஞானத்திலும் பட்டம் பெற்று 1974 ஆம் ஆண்டு பரிஷ்டராகப் பட்டம் பெற்றிருக்கிறார். அவர் தனது அறுபதாவது சஷ்டியப்த பூர்த்தியை தமிழ்நாடு திருக்கடையூரில் நடத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் 1944 ஆம் ஆண்டளவில் ஆரம்பிக்கப்பட்டது. 1966 ஆம் ஆண்டில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் வாலிபர் முன்னணியின் செயலாளராக அரசியலில் பிரவேசித்த குமார் பொன்னம்பலம் இறுதியில் அதன் தலைவராகவும் பரிணமித்தார்.
வடகிழக்கு தமிழர்களுக்கும், மலையக இந்திய வம்சாவளி, தென்னிலங்கை தமிழர்களுக்கும் இடையே பாரிய இடைவெளியை நீக்கியதில் குமார் பொன்னம்பலத்திற்கு பங்குண்டு. மலையக மக்கள் மீதும் அவர் பற்றுக் கொண்டிருந்த பல சம்பவங்கள் உண்டு. மலையக வாலிபர்களுக்கு எதிரான பல வழக்குகளில் அவர் ஆஜராகி வாதிட்டிருக்கிறார்.
களுத்துறைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்ட பல இளைஞர்களது நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்காக வாதிட்டும் இருக்கிறார். குமார் பொன்னம்பலம் சட்டத்தரணிகளை மிகவும் மதித்து பண்புடன் பழகும் இனிய சுபாவம் உடையவர்.அவர் மமதையுடன் செயல்பட்டதில்லை. எல்லோருடனும் அன்புடன் பழகும் பண்புடையவர். நீதிமன்றத்தைத் தவறாக வழிநடத்தியதில்லை. நீதிபதிகளும் அவருடன் சிநேகபூர்வமாகவே இருந்திருக்கிறார்கள். அவர் சாதிக்க வேண்டியவை ஏராளம் இருந்தது.
சந்தர்ப்பமும் இருந்தது. ஆனாலும் அவை கைகூடி வரமுடியாது போனமை துரதிர்ஷ்டவசமானது.
வழக்காளிகள் விடயத்தில் தனக்கென்று சில உதாரண கொள்கைகளை அவர் கடைப்பிடித்திருந்தார். எந்தவொரு வழக்காக இருந்தாலும் அதை ஆரம்பத்திலிருந்தே தானே நடத்த வேண்டும் என்ற விருப்புடையவர். இடைநடுவில் இன்னொரு சட்டத்தரணியிடமிருந்து அந்த வழக்கைப் பெற்று தொடர்ந்து நடத்துவதை அவர் விரும்பியதில்லை. தனது தந்தையார் ஜி.ஜி.பொன்னம்பலம் இதைத் தனக்கு கற்றுக் கொடுத்ததாக குமார் அநேக சந்தர்ப்பத்தில் கூறியிருந்தார்.
அவர் நீதிமன்றத்தில் தனது கட்சிக்காரருக்காக ஆஜராகி வாதாடும் போது அதைப் பார்ப்பதற்கென்றே பலரும் குழுமியிருப்பதை அவதானிக்க முடியும்.அவரது குறுக்கு விசாரணைகள் சுவாரஸ்யம் மிக்கதாகவும் இருக்கும்.இங்கு சிங்கள மொழியிலும் சரளமாக வார்த்தைப் பிரயோகங்கள் இடம்பெறுவதை அவதானிக்கலாம்.
நெற்றியில் விபூதி, பெரிய சந்தனத் திலகத்துடன் கொழும்பு மேல் நீதிமன்றங்களில் அவர் தனது கனிஷ்ட சட்டத்தரணிகளுடன் ஆஜராகி பல வழக்குகளில் வெற்றியீட்டியுள்ளார். அநேக இளைஞர்களின் விடுதலைக்குக் காரணமாகவுமிருந்துள்ளார்.
