கப்டன் றெஜி
விதைத்த விதைகளில் விருட்சமாக எழுந்தவர்……
21.04.87 காலை, ஈழமுரசு பத்திரிகையில் ஒட்டிசுட்டான் படைமுகாம் தாக்குதலில் படையினர் பலர் பலி. 4 மணிநேரத் தாக்குதல். நாற்பதுக்கு மேற்பட்ட மோட்டார்களை போராளிகள் பயன்படுத்தினர். என்ற செய்தியை வாசித்தேன்.
ஒரு ஏ.கே கூட இல்லாமல் நாங்கள் இதே கட்டத்தை எமது சொந்த ஆயுதங்களுடன் தாக்கி வெற்றி பெற்ற அந்த நினைவுகள் என்னுள் எழுந்தன.
ஒட்டிசுட்டான் படைமுகாம் தாக்குதல் வெற்றியில் றெஜியின் பங்களிப்பு பெரிது. அவர் வன்னியில் செயற்பட வந்த காலங்களில் ஏதாவது தாக்குதல் நடத்தவேண்டும் என்த் துடியாகத் துடித்தார். அவர் ஒட்டிசுட்டானில் கண் வைத்தார். அன்றிலிருந்து ஒட்டிசுட்டான் தாக்கப்படும்வரை ஒய்வொழிச்சல் இல்லாது வேலைசெய்தார். ஒட்டிசுட்டான் தாக்குதல் பற்றி கதைக்கும் போது பையன்கள் றெஜி அண்ணாவைப் பற்றி கட்டாயம் குறிப்பிடுவார்கள்.
பொதுவாக றெஜி அண்ணாவைச் சந்திக்கும் பையன்கள் பயப்படுவார்கள். ஏனெனில் தன்னைப் போலவே எல்லோரும் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கும் தன்மை இவரிடமிருந்த்து.
றெஜி கட்டுப்பாட்டைப் பற்றி எமது மூத்த உறுப்பினர்கள் கதைக்கும் போது முன்பு இயக்கத்தில் சேருவது மிகக் கஷ்டம் ஒவ்வொருவரையும் நீண்ட காலத்தின் பின்னரே முழு நேர உறுப்பினராகச் சேர்த்துக் கொள்வார்கள். பகுதிநேர உறுப்பினராக இருந்த றெஜின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. பின்பு, றெஜிக்கு சிங்கப்பூர் போக சந்தர்ப்பம் கிடைத்தது. றெஜி நிலைமையைச் சொல்லி தன்னை முழு நேரமாகச் சேர்த்துக்கொண்டால் தனது பயணத்தை ரத்துச் செய்வதாக கூறினார்.
தகப்பன் இல்லாத குடும்பம், வீட்டிற்காக உழைக்க வேண்டி தேவையும் இருந்தது. எப்போதும் தன்னை சேர்ப்பதாக சொல்லுகிறார்களோ அப்போதே உடனே நான் வந்துவிடுகிறேன். என்று றெஜி சொன்னார். அந்தக் காலத்தில் இயக்கக் கட்டுப்பாடுகளைப் பற்றி கொஞ்சம் கூடுதலாகச் சொல்லி வைப்பது வழக்கம் எனவே அங்கே கண்டபடி படம் பார்க்கக்கூடாது என்றெல்லாம் அறிவுறுத்தப்பட்டது. றெஜி இயக்கக் கட்டுப்பாடு என்பதற்காக ஒரு படம் கூடப் பார்க்காமல் இருந்திருக்கிறார். றெஜி வந்ததும் கட்டுப்பாட்டைப் பற்றிச் சொன்னவர் “றெஜி சும்மா ஒரு கதைக்குச் சொன்னால் நீ அப்படியே இருந்துவிடுவதா?” எனக் கேட்டார் என்று குறிப்பிடுவார்கள்.
சிங்களக் குடியேற்றங்கள் றெஜிக்குச் சினத்தை கொடுக்கும் சமாச்சாரம். எனது மண்ணை படிப்படியாக அபகரிக்கும் திட்டத்தை தவிடு பொடியாக்க வேண்டும் என் றெஜி அடிக்கடி சொல்வார். இதற்கான நடவடிக்கைகளை இவரே மேற்கொண்டார்.
கொக்கிளாய் தாக்குதலில் காயப்பட்ட நிலையிலும் வீராவேசமான இவரது தாக்குதல்களைக் கண்டு நாம் மெய் சிலிர்த்தோம். புதிய புதிய இராணுவ யுத்திகளைக் கையாள்வதிலும் இவரது கவனம் எப்போதும் இருக்கும்.
அன்றொருநாள், ஆமி வந்திருக்கிறார்கள் என்று மக்கள் தகவல் தந்தனர். றெஜி அண்ணாவோடு இன்னும் சில பையன்கள் இருந்தார்கள். பையன்கள் தாங்கள் சென்று பார்த்துக் கொண்டு வருவதாகச் சொன்னார்கள். இவர் “தான் சென்று பார்க்கிறேன் பிரச்சனையில்லை என்றால் அதற்குப் பிறகு நான் வந்து உங்களைக் கூட்டிக்கொண்டு போகிறேன்” என்று சொல்லிவிட்டு போனார். பையன்களைப் பலி கொடுக்க விரும்பால் ஏதாவது நடந்தாலும் அது தனக்கு நடக்கட்டும் தனது உயிரை பணயம் வைத்து முன்னே சென்றார்.
மறைந்திருந்த இராணவம் முற்றுகையிட்டது நாங்கள் புலிகள் என்பதை செயலில் நிருப்பித்தார் றெஜி. அவர் தன்னை இம்மண்ணுக்காக அர்ப்பணித்துக் கொண்டார்.
இன்று கூட கட்டுப்பாட்டைப் பற்றி கதைக்கும் போது றெஜி அண்ணாவைப் பற்றி எல்லாரும் குறிப்பிடுவார்கள்.
பழைய, பழைய உறுப்பினர்களை இழந்த போதிலும் எமது போராட்டம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து கொண்டே சென்றது. இந்த மூத்த உறுப்பினர்கள் விதைத்த விடுதலை விதைகள் பெரும் விருட்சமாக மாறிவந்தன.
கப்டன் றெஜி அவர்கள் 02.012.1985 அன்று “இதயபூமி” மணலாறு கோட்டத்தில் பட்டிக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் பதுங்கியிருந்து தாக்கியதில் காயமடைந்து அதன்பின் சயனைட் உட்கொண்டு வீரச்சாவடைந்தார்.
ஈழமுரசு (05.07.1987) இதழிலிருந்து………
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”