தர்மத்தின் வாழ்வு!
இன்னும் இழக்கப்படாமல் இருக்கும் என் தர்மத்தின் நம்பிக்கையில் இந்தத் துப்பாக்கியுடனான என் உறவின் வாழ்வு நீள்கிறது.
துப்பாக்கிக்கும் எனக்கும் உள்ள உறவின் விரிசலுக்காய் எத்தனை நிகழ்வுகள் எத்தனை நினைவுகள் என்னை நிர்ப்பந்திக்கின்றன. இதை தூக்கிஎறிந்துவிட்டு என்பாட்டிற்கு நடக்காமல் இதனுடனான என் உறவை வைத்திருக்க எத்தனை வலிமை எனக்குத் தேவைப்படுகிறது.
நினைவுகள் அலைக்கழிக்கும் என் மனதை ஒரு நியத்திற்காய் நிலைநிறுத்த ஒவ்வொரு விடியலிலும் எத்தனை தாக்கங்கள் எனக்குச் சாதகமாக்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. என்னை எனக்கே நிறுவிக்கொள்ள வேண்டியிருக்கிறது.
எனக்கும் இந்தத் துப்பாக்கிக்கும் என்ன உறவு? ஏதுமில்லை. எல்லாம் ஏற்படுத்திக்கொண்டதுதான். சூழலின் நிர்ப்பந்தம்; என் வாழ்வின் நிர்ப்பந்தம்; இதை ஏற்காவிட்டால் எங்களில் எவரும் தன் அடையாளத்துடன் வாழமுடிகிறதா? இல்லை. அந்த இல்லை என்ற உண்மையின் நிர்ப்பந்தம் தான் எனக்கும் என் துப்பாக்கிக்கும் உறவை ஏற்படுத்தியது.
எவரும் ஏற்படுத்திக்கொள்ளாமல் ஏற்பட்ட உறவு இருக்கிறது; வாழ்வின் நியதியாக அதுதான், என்னைப் பெற்றவர்களின் உறவு; என்னுடன் பிறந்தவர்களின் உறவு; நான் நினைக்காமல் என் நினைவுகளில் பிரவாகமெடுக்கும் உறவு. அந்த உறவின் பிரிவையும், பிரிவில் உறவையும் எப்படி விளங்கிக்கொள்ள முடியும் ஒரு விடுதலைப் போராளியாகாமல்.
விடுதலைப் போராளி. இந்தச் சொல்லிற்குள்தான் எத்தனை அர்த்தம். இதன் அர்த்த பரிமாணம் சொல்லிற்குள் சிக்கிவிடக்கூடியதா? ஒருவேளை இது சாதாரணமாக இருக்கக்கூடும்; விடுதலைப் போராளியாக தம்மை கற்பனை செய்து காண்போருக்கு.
கபோதியின் உணர்வுகளை தன் கண்களை மூடி அர்த்தப்படுத்திக்கொள்ளும் இவர்களும் இருந்துவிடக்கூடும். ஒருவேளை நானும் அப்போது அப்படித்தான் இருந்தேனோ என்னவோ. பிரிவில், பெற்றவரின் உணர்வை விளங்கிக்கொள்ள பிள்ளையால் முடிவதில்லை. பிள்ளையின் உணர்வை பெற்றவர்களால் விளங்கிக்கொள்ள முடிவதில்லை. சுயம்தான் நினைவை அசைக்கிறது.
அப்படியிருக்க, இரண்டிற்கும் அப்பால் இருப்பவர்களால் எப்படி முடியும்? அவர்களின் எண்ணங்களை அவர்களின் சுயம்தான் அசைக்கக்கூடும்.
இதன் பிரிவென்ன சாதாரணமானதா? மரணத்தின் எதிர்பார்ப்பிற்கும், உறவிற்கும் உள்ள பிரிவல்லவா இதன் பிரிவு.
பாசத்தின் நினைவுகள் இதயத்தை வலிக்கிறது. இருக்கின்ற திடத்தையெல்லாம் ஒன்றாய்த் திரட்டி விடுதலைப் போராளியாய் இருப்பதற்கு செலவிடுகிறேன்.
எனக்குள் வசப்பட்ட தாக்கங்களால் என்னை நானே நிறுவிக்கொள்கிறேன். என் உணர்வுகள் என்னை இழுத்துச் செல்லாமல் நாளுக்கு நாள் என் நிறுவல்களை வலுப்படுத்திக்கொள்கிறேன்.
என் தாக்கங்கள் ஒவ்வொரு வேளையும் என் உணர்வுகளை வெல்லவேண்டும். இல்லவிட்டால் நானும் என்னால் அருவருக்கப்படும் ‘ஒட்டுண்ணி மனிதர்கள்’ போல் அவர்கள்தான் மற்றவர்களின் சுகங்களை உறிஞ்சிவாழும் மனிதர்களைப் போல ஆகிவிடக்கூடும்.
அது வேண்டாம். அந்த தூஷணை மனிதனாய் நான் இருக்கவே வேண்டாம்.
‘நான் ஆழமறிய முடியாத ஒரு அர்த்த புருஷன்’ என்ற என் நினைப்பே எனக்கு அலாதி சுகம் தருகிறது. மற்றவர்கள் அப்படி நினைக்கிறார்களோ இல்லையோ என் நினைப்பே எனக்குத் திருப்தியைத் தருகிறது. இது போதாதா எனக்கு.
