அனல்களை ஈன்ற அன்னை………
ஏதிலிகள் குடியிருப்பு. சிறிய குடிசை. நிமிர்ந்தால் தலையில் இடிக்கும்.
வாசலில் மூதாட்டி ஒருத்தி நிற்கிறாளே! நில்லுங்கள்; சற்றுக் கிட்டவாகச் சென்று உற்றுப் பாருங்கள்.
கருமையான நிறம், தளர்ந்த நடை. இந்த நாட்டின் விடுதலைக்காகப் போராடப்புறப்பட்ட குழந்தைகளுக்காக உழைத்துழைத்து , ஓடாய்ப்போன உடல். ஒளிநிறைந்த கண்கள். ஏதோ இனந்தெரியாத தூய்மை…… பிரகாசம்…… கையெடுத்துக் கும்பிடுங்கள்.
உண்மைதான். அவள் வணக்கத்திற்குரியவள்தான். ஏனென்றால் இந்த நாட்டின் விடியலுக்காக தன் மகவுகளில் மூவரைத் தந்த வீரத் தாய் அவள்.
அது மன்னாரில் விடுதலைப் போராட்டம் வளர்ச்சியடையத் தொடங்கிய ஆரம்ப நாட்கள்.
1984 ஆவணித்திங்கள், மன்னார் மூன்றாம்பிட்டியில் இராணுவ வண்டி ஒன்று சிதறியது. மன்னார் மண்ணுக்கு புலிகளின் வருகை அப்படித்தான் ஆரம்பமானது.
தாக்குதலைத் தொடர்ந்து காட்டுக்குள் மறைந்த புலிகளில், அம்மாவின் மகன்களில் ஒருவனான பீரிசும் இருந்தான். அம்மாவைப் போலவே கருத்த நிறம். செந்தளிப்பான சிரித்த முகம். பழகும் பொழுது எவரையும் கவர்ந்துவிடும் அமைதி.
பரப்புக்கடந்தானில்தான் புலிகளின் தங்ககம் இருந்தது, ஏனெனில் அது பீரிசின் இடம். வறிய கல்லுடைக்கும் மக்கள் கூட்டத்தைக் கொண்ட காட்டுப்புறக் கிராமம்.
அந்த வறிய மக்களைப் பொறுத்தவரை, புலிகள் அவர்களின் புதல்வர்கள். அப்போதெல்லாம் அம்மா வீடும் ஒரு தங்ககம்தான்.
அம்மா, அப்பா, அக்கா, அண்ணா, தம்பிகள் எவருக்குமே ஓய்விருப்பதில்லை.
நீண்ட அலைச்சலின் பின் களைத்து விழுந்து வரும் போராளிகள், ஒரு மூலையில் சரிவார்கள். அம்மாவும், அக்காவும் சமையற்கட்டுக்கு ஓடுவார்கள். ஐயா காட்டுக்குப் போவார். இன்னும் சிறிது நேரத்தில் அவர் உடும்புடன் வருவார். சின்னண்ணன் பாண் வாங்கிவருவான். நேற்று எடுத்து சேமித்துவைத்த தேனை எடுத்துத் தருவான். சின்னத்தம்பி அன்பு பால் எடுக்க ஓடுவான்.
இப்படி அந்த வீடும் போராட்டத்தின் ஒரு வடிவம்.
பரப்புக்கடந்தானில் உள்ள பாடசாலையில் மூன்றாம் தரத்துக்கு மேல் வகுப்புகள் இல்லை. மூன்றாம் தரம் அல்லது அயலூரில் உள்ள பாடசாலையில் ஐந்தாம் தரம் – அதற்குமேல் அங்கு ஒருவரும் படிப்பதில்லை. ஏனென்றால் கல்லுடைக்கும் தொழில் அவர்களுக்காக காத்திருக்கும்.
அம்மாவின் பிள்ளைகளும் அந்தக் கிராமத்து வாழ்க்கைக்கு உட்பட்டவர்கள்தான். ஆனால் பீரிஸ் மட்டும் எப்படியோ வேறுபட்டிருந்தான். பரப்புக்கடந்தானில் மூன்றாம் வகுப்பு வரை கற்றான். அதன் பின்பு சாதாரணதரம், உயர்தரம் என நகர்ப்புறப் பாடசாலைகளுக்கும் சென்று படித்தான்.
பீரிசுக்கு காடும் தெரிந்திருந்தது, நகர்ப்புறங்களும் நன்றாகப் பழக்கப்பட்டிருந்தன.
மறைந்து வாழும் போராட்ட வாழ்க்கைக்கு அவனது அனுபவம் மிகவும் உதவியது.
