மேஜர் வில்வம்
விடுதலையின் விழுதெறிந்தவன்…..
நேற்றுத்தான் அவனது வீடுக்குச் சென்றிருந்தேன். ‘முதுமை’ அவரை அந்தப் பனையோலைப் பாயில் கிடத்தியிருந்தது. தன் வாழ்நாட்களின் இன்ப, துன்பங்களை பௌர்ணமி முழுநிலவுப் பொழுதில் மீட்டி அசைபோடும் ஆறுமுகம் ஐயாவுக்கு மனைவி பாக்கியம்கூட அவருக்கெனக் கிடைத்த பாக்கியம்தான்.
“அப்பா” இனிமையான தாழ்வான என் அழைப்பு. என் முகத்துக்கருகாக ‘கரிக்கன்’ விளக்கினை நீட்டியவர் “மங்கிய பொழுதுகளின் படலையைத் திறந்து ‘அப்பா’ என என் மகன் அழைப்பதாய் ஞாபகம்” என்றவாறே கதைக்கத் தொடங்கினார்.
“எப்பையாவது ஒரு பொழுதில் வருவான். ஈரம் பட்டிருக்கும் ‘ரவை’களை துடைத்துத் தருமாறு கூறுவான். உறைப்பாய் இறைச்சியைச் சமையணை என தாயாரிடம் கூறுவான். எங்கிருந்தோ அவனது தொலைத்தொடர்பு சாதனத்துக்கு தகவல் வரும் சமைத்ததை சாப்பிடாமலேயே ஓடிவிடுவான்…………” “உவர் அவனையே நினைச்சு நினைச்சு தேய்ந்து போறார்” தேய்ந்து போயிருந்த அம்மா அப்பாவை ஆறுதல் படுத்தினார்.
அவனுடைய தமையனின் மகளும் அங்கிருந்தாள். அவளது சித்தப்பா இயக்கத்தில் இணைந்ததன் பின் பிறந்த அவள், சித்தப்பாவின் கதைகளை ஏக்கத்துடன் கேட்க – அந்த பிஞ்சு விழிகளின் தேடலின் ஊடாக அவனது வாழ்க்கையைப் பார்க்கிறேன்.
‘முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லம்’ தன் மகனின் புகழுடலுக்கு இறுதியாய் வணக்கம் செலுத்திட, கண்ணீருடன் காத்திருக்கும் தந்தையிடம், “அயா அழாதிங்கோ, உங்கள் மகன் பிறந்ததே போராடத்தான் அவன் இன்னுமொரு பிறவி எடுப்பான்; கலங்க்காதீங்கோ” கலங்கியபடியே கூறிய பாதிரியாரின் உணர்வுகளுக்கூடாகவும் அவன் வாழ்வைப் பார்க்கிறேன்.
அது 1988. இன்னுமொரு அன்னிய ஆக்கிரமிப்பை தமிழர் தேசம் எதிர்த்து நின்ற நேரம். இந்தியப் படையினரின் போர்க் குற்றங்கள், கொடூரங்கள் அவனது விடுதலை உணர்வுக்கு நீரை வார்த்தன.
1988.09 ‘நிலா’ அவனது இயக்கப் பெயர். மாம்பழம், அம்மா, ஜோன், வில்வம் எனக் காலம் இன்னுமதிக பெயரினை அவனுக்கு வழங்கியது.
மன்னார் – 09 படைப்பயிற்சி முகாமில், அவனது தமிழீழ விடுதலைப்போரின் வாழ்வு தொடங்கியது. பால்போன்ற பௌர்ணமி நிலவேதான் அவன் வதனம். பெரியோர், சிறியோர் என்றில்லாது எல்லோருடனும் சரிக்குகுச்சரி அளவளாவும் சுட்டிப்பாங்கு.
“டேய் பூநகரி தெரியுது” என்றால் சட்டென சிரிப்பை அடக்கி காவிப் பற்களை மறைத்துக்கொள்ளும் நாணம். கற்பிக்கப்படும் விடயங்களைக் காதுகொடுத்து ஆழமாய்க் கிரகித்து எழுப்பப்படும் வினா, அந்த ‘நிலா’வைப் பயிற்சி முகாமில் வேறுபடுத்தியே காட்டியது.
