கப்டன் பிரான்சிஸ்
விடுதலை ஒளியாக, தமிழர் அரசியல் வானில் கப்டன் பிரான்சிஸ்
கல்லாறு மண் ஈன்ற வீரப்புதல்வன்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆரம்பமும், விடுதலைப் போராட்ட எழுச்சியும் 1978 ஆண்டிலும், 1980 களிலும் தீவிரமடைந்திருந்தன…..
…இவ்வெழுச்சியில் தமிழ் இளைஞர் பேரவையின் செயல்பாட்டிலிருந்த பலரும் இணைந்ததன் மூலம் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு மக்கள் மத்தியில் பல்வேறு மட்டத்திலும் ஆதரவும், அனுசரணையும் இருந்ததைக் குறிப்பிடக் கூடியதாகவுள்ளது. ஏனெனில் இவ்விளைஞர்களின் நேர்மையும், புரட்சிகரப் பார்வையும், இனத்தின் மீதிருந்த பற்றும் அளவிட முடியாதளவு மிகுந்திருந்ததைக் காணக் கூடியதாகவும் இருந்தது.
தமிழர் வரலாற்றில் புதிய அத்தியாயமொன்று காலம்பிந்தி எழுதப்படுவதற்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் எழுச்சியும், விடுதலைக்கான போரும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததோ அந்த வகையில் இயக்கத்தின் உறுப்பினர்களாகச் செயல்பட்ட போராளிகளின் செயல்பாடுகளும் கணக்கிட முடியாதளவுமிருந்தன.
காலத்தால் அழியாத விடுதலைக்கான போர்க்காவியம் ஒன்று உலகத்தில் எழுதப்பட்டு இனிவரும் காலங்களில் தேசிய இனங்களின் விடுதலையில் முக்கியமாக எடுத்துக் கொள்ளக்கூடிய நிலையில் போராட்ட பாரம்பரியத்தை ஏற்படுத்திய விடுதலைப் புலிகள் இயக்கமும், போராளிகளும் என்றும் நினைவு கூரப்படும் நிலையில் எதிர்பார்க்கமுடிகின்றது.
மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் அரசியல்துறைப் பொறுப்பாளர் கப்டன் பிரான்சிஸ் (சடாச்சரபவன்) 1985 ம் ஆண்டு காலப்பகுதியில் தளபதி அருணா அவர்களினால் நிருவாக ஒழுங்கமைப்பில் இந்தப் பொறுப்பு பிரான்சிஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. இப் பொறுப்புக்கான பணியமர்த்தலில் தேசியத் தலைவர் அவர்களின் விருப்பமும் தளபதிக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்தது.
“அரசியல்” என்ற சொல்லின் அர்த்தம் தேசிய விடுதலைப் போராட்ட இயக்கமான விடுதலைப் புலிகளின் கொள்கையில் மக்களுக்கு சேவை செய்வதன் மூலம் இலட்சியப்பற்றுடன் கூடிய உணர்வுகள் உணர்த்தப்பட்டு மக்களை அணிதிரட்டி விடுதலையை பெற்றுக்கொள்வதே என்பதாகும். இந்த வகையில் நாடு கடந்த சித்தாந்தங்களுக்கப்பால் தமிழ்த் தேசிய இனத்தின் இலக்கண வாழ்வையும், மண்ணின் மகிமையையும், பொருண்மியப் பண்பாட்டையும் உட்படுத்தியதான உண்மையின் வெளிப்பாடாக அரசியலும், அதுசார்ந்த வேலைகளும் அமைந்ததாக இருந்தன. தாய் மொழி, மொழி இலக்கியம், பண்பாடு, நில உரிமை போன்றவைகள் குறையாமல் மக்கள் வழி நடத்தப்படுவது எமக்கான அரசியல் என இனங்காணப்பட்டிருந்தன.இந்த வகையில் எமக்கேற்ற பொருளாதார அமைப்பு உருவாக்கப்படும் என்ற நிலையும் அடிப்படையாக விளங்கியது. ஊடகத்துறையிலும் எமது இனத்தின் தனித்துவம் வெளிப்படுத்தப்பட்டதான வகையில் உண்மையும், நேர்மையும், நீதியான கோரிக்கைகளும் உள்வாங்கப்பட்டதாக வெளியீடுகளும், பத்திரிகைகளும், வெளிவந்தவண்ணம் அரசியல் வேலையும் தொடர்ந்திருந்தன.