சாரத்துடன் ஒரு தலைப்பாகையும் கட்டிக்கொண்டு வியாபாரியாக, விவசாயியாக, கூலிக்காரனாக மன்னார் மாவடத்தின் கிராமங்களிற்குள் பீரிஸ் வந்துவிட்டுப் போவான். மக்கள் அவனை அடையாளம் கண்டுகொள்வார்கள். ஆனால், ஒருபோதுமே தம்மைக் கடந்து செல்லும் அந்தக் கல்லுடைக்கும் தொழிலாளியை இராணுவத்தினர் அடையாளம் காணவே இல்லை.
காட்டிற்குள் முகாம் அமைப்பதற்கும், கிராமங்களில் அரசியல் வேலைகளுக்கும், இராணுவ நடவடிக்கைகளுக்கும் பீரிஸ் தேவைப்பட்டான். அவன் ஓய்வெடுப்பதில்லை; சலிப்பதுமில்லை.
மின்னி முழங்குவது போல் இராணுவத்தினர் மீதான தாக்குதல் முடிந்திருக்கும்; அதன்பின் அவ்விடத்தை விட்டு நீண்ட தூரம் மிக விரைவாக மாறவேண்டும். பீரிஸ்தான் வழிகாட்டி.
01-02-1985, பள்ளமடு. எமது அணியொன்று இடம்மாற வேண்டியிருந்தது. வழமைபோலவே பீரிசும், ஜெரால்டும் முன்னால் நடந்தார்கள்.
காட்டு மரங்களுக்குள் படுத்திருந்த இராணுவத் துப்பாக்கிகள் வெடித்தன.
பின்வாங்கி ஆளுக்காள் மாறி மீண்டும் ஒன்றாகச் சேர்ந்தபொழுது, பீரிசையும் ஜெரால்டையும் இழந்துவிட்டோம் என்பது தெரிந்தது.
அம்மாவிற்குச் சொல்லவேண்டும். தோழர்களில் சிலர் அம்மா வீட்டுக்குச் சென்றார்கள். இதயத்தில் துயரம் படிந்திருந்தது; வாய் அடைத்துப் போயிருந்தது. இழப்புக்கள் எப்போதுமே கொடியவை; தாங்க முடியாதவை.
‘எப்படிச் சொல்வது……..?’
மௌனமாக இருந்தார்கள். அம்மா சோகம் படிந்த முகங்களைப் புரிந்துகொண்டாள். ஆனால் ஏன்…..?
“வேற பெடியளும் வருவானுகளா?, எத்தனை சுண்டு அரிசி போடுறது?”
அம்மா தட்டுத் தடுமாறிக் கேட்டாள்; அப்பா காட்டுக்கு ஓடினார்; தடுத்து நிறுத்தினார்கள்.
“அம்மா…… பீரிஸ் ……”காற்றில் துன்பம் படர்ந்தது. மன்னார் மண் அழுது ஓய்ந்தது. அம்மா ஓயவில்லை (தன் மகனின் உடலைக்கூட அவளால் பார்க்க முடியவில்லை). அவளால் துயரத்தைத் தாங்க முடியவில்லை.
அந்த மண்ணில் போராட்டம் துளிர்விட வீழ்ந்த ஆரம்ப விதைகளில் அவர்களும் இருவர்.
இயக்கம் வளர்ச்சி காணத் தொடங்கியது. பல நூறு இளைஞர்கள் பயிற்சிக்கு வரத் தொடங்கினர். காட்டின் விளிம்பில் நின்ற புலிகள் கிராமங்களுக்கும், நகர்ப்புறங்களுக்கும் பரவத் தொடங்கினர்.
அம்மாவின் வீடு பழையபடி இயங்கத் தொடங்கியது. அம்மாவும் அக்காவும் சமைப்பார்கள். அப்பா காட்டுக்கு ஓடுவார். அண்ணன்களுக்கும் தம்பிகளுக்கும் ஓய்விருப்பதில்லை.
பீரிசுடன் சேர்ந்து வரும் பழைய முகங்களைப் பார்க்கும்பொழுது, அம்மாவின் இதயத்தில் சட்டென்று ஒரு தாக்கம் விழும்; ஆனாலும் அம்மா சமாளித்துக் கொள்வாள். அவளுக்கு எல்லோருமே பிள்ளைகள் தான்.
சின்னச் சிரிப்புடன் வேலைகளைத் தொடர்வாள். இந்நேரத்தில் பீரிசின் தம்பிகளில் ஒருவனான பீற்றர், தானும் பயிற்சிக்குச் செல்ல வேண்டும் என்று அடம்பிடித்தான்.
