அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே…………
1981ம் ஆண்டு பங்குனி மாசக் கடைசியில் நீர்வேலியில் இடம்பெற்ற வங்கிப் பணப்பறிப்பு நடவடிக்கையினைத் தொடர்ந்து சிறிலங்காவின் சி.ஐ.டி. பொலிசார் எப்படியும் அதில் சம்பந்தப்பட்டவர்களைத் தேடிக் கண்டுபிடித்து விடவேண்டும் என்ற நோக்கில் அலைந்து கொண்டிருந்தார்கள்.
இந்தச் சம்பவத்தினைத் தொடர்ந்து தங்கத்துரை, குட்டிமணி, தேவன் என்கின்ற மூவர் இச் சம்பவத்தோடு தொடர்புடையவர்கள் ( அப்போது நாங்களும் அவர்களும் ஒன்றாக இணைந்து செயற்பட்டுக் கொண்டிருந்த காலம்). தமிழகத்திற்குச் செல்வதற்காக படகேறச் சென்ற சமயம், வல்லிபுரக் கோயிலுக்கு கிழக்குப் புறமாக உள்ள கடற்கரைப் பகுதியில், கள்ளக் கடத்தல் இடம் பெறுவதாகக் கிடைத்த தகவலினைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு தரை வழியாக வந்த வாகனங்களில் வந்திறங்கிய கடற்படையினர் அவர்கள் மூவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டபோது அவர்கள் யாரென சி.ஐ.டி. பொலிசாருக்குத் தெரியாது. பின் பருத்தித்துறைக் காவல் நிலையத்தில் குட்டிமணி அடையாளம் காணப்பட்டதினைத் தொடர்ந்து உடனடியாக அவர்கள் கொழும்பிற்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். அங்கு அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பயங்கர சித்திரவதைகளைத் தொடர்ந்து அவர்களிடமிருந்து சில தகவல்களை சி.ஐ.டியினர் பெற்றுக் கொண்டிருக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் கொண்டு வரப்பட்டனர். ஆனையிறவு தடைமுகாமில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டு, அவர்களோடு தொடர்புடையவர்களை அடையாளம் காண்பிப்பதற்காக பலத்த பாதுகாவல்களோடு குடாநாட்டின் பல பகுதிகளுக்கும் அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
தங்கத்துரை, குட்டிமணி ஆகியோருக்குத் தெரிந்த மறைவிடங்கள் பல மாற்றப்பட்டன. தொடர்புடையவர்கள் பலர் தலை மறைவாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆதரவாளர்கள் பலர் கைது செய்யப்பட்டார்கள்; சித்திரவதைக்குள்ளானார்கள். தொடர்புடையவர்களின் குடும்பத்தவர்கள் பலரும் கூட கைது செய்யப்பட்டும், தாக்கப்பட்டும் கஷ்டங்களை அனுபவிக்க நேர்ந்தது.
சிறிலங்காவின் சி.ஐ.டி. பொலிசார் பகல் வேளைகளில் மாத்திரமன்றி நள்ளிரவு வேளைகளிலும் கூட எம்மவர்களைத் தேடி வேட்டை நாய்களாக அலைந்து கொண்டிருந்தார்கள்.
எங்கள் தலைவரின் தீர்க்கதரிசனமான நடவடிக்கைகள் தான் அன்றிலிருந்து இன்றுவரை, எப்பொழுதுமே எமது இயக்கத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வந்திருக்கின்றது. தலைவரிடம் இருக்கும், பின்னுக்கு நடக்கப்போகின்றவற்றை அப்படியே அச்சொட்டாக முன் கூட்டியே சொல்லிவிடும் ஆற்றல், திறமை, அதற்கேற்ற முறையில் உடனுக்குடன் மேற்கொள்கின்ற பாதுகாப்பு நடவடிக்கைகள், இவைகள்தாம் பல சந்தர்ப்பங்களில் எம்மில் பலரைக் காப்பாற்றியிருக்கின்றது.
தங்கத்துரை, குட்டிமணி ஆகியோரோடு நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரது கைது நடவடிக்கைகளும், சித்திரவதைகள், தேடுதல் சம்பவங்களும் இடம் பெற்றுக் கொண்டிருந்தபோது ஒருநாள் “அண்ணா நீங்கள் என்ன செய்வியளோ தெரியாது. உடனே வீட்டை மாற்றுங்கோ. அடுத்து உங்களிட்டைப் பாய்வான்கள்” என்று தலைவர் என்னை எச்சரித்தார்.