“சுரேஸ்! இருபது முத்துக்களை உன் கையில் ஒப்படைக்கிறேன். அவர்களை வைரக்கல் ஆக்குவதும், உப்புக்கல் ஆக்குவதும் உன் பொறுப்பு.” அப்பொழுது மன்னார் மாவட்ட அரசியல் பொறுப்பாளராகவிருந்த சுரேசிடம் கேணல் பானு அப்படித்தான் கூறினார்.
அந்த இருபது முத்துக்களில் வில்வமும் (நிலா) ஒருவன். முதற்பணி ‘அரசியல்’ மன்னார் மாவட்டத்தில் வட்டக்கண்டல் பாலப்பெருமாள்கட்டு, குருவில்வான் என பெரியதொரு பிரதேசத்தின் அரசியல் பணி, இந்த இளம் போராளியின் கைகளில்.
இந்தியப் படையினரின், தேடுதல் சுற்றிவளைப்புக்களில் அகப்படாது போர் புரிந்துகொண்டே மக்கள் மனங்களில் விடுதலை நெருப்பை பற்றவைப்பதும், சமூகக் குறைகளைச் சுட்டுக்காட்டுவது, தட்டிக்கேட்பதும் சவால்கள் நிறைந்த பணிகள்தான். சவால்களை எதிர்கொண்டான்.
பாடசாலை நிகழ்வுகளில் இறுதி நன்றி உரையில் அவனது பெயர் பல தடவைகள் உச்சரிக்கப்படும்.
‘முஸ்லிம் பள்ளி’ நண்பனின் ஈருருளியின் ‘பார்’இல் (Bar) இருந்தபடியே விடுதலைப் போராட்டம் பற்றி விரிவுரை நடாத்துவான்.
இயேசுவின் சிலுவை நிழலில், பாதிரியாருடன் சமூக மேம்பாடு திட்டமிடப்படும். இந்துக்கோவில் திருவிழாக்களில் ஓதபப்டும் மந்திரத்தில் அவனது பெயரும் ஒலிக்கப்படும். வரியா மாணவர்களின் கல்வித் தேவைகளுக்காக அவனது பாதங்கள் கடைப்படிகளுக்கும், வீட்டு வாசலுக்கும் ஏறியிறங்கும்.
கட்டுக்கரைக் குளத்து வாய்கால்வழி நீர் பாய்ச்சுதலில் ஏற்படும் பிணக்குகளிலும் அவனது பிரசன்னம் இருக்கும்.
வில்வம் அந்த அழகிய கிராமங்களின் ஒவ்வொரு வீட்டுக்கும் பிள்ளை – இந்தியப் படையினருக்கு மட்டும் தொல்லை.
1989. மன்னார் குமாணாயங்குள இந்தியப் படையினருக்கெதிரான பதுங்கித் தாக்குதலில் அவனது அசாத்திய துணிச்சல், வேகம், நிதானம் சுரேசினால் அவதானிக்க்கப்பட்டது.
1989.09 மன்னார் அடம்பன் முகாமிலிருந்து நெடுங்கண்டல் நோக்கி காவல் உலாவந்த இந்தியப் படையினருக்கும், கைக்கூலிக் குழுவுக்கும் எதிரான பதுங்கித் தாக்குதலில் கைக்குண்டை நிதானமாய் எறிந்து காலத்தைத் தமக்கு சார்பாய் மாற்றியபோது அவனது சாதுரியம் இனங்காணப்பட்டது.
அவனது பணியில் உயிரைப் பணயம் வைத்து மிகுந்த ஈடுபாட்டுடன், பொறுப்புணர்வுடன் செயற்பட்டாலும் இளவயது குறும்புத்தனங்கள் அப்பப்ப எட்டிப் பார்க்கத்தான் செய்தன.
ஆதரவாளர் ஒருவரின் சாளி (Chaly) உந்துருளியை எடுத்து அடம்பனிலிருந்து மாந்தைக்குச் செல்ல அந்தவேகம் உந்துருளியைச் சேற்றுக் குளத்துக்குள் இறக்க ‘வில்வம் விழுந்திட்டான்’ எனத் தெரிஞ்ச சனம் எல்லாம் ஓடிவர, விசயத்தை விளக்கியவன் உந்துருளியைக் கழுவுவதுபோல் பாசாங்கு செய்ய “தம்பி காலில் இருக்கிற சூவை (Shoo) கழட்டிப்போட்டு கழுவலாமே” சனம் விழுந்து விழுந்து சிரிக்க அவனாலும் சிரிக்கத்தான் முடிந்தது.