கொக்கட்டிச்சோலை சம்பவம்.
பிற அரசியல் கட்சித் தலைவர்களைப் போன்று வார்த்தை ஜாலங்களால் அரசியல் நடத்தவில்லை. துணிவுடன் காரியங்களைச் சாதித்தவர் இவர். மட்டக்களப்பு மாவட்டத்தில் கொக்கட்டிச் சோலையில் 67 பொது மக்கள் பலியான சம்பவத்தின்போது அதை விமர்சித்ததுடன்,அந்த விசாரணைக்கு துணிவுடன் ஆஜராகியிருந்தவர். பிற சட்டத்தரணிகள் தயக்கம் காட்டியிருந்தபோது குமார் பொன்னம்பலம் துணிவுடன் ஆஜராகியிருந்தார். கிருஷாந்தி குமாரசாமி கொலை வழக்கிலும் யாழ்.பெண்கள் மனித உரிமைகள் சங்கத்தின் சார்பில் ஆஜராகியிருந்தார். இன்னும் இது போன்ற மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் குமார் பொன்னம்பலம் ஆஜராகியிருந்ததை அவதானிக்க முடிந்தது.
தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமையுடன் தன்மானம் காத்துவாழ வேண்டும் என்ற சிந்தனையை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆழமாக வலியுறுத்தி வந்தவர் குமார் பொன்னம்பலமேயாவார். இதன் காரணமாக தமிழர்கள் மத்தியில் மிக நம்பிக்கையும், செல்வாக்கும் பெற்றவராக இவர் காணப்பட்டார். இதன் காரணமாக பேரினவாதிகளின் விமர்சனங்களுக்கு ஆளாகினார்.
அவரது விவேகமும், அறிவாற்றலும் இக்கட்டான இச்சூழ்நிலையில் தமிழினத்துக்கு கிடைக்காமல் போனது துரதிர்ஷ்டமானது.குமார் பொன்னம்பலம் என்ற தனி மனிதன் மறைந்தாலும் தமிழினத்தின் மத்தியில் அந்த நாமம் என்றும் மறையாமல் வாழ்ந்து கொண்டிருக்கும்.
கருத்துகளை அஞ்சாது தெரிவித்த தமிழ்த் தலைவன் (09.01.2000)
குமார் பொன்னம்பலம் தமிழரசியல் கட்சியொன்றின் பிரமுகர் மனிதாபிமானமிக்க பண்பாளர், மனித உரிமைகள் இயக்க நடவடிக்கையாளர். இவை அனைத்துக்கும் மேலாக ஒரு வழக்கறிஞர். இந்நாட்டின் அரசியல், சட்டத்துறை அவருக்கு அவர் நிகர் என்று ஒருவரான அமரர் ஜி.ஜி. பொன்னம்பலத்தின் புதல்வர் என்ற பெருமையும் அவர் பெற்றார்.
தமிழகத்தில் பேரறிஞர் அண்ணா மறைந்தபோது “சாவே உனக்கு சாவு’ வந்து சேராதோ என்று கூறப்பட்டது. அந்த ரீதியிலேயே குமாரின் மறைவு தமிழினத்தின் மத்தியில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அரசியல் தலைவர்கள் பலவிதம். தங்கள் பதவிகளை தக்க வைப்பதற்காக அமைதி பேணும் தலைவர்கள் உண்டு. தங்களது சலுகைகளை பாதுகாக்க வாய்மூடி மௌனியாய் இருக்கும் தலைவர்களும் உண்டு. கருத்துகளை அஞ்சமின்றி துணிந்து எடுத்துச் சொல்லக் கூடியவர்களும் உண்டு. அந்த வரிசையில் எதற்கும் அஞ்சாது துணிவுடன் கருத்துகளை எடுத்துக் கூறிய ஒரு அரசியல்வாதியாக, தமிழராக குமார் பொன்னம்பலம் விளங்கியிருக்கிறார். தனி மனிதனின் விருப்பு,வெறுப்புகளின் விளைவே குமார் பொன்னம்பலத்தின் மரணம் என்பது தெட்டத்தெளிவாக நிரூபிக்கப்பட்டது. அவர் எப்போதும் தான் சார்ந்துள்ள தமிழர் மக்களுக்கு எதிரான அரசியல் மாயவலைகள் எங்கு பின்னப்படுகிறதோ, அப்போது அதை அறுத்தெறியும் துணிவைப் பெற்று அம்பலப்படுத்திய நினைவுகள் ஏராளம்.