ஒரு சனிக்கிழமை நாங்கள் (நான், மனைவி, குழந்தைகள் நால்வர்) வீடு மாறுறம். அடுத்த செவ்வாய்க்கிழமை (29.04.1981) நள்ளிரவில் நாங்கள் தங்கியிருந்த வீடு சுற்றிவளைக்கப்பட்டு என்னைக் கைது செய்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
வங்கிப் பணம்பறிப்பு நடவடிக்கையோடு சம்பந்தப்பட்ட தங்கத்துரை ஆகியோருக்கு நேரடியாக அடையாளம் தெரிந்தவர்கள் இங்கிருந்தால் அனைவருமே கைதுசெய்யப்பட்டு விடுவோம் என்பதனாலும், ஒரு சில உறுப்பினர்களோடு இயங்கி வந்த இயக்கம் வளர்ச்சி பெற வேண்டுமென்ற நோக்கிலும் எம்மில் சிலர் தமிழகம் சென்று சில காலங்களுக்கு அங்கு தங்கியிருப்பது என முடிவு செய்யப்பட்டது. அந்த முடிவின்படி நானும் தமிழகம் போய்ச் சேர்ந்தபோதுதான் சங்கரை அங்கு சந்தித்தேன்.
சென்னையின் புறநகர்ப்பகுதி ஒன்றில் நாங்கள் வீடொன்றை வாடகைக்கு பெற்று அங்கு தங்கியிருந்தோம். கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் வரை சங்கர் மற்றும் சிலரோடு ஒன்றாக வாழ்கின்ற பேறு எனக்குக் கிட்டியது.
சங்கரைப் பற்றிச் சொல்வதென்றால்……நல்ல கம்பீரமான தோற்றம். சுறுசுறுப்பான நடவடிக்கைகள், தலைவர் மீது அளவு கடந்த விசுவாசம், அதிகம் பேசமாட்டான், இனிப்பு என்றால் கொள்ளை ஆசை.
அந்த நாட்களிலை எங்கட கைச்செலவுக்கு என்று சொல்லி ஒவ்வொருவருக்கும் பத்து ரூபா தரப்படும். அந்தக் காசிலைதான் நாங்கள் எங்கள் தனிப்பட்ட செலவுகளைச் செய்துகொள்வோம். சங்கருக்கு வழங்கப்படும் அந்தப் பத்து ரூபாயிலை அவன் தனக்கென தனியாக எதுவும் செலவு செய்யமாட்டான். பால் கோவா, மைசூர் பாகு உட்பட இனிப்புப் பண்டங்களை வாங்கி வருவான். எங்கள் எல்லோருக்கும் தருவான். நாங்கள் எல்லோரும் சந்தோசமாக சாப்பிடுவோம்.
நாங்கள் தங்கியிருந்த இடத்திற்குக் கிட்ட மலையடிவாரத்தில் இந்திய இராணுவத்தின் சில பிரிவினர் தினமும் துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சி எடுப்பார்கள். எங்களையும் அழைத்துக்கொண்டு சென்று அவற்றை ஆர்வத்தோடு அவதானிப்பான்.
நான் தமிழகம் போய்ச் சேர்ந்தது 1981 ஆனி 7ஆம் திகதி. ஆவணி மாதக் கடைசிவரை அவர்களுடனேயே தங்கியிருந்தேன் .
சிங்களப் பொலிசாரின் கெடுபிடிகளினால் தொடர்ந்தும் நாட்டிலே தங்கியிருக்க முடியாத சூழ்நிலையினால் எனது வீட்டுக்காரரையும் தம்பிமார் தமிழகத்திற்குக் கூட்டி வந்தனர். அதன் பிறகு எங்கள் குடும்பம் பாண்டிச்சேரியிலை தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. எனது மனைவி பிள்ளைகளோடு அங்கு தங்கியிருந்த வண்ணம் தேவைகளின் பொருட்டு எம்மவர்கள் தங்கியிருந்த இடங்களுக்குச் சென்று அவர்களைச் சந்தித்து வருவேன்.
1982 கார்த்திகை 26ம் திகதி……..
அப்போது தலைவர் மதுரையில் இருந்தார். வைகாசி 82இல் சென்னை பாண்டிபஜாரில் உமாமகேஸ்வரனுடனான சூட்டுச் சம்பவத்தினைத் தொடர்ந்து சிலகாலம் சென்னை மத்திய சிறைச்சாலையில் காவலில் வைக்கப்பட்டிருந்த தலைவர் அவர்கள் நிபந்தனையோடு கூடிய பிணையில் விடுதலை செய்யப்பட்டு மதுரையில் தமிழ்நாடு காவல்துறையினரின் கண்காணிப்பில் ‘லாட்ஜ்’ ஒன்றில் தங்கியிருந்தார்.
அன்று தலைவரின் பிறந்தநாள் என்பதற்காக தலைவரைச் சந்திப்பதன் பொருட்டு பாண்டிச்சேரியிலிருந்த எனது கடைசி மகள் தமிழினியையும்( அப்பொழுது அவள் இரண்டு வயதுக் குழந்தை) அழைத்துக் கொண்டு மதுரைக்குச் சென்றிருந்தேன்.