பீரிசை இழந்து ஒன்றும் அதிகமான நாட்கள் செல்லவில்லை. அதற்குள் பீற்றரின் பிரிவை அம்மா தாங்குவாளா……? “நீ இப்போதும் போராளிதான், இங்கு எங்களோடு நின்று வேலையைச் செய்” என்றனர் தோழர்கள். அவன் கேட்பதாக இல்லை.
அப்போதைய மன்னார் தளபதி விக்ரர் அண்ணா, அவனுக்கு ஒரு ஏ.கே.47 துப்பாக்கியைக் கொடுத்தார். “இதை நீயே வைத்துக்கொள்; கிராமத்தில் வெளிவேலை செய்பவர்களுடன் நில்” எனச் சமாதானம் செய்துவைத்தார்.
அவன் ஆயுதத்துடன் பரிச்சயப் பட்டான். அதைக் கழற்றிப் பூட்டப் பழகினான். காலப் போக்கில் சுடவும் பழகிவிட்டான். இராணுவத்தின் அசைவுகளை வேவு பார்ப்பது அவனது வேலையாகிப்போய் விட்டது.
இப்படித்தான் ஒரு காலை நேரம். பரப்புக்கடந்தானை நோக்கி ஜீப்புகளிலும், டிரக்குகளிலும் இராணுவத்தினர் வந்து கொண்டிருந்தனர். பீற்றர் தனியாக நின்றான். உதவிக்கு அருகில் எவருமே இல்லை.
அவன் செயற்பட வேண்டும்; தவறினால் எங்கள் நிலைகளுக்குள் இராணுவத்தினர் வந்துவிடுவார்கள்; எம்மில் சிலரை நாம் இழக்க வேண்டி வரும்; இழப்புக்கள் தாங்க முடியாதவை.
ஓடிச்சென்றான். மரம் ஒன்றின் மறைவில் நிலை எடுத்தான். முதலாவது இராணுவ வண்டி அருகில் வரும் வரை காத்திருந்தான்.
அவனது துப்பாக்கி இயங்கியது; சண்டை ஆரம்பமானது. நூற்றுக்கணக்கான எதிரிகள் தனித்ததொரு பீற்றருடன் …….சிறிது நேரத்தில் அவன் தோழர்கள் வந்தனர்.
அதன் பின்பு, இராணுவத்தினர் அங்கு நிற்க விரும்பவில்லை. அன்று மாலை பரப்புக்கடந்தான் மகிழ்ச்சியில் துள்ளியது. பீற்றரின் வீடும் கலகலப்பாக இருந்தது. “அவன் வீமன் மாதிரி. அவனைப் பிடிக்க ஒருத்தராலும் ஏலாது” அம்மா பெருமையுடன் சொல்லிக் கொண்டாள்.
இந்தச் சம்பவத்தின் பின்பாக பீற்றர் பயிற்சி முகாமிற்குச் சென்றுவிட்டான். பயிற்சி முடிந்தபின் தலைவரின் பாதுகாப்பு அணிக்கு அவன் அனுப்பப்பட்டான்.
மன்னாரில் போராட்டம் வளர்ந்து விருட்சமாகி நின்றது. இராணுவத்தினர் முகாம்களிற்குள் முடக்கப்பட்டனர். வெளியில் கால் வைக்கும் படையினர் திரும்பிப் போக வழியிருக்கவில்லை.
இதனிடையே பீற்றரின் முதலாவது அண்ணனான இராசதுரையும் முழுநேரப் போராளியாக மாறி இருந்தான். இயக்கத்தின் பொருளாதார அபிவிருத்தி வேலைகள் பெரும்பாலும் அவனில்தான் தங்கி இருந்தன.
பல ஏக்கர் பரப்பளவில் வேளாண்மை செய்தான். இரவும் பகலும் வயல்வெளிக்குள்ளேயே விழித்திருந்தான். மற்றைய வேலைகளிலும் அப்படித்தான். அதற்குள் சண்டை என்றதும் வந்து நிற்பான்; தானும் பங்குகொள்ள வேண்டுமென்று சண்டை பிடிப்பான்.
அவனை எப்படி அனுமதிக்க முடியும்?
அவனது ஒரு தம்பியான பீரிஸ் வீரமரணமடைந்திருந்தான். மற்றைய தம்பியான பீற்றரும் தாக்குதற்களங்களில் முன்னுக்கு நின்றான்.