உள்ளதை உள்ளவாறு கூறுவது குமாரிடமுள்ள சிறப்பம்சம் (05.05.2000) மேன்முறையீட்டு நீதியரசர்.
குமாரிடமிருந்த உறுதியான சிறப்பம்சம் உள்ளதை உள்ளவாறே வெளிப்படையாகக் கூறும் தன்மையாகும்.(ஏடிண் ஞூணிணூt தீச்ண் ஞிச்டூடூடிணஞ் ச் குணீச்ஞீஞு ச் ண்ணீச்ஞீஞு) அவர் இதை எதுவித பயமோ தயக்கமோ இன்றி சரியெனத் தான் உணர்ந்ததை வெளிப்படுத்தும் இயல்பு கொண்டவர். குமார் ஒருபோதும் சுயநலனுக்காக தனது சிந்தனையின் வெளிப்பாட்டினை வார்த்தை ஜாலங்களால் மூடிமறைந்தவர் அல்ல. அவர் தனது வழக்கின் பலம் என்ன என்பதை மட்டுமல்ல பலவீனத்தையும் எடுத்து விளக்கி நிற்பார். அது மட்டுமல்ல சிங்களவரோ, முஸ்லிமோ, தமிழரோ அல்லது எந்த சமூகத்தவர் என்றில்லாமல் தனது கட்சிக்காரருக்காக ஒவ்வொரு அங்குலமும் விட்டுக் கொடாது வாதிடும் வல்லமை பொருந்தியவர் குமார். பலர் மனித உரிமை பற்றி பேச்சோடு மட்டும் காலம் போக்குகையில் பாதிக்கப்பட்டவர்களின், பாதிப்பை, இழப்பை, துயரத்தை தன் செயலால் எடுத்துக் காட்டி அவர்களுக்கான நிவாரணத்தின் தேவையை வலியுறுத்தி நிற்பது இவருடைய தனிப் பண்பு.
உண்மையான மனத்தாங்கலை, உரிமை நாடிய துயரத்தை கொலைகளாலும் சித்திரவதைகளாலும் அடக்க, நசுக்க முயலுதல் ஒருபோதும், பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினையையோ அல்லது மாற்றுக் கருத்துக் கொண்டவர்களின் பிரச்சினையோ தீர்க்கமாட்டாது. ஒரு இறப்பர் பந்தினை நீர் வாளியின் அடிவரை அமுக்கினால் அது அங்கே நிற்காது. மேற்தளத்திற்கு உந்திக் கொண்டு வரும். குமாரை தனிப்பட்ட ரீதியில் அறிந்த அனைவரும் அவரது அநாவசியமான அகால மறைவினால் உள்ளத்தால் துயருறுவர் என்பதில் ஏதும் சந்தேகம் இருக்க முடியாது.