தன் பணிகளை அறிக்கைப்படுத்தலில் அவனது புலனாய்வுப் பார்வை, விடயத்தை அலசி ஆராயும்போது இனங்காணப்படும் புலனாய்வுக் கண்ணோட்டம் என்பன, இந்தியப்படை எமது மண்ணைவிட்டு அகற்றப்பட்டிருந்த 1990களில் புலனாய்வுத்துறைக்குள் அவனை உள்வாங்கக் காரணங்களாய் அமைந்தன.
புலனாய்வுத்துறை அவனுக்குப் புதிது, “எந்தத் துறைக்குள் சென்றாலும் அந்த முத்திரை பதிக்கவேணும்” என்ற செய்தி காதில் விழுந்ததும்; விரைவாகக் கடிதம் எழுதி அனுப்பி, புலனாய்வுப் பொறுப்பாளரிடமிருந்து அக்கல்லூரியில் இணைவதற்கான அனுமதியையும் பெற்றிருந்தான்.
படிப்புக்கள் முடிந்ததும் புலனாய்வுப் பணியில் நளனின் உதவிப் பொறுப்பாளராக மன்னார் மாவட்டத்தில் இடம்பெயர்ந்த தமிழ்மக்கள் பெருவாரியாக தங்கியிருந்த மடுப்பிரதேசம் உள்ளிட்ட, மன்னார் பெருநிலப்பரப்பில் தேசத்துக்கெதிரான சவால்களை எதிர்கொள்வது காவல்துறையின் செயற்பாடுகள் விரிவாக்கப்படாத நிலையில் சமூகக் குற்றங்களை, சீரழிவுகளைத் தடுப்பதும் புலனாய்வுப் பணியில் முக்கியமான இலக்குகள்.
அவனது செயற்பாடுகளை நளன் அவர்கள் விபரிக்கையில் “நான் இல்லாத சமயங்களில் மாவட்டத்தில் ஏற்படக்கூடிய எதிரியின் புலனாய்வுச் சவால்களையும், சமூகக் குற்றங்களையும் பகுப்பாய்ந்து. அதன் ஆழங்கண்டு, அதன் சரியான இறுதி வடிவத்தை இனங்கண்டு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளக் கூடியவன் என்ற நம்பிக்கி எனக்கெப்போதும் அவன்மீது இருந்தது” என்றிருந்தார்.
1994, இப்படித்தான் ஒருநாள் வன்னி யாழ் தொடர்புப் பாதையாகக் கிளாலி ஏரி இருந்த காலம். யாழப்பாணத்தில் எமது கண்காணிப்பிலிருந்த படை உளவாளி ஒருவன் கண்காணிப்பிலிருந்து விடுபட்டு வன்னிக்குப் படகேறியிருந்த செய்தி தெரியவர, மன்னார் பெரியமடுவிலிருந்த வில்வத்திடம் அவசரமாய் இத் தகவலினைப் பரிமாற்ற, சனத்திடம் இரவல் உந்துருளியைப் பெற்று சுமார் எழுபத்தைந்து கிலோமீற்றர் ஓடி; கிளாலிக் கரையிலிருந்து படகு நல்லூர் கரையை வந்தடைய முன், நல்லூர்க் கரையில் நின்று உளவாளியை வரவேற்றான்…….
புலனாய்வுப் பணியில் மக்களுடன் தன்னை இணைத்துக் கொள்ளும், பிணைத்துக்கொள்ளும் அவனது செயல் அலாதியானது.
பாடசாலையை விட்டு வீடுகளுக்கு வரும் சிறுவர்கள் பலர் அவனது உந்துருளியிலேயே விட்டு வாசலில் இறங்குவர். அவனிடம் கைவடம் இருக்கும் இனிப்பு வகைகளை சிறுவர்களை ஒன்றுகூடி வழங்கி மகிழ்விப்பான்.
முன்பின் அறிமுகமில்லா வீடுகளுக்குள் ஏற்கனவே நன்கு அறிமுகமாகிப் பரிச்சயமான உறவாய் உள்நூழைவான். சமையல் அறைக்குள் சென்று அடுப்படியில் உணவினைத் தானே போட்டுப் பரிமாறும்வரை உறவு நீளும் காலம் அவர்களின் உறவுகளில் ஒருவனாய் அவனை மாற்றிவிடும். அவனது இவ்வகையான அணுகுமுறை அரசியல் பணி ஆற்றிய தளத்திலிருந்து எழுந்தவை.