பெரும்பாலும் இராசதுரைக்கு சந்தர்ப்பங்கள் கிடைப்பதில்லை. ஆனால் ஒரு தாக்குதலின் பின்னணி வேலைகள் முழுவதும் அவன் தலையிலேயே இருக்கும். அப்படி இருந்தும் ராதா அண்ணையுடன் சென்று, யாழ்.தொலைத்தொடர்பு நிலையத்திலிருந்த மினிமுகாம் மீதான தாக்குதலில் பங்குபற்றிவிட்டு வந்தான்.
பூநகரி கோட்டை இராணுவ முகாம் தாக்குதலுக்குத் திட்டமிட்ட பொழுது, மன்னாரிலிருந்து வந்து சேர்ந்த பீற்றரும் இருந்தான்; இராசதுரையும் இருந்தான். இருவருமே தாக்குதலில் பங்குபற்ற வேண்டும் என்று நின்றனர்.
தவிர்க்க முடியவில்லை. அந்தத் தாக்குதலில் இருவருமே பங்கு பற்றினார்கள்.
அம்மாவுக்குத் தன் பிள்ளைகளை நினைக்கப் பெருமையாக இருந்தது. அவளுக்கு எல்லோரும் பிள்ளைகள்தான்.
இந்தியப் படைகளுடனான போர் ஆரம்பமான பொழுது, பீற்றரும் இராசதுரையும் மிகவும் தேவையானவர்களாக இருந்தார்கள். கிராமங்களிலும் காடுகளிற்குள்ளும் அடிக்கடி இந்தியர்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. சண்டையின் பின்பு இடம்மாறிச் செல்லவேண்டி இருந்தது. அண்ணன் தம்பி இருவரும் வேறுவேறு முனைகளில் நின்றனர். அந்தக் கடினமான நாட்களில் அவர்களிருவரும்தான் வழிகாட்டிகள்.
காட்டிற்குள் வாழ்ந்தாலும் உணவுக்காக எப்படியோ கிராமங்களிற்குள்தான் வரவேண்டியிருந்தது. அம்மாவின் வீடோ இரவில் மட்டும் இயங்கும் அதிசயத் தங்ககம். அநேகமாக அந்த வீடு இரவுகளில் உறங்குவதில்லை. நீண்ட நாட்கள் அந்த வீடு அப்படித்தான் இருந்தது. காலப்போக்கில் தேசவிரோதிகளும் இந்தியர்களும் அங்கு அடிக்கடி வரத்தொடங்கினார்கள். ஓடி ஒளிப்பதும் திரும்பி வருவதும் அவர்களின் வாழ்க்கையானது.
1988 ஐப்பசித் திங்கள், இரவு பீற்றரும் அவன் தோழர்களும் இராணுவத்தினர் வரும் பாதையில் பொறிவெடிகளைப் புதைத்துக் கொண்டிருந்தார்கள். பொறிவெடி ஒன்றின் தவறுதலான முழக்கம்.
பீற்றரை அவன் தோழர்கள் தூக்கி வந்தார்கள். அவனுக்குக் கண்கள் இரண்டும் தெரியவில்லை.
இரவு காட்டுக்குள் இருந்தோம். வைத்தியவசதியில்லை, இதயங்கள் துடித்தன – அவன் காப்பாற்றப்படவேண்டும். அந்த வெறுப்பூட்டும் இரவு எப்படியோ முடிவுக்கு வந்தது.
மறுநாள், பீற்றரை வேறு மாவட்டத்திற்கு வைத்திய வசதிக்காக அனுப்புவதெனத் தீர்மானிக்கப்பட்டது. பீற்றரின் மூத்த அண்ணன் இராசதுரை முன்னால் வழிகாட்டியாக நடந்தான். பின்னால் பீற்றரைத் தூக்கிக் கொண்டு அவன் தோழர்கள் நடந்தார்கள்.
சின்ன வயதில் அவர்கள் ஒன்றாக உடும்புக்கும், தேனுக்கும் நடந்தவர்கள்தான். ஆனால் இன்று …… உயிருக்குப் போராடும் தம்பி…… கண்களை இழந்து……
காடு முடிந்தது. அவர்களை அழைத்துப்போக உழவியந்திரத்தில் வேறு தோழர்கள் வந்திருந்தார்கள். அனைவரையும் ஏற்றிக் கொண்டு அந்த உழவியந்திரம் காட்டுப் பாதைகளின் வழியே ஓடியது.
முன்னுக்கு இருவர் மிதிவண்டியில் வெடிப்பதற்கு தயாராக வைத்திருந்த கைக்குண்டுகளுடன் பாதுகாப்புக்காகச் சென்றுகொண்டிருந்தார்கள்.