அஞ்சா நெஞ்சங்கொண்ட தலைவர் (05.01.2000)
“நெஞ்சில் உரமின்றி நேர்மைத்திறனுமின்றி வஞ்சனை செய்தாரே ஐயா, உன் தமிழ் உயிருக்கு வஞ்சனை செய்தாரே ஐயா’ எம் இனத்தை சிறுமைப்படுத்தி மரம்,செடி,கொடியென்றும் வந்தேறும் குடிகள் என்றும் கூறியவர்களின் முகத்திரையைக் கிழித்து, உலக அரங்கத்திற்கு தமிழ் மக்களின் உரிமைகளை ஆதாரத்தோடு எடுத்துக் கூறிய பெருந்தகையே. உனது நீதியான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல், உன்னையும் சட்டப்படி சந்திக்க முடியாமல் போனவர்கள், அநீதியை எதிர்த்து எவ்விதப் பயமுமின்றி வாதாடிய எம் இனத்தலைவரான உன் சிம்மக் குரலை அடக்க நினைத்தோர் அது முடியாது என்று நினைத்தோ கோழைகளான ஈனர்கள் சதிசெய்து உன் உயிரை எடுத்தனர். ஐயா! இன்று நீ உறங்குகின்றாய். எம் இனம் யாருமற்ற அநாதைகளாக தட்டிக் கேட்க ஆளின்றித் தவிக்கின்றது. கொழும்பில் நீ தான் தமிழர்களின் தலைவனாக இருக்கின்றாய் என்று உலகத்திலுள்ள தமிழர்கள் ஆறுதல் அடைந்திருந்தனர். உன் மண்வாசனை கலந்த தமிழாய் தட்டிக் கேட்பாய் என்று அமைதியாக இருந்தனர். உம் சிம்மக் குரலும் பேச்சும் ஒரே நேரத்தில் இருந்ததை அறிந்த உலகத் தமிழ் மக்கள் அனைவருமே இரத்தக் கண்ணீர் வடிக்கின்றனர். எம்மையெல்லாம் விட்டு எங்கு ஐயா சென்றாய்? உன் இடத்தை நிரப்ப எமக்கு இனியாருமில்லை. தட்டிக் கேட்க ஆளில்லாத பாவிகளாய் தவிக்கின்றனர் உன்பிரிவால் தமிழர்கள்.
ஒரு மானமுள்ள தமிழனின் நினைவாக (09.01.2000) நோர்வே.
பனைமரங்கள் அங்கு வளர்வதில்லை. ஆனாலும் அதிசயமாய் நீ அங்கு ஒற்றைப் பனைமரமாய் ஓங்கி வளர்ந்து நின்றாய். பற்றைக்குகந்த மண்ணிலே பனை மரங்கள் எத்தனை நாள் உயிர்வாழும் என்று எப்போதும் பயந்திருந்தோம். ஈற்றில் நிகழ்ந்தது அது. கொக்கட்டிச் சோலையிலே கொலையுண்டு போனவர்கள்,கொழும்பிலே ஆயிரமாய் கூண்டுகளில் அழுதவர்கள், வெறிநாய்கள் தாக்கியதால் கிருசாந்தியானவர்கள் என்று எத்தனையோ ஈழவர்கள் இன்னல்களில் கைகொடுத்தாய், நீசர்களின் பொய்மதுவில் நீதிமயங்கி நின்று உலகெங்கும் நீ சென்று உள்ளதை எடுத்துச் சொன்னாய், உண்மையை அடித்துச் சொன்னாய், இனத்தின் விடுதலைக்காய் ஜனநாயக வழியிலே போர் முரசு செய்தாய், தன்மானமுள்ள தமிழனாய் நீ வாழ்ந்ததற்கும் எவருக்கும் அஞ்சாத ஈழவனாய் நீ வாழ்ந்ததற்கும் உமக்கு எங்களால் நன்றிக் கடன் தீர்க்க முடியுமா? மறைந்தாலும் வாழ்பவனே.
எம் இனத்தின் விடிவிற்காக தனியொருவனாக நின்று குரல் எழுப்பிய தமிழ்ப் பெருந்தகையே, அகதிகளாக இதுவரை வாழ்ந்த எம்மை அநாதைகளாகவும் தவிக்க விட்டு சென்றதேனோ! எம் இனத்திற்கும் விமோசனமே இல்லையென இறைவன் முடிவெடுத்துவிட்டதனால் தான் உங்களைத் தன்னுடன் அழைத்துவிட்டான் போலும்.
