பொத்துவில் படுகொலை
அம்பாறையில் பொத்துவில் பிரதேசத்தில் கடந்த 17 ஆம் திகதி நள்ளிரவு இடம்பெற்ற 10 முஸ்லிம் இளைஞர்களது கோரப் படுகொலை அப்பகுதி சிறுபான்மை இன மக்களை பதற வைத்துள்ளது. பேரினவாதிகளின் திட்டமிட்ட குடியேற்ற பசிக்கு இரையாகிப் போயுள்ள இந்த பத்து இளைஞர்களது குடும்பத்தினர் அழுது புலம்பி வாடிப்போயுள்ளதுடன் தமது எதிர்காலம் எப்படி அமையப்போகின்றது என்ற கேள்வியுடன் துவண்டு போயுள்ளனர்.
அன்றாடம் உடலை வருத்தி உழைத்து குடும்பத்தைக் காப்பாற்றி வந்த இவ்விளைஞர்களின் இழப்பால் அப்பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்தப் பயங்கரச் சம்பவத்தின் பின்னர் ஏற்பட்ட பீதியும் பதற்றமும் பல நாட்களாக தொடர்ந்து கொண்டேயுள்ளன. ஆனால், இதுவரை எந்தவொரு வெளிநாடும் இச் சம்பவத்தை கண்டிக்கவுமில்லை- கவலை தெரிவிக்கவுமில்லை. உள்ளூர் அரசியல்வாதிகள் மாத்திரம் தமது அறிக்கைகளையும் அநாகரிகமான விளக்கங்களையும் கொடுத்து வருகின்றனர்.
இருக்கவே இடமின்றி மிகச் சிறிய ஓலைக் குடிசைகளில் வாழ்ந்த இந்த இளைஞர்கள் தமது குடும்பத்தவரை காப்பாற்ற வேண்டுமென்பதற்காகவே தினமும் கூலி வேலைக்குச் சென்று வந்தனர். சம்பவம் நடைபெற்ற தினமும் தமது ஜீவனோபாயத்துக்கான தொழிலுக்கே சென்றிருந்தனர்.
நடந்தது என்ன?
பொத்துவில் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதியிலுள்ள இரத்தல்குளத்திலிருந்து நீர்ப்பாசனத்துக்காக செல்லும் வாய்க்காலின் துப்புரவுப் பணி வழமைபோல் ஞாயிற்றுக்கிழமை (17.09.2006) காலை 8.30 மணியளவில் தொடங்கியதாகவும் பிற்பகல் 4.30 மணியளவில் வேலையை முடித்துவிட்டு தனது வீட்டுக்கு வர வேண்டிய தொழிலாளர்கள் அன்றைய தினம் வராமையை அடுத்தே அவர்களை தான் தேடத் தொடங்கியதாகவும் குறித்த வாய்க்காலின் துப்புரவுப் பணியை ஒப்பந்த அடிப்படையில் நடாத்தி வந்த ரஹுத் தெரிவித்தார்.
“வழமைபோல ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு எனது வீட்டிலிருந்து தொழிலாளர்கள் மற்றும் நீர்ப்பாசன தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுடன் இரண்டு உழவு இயந்திரங்களில் வேலைத்தளம் நோக்கி புறப்பட்டோம். 8.30 மணியளவில் அங்கு சென்ற நாம் வேலைகளை தொடங்கினோம். முற்பகல் 11.30 மணியளவில் நான் வீட்டுக்கு திரும்பிவிட்டேன்.
ஆனால், பிற்பகல் 4.30 மணியளவில் எனது வீட்டுக்கு வர வேண்டிய தொழிலாளர்கள் வரவில்லை. வழமையாக வேலை முடிந்ததும் கை, கால்களை கழுவி விட்டுத்தானே வருவார்களென பார்த்துக் கொண்டிருந்தேன். ஐந்து ஐந்தரையாகியும் வரவில்லை. உடனே வேலைக்கு தொழிலாளர்களுடன் சென்றிருந்த தொழில்நுட்ப உத்தியோகத்தர்களை கேட்டபோது மூன்றரைக்கே வேலைகளை முடித்து விட்டு தாம் புறப்பட்டு விட்டதாகவும் தொழிலாளர்களும் தமக்குப் பின்னால் புறப்பட தயாராகிக் கொண்டிருந்ததாகவும் சொன்னார்கள். இரவு 7.30 மணியளவில் வேலைத்தளத்தில் இருந்து இரு கையடக்கத் தொலைபேசிகளுக்கும் தொடர்பு கொண்டேன். அவையும் செயற்படவில்லை.