இந்த உறவுகளை; ஆதரவாளராக, முகவர்களாக, படகோட்டிகளாக புலனாய்வுப் பணியில் இணைத்தமை அவனது வெற்றிக்கு காரணமாய் அமைந்ததுபோல், ஆதரவாளரின் வீட்டில் கோழிக்கறி உண்பதற்காய், தன் கைத்துப்பாக்கியால் கோழியைச் சுட்டபோது – அந்த ரவை இலக்குத்தவறி அயல்வீட்டுச் சிறுமியைக் காயப்படுத்தியமை. அதனால் கண்டிக்கப்பட்டமை, மற்றும்,
மக்களுடனான உறவில், அவனது அதீத ஈடுபாடு – பழக்கம், பண்பான அணுகுமுறை என்பன, விடுதலை உணர்வு சார்ந்தும், புலனாய்வு நோக்கம் கருதி இருந்து; அவை காதல் வியாயமாக சமூகத்தில் சிலரால் பார்க்கபட்டமை, ‘உறவு நிலையில் அவதானம் கொண்டிருக்கவேண்டும்’ என்ற படிப்பினையை உணர்த்தி நின்ற இன்னுமொரு பக்கத்தையும் தொற்றுவித்ததெனலாம்.
முக்கிய இலக்கொன்றை அழிப்பதன் தேவை கருதி. அவனது திறமையைக் கருத்திற்கொண்டு, அவனது புலனாய்வுப் பணி மன்னார்த் தீவினை மையப்படுத்தியதாக மாறியது.
‘தீவு’ என்றாலே போக்குவரத்துக்கான வழி கடல்வழியாகத்தான் இருக்கும். மன்னார்த்தீவு என்பது சில கிலோமீற்றர் சுற்றளவைக்கொண்ட சிங்களப் படையினரின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி அவர்களின் படைத்தளமாகவே விளங்கும் தீவாகும். தீவினைச் சூழவுள்ள கடல் பிரதேசங்கள் எங்கும் படையினரின் பிரசன்னங்கள், பாதுகாப்பு வெளிகள் காவலரண்கள் தீவிற்குள் தரையிறங்குவதற்கான பயணமே உயிரைப் பணயம் வைத்ததுதான்.
1996, அக்காலபகுதியில்தான் அவனது பயணமும், பணியும் தம்முடைய மக்கள் இருக்கிறார்கள் என்ற ஒரே நம்பிக்கையில் நிகழ்ந்துகொண்டிருந்தன. அமாவாசை இரவில் கடல் கொந்தளிப்பின் நடுவே சிருபடகுகளின் துணையுடன் படையினரின் இரு காவலரண்களுக்கிடையே அவனும் அவன் சகதோழன் கணேசும் இன்னும் பலரும் தரையிரங்குவார்கள்.
அன்றும் அப்படித்தான் தரையிறங்கிய சில மணிப்பொழுதில் படையினரின் துப்பாக்கிகள் சடசடக்கத் தொடங்க, படகினை ஒட்டிய ஒட்டி சுந்தரமணி ரவைபட்டு துடிப்பை இழக்க, தமக்கு ஏற்படக்கூடிய ஆபத்தையும் பொருட்படுத்தாது; நாட்டுப் பற்றாளரான ஓட்டியின் உடலை நீருக்குள் இழுத்துச் சென்று ‘களங்கட்டியினுள்’ பாதுகாப்பாக மறைத்து வைத்திருந்து இரவு புலர்வதற்குமுன் படகேறிய இடத்திற்கே எடுத்து வந்ததை அவனது துணிச்சலுக்கப்பால், விடுதலையை நேசித்து, தாமும் களத்தில் நேரடியாய்ப் பங்கெடுக்க முன்வரும் ‘ஆதரவாளர்’ மீதான அவனது மதிப்பையே புலப்படுத்தியது.
தன் தேசவிடுதலையை நேசிக்கும், இன்னுமொரு நாட்டுப்பற்றாளன், அந்த இளம் வீரர்களை இன்னுமொரு கடற்பகுதியில், மன்னார்த்தீவில் தரையிறக்கத் தொடங்கினார்.