வழியில், பற்றைக் கூடலொன்றிற்குள் இந்தியர்களும், தேசவிரோதிகளும் பதுங்கியிருந்தது எவருக்குமே தெரியாது.
மிதிவண்டி கடந்து ஓடியது. வெடிச்சத்தங்கள்……உழவியந்திரம் திசைகெட்டு ஓடி, மோதி நின்றது.
எல்லாமாக பதினொரு தோழர்களை நாம் இழந்திருந்தோம். அம்மாவின் புதல்வர்கள் பீற்றர், இராசதுரை…….
காற்றில் செய்தி பறந்தது. அம்மா ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்தாள். அழுது துடித்தாள். கட்டி அழுவதற்கு அவளுக்கு பிள்ளைகளின் உடல்கள் கூடக் கிடைக்கவில்லை. அதற்காகவும் அம்மா அழுதாள். கடவுளே! இரண்டு பேரும் ஒன்றாக……. அந்த அம்மாவால் துயரத்தை எப்படித் தாங்க முடியும்!
இத்துடன் மூவர் …….அவள் வயிற்றில் பிறந்தவர்கள்……ஒருவரின் உடலைக்கூட……. அம்மா அழுதாள்; அழுது தீர்த்தாள்.
இந்தியர்களுடனான சண்டை தொடர்ந்து கொண்டிருந்தது. அதன் பின்பும், காட்டின் விளிம்பில் ஒரு தலை எழுந்து பீற்றரின் வீட்டை எட்டிப் பார்க்கும்.
அதற்கிடையில் அம்மா பார்த்திருப்பாள். சாப்பாடு அல்லது தேநீர். அம்மா காட்டு விளிம்புக்குக் கொண்டுசெல்வாள். சிறிது நேரத்தில் அந்த இளைய புலிகள் காட்டில் மறைந்துபோவார்கள்.
போராட்டம் வளர்ந்தது; இந்தியர்கள் வெளியேற்றப்பட்டார்கள்; இயக்கம் மிகப் பெரும் அமைப்பாக வளர்ந்தது.
இன்று புதிய போராளிகள் நடந்து கொண்டிருப்பார்கள். ஆச்சி வீதியில் நின்று, வியப்புக் கலந்த மகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருப்பாள்.
யாராவது விசயம் தெரிந்தவன் ஆச்சியைப்பற்றிச் சொல்லுவான். புதியவர்கள் மரியாதையுடன் நிற்பார்கள். ஆச்சியுடன் கதைப்பார்கள்; செல்லங் கொஞ்சுவார்கள்.
எதிரில் நிற்கும் குறும்புக்காரப் புதியவன் ஒருவனின் இரண்டு காதுகளையும் பிடித்திழுத்து, செல்லமாக தலையில் இடிப்பாள் ஆச்சி, தூரத்தில் நின்று அப்பு பார்த்து இரசிப்பார்.
அந்தச் சிறிய குடிசையின் ஒரு பக்கமாக தலைவரின் படம் இருக்கும். மற்றைய பக்கத்தில் மாவீரரான அம்மாவின் பிள்ளைகளின் படங்கள் இருக்கும். தலைவரைக் காட்டி, “இது என் மூத்த மகன்” என்பாள் அம்மா. ஆச்சியைத் தெரிந்த பழைய போராளிகள் பேசாமல் இருப்பார்கள். புதியவர்களோ மகிழ்ச்சியுடன் சிரிப்பார்கள். தனது பிள்ளைகளின் படங்களைப் பார்த்ததும் அம்மாவின் முகம் சட்டெனக் கறுக்கும். ஒரு கணம் கவலையில் தவிப்பாள்; பின்பு சமாளித்துக் கொள்வாள்.
“நீங்கள் எல்லோருமே எனது பிள்ளைகள் தான்ரா” சிரிப்புடன் ஆச்சி தனது பிள்ளைகளை அணைப்பாள்.
சரி, இப்போது சொல்லுங்கள் அந்த வீரத்தாய் வணக்கத்திற்குரியவள் இல்லையா! விலகி நில்லுங்கள்; அம்மா வருகிறாள். அவளுக்கு மரியாதை செய்யுங்கள்.
தன் பிள்ளைகளில் மூவரைப் போராட அனுப்பி, தானும் ஒரு போராளியாக வாழ்ந்து …….இவள் போன்ற அன்னையர்களினால்தான், எங்கள் தேசம் பெருமையுடன் நிமிர்ந்து நிற்கிறது.
நினைவுப்பகிர்வு:- குரு
விடுதலைப்புலிகள் (கார்த்திகை 1992) இதழிலிருந்து தேசக்காற்று.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”