அரசியல் வேலைகளில் தனக்கென்று ஒரு முத்திரையைப் பதித்து தலைவரின் நம்பிக்கையையும் பெற்றுக்கொண்ட பிரான்சிஸ் மட்டக்களப்பு நகரத்தில் கல்விமான்கள் சமூக ஆர்வலர்கள் ஆகியோரின் ஆதரவையையும், பத்திரிகையாளர்களின் புரிந்துணர்தலையும் பெற்றுக்கொண்டார்.1980 களில் தமிழ் மக்களின் அரசியல் விடுதலை வரலாற்றில் எழுச்சியுற்ற காலம் தொடங்கியது என்பதனால் ஒவ்வொருவரும் தாம் இருந்த நிலையில் தமது கடமையை வரலாற்றில் செய்வதற்கு பிரான்சிஸ் அவர்களின் அரசியல் வேலை உறுதுணையாக அமைந்தன.
மட்டக்களப்பில் வண பிதா சந்திரா பெர்னாண்டோ, தமிழர் ஆசிரியசங்கத் தலைவர் வணசிங்கா அதிபர், 1980 களில் பிரபல்ய பத்திரிகையாளரும், மாவீரருமான கப்டன் நித்தி, சட்டத்தரணியும் மட்டக்களப்பு மாவட்ட தொழிற்சங்கச்சம்மேளனச் செயலாளரும் மாவீரருமான மேஜர் வேணுதாஸ் ஆகியோர் விடுதலைப் புலிகளின்பால் ஈர்க்கப்பட்டு, ஆதரவு வழங்கிய நிலையில் தமிழ் மக்களின் தேசிய விடுதலை இயக்கமாக விடுதலைப் புலிகள் மிளிர்வதற்கு பிரான்சிஸ் மட்டக்களப்பில் செய்த அரசியல் வேலை காரணமாக அமைந்ததைக் குறிப்பிட முடிகின்றது. ஓரு பண்பான, மக்களை மதித்திருந்த சிறந்த தேசிய விடுதலை வாதியான பிரான்சிஸ் அவர்களின் அரசியல் வேலையில் மாவட்ட மக்களின் ஆதரவு விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு வெகுவாகக் கிடைத்திருந்தன.
மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத்தின் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரான யோகன் குறிப்பிட்ட தொகைப்போராளிகளுடன் படைத்துறைப்பயிற்சி பெறுவதற்கு இந்தியா சென்ற வேளையில் மாவட்டத்திற்க்கான விடுதலைப் புலிகளின் தொடர்பாளராக சடாச்சரபவன் என்ற பிரான்சிஸ் செயல்பட்டிருந்தார். படைத்துறைப் பயிற்சிக்காக சென்றவர்களில் சிலர் பிரான்சிஸ் அவர்களினால் இணைக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கோட்டைக்கல்லாறு மட்டு – கல்முனை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கல்வியாளர்கள் பலரை உருவாக்கிய ஊராகும். இவ்வூருக்கு அருகாமையில் அமைந்துள்ள பெரியகல்லாறு, ஒந்தாட்சிமடம் ஊர் களை இணைப்பதற்கு அமைக்கப்பட்ட கல்லாறு மதகு மட்டக்களப்பு வாவியையும், கடலையும் இணைக்கும் தொடுபாலமாகும். மார்க்கழியில் பெய்கின்ற மழையினால் பொங்கி எழும்வெள்ளம் குழாய் மூலமாகவும், சாலை மேலாகவும் பாய்ந்து செல்வதற்கேற்ற விதத்தில் அமைக்கப்பட்டிருப்பது அடையாளப் படுத்தப்பட்ட பெயரொன்றை அவ்வூர்களுக்கு வழங்கியுள்ளது.
கல்வியாறு என்று சொல்லுமளவுக்கு கல்வியில் உயர்ந்த நிலையில் மாவட்டத்தில் விளங்குகின்ற இவ் வூரில் ஒரு அண்ணனுக்குத் தம்பியாக சடாச்சரபவான் 26.05.1960 அன்று பிறந்தார். இவருடைய அண்ணன் சரவணபவான் தமிழ் இளைஞர் பேரவையில் செயல்பட்டு 1988 ம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு இணைந்து செயலாற்றினார்.இரண்டு மகன்களைப் பெற்றெடுத்த இராசையா சின்னமணி தம்பதியினர் தாய் மண்ணின் விடுதலைக்காகவும், தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமைக்காகவும் தம் மக்களை அர்ப்பணித்தனர்.