மறைந்த தமிழ் மகாத்மாவுக்காக களுத்துறைச் சிறைச்சாலைக் கைதிகள் 2000
தமிழ் மக்களின் வாழ்வு ஓங்கவே என்றும் ஈடில்லா உங்கள் உடல், ஆவி பொருள் எத்தனை உயர்வாக உன்னத தமிழுக்குக் கொடுத்து உரிமைக்குரல் விடுத்த உத்தம சீலரே தமிழர்களின் தன்மானம் காத்த தகையே, பாடுபட்டு உழுதாலும் இனி எங்களால் ஈடு செய்ய முடியாது உங்கள் புனித இடத்தை. இடுக்கண் வந்தபோதும் இடறாமல் தரணியெங்கும் மிடுக்கோடு நடைபோட்ட அஞ்சனா மைந்தரே! நாடு கேட்டீர்கள்! தமிழ் மக்களுக்குச் சரி சமத்துவமாக கோடு போட்டு வந்தீர்கள் பைந்தமிழ் உரிமைக்காக. தடைகள் பல அகற்றி தமிழ் மக்களுக்கெல்லாம் குடையாக நிழல் கொடுத்த தமிழ் ஞான மரமே கொடையாக உயிரையும் கொடுத்துச் சென்றீர்களே.இப்போது முடையாகிவிட்டது எங்கள் முழுமனதும் ஐயா.
யுத்தங்களால் நசிந்துபோன இத்தரணியில் மலர்ந்த பத்தாயிரம் ஆண்டென்ன இம்மண்ணிலே இனிமேல் பத்தாயிரம் ஆண்டுகள் மலர்ந்தாலும் மறைந்த குமார் தான் வித்திட்ட மலர்ந்திடுவாரோ? விடையறியோம் பரா பரமே.
தமிழ்த் தேசிய இனம் என்றும் மறக்காத நினைவுகள்.
துன்பத்தின் மடியிலே துயரத்தின் பிடியிலே வாடி நின்ற தன்னவரைத் தேற்றிவாழ வைக்கத் துடித்தோடி வந்த தொண்டன் அவன்.
செல்வமும் செல்வாக்கும் மிக்க இல்லத்தில் தோன்றியபோது இல்லாமையினால் இயலாமையடைந்தோரை மறக்காத செழித்த தமிழ் நெஞ்சம் அவன்.
தமிழினத்தின் அழுகுரல் கேட்ட இடமெல்லாம் விரைந்தோடி அவர்கள் கண்ணீரைத் துடைத்த அன்பின் தளிர்க்கை அவன்.
அனைத்துலகும் பறந்து தமிழினத்தின் துயரங்களை ஆர்ப்பரித்த அறத்தின் சங்கம் அவன்.
ஈழத்தமிழினத்தின் விடுதலையே தனது பேச்சாக தனது மூச்சாக, தனது வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்த ஈடிணையற்ற தமிழன் அவன்.
விடுதலையை நாடிநின்ற தன்மானத் தமிழனுக்கு நம்பிக்கை ஒளியாக அரசியல் வானிலே இடியென முழங்கி நின்ற அஞ்சாவீரன்.அதற்கு ஆயுதம் ஏந்தாமல் தன் பேனா முனை கொண்டு இனத்தின் விடுதலைப் போராட்டத்திற்கு துணை நின்ற நல்லறிஞன் அவன்.
இவர் போன்ற மாமனிதர்கள் பிழைக்க வழிதேடி விடுதலைப் போராட்டத்தில் இறங்கியவர்கள் அல்ல. இவர்கள் காலத்தினால் அழியாதவர்கள் இவர்கள் பெயர்களை, நினைவுகளை, திறவினைகளை வரலாறு என்றும் சுமந்து நிற்கும்.இவர் சாவதில்லை.
நினைவுத் தொகுப்பு:- க.மு.தர்மராசா (14, தை, 2000)
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”