அதையடுத்து, அறுகம்பை விசேட அதிரடிப் படை முகாமில் இவ்விடயம் குறித்து தெரியப்படுத்தினேன். எமது வேலைத்தளப் பக்கமாக எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை. தொழிலாளர்கள் வந்து விடுவார்கள். சாஸ்திரவெளி முகாமுக்கும் தெரியப்படுத்துவோம் என அதிரடிப் படையினர் தெரிவித்தனர். பின்னர் சாஸ்திரவெளி முகாம் பொறுப்பதிகாரிக்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரியப்படுத்தினேன். அவரும் எந்தப் பிரச்சினையுமில்லை தொழிலாளர்கள் வந்து விடுவார்களென்றார்.
பின்னர் இரவு 11 மணியளவில் எமது வேலைத்தளம் நோக்கி சென்றோம். உழவு இயந்திரம் மாத்திரம் நின்றது. ஆட்களை காணவில்லை. ஒன்றரை மணி வரை பார்த்தோம் காணவில்லை. மீண்டும் அருகிலுள்ள சிறு கிராமப்பகுதிக்கு வந்தபோது மூன்றரை மணியளவில் எமது வேலைத்தள பக்கமாக பெருஞ் சத்தமொன்று கேட்டது. ஆள்காட்டி குருவி கத்திக் கொண்டேயிருந்தது. நாலரை மணியிருக்கும் பாணமை வீதியால் இரு `ரோச் லைட்’டுகள் இராணுவ முகாம் பக்கமாக சென்றன. யார் போனதென்று எமக்குத் தெரியவில்லை. காலை 6.30 மணியளவில் எமது தொழிலாளர்களின் உடல்களை கண்டெடுத்தோம். ஆட்டோக்களிலும் உழவு இயந்திரத்திலும் உடல்களைக் கொண்டு வந்தோம்” என்றார் ரஹீத்.
“இவ்வளவு நடந்தேறியபோதும் பொலிஸாரோ அல்லது அதிரடிப் படையினரோ சம்பவ இடத்துக்கு வரவில்லை, குறித்த தொழிலாளர்கள் காணாமல்போனதையிட்டு தேடுதல் நடத்தவுமில்லை. 8 மணியளவில் பொத்துவில் பொலிஸில் முறையிட்ட பின்னரே வந்தனர். உடல்களை எடுத்துக் கொண்டு மக்கள் வரும்போது வீதிகளில் அதிரடிப்படையினர் வந்து நின்றிருந்தார்கள்” என பிரதேசவாசியொருவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.
கொல்லப்பட்ட 10 இளைஞர்களது உடல்களிலும் வெட்டியும் குத்தியும் சுட்டும் கொலை செய்தமைக்கான அடையாளங்கள் காணப்பட்டுள்ளன. மிகக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டே இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த 55 வயதுடைய மீரா மொகைதீன் என்பவரின் கழுத்தில் ஆழமான வெட்டுக் காயம் ஏற்பட்டிருந்ததாக அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதில் ஈடுபட்டிருந்த ஒருவர் தெரிவித்தார். அவருக்கு எழுதத் தெரியாதெனவும் குரல்வளையில் பலமான காயமேற்பட்டுள்ளதால் கதைக்க முடியாதெனவும் தெரிவித்தார்.
இதேவேளை, மோசமான காயத்துடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மீரா மொகைதீனை கல்முனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் காரைதீவுச் சந்தியில் மறித்த இரு வீதி ஒழுங்கு கண்காணிப்புப் பொலிஸார் அம்பாறை வைத்தியசாலையில் அவரை அனுமதிக்குமாறு வற்புறுத்தியதாகவும் வழமையாக அப்பகுதி முஸ்லிம் மக்கள் கல்முனை வைத்தியசாலைக்கே செல்வது வழமையெனவும் அதுவே தமது சுகாதார பிரிவின் கீழ் உள்ள வைத்தியசாலையெனவும் அவர் தெரிவித்தார்.
உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் ஒருவரை வைத்தியசாலைக்கு அவசர அவசரமாக கொண்டு செல்லும் போது இடைநடுவில் பொலிஸார் மறித்து வேறு வைத்தியசாலையில் அனுமதிக்கச் சொல்வது எவ்வளவு கீழ்த்தரமான செயலென கேள்வியெழுப்பிய அவர், மனிதாபிமானமற்ற இந்தச் செயல் மக்களின் சந்தேகத்தை உறுதிப்படுத்துவதாகவும் ஆத்திரத்தை அதிகரிக்கச் செய்துள்ளதாகவும அவர் கவலையுடன் தெரிவித்தார். எழுத, கதைக்க முடியாத நிலையிலுள்ளவர் தமக்கு வாக்குமூலம் கொடுத்திருப்பதாக அரசாங்கம் கதைவிட்டு வருகின்றது.
உயிரிழந்தவர்கள் குறித்து அவர் கூறுகையில், “மிகவும் வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தான் அனைவரும். கொல்லப்பட்டவர்களில் ஒருவர் ஓ.எல் கூட எடுக்கவில்லை. இன்னொருவரும் திருமணமாகி 12 நாட்கள் தான் ஆகியிருந்தது. தமது குடும்பத்தைக் காப்பாற்ற சென்றவர்களின் உயிர்களை அதிரடிப் படைகள் காவு கொண்டு விட்டன” என்றார். அதிரடிப் படைகள் மீதான சந்தேகத்துக்கான காரணங்கள்
இது இவ்வாறிருக்க, கொலை நடைபெற்ற இடம் அதிரடிப் படையினரின் முகாம்கள் பல சூழப்பெற்றிருக்கின்றது. சாஸ்திரவெளி விசேட அதிரடிப்படை முகாம் அருகிலுள்ளது.
`கராட்டி’ என அழைக்கப்படும் அந்த அதிகாரி இந்த முகாம் பொறுப்பதிகாரியான குணரட்ன என்பவருக்கும் அப்பகுதி முஸ்லிம் மக்களுக்குமிடையே நீண்ட நாட்களாக முரண்பாடுகள் இருந்து வந்ததுடன் அந்த இராணுவ அதிகாரியால் பொதுமக்கள் மோசமான வேதனைகளையும் அனுபவித்து வந்தனர்.
`கராட்டி’ என்ற பட்டப் பெயரால் உள்ளூர் மக்களால் இனங்காணப்பட்டு வந்த குறித்த முகாம் பொறுப்பதிகாரி தமிழ், முஸ்லிம் மக்களென்றால் மிருகத்தனமாகவே நடத்துவாரெனவும் இவர் மீன் வாங்க கரைக்கு வந்தால் நல்ல, பெரிய மீனாகப் பார்த்து காசில்லாமல் கொடுத்து அவரை வழியனுப்பி வைக்க வேண்டும். தவறினால் மீன் வியாபாரிகளை கடுமையாக தாக்கிவிட்டுத்தான் செல்வாரென ஒருவர் தெரிவித்தார்.
சிறுபான்மை அப்பாவி மக்களை வெறுப்பாகவே பார்த்து வரும் இந்த இராணுவ அதிகாரி முன்னதாக காஞ்சிரங்குடா விசேட அதிரடிப்படை முகாமில் இருந்ததாகவும் சில வருடங்களுக்கு முன்னர் அங்கு மாணவர்கள் நடாத்திய ஆர்ப்பாட்டத்தை ஆயுதமுனையில் அடக்க முற்பட்டு மாணவர்கள் உள்ளிட்ட 10 பேரை சுட்டுச் சரித்தவரெனவும் இதன் பின்னரே சாஸ்திரவெளி முகாமுக்கு இவர் மாற்றப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.
இதைவிட, பொத்துவில் பிரதேசத்திலுள்ள முஸ்லிம்கள் பயன் படுத்தும் 5 ஏக்கர் விஸ்தீரணமான மையவாடிக்குள் இக்கொலைச் சம்பவத்துக்கு முதல் நாளான சனிக்கிழமை சிங்களவர் ஒருவரின் உடலை அடக்கம் செய்ய சிங்கள மக்கள் முற்பட்டதாகவும் இதையடுத்து அங்கு முரண்பாடுகள் ஏற்பட்டதாகவும் தெரிய வருகின்றது.