தலைவர் தங்கியிருந்த அந்த அறைக்குள் நான் சென்றபோது அங்கு ஒரே நிசப்தமாயிருந்தது. வழக்கமாக தலைவர் இருக்குமிடம் எப்பொழுதுமே கலகலப்பாக இருக்கும். ஆனால் அன்று அமைதி குடிகொண்டிருந்தது. பல நிமிடங்கள் வரை யாரும் எதுவுமே பேசவில்லை.
அமைதித் திரையை விலக்கிக் கொண்டு “அண்ணா, சங்கர் சூடுபட்டு கொண்டுவந்திருக்கினம். அங்கை கரையிலையும் பிரச்சனையாம். கொண்டுவரப் பிந்திட்டினம். பிழைக்க வைக்கிறது கஷ்டம் போல இருக்கு. நீங்கள் தமிழைக் கொண்டுபோய் வீட்டை விட்டுவிட்டு உடனே திரும்பி வாருங்கோ……”என்றார்.
“ஏதும் நடக்கக்கூடாதது நடந்ததெண்டால் நீங்கள்தான் பொறுப்பேற்று எல்லாம் செய்து முடிக்கவேணும். நீங்கள்தான் ‘றிஸ்க்’ எடுக்கவேணும். நீங்கள் குடும்பமா இருக்கிறபடியா பிரச்சனையள் வராது……” என அவர் தொடர்ந்தார்.
நான் உடனேயே அவ்விடத்தை விட்டு அகன்றேன். மதுரையிலிருந்து திருச்சி, விழுப்புரம் வழியாக பாண்டிச்சேரிக்குப் போய் தமிழினியை விட்டுவிட்டு மீண்டும் மதுரைக்குப் போய்ச் சேர்ந்தபோது மறுநாள் பொழுதுபட்டுவிட்டது.
அங்கு எல்லோருமே சோகமயமாக வீற்றிருந்தார்கள். அவர்கள் உட்காந்திருந்த அந்தக் கோலம் எனக்கு நிலைமையைத் தெளிவுபடுத்தியது.
எதற்குமே கலங்காத எமது தலைவரின் கண்களும் சிவந்து போயிருந்தன.
எமது இயக்கத்தைப் பொறுத்த வரையில் சாவுகள் எமக்கு இப்போது பழக்கப்பட்டுவிட்டன. கொத்துக் கொத்தாக எமது வீரர்களை, வீராங்கனைகளை நாம் இழந்துவிடுகின்ற சந்தற்பங்களிற்கூட, எமது நெஞ்சங்களில் சோகவெள்ளம் ததும்பி வழிந்தாலும் அவற்றை வெளிக்காட்டிக் கொள்ளாதவர்களாக “இவர்கள் மனம் என்ன கருங்கல்லா……?” என மற்றவர்கள் சிந்திக்கின்ற அளவுக்கு நாங்கள் எங்களைக் கட்டுப்படுத்திக் கொள்கின்றோம்.
ஆனால், அன்றைய அந்த நிகழ்வை, சங்கரின் இழப்பை அப்பொழுது எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
திருநெல்வேலிப் பகுதியில் காயப்பட்ட அவனுக்கு இங்கேயே வைத்தியவசதி கிடைத்திருந்தால் சங்கரின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும்.
இயக்கங்களோடு தொடர்புடையவன் என ஒருவன்மீது ஒரு சிறு சந்தேகம் வந்தாலும் உற்றார், உறவினர், உயிர் நண்பர்கள் கூட எம்மை விட்டு ஓடி ஒழிந்த காலமது! பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு உட்பட்ட ஒருவனுக்கு வைத்தியம் செய்ய யார் அப்பொழுது இங்கு முன்வந்திருப்பார்கள்……?
தமிழகத்திலும் அப்பொழுது அதேநிலைதான். இலங்கையைச் சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் கள்ளக்கடத்தல்காரர்கள் எனவும், கள்ளத்தோணிகள் எனவும் கைது செய்து சிறையில் போட்டுவிடுவார்கள். அப்படி இருக்கும்போது, இலங்கையைச் சேர்ந்த ஒரு இளைஞன், அதுவும் துப்பாக்கிச் சூட்டினால் காயப்பட்டவன் என்றால் யார்தான் உதவி செய்ய முன்வந்திருப்பார்கள்…….?
அங்கும் நாங்கள் சுதந்திரமாக நடமாடமுடியாத காலம் அது. 1983ஆம் ஆண்டு ஆடிக்கலவரத்திற்குப் பின்தான் அங்கு நாங்களும் ‘அகதிகள்’ என்ற பெயரிலோ, ‘புலிகள்’ என்ற பெயரிலோ நடமாட முடிந்தது.
