கரும்புலி கப்டன் நாகராணி
||பாதுகாப்பு….
அந்தக் காப்பரண் வரிசை மிகவும் விழிப்பாக இருந்தது. இராணுவம் எந்தக் கணத்திலும் முன்னேறக்கூடும். அப்படி ஒரு முன்னேற்றத்திற்கு அவர்கள் முற்பட்டால் அதை முன்னணியிலேயே வைத்து முடக்க வேண்டும். ஜெயசிக்குறு சண்டையின் புளியங்குளக் களமுனை அது.
புளியங்குளமென்பது சாதாரண ஒரு குளத்தின் பெயராகவோ அன்றி, ஒரு ஊரின் பெயராகவோ இல்லாமல் சிங்களப்படைகளின் அடி நரம்புகளையே அதிரவைக்கும் களமாக மாறியிருந்தது.
முன்னேறுவதற்காக புறப்படும் ஒவ்வொரு சிங்களச் சிப்பாயும் பயப்பீதியால் நடுங்கிய களமுனை அது. புளியங்குளமென்பது புலிகளின் புரட்சிக் குளமென்பதை நடைபெற்ற சண்டைகள் மூலம் விடுதலைப் புலிகளின் படையணிகள் வெளிப்படுத்தி நின்றன.
எத்தகைய சூழல் ஏற்படினும் அந்த இடத்தை இராணுவம் அடித்துப்பிடிக்க விடுவதில்லையென்ற உறுதி எல்லோரிடமும் இருந்தது. அதே உறுதியோடு தான் நாகராணியுமிருந்தாள்.
அவளொரு R.P.G சூட்டாளர். புளியங்குளத்தில் சிங்களப்படைகளின் மனோபலமென்பது அவர்களின் டாங்கிகளில்தான் தங்கியிருந்தது. டாங்கிகள் வெடித்துச் சிதறும் போது கூடவே முன்னேறி வரும் படைகளின் மனோபலமும் வெடித்துச் சிதறிவிடும். அதன் பின் களத்திலே சிங்களப்படைகளைக் காணமுடியாது.
அன்றைய நாளும் அப்படித்தான் எதிரியால் எந்த நேரமும் தாக்கப்படக்கூடிய அந்தப்பகுதிக்குள் அவள் எதிரியின் அசைவை எதிர்பார்த்தபடியிருந்தாள். ஆனால், இன்று எதிரி வருவதாக இல்லை. ஆனால், வந்தது புதிதாயொரு பிரச்சினை. அது இயற்கையால் வந்த சிக்கல்.
வானம் கறுத்து மழைக்கான அறிகுறி தென்பட்ட கொஞ்ச நேரத்தில் மெல்லியதாகத் தொடங்கிய மழை. செல்லச்செல்ல அதிகமாகிக் கொண்டே போனது. மழை பெய்தால் வெள்ளம் தாராளமாக ஓடக்கூடியதும், நிற்கக்கூடியதுமான பிரதேசமது.
மழை நீர் சிறிது சிறிதாக உட்புகத் தொடங்கு கிறது. உட்புகுந்த நீர் ஆரம்பத்தில் நாகராணியின் பாதங்களை நனைக்கின்றன. அவள் தான் நனைவதைப் பற்றிக் கவலைப்படாமல் சு.P.பு உந்துகணைச் செலுத்தியைப் பாதுகாத்துக்கொண்டாள். மழை விடுவதாக இல்லை. நீர்மட்டம் குறைந்து கொண்டே போனது. பாதத்தை நனைத்த நீர் முழங்கால் மட்டத்தைக் கடந்து இடுப்பு வரை சென்று கொண்டிருந்தது.
ஆனால், இதைச் சாட்டாக வைத்து காப்பரணை விட்டுப் பின்வாங்க முடியாது. ஏனெனில் எதிரிகளின் டாங்கிகள் அதிகம் முன்னேறக்கூடிய பகுதி அது. மழையைத் துணையாக வைத்து எதிரிப்படைகளின் கவசங்கள் முன்னேறக்கூடும். அதனால், தண்ணீரைப் பற்றிக் கவலைப்படாமல் அவள் விழிப்பாயிருந்தாள். மழையும் அவளைப் பற்றிக் கவலைப்படாமல் தன்பாட்டில் பொழிந்து கொண்டிருந்தது.
மழை நீர் இப்போது அவளின் இடுப்பைக் கடந்து மேல்நோக்கிச் செல்கிறது. அவளின் கைகள் சோரத் தொடங்குகின்றன. கைகளை ஆற்றுவதற்கு கீழே விட்டால் R.P.G நனைந்துவிடும். அந்தவேளையில் அவளுக்கு உதவி செய்யக்கூடிய நிலையில் கூடவிருந்தவர்களுமில்லை.
ஏனைய பொருட்களைப் பாதுகாப்பதில் அவர்கள் ஈடுபட்டிருந்தார்கள். அதிகரித்த நீர்மட்டம் இப்போது நெஞ்சைத் தாண்டி நின்றது. R.P.Gயைக் கொஞ்சமும் கீழிறக்க முடியாது. பேசாமல் தலையில் தூக்கி வைத்தபடியிருந்தாள். தனக்கு எந்தச்சேதம் வந்தாலும் R.P.Gக்கு எதுவும் நடந்து விடக்கூடாதென்பதில் அவள் உறுதியாயிருந்தாள்.
உடற்சோர்வு அவளது தாங்கு சக்தியைக் கடந்து விட்டபோதும் அது நனைந்து விட்டால் தனது செயற்திறனை இழந்துவிடும். அதனால் ஏற்படக்கூடிய நெருக்கடியைப் புரிந்தவளாய் அன்றைய நாளில் இயற்கையின் சவாலைவென்று தன் ஆயுதத்தைப் பாதுகாத்தாள்.
இந்த மனோதிடத்துடனும், அசையாத உறுதியுடனும் தன் தேசத்தின் மீது வைத்திருந்த ஆழமான நேசத்தின் காரணமாய் அவள் கரும்புலியானாள். அவளின் கரும்புலி வாழ்க்கையென்பது சிங்களத்தின் குகைக்குள் இருந்தது. கரும்புலியாகி சிங்களத்தின் இருப்புக்களை உடைப்பதற்கு பெரும் பலம் சேர்த்த அவள் 25.12.1999 அன்று ஆனையிறவு பெருந்தளத்தினுள் ஓயாத அலைகள் மூன்றின் வெற்றிக்கு அடிக்கல்லாகி வரலாறாகினாள்.
புரட்சிமாறன்.
விடுதலைப் புலிகள் (04புரட்டாதி 2008) இதழிலிருந்து தேசக்காற்று.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”