இச் சம்பவத்தையடுத்து அங்கிருந்த முஸ்லிம் மக்களை நோக்கி விரைவில் பல உடல்கள் சரியுமென பெரும்பான்மையினத்தவரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், “உங்கள் உடல்களை சவூதி அரேபியாவுக்குக் கொண்டு போய்ப் புதையுங்கள், இங்கே உங்களுக்கு இடமில்லை” என மிரட்டியதாகவும் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார். செய்தி வெளியாகு முன்னரே இடம்பெயர்ந்த சிங்களவர்கள்
இவற்றுக்கு மேலாக அப்பகுதி முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம் என்னவெனில், இந்த 10 இளைஞர்களும் படுகொலை செய்யப்பட்ட செய்தி வெளியில் தெரியு முன்னரே எல்லைப்பகுதி சிங்கள மக்கள் விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்புடன் மூட்டை முடிச்சுகளுடன் இடம்பெயர்ந்து செல்லத் தொடங்கியதுதான். தற்போது சில சிங்களக் குடும்பங்கள் இராணுவத்தினரின் பலத்த பாதுகாப்புடன் கோமாரி எனும் தமிழ்க் கிராமத்துக்குள் படகு மூலம் கொண்டு வந்து தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் எதிர்காலத்தில் இங்கும் புத்தர்சிலை முளைத்து சிக்கல்கள் ஏற்படுமோ என்ற அச்சம் அங்கு துளிர்விட்டிருப்பதாகவும் தெரிய வருகின்றது.
குடியேற்றப் பசிக்கு இரையாகும் அப்பாவிகள்
இதுபோன்ற முரண்பாடுகளுக்கும், கொலைகளுக்கும் அப்பகுதிகளில் உள்ள வில்லத்தனமான இராணுவ அதிகாரிகள் மாத்திரம் தான் காரணமல்ல. நீண்ட காலமாக பேரினவாதிகளாலும் அவர்களின் `துணை ஆக்கிரமிப்புவாதி’களாலும் காலாகாலமாக விழுங்கப்பட்டு வரும் தமிழர் தாயகம் சிங்கள தேசமாக செமித்துக் கொள்ளப்பட்ட பின்னரான ஏப்பங்களும் ஏவறைகளாகவுமே இப்படுகொலைகளும் பதற்றங்களும் வெளிவருகின்றன.
வரலாற்றில் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்குமிடையே கிழக்கில் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன. அவற்றுக்குள் எண்ணெய் ஊற்றிய இனவாதிகள் அவற்றை பரஸ்பர படுகொலைகள் வரை பற்றி எரிய வைத்திருந்தன. இவற்றுக்கு தமிழர் தரப்பு முஸ்லிம் தரப்பு மீதும் முஸ்லிம் தரப்பு தமிழ்த்தரப்பு மீதும் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வந்தன. அந்த வடுக்கள் இரு தரப்புக்குமிடையே காணப்படுகின்றன.
விடுதலைப் புலிகளின் கருத்து
இவ்வியடம் குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் ஜெயா கூறுகையில்;
“1990 களின் பின்னர் அம்பாறையில் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்குமான உறவு மேம்பட்டே வருகின்றது. எமது தேசியத் தலைவர் இரு தரப்பு உறவுகளும் மேம்படுத்தப்பட வேண்டுமென எமக்கு பணித்துள்ளார். இதனடிப்படையிலேயே ஒவ்வொரு போராளியும் செயற்பட்டு வருகின்றனர். சிங்கள பேரினவாதிகள் தமிழர் தாயகத்தை எவ்வாறு ஆக்கிரமித்து வருகிறார்களென்பதை உணர்ந்து முஸ்லிம்களும் தமிழர்களும் ஒன்றுபட்டு எமது தாயகத்தை பாதுகாக்க முன்வர வேண்டும். நாம் ஒன்றுபட்டு வருகின்றோம் என்பதை ஆணித்தரமாக நம்புகின்றோம். முஸ்லிம் மத தலைவர்களுடன் நாம் தொடர்பிலேயே உள்ளோம்” என்றார்.
மேலும், 90 களின் பின்னர் பாலகுடா, ஒலுவில், திராய்க்கேணி, வளத்தாப்பெட்டி, மல்லிகைத்தீவு உள்ளிட்ட 22 தமிழ்க் கிராமங்கள் எமது மக்களிடமிருந்து பறிபோயுள்ளமையை அனைவரும் ஏற்றுக் கொள்வார்களென தெரிவித்த ஜெயா, பேரினவாதிகளின் அராஜகங்களுக்கு முகங்கொடுப்பதற்கு அரசியல்வாதிகளை நம்பாமல் முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களுடன் ஒன்றுபடுவதே சிறந்த வழியெனவும் சுட்டிக்காட்டினார்.
ஆக்கம்: தேசியன்
” தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் “