மன்னார் பட்டணத்துள் மக்களுடன் மக்களாய் அவர்கள் உருமாறியிருந்த புலனாய்வுச் செயற்பாட்டில் ஒருநாள்…..
தேனீர்க் கடையொன்றினுள் தன் பொறுப்பாளர் விநாயகத்துடன், தேநீர் அருந்திக் கொண்டிருக்க, தற்செயலாய் படைப் புலனாய்வாளன் ஒருவன், திடீரென உள்நுழைந்து – அவர்களது இருக்கைகருகில் ‘சிகரட்’டினை ஊதித் தள்ளிக்கொண்டிருக்க “எடுத்துக் குடுப்பமா?” (கைத்துப்பாக்கியால் சுடுதல்) எனத் தன் பொறுப்பாளரிடம் பம்பலாய் அவன் கேட்க, அவர்களை நன்கு அறிந்திருந்த, கடைக்கார அம்மாவுக்கு முழி வெளியே வராதகுறை அம்மா இன்னும் அதனை மறக்க முடியாதவராய்.
அவனது துணிச்சல் ‘வெறும் துணிச்சல் அல்ல’ விவேகத்துடன் கூடியதாகவே வளர்ந்திருந்தது.
அன்று, மன்னார் பட்டணத்தில் ‘நகர்’ சுறுசுறுப்படைந்திருந்த பட்டப் பகர் பொழுதில், சிங்களப்படை முகாம்களுக்கிடையே, பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த ‘சாராயக்கடை ஒன்றிற்கு இரண்டு சிங்களக் காவல்துறையினர் (Police) துப்பாக்கிகளுடன் ஜீப் (Jeep) ஒன்றில் வருத்திருந்தனர். அதில், ஒருவன் மது அருந்துவதற்காகக் கடைக்குள் செல்ல மற்றவையன். கடை முகப்பில் காவலுக்கு நின்றான்.
சுருருளியில் வந்த அவன், அதனை நிதானமாக நிறுத்தி இடுப்பிலிருந்த கைத்துப்பாக்கியை எடுத்து. பதற்றமின்றி வைத்த குறியில், காவலுக்கு நின்றவன் சரிந்துவிழ, அவனது சாவினை உறுதிப்படுத்திவிட்டு, சாராயக்கடைக்குள் புகுந்து அங்கு மதுக்கோப்பையுடன் தள்ளாடிய மற்றையவனையும் சுட்டுவிட்டு சிங்களப் படையினரின் பாதுகாப்பு வியூகத்துக்கு ‘தண்ணீ’ காட்டி. அவன் வெளியேறியிருந்தமை, மக்கள் மத்தியில் அவனைக் கதாநாயகனாகவும், படைய புலனாய்வாளர் மத்தியில் ‘எனது கடமை முடிய இன்னும் சில மாதங்கள்தான் இருக்கு – என்னை ஒன்றும் செய்ய வேண்டாம்’ என்று கூறிவிடப்பட்ட அளவுக்கு பயப்பீதியையும் ஏற்படுத்தியிருந்தன.
மன்னார் தீவில், படையினரின் தொலைத்தொடர்புக் கோபுரம் தகர்ப்பு என அவனது தாக்குதல் நடவடிக்கைகள் நீழுகையில்,
அதிமுக்கிய புலனாய்வு இலக்கொன்றை வெற்றி பெறுவதற்காகவும் – அந்தச் செயற்பாட்டுக்காக அவனது பொறுப்பாளர் விநாயகமும் படையினரால் முழுமையான ஆக்கிரமிப்பினுள் உள்ளாக்கியிருந்த மன்னார்த் தீவினுள் சென்று தவிர்க்க முடியாதபடி செயற்பட வேண்டிய தேவையின்பால் செயற்பட்டுக் கொண்டிருந்தமையாலும், தேவை கருதியும், பாதுகாப்புக் கருதீயும் வழிந்த தாக்குதல்களை தவிர்க்கும்படி கட்டளைப்பீடம் கட்டளை வழங்கியிருந்தது.