காயப்பட்ட சங்கரை தமிழகத்திற்கு கொண்டு வந்தவருக்கு தமிழ்நாடு புதுசு. அவர் கோடிக்கரையில் சங்கரை தங்கவைத்துவிட்டு மதுரைக்கு வந்து தகவல் சொல்லி, மதுரையில் இருந்து எம்மவர்கள் வாகனம் கொண்டு சென்று சங்கரை எடுத்துவந்து தனியார் வைத்தியசாலை ஒன்றில் இரகசியமாக அனுமதிக்க முடிந்தது.
வைத்தியவசதிகள் நேரகாலத்திற்குக் கிடைக்காத காரணத்தினால் சங்கரை எம்மால் காப்பாற்ற முடியாது போய்விட்டது. சங்கரினது உயிரைத்தான் எம்மால் காப்பாற்ற முடியவில்லை. அவனது உடலைத் தன்னும் பூரண மரியாதைகளுடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று தகனம் செய்வதற்குக் கூட இயலாதநிலை.
சங்கரை, தமிழ்நாட்டின் திருநெல்வேலிப்பகுதியைச் சேர்ந்த வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர் எனவும், நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார் எனவும், அவரது உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்கு நிதிவசதி இல்லையெனவும் கூறி, மரணச்சான்றிதழ் ஒன்றினைப் பெற்று, நள்ளிரவு நேரத்தில் யாரோ ஒருவரது அனாதைப் பிணம் போல, அந்தத் தனியார் மருத்துவமனையிலிருந்து பொது வாகனம் ஒன்றில் எடுத்துச் சென்று மதுரையிலுள்ள ஒரு சுடுகாட்டில், பொன்னம்மான், பேபி(இளங்குமரன்), கிட்டு, அப்பையா அண்ணர், கட்சித் தொண்டர்கள் சிலரோடு நெடுமாறன் ஆகியோரோடு நானும் ஒருவனாகச் சென்று தகனம் செய்தோம்.
அப்பையா அண்ணர் அவர்களே சங்கரது உடலுக்குத் தீ மூட்டினார்கள். சங்கரின் அஸ்தி சேகரித்து பாதுகாப்பாக வைக்கப்பட்டு, மறுவருடம்தான் சங்கரது மரணச்செய்தியும் அவனது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டு அஸ்தியும் கையளிக்கப்பட்டது.
சாதாரணமாக உலகில் யாராக இருந்தாலும் சரி, எங்கள் உடலில் எங்கேயோ ஒரு இடத்தில் காயம் பட்டுவிட்டது என்றால் கூட நாங்கள் “ஐயோ அம்மா”என்றுதான் குழறுவோம். ஆனால் சங்கரது உடலைவிட்டு உயிர் பிரிகின்ற அந்த இறுதி நேரத்திலும் கூட, அவனால் எதையுமே புரிந்துகொள்ளமுடியாத அந்த மயக்க நிலையிலும் கூட “தம்பி தம்பி” என்ற வார்த்தைகள்தான் அவனது வாயிலிருந்து வெளிவந்தன(தலைவரை நாம் அப்போது தம்பி என்றுதான் அழைப்போம்).
எமது வீரர்கள் இரத்தம் சிந்தும் போது எமது இதயம் வருந்துகின்றது. எனினும் நாங்கள் உறுதி தளரமாட்டோம். ஏனெனில் இரத்தம் சிந்தாமல் நாம் சுதந்திரம் பெறமுடியாது.
– தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.
ஒவ்வொரு போராளியும் எங்கள் தலைவர்மீது எந்த அளவுக்குப் பற்றையும் பாசத்தையும் வைத்திருக்கின்றார்கள்; நம்பிக்கையோடும் விசுவாசத்தோடும் இருக்கின்றார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
ஒவ்வொரு போராளிமீதும் தலைவர் எந்த அளவிற்கு அன்போடும்,ஆதரவோடும் இருக்கின்றார்; அவர்களது வீரத்தைப் போற்றுகின்றார்; அவர்களது தற்கொடைகளுக்கு எந்த அளவுக்கு மதிப்பும் மரியாதையும் தருகின்றார் என்பதற்கு ‘மாவீரர் நாள்’ ஒரு சான்றாகும்.
எமது இயக்கத்தில் முதல் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட சங்கர் (சத்தியநாதன்) மரணித்த அந்த நாளை, கார்த்திகை 27ம் நாளை மாவீரர்களை நினைவு கொள்கின்ற நாளாக, ‘மாவீரர் நாளாகப்’ பிரகடனம் செய்து 1989இல் இருந்து ஆண்டுதோறும் விழா எடுத்துவருகின்றோம்.
நினைவுப்பகிர்வு:- ஆ. தேவர் அண்ணா
எரிமலை(1993 கார்த்திகை) இதழிலிருந்து தேசக்காற்று.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”