ஆரம்பக் கல்வியை கோட்டைக்கல்லாறு பள்ளிக்கூடத்தில் மேற்கொண்டதன் பின்பு உயர் கல்வியை மட்டக்களப்பு கோட்டமுனை மகா வித்தியாலயத்தில் தொடர்ந்தார். க. பொ. த சாதாரண பரீட்சையில் ஆறு பாடங்களில் அதி விசேட சித்தி பெற்று புத்திசாலி மாணவர்களில் ஒருவராக உயர்தரக் கல்வியைத் தொடர்ந்து அம்பாறை ஹாடி தேசிய தொழில்நுட்பக்கல்லூரியில் Diploma in Civil Engineering பயின்று கொண்டிருக்கும்போது விடுதலைப் போராட்டத்தின்பால் எண்ணங்களைத் திருப்பினார்.
இத் தருணத்தில் இவருடைய அண்ணன் சரவணபவன் விடுதைலைப் புலிகளின் உறுப்பினர்கள் சிலருடன் தொடர்வுகளை வைத்திருந்தார். இதனைப் பயன்படுத்தி பிரான்சிஸ் இணைப்பை ஏற்படுத்தி விடுதலைப் புலிகளின் உறுப்பினரானார். 1982 ம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் தொடர்பு பிரான்சிஸ் அவர்களுக்கு கிடைத்திருந்தது. அக்காலத்தில் இயக்கத்தின் தொடர்பாளராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ராமு என்பவர் செயல்பட்டிருந்தார். மிகவும் இரகசியமான முறையில் இயக்கத்தின் நடவடிக்கைகள் இருந்ததனால் தனக்குத் தெரிந்த படித்தவர்கள் மட்டத் தொடர்புகளை பிரான்சிஸ் சரியாகப் பயன்படுத்தியிருந்தார். இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் எழுத்தாளர்கள்,பத்திரிகையாளர்கள்,கல்வியாளர்கள், வணக்கத்திற்குரியவர்கள் ஆகியோரின் தொடர்புகளும் உதவிகளும் இயக்கத்திற்கு கிடைத்திருந்தன.
விடுதலைப் போராட்டம் ஒன்றுக்கான பண்பட்ட அரசியல் வேலையை செய்வதில் பிரான்சிஸ் அவர்களின் எண்ணங்கள் முற்போக்கானதாகவும், உணர்வுமிக்கதாகவும் அமைந்திருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு பேரூந்தில் பயணித்து இயக்கத்திற்கான தொடர்புகளிலும் அரசியல் வேலைகளிலும் ஈடுபட்டார். தனியொருவராக மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டமெங்கும் அரசியல் வேலைகளில் ஈடுபட்டு பல போராளிகளை இயக்கத்திற்கு சேர்த்தும் பாமரமக்களுக்கு தெளிவுபடுத்தியும் படித்தவர்களுடான தொடர்பை நெருக்கமாகவும் பேணினார். இவ்வாறு தனது இளவயதில் அறிவுத்திறனுடன் அரசியலையும் கலந்து தமிழர் விடுதலையில் தெளிவான கொள்கையையும், தலைமையையும் தெரிந்து ஏற்றுக்கொண்டு கள வேளையில் திறம்பட செயலாற்றினார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பொறுத்தமட்டில் இலங்கைத்தீவில் தமிழர் தாயகத்தின் விடுதலை ஆயுதம் ஏந்திய போராட்டத்தின் மூலமே சாத்தியமாகும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தனர். இதனால் ஆயுதப் போராட்டத்தை முன்னிறுத்திய வகையில் அரசியல் துறையின் உருவாக்கத்திற்கும் அதன் மூலம் தமிழ் மக்கள் ஒன்றுபட்டு மாபெரும் சக்தியாக வளர்த்தெடுப்பதென்பதும் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். அரசியல் இயக்க மூலம் நிருவாகங்களை விரிவு படுத்துவதும் மக்களுக்கான சேவைகளை போராளிகளின் மூலம் வழங்குவதும், அதன் மூலம் மாபெரும் அரசியல் விடுதலை இயக்கத்தைக் கட்டிவளர்ப்பது என்பதில் பிற் காலத்தில் வெற்றியும் கண்டிருந்தனர். தங்களின் வாழ்வுக்கும், விடுதலைக்கும் அளப்பரிய அர்ப்பணிப்புகளை வழங்கத் தயாரான விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பின்னால் மக்கள் அணிதிரண்டதையும் காணக்கூடியதாகயிருந்தது.