‘அந்தப் புலனாய்வு இலக்கினை எட்டுவதற்காக – அவனது பணியில், எல்லா மதத்தவர், சமூகத்தவர் மத்தியிலும் களம் அமைத்தான் ஆதரவாளன் ஒருவன் கூறியதுபோல, “சிலர் விடுதலைப் போராட்டத்திற்கு உதவி புரியாதுவிட்டாலும், “காட்டிக்கொடுப்பாளர்” களாக மாறிவிடாதபடி பார்த்திருந்தான்.” அந்த நிலைதான் அவனது நிறைந்த செயற்பாட்டுக்கான பலவழிகளைத் திறந்திருந்தன.
அவனது புலனாய்வுக் கட்டமைப்பினுள், உள்வாங்கப்பட்ட முஸ்லிம் மக்களின் செயற்பாடுகள் நிறைவானவை, பெறுமதியானவை – மறைவானவை.
எதிரியால் கைது செய்யப்பட்டும், தான் கொண்டிருந்த மறைப்பினை, அதி இரகசியத்தை வெளிப்படுத்தாத ‘சிற்றிசன்’ எனப்படும் முகவர் எந்தச் சூழ்நிலையிலும் பிறழாத’ அவனது முகவர் கட்டமைப்புக்கான சான்று.
அந்தக் குடும்பம் படையினரின் முழுமையான ஆக்கிரமிப்பிப் பிரதேசத்தினுள் வாழும் மிகவும் ‘வசதியான’ குடும்பம் ‘முகவரி’ கட்டமைப்பினுள் வராத அவனது ‘ஆதரவாளர்’ பட்டியலுள் அக்குடும்பமும் ஒன்று.
அதிமுக்கிய புலனாய்வுப் பணிக்காக ‘குடும்பத்தையே பணயம் வைக்கும்’ உதவி ஒன்றிற்காக அவர்களை, அவன் நாடிச்செல்ல, “தம்பி, விடுதலைக்காக உங்களைக்கூட இழக்கத் தயாராய் நீங்கள் பணி செய்யிறியள்….. இதைக்கூட நாங்கள் செய்யாட்டி….. உங்களுக்கு எப்போ தேவைப்படுகிறதோ அப்ப வந்து இதை எடுக்கலாம்” – அந்த ஆதரவாளரின் முடிவு; ‘முகவர்’ கட்டமைப்பினுள் வராத, விடுதலையை உளப்பூர்வமாக நேசிப்பவரை அவன் அடையாளம் கண்டிருந்தானா? உருவாக்கியிருந்தானா? என்ற கேள்விகளைத் தந்திருக்கின்றன.
அவனது புலனாய்வுப் பணியில், மேல்மட்டம், கீழ்மட்டம், தொழில், மதம் என்பவற்றுக்கப்பால் விடுதலையின் தேடல் வீச்சைப் பெற்றிருந்தமைக்கு அவனால் அமைப்புக்குள் உள்வாங்கப்பட்ட போராளிகள் சாட்சி.
அவனது புலனாய்வுப் பணியில் போல் ஆவணங்களின் தோவை எத்துணை முக்கியமானது என்பதை நன்கு உணர்ந்திருந்தான். – அதனால் பாதுகாக்கப்பட்ட முகவர்கள் ஆதரவாளர்களை அறிந்திருந்தான். பல மட்டங்களில் இருந்தும், அவனால் சேகரிக்கப்பட்ட ஆவணங்களினால் எட்டப்பட்ட புலனாய்வு வெற்றிகள் அதிகம்.