என்னைப்போல எத்தனை மனிதர்கள் இப்படித் தன்னுடன் தானே போராடி ஒரு தேசத்தின் இருளை விடியலை நோக்கி இழுத்துச் செல்கிறார்கள். நிச்சயமான விடியலுக்காக இருளை அதன் எல்லைவரை அசைப்பதற்கு இழப்புக்கள் தவிர்க்கமுடியாததே. இழக்கப்படாமல் அடையப்பெற்றது ஏது? அப்படி ஏதும் இருப்பதாய் எனக்குத் தெரியவில்லை.
இருளில் உழல்வதைவிட விடியலை நோக்கி இருளை அசைப்பது மேல். அதில் என்னை நானே இழக்க நேர்ந்தால், அது விடியல்வரை இழப்புக்களை உறிஞ்சி வாழ்வதைவிட மேல். எப்படியோ நான் மேலானவன் என்ற தர்க்கம் என்னை இயக்குகிறது. என் தர்மம் இதுதான். என் வாழ்வின் ஆயிரம் நினைவுகள் என்னை அலைக்கழிக்கக்கூடும். ஆயினும், ஆதாரமான நியாயம் இன்று இருக்கிறதே அடிப்படைத் தர்மம் இருக்கிறதே அது என்னை இயக்கும்.
ஏதோ ஒரு நாளின் ஏதோ ஒரு செய்தி கூட எப்படிப் போராளியின் இதயத்தை வலிக்கிறது.
‘பாதை மூடிப் பல நாள் ஆகிவிட்டதாம். பாதை திறப்பு சரிவரப் போவதில்லையாம். அதனால் ஊரில் பஞ்சமாம்’ இதெல்லாம் செய்திதான்; மற்றவர்களுக்கு.
போராளிக்கு இது செய்தியாக இருப்பதில்லை. இது ஒரு காட்சிப் பிரவாகமாக இருக்கும். செய்திகளை மனம் காட்சிகளாக்கும். பசித்திருக்கும் என் தம்பி, தங்கையின் முகம், எதையாவது கொடுத்துவிடத் துடிக்கும் தாயின் முகம், இயலாமையில் அலையும் என் தந்தையின் முகம், இருள் வெளிச்சத்திற்கு ஏதுமிடமில்லாத இருள் அவர்கள் என்ன செய்யக்கூடும்? அவர்களால் என்ன செய்ய முடியும்? கேள்விகள், கேள்விகள். உணர்வுகள் கேள்விகளாய் பிரவாகம் கொள்ளும். கேள்விகள் உணர்வுகளை உலுப்பும்.
அவர்கள் வாழ்வார்கள் என்று நம்ப ஆசைப்படுவேன். என் மனதை அப்படி நம்ப வேண்டுமென வற்புறுத்துவேன். இருந்தாலும் இறுதியில் என்னிடம் நானே தோற்று, என் கேள்விகளே என்னைத் தோற்கடித்து அந்தரத்தில் கைவிட்டு விடும் கடமைகளில் மூழ்கி நினைவுகளைக் கலைத்துவிட முயல்வேன்; கரைத்தும் விடுவேன். ஆனாலும் முடிந்துவிடுமா?
ஆறுதலான ஒரு அவகாசம் பார்த்து மீண்டும் மேலெழும் உணர்வுகள், ஒரு விடுதலைப் போராளி நான் என்ற தர்மத்திற்காக ஆயிரம் தியாகங்களை அடுக்கிக் கொண்டே போவேன். ஆயிரம் தர்க்கங்களால் நிறுவி என்னை விடுதலைப் போராளியாய் நிலைநிறுத்திக்கொள்வேன்.
இப்படித்தான், இப்படித்தான் ஒவ்வொரு வேலையும் ஒரு விடுதலைப் போராளி தன்னை நிலைநிறுத்த உணர்வுகளைப் பிழிகின்றான். இதை யார் அறியக்கூடும்?!
ஒவ்வொரு வேளையும் எத்தனை செய்திகள், எத்தனை நினைவுகள் ஒரு போராளியை சோதிக்கக் கூடும். யாராலும் உணரமுடிகிறதா?
அத்தனையையும் ஒவ்வொரு வேளையும் தாண்ட அவன் தன்னுடன் தானே போராட வேண்டியிருக்கின்றதே. இதை உணர முடிகிறதா யாராலும்?
இதனால்தானோ என்னவோ எனக்குள் என்னைப் பற்றிய பெருமை; நான் மேலானவன் என்பதில்.
இது கூடச் சிலவேளை என்னை நான் நிலைநிறுத்த தேவையான நியாயமாக இருக்கக்கூடுமோ? இருக்கலாம்! ஆனாலும் கூட நான் கீழானவன் இல்லையே. அதுபோதும் எனக்கு.
ஒரு தேசத்தின் இருளை விடியலை நோக்கி அசைக்கும் ஆயிரமாயிரம் பேருடனான என் பயணம் ஒரு நாள் இலக்கை அடையும். இருள் என்பதே அர்த்தமிழந்து எங்கும் ஒளிப்பிரவாகம் நிறையும். இருளைச் சுமந்த மக்கள் ஒளிதெறிக்க எங்கும் உலாவருவர். இந்த மண்ணின் பிறப்பு ஒவ்வொன்றும் வாழ்வின் அர்த்தத்தைக் காணும். அப்போது நான் உயிருடன் இருந்துவிடக்கூடுமா? இல்லை! அதற்காய் இன்றே என்னுயிர் வீழ்ந்துவிடக்கூடுமா!
நினைவுகளுடன்:- எழில்
எரிமலை (தை 2000) இதழிலிருந்து தேசக்காற்று.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”