1984 ம் ஆண்டு முற்பகுதியில் படைத்துறை பயிற்சிக்குச் சென்ற போராளிகளில் சிலர் தாயகம் திரும்பியிருந்தனர். இப்போராளிகளின் வருகை இயக்கத்தின் செயல்பாட்டில் சிறு சிறு மாற்றத்தை மாவட்ட வேலைத் திட்டங்களில் ஏற்படுத்தின. யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட பொறுப்பாளராக பசீர் என்பவர் வந்திருந்தார். இவருடைய தொடர்பிலும் பிரான்சிஸ் அவர்களுக்கு வழங்கப்பட்ட வேலை மக்கள் மத்தியில் உணர்வுள்ளவர்களையும், பற்றுள்ளவர்களையும், படித்தவர்களையும் போராட்டத்திசையில் பயணிக்கவைக்க வேண்டுமென்பதாகும். இதில் பிரான்சிஸ் அவர்கள் வெற்றியும் கண்டதனால் மட்டக்களப்பு நகரத்தில் முக்கியமானவர்களில் பலர் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு மனப்பூர்வமான ஆதரவை வழங்கியிருந்தனர். மக்களும் விடுதலைப் புலிகள் பின்னால் அணி திரளத்தொடங்கினார்.
மட்டக்களப்புச்சிறைச்சாலை உடைப்பும், அரசியல் கைதிகள் வெளியேற்றமும், தமிழ் மக்கள் இன எழுச்சியிலிருந்தபோது நடந்திருந்தன. இதில் குறிப்பிடத்தக்க ஒரு சில அரசியல் கைதிகள் வெளியேறமுடியாமல் இருந்தனர். இவர்களை வெளியில் கொண்டுவருவதற்கான ஒரு நடவடிக்கையை விடுதலைப் புலிகள் திட்டமிட்டனர். இதில் பிரான்சிஸ், பசிர், சிவம்அண்ணன், அம்பாறை மாவட்ட தளபதி டேவிட், கண்ணன் ஆகியோருடன் ஆதரவான மக்களில் சிலரும் ஈடுபட்டனர். வண.பிதா சிங்கராயர் அவர்களையும், நிர்மலா நித்தியானந்தன் அவர்களையும் வெளியில் கொண்டுவரும் நடவடிக்கையில் வண.பிதா சிங்கராயர் விரும்பாததால் நிர்மலா நித்தியானந்தன் அவர்களை மாத்திரம் 1984.06.10 அன்று மீட்டெடுத்து திரும்பியிருந்தனர். பிரான்சிஸ் அவர்களின் முதல் நடவடிக்கையாக இது அமைந்திருந்திருந்தது. நிர்மலா நித்தியானந்தன் அவர்களும் பாதுகாப்பாக யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்பட்டிருந்தார்.
பிரான்சிஸ் அவர்களின் புனிதமான விடுதலைப் பயணத்தில் இரண்டாவது தாக்குதல் 22.09.1984 ம் ஆண்டு களுவாஞ்சிக்குடி சிங்களக் காவல் நிலைய அழிப்பாக அமைந்திருந்தது. குறிப்பிட்ட சில போராளிகள் கலந்து கொண்ட இத் தாக்குதலின் பின்பு பிரான்சிஸ் அவர்கள் நோயுற்ற நிலையில் காணப்பட்டார். விழுப்புண்ணடைந்த போராளிகளுடன் மறைவிடத்திலிருந்து மருத்துவசிகிச்சையும் பெற்றுக்கொண்டார். இதனைத் தொடந்து 02 .09 .1985 அன்று தளபதி அருணாவின் தலைமையில் நடந்த ஏறாவூர் சிங்கள காவல் நிலையத் தாக்குதலில் முன்னணிப் போராளிகளில் ஒருவராக களமிறங்கினார்.