அவனதும் அவன் தோழன் கணேஸ் உள்ளிட்ட பல போராளிகளின் பலவருட அர்ப்பணிப்புமிக்க உழைப்பினால்; அவர்களால் திட்டமிடப்பட்ட ‘புலனாய்வு இலக்கு’ வெற்றிகொள்வதற்கான தருணம் வந்தபோது “பொதுமக்களின் இழப்புக்கான வாய்ப்புக்கள் உள்ளன” என்ற கட்டளைப்பீடத்தின் மறுப்பின் காரணமாக திட்டம் கைவிடப்பட, தொடக்கப் புள்ளியிலிருந்தே மீண்டும் உழைக்க வேண்டிய தேவை. ‘அதற்காக உழைக்க கைகளினுள் மீண்டும் அவனும் ஒருவனாய்……
11.12.1998 அன்றைய புலனாய்வுப் பணிகளை நிறைவு செய்து மன்னார் செபஸ்ரியார் கோவிலுக்கருகே ஒரு வீட்டில் தங்கியிருக்கையில் ‘சனி விலேஜ்’ (Shanny Village) சிங்களப் படைமுகாம் பொறுப்பதிகாரி அர்ஜீன வீரசிங்க தலைமையில் வந்த படையணி ஒன்றினால் வீடு சுற்றிவளைக்கப்பட “எங்கோ தவறு நடத்திருந்தமை தெரியவர’ அவனும் அவன் தோழன் கட்பன் கணேசும் படுத்திருந்த அறையினுள் முதலில் உட்புகுந்த அர்ஜீன ‘ரோச்’சை அடிக்க, வெளிச்சத்தை முந்திப்பாய்ந்த அவனது கைத்துப்பாக்கியின் ரவை அர்ஜீனவின் முழங்கால் சீரட்டையை உடைத்து, அவன் கீழே சரிய, கைக்குண்டொன்று அந்த அறைக்குள் வெடிக்கிறது. அவனது முதுகுக்குப் பின்னால் படுத்திருந்த கணேஸ் மட்டும் எழுப்பி வெளியே வரக்கூடிய நிலையில் காயப்பட்டிருந்தான். “மச்சான் நீ தப்பிப்போ என்னால் வரமுடியவில்லை’ என்று அவனது இறுதி மூச்சின்முன் அவனது கைத்துப்ப்பாக்கியின் வெடி அதிர்வொன்றும் கேட்டது. அவனது அசாத்திய துணிச்சல் படைப்பிரதேசத்தினுள் வாழ்ந்த பரிச்சயம், அசட்டை அவனை இழக்கக் காரணமாகியது?
“காயங்களுடன் கணேசைக் கண்டதும் ‘வில்வம்’ தப்பிவரவில்லையா?என்ற ஆதரவாளரின் துடிப்பிலும்,
“தம்பி அவன் இருக்கிறான் என்ற நம்பிக்கையில் அவனுக்கு சேர்த்து புதுவருடத்துக்கு உடுப்பு எடுத்தீற்றன்” அவன் இன்னும் வாழ்கிறான் என்ற முகவரின், மறக்கமுடியாத நினைவிலும்.
“அன்று அவன் இல்லையெண்டதும் கோயிலில் தறைவிடப்பட்ட பிள்ளைபோல் ஆனேன்” என்ற அவனது பொறுப்பாளர் விநாயகம் அவர்களது, அவன் மீதான நம்பிக்கையிலும்,
“கோபப்படாமல் அதிகாரம் செலுத்தாமல், அன்பாக மக்கள் மனதை வெல்லும் அவனது பணிவு ஒட்டுமொத்த புலனாய்வுச் செயற்பாட்டாளர்களுக்கான முன்னுதாரணம்.”
இவ்வாறான பண்பாளரிடம் இயல்பாகவே அதகி துணிச்சல் இருப்பது அரிது. விதிவிலக்காக இவனிடம் அந்த துணிச்சலுமிருந்தது.
மறுபக்கத்தில் எதிர்கால புலனாய்வுச் செயற்பாடு கருதி தன் செயற்பாட்டினை அறிக்கைப் படுத்திலும், ஆவணப்படுத்துவதிலும் – மற்றும், திட்டமிட்ட நிர்வாக ஒழுங்கமைப்புக்குள் போராளிகளை வழிப்படுத்துவதிலும் காணப்பட்ட முதிர்ச்சியின்மை, அவனது குறைகலேனலாம். என்று புலனாய்வுப் பொறுப்பாளரின் பார்வையிலும்.
“எமது தாய்நாடு விடுதலைபெற வேண்டும். எம்மைப் பிணைத்திருக்கும் அடிமை விலங்குகள் உடைத்தெறியப்பட வேண்டும் எமது மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழ வேண்டும் இந்த இலட்சியம் ஈடேற வேண்டுமாயின் நாம் போராடித்தான் ஆகவேண்டும். குருதி சிந்தித்தான் ஆகவேண்டும்” என்ற தலைவரின் சிந்தனையிலும்.
பின்னொரு நாளில் அவன் தேடிய இலக்கினை வெற்றிகொண்ட தியாகத்தின் அர்ப்பணிப்பிலும் அவனது வாழ்வு உன்னதமானது.
நினைவுப் பகிர்வு:- சி.மாதுளா.
விடுதலைப்புலிகள் (மாசி 2004) இதழிலிருந்து தேசக்காற்று.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”