பிரான்சிஸ் அவர்கள் பங்குகொண்ட அடுத்த தாக்குதல் அம்பாறை மாவட்டத்தில் தம்பட்டை என்னுமிடத்தில் நடந்தது. தம்பட்டை ஊர் பொத்துவில் என்னுமிடத்திற்கு செல்லுகின்ற சாலையில் கடற்கரையை அண்டியுள்ள அழகிய ஊராகும். கிழக்குக் கடற்கரையின் அழகில் மிதந்து கிடக்கும் தமிழ் ஊர்களில் அக்கரைப்பற்றிலிருந்து பொத்துவில் வரையிலான வட்டம் முழுவதும் தமிழர் வரலாற்றுப் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கின்றன இயற்கையுடன் இணைந்துள்ள வனப்புமிக்க இடங்களாகும். தம்பட்டையைத் தாண்டிய திருக்கோயில் தமிழர் வரலாற்றில் இதிகாசங்களுடன் ஒட்டிய சரித்திரம் சொல்லும் தமிழர் தாயகமாகும். தமிழர் பண்பாட்டுடன், தமிழர் அடையாளத்தைத் தொட்டுக்காட்டுகின்ற இவ்வூர்கள் என்றும் எம்மூராகவே இருக்க வேண்டும் என்று தமிழுணர்வுள்ள ஒவ்வொருவரின் மனதில் ஆழமாக பதிந்துள்ள அழிக்கமுடியாத உறுதியாகும். தென்றலாக தவழ்ந்து வரும் கடல் காற்று தொட்டு அசைந்தாடும் தென்னை ஓலை இசையில் எழுகின்ற இதமான உணர்வில் சிறுகுடிசைகளில் வாழ்கின்ற மக்கள் என்றும் இது சொந்தமண்ணாக இருக்க வேண்டுமென எண்ணி வாழ்கின்றனர். இந்த ஊரில் 1985 ஆண்டு சிங்கள ரோந்துப் படைக்கெதிரான தாக்குதல் தளபதி அருணாவின் வழிநடத்தலில் அம்பாறை மாவட்ட தளபதி டேவிட் அவர்களின் தலைமையில் நடந்தது. அக்காலத்தில் பாரிய தாக்குதலாகவும், சிங்கள படைகளை அச்சமூட்டும் தாக்குதலாகவும் இது அமைந்திருந்தது. தளபதி சொர்ணம் அவர்களின் ஆர் . பி. ஜி .உந்துகணைத்தாக்குதலில் கவாசவாகனம் தாக்கப்பட்டு இயங்க முடியாத நிலையில் பல படையினரும் அழிக்கப்பட்டனர்.
குறிப்பிட்ட சில மணித்தியாலம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த இப் பகுதியை மீட்பதற்கு கடல் வழியைப் பயன்படுத்துமளவுக்கு சிங்களப்படை நெருக்கடியைச் சந்தித்த தாக்குதலாகும். போராளிகளின் உறுதியான போர் நடவடிக்கையைத் தெரியப்படுத்தும் தாக்குதலாகவும் அக்காலத்தில் வெளிப்படுத்தப்பட்டன. இத் தாக்குதலில் பிரான்சிஸ் அவர்களும் முன்னணிப் போராளியாக களத்தில் பங்குகொண்டார்.தளபதி அருணாவின் விருப்பத்திற்குரிய போராளிகளில் பிரான்சிஸ் அவர்களும் ஒருவர் என்பதையும் அறியமுடிந்தது. ஏனெனில் பிரான்சிஸ் அவர்களின் உணர்வும், உறுதியும் தளபதி அருணாவையும் கவர்ந்திருந்தது. போராளி நசார் அவர்களும், ஒரு ஆதரவாளரும் இத் தாக்குதலில் விழுப்புண்ணடைந்திருந்தனர். தம்பட்டைத் தாக்குதல் மட் – அம்பாறை மாவட்டத்தில் விடுதலைப் போராளிகளின் எழுச்சியை சிங்கள அரசுக்கும், சிங்களப் படைகளுக்கும் தெரியப்படுத்தியிருந்தன.
1987 ம் ஆண்டு யூலை இலங்கை – இந்திய ஒப்பந்தமும் அதனைத் தொடர்ந்த இந்தியப் படையினர் வருகையும் விடுதலைப்புலிகளுடான அவர்களின் உறவும், மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத்திலிருந்து தளபதிகளையும், பொறுப்பாளர்களையும் யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்லும் இந்தியப்படையினரின் செயல்பாட்டில் இந்தியப் படையினரின் உலங்கு வானூர்தி பயன்படுத்தப்பட்டிருந்தன.விடுதலைப்புலிகளின் இந்தியப் படையினருடனான இணைப்பாளராக தளபதி குமரப்பா தலைவரின் பணிப்பில் செயல்பட்டிருந்தார். இவருடன் மட்டக்களப்புக்கு வந்திறங்கிய உலங்கு வானூர்தியில் அழைத்துச் சென்றவர்களில் மட்டக்களப்பு அம்பாறை அரசியல் துறைப் பொறுப்பாளரான பிரான்சிஸ் அவர்களும் அடங்கியிருந்தார்.ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும், இவ்வாறானவர்கள் யாழ்ப்பாணம் நோக்கி அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.தலைவரின் எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பான சந்திப்புக்காகவும், யாழ்ப்பாணம் சுதுமலையில் நடந்த வரலாற்று முக்கியத்துவம் பெற்ற தலைவர் அவர்களின் மக்கள் மத்தியிலான கொள்கை விளக்கவுரைக் கூட்டத்திற்காகவும் சென்றிருந்தனர். இந்தியப்படையினருடான உறவைப் பேணும் நிலையில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் இலட்சியத்தை அடைந்து கொள்வதென்ற அடிப்படையில் அனைத்தும் நடந்தேறின. இலட்சியம் என்பதில் விட்டுக்கொடுப்புகளுக்கு இடமில்லையென்றும் போராட்ட வடிவம் மாறலாம் என்பதையும் மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்தன. இலட்சியத்தில் என்றும் உறுதியானவர்களாக விடுதலைப்புலிகள் இருந்தனர் என்பதை அன்று அனைத்துதரப்பினரும் ஏற்றுக்கொண்டிருந்தனர். அதுதான் எமது மக்களுக்கு தேவையாகவுமிருந்தது. போராட்ட உணர்வு மழுங்கடிக்கப்படுவதும், மக்கள் அடக்கப்படுவதும் விடுதலைப் போராட்டத்தில் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை விடுதலைப் புலிகளும் நன்கு அறிந்திருந்தனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்புக்குத் திரும்பிய பிரான்சிஸ் போர் நிறுத்தத்தம், இந்தியப் படையினரின் பிரசின்னம் இவற்றுக்கு மத்தியில் மக்களுக்கான அரசியல் வேலைகளில் மூழு வீச்சாக ஈடுபட்டார். ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் விதத்தில் விரைவு நிலையை ஏற்படுத்தும் நோக்கில் தெளிவுபடுத்தும் மக்கள் போராட்டம் தமிழீழத் தாயகமெங்கும் ஆரம்பமானதையும் இச்சந்தர்ப்பத்தில் எமது உரிமையை முழுமையாக பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற உறுதிநிலையும் மக்களிடத்தில் காணப்பட்டன.
சிங்களப்படையினர் தமிழீழ மண்ணில் நிருவாகத்தில் ஈடுபடுவதையும் விடுதலைப் புலிகளும், மக்களும் விரும்பவில்லை. இதனால் மட்டக்களப்பில் நடந்த சம்பவம் ஒன்றில் சிங்களக்காவல்துறையினரின் நிருவாகத் தலையீட்டை மக்கள் எதிர்த்து நகரத்தின் காந்தி சிலை அருகாமையில் திரண்டபோது தளபதி பொட்டம்மான், பிரான்சிஸ் உட்பட்ட போராளிகளும் அவ்விடத்திற்கு வந்து சேர்ந்தனர். தளபதி பொட்டம்மானின் ஆலோசனையில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் பிரான்சிஸ் கருத்துக்களைப் பகிர எண்ணிய வேளையில் தரையில் நிற்பதைவிட உயரத்தில் நின்று கூறுவது பொருத்தமாகயிருக்குமென்பதால் ஒரு மகளூர்ந்து மேல் ஏறி நின்று மிகவும் சாதாரணமாக, மக்களுக்கு புரியக்கூடியவகையில் சுதுமலையில் தலைவர் கூறிய போராட்ட வடிவமாற்றத்தை திரண்டிருந்த மக்கள் மூலமாக அறியமுடிகின்றது என்பதையும் தனது கருத்துக்களின் மூலமாக தெளிவுபடுத்தி, தனது போராளி அரசியல் வேலையை மக்களுக்கு வெளிப்படுத்தினார். அரசியல் என்றால் எவ்வாறான வேலை என்பதை அனைத்துத்தரப்பினருக்கு ஒரு சிறு நிகழ்வு மூலமாக புரியவைத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து தாயகமெங்கும் மக்களின் விழிப்புப் போராட்டங்கள் உரிமையை உணர்த்தி நடத்தப்படுவதற்கு விடுதலைப் புலிகளின் அரசியல் வேலை எழுச்சியாக அமைந்திருந்தன. அடிப்படைக் கோரிக்கைககளை வலியுறுத்தி யாழ் மாவட்ட அரசியல் பொறுப்பாளர் திலீபன் அவர்களின் சாகும்வரை உண்ணாவிரதத்தைக் தொடர்ந்து ஏனைய மாவட்டங்களிலும் உண்ணாவிரத அறவழிப் போராட்டம் நடத்தப்பட்டன. மட்டக்களப்பில் முற்றவெளியில் மதன் என்கின்ற போராளி உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தார்.
இவருடைய அரசியல் வேலையின் வெளிப்பாடாக மட்டக்களப்பு மக்கள் குழு இயக்கத்திற்கு அனைத்து வழிகளிலும் ஆதரவை வழங்கி, செயல்பாட்டின் வழியில் ஒன்றிணைந்து இயங்கினார். இது மட்டுமல்லாமல் மாவட்ட தொழிற்சங்க சம்மேளனத்தை உருவாக்குவதிலும், அதன் செயல்பாட்டுக்கும் தன்னாலான உதவிகளையும் புரிந்திருந்தார். இச்சங்கத்தின் தலைவராக மக்கள் குழுத் தலைவர் வண. பிதா சந்திரா பெர்னாண்டோ அவர்களின் சகோதரர் பெர்னாண்டோ அவர்களும், சட்டத்தரணியும் பிற் காலத்தில் மாவீரருமான பொன். வேணுதாஸ் பொதுச் செயலாளராகவும் பணிபுரிந்து விடுதலை இயக்கமொன்றின் அரசியல் வேலையில் மக்களை இணைத்துச்செல்லும், விடுதலைப்பாதையையும் உருவாக்கியிருந்தார்கள். அரசியல் என்று எழுந்தவர்கள் எல்லாம் அடிப்படையை புரிந்துகொள்ளத் தவறிய நிலையில் விடுதலைப்புலிகளின் அரசியல் நடவடிக்கைகள் ஆர்ப்பாட்டமில்லாது அமைதியாக மக்களை அணிதிரட்டி சென்றதைப்பார்க்கமுடிந்தது. அது மட்டுமல்லாது அன்னையர் முன்னணி என்ற ஒரு மக்கள் அமைப்பையும் உருவாக்கி அவர்கள் மூலமாக மக்கள் போராட்டத்தையும் வெளிப்படுத்துவதற்கு பிரான்சிஸ் அவர்களின் அரசியல் வேலை வழிசமைத்திருந்தது. இம் முன்னணியின் ஆலோசகராக வங்கி மேலாளர் கிங்ஸ்லி இராசநாயகம் செயல்பட்டிருந்தார். இந்தியப் படையினரால் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பிற்காலத்தில் 2004 ம் ஆண்டு சிங்களப் பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டு தெரிவானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் மக்கள் மண்ணை விட்டு துரத்தப்படுவதும், மண்ணைவிட்டு வெளியேறுவதும் நடந்துகொண்டிருக்கையில் மண்ணுக்காக, மண்ணில் வீழ்ந்தவர்களின் இலட்சிய வேட்கை தணியாது செல்கின்றது. ஏனெனில் இன்னும் எமது மண்ணில் தன்மானமுள்ள தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதுதான் உண்மையாகும். தன் இரத்த உடன் பிறந்தவர்களின் சந்ததி இல்லாத நிலையில் உறவோடு அமைந்த எதிர்காலச்சந்ததி தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்ற உயரிய குறிக்கோள் தன்னலமற்ற இச்சகோதரர்களை தமிழ் நலன் கருதி தற்கொடை செய்யவைத்துள்ளது. அண்ணன் சரவணபவான் தமிழ் இளைஞர் பேரவையில் செயலாற்றியபோதும் எழுதுனராக மாவட்ட அரச செயலகத்தில் பணியாற்றியிருந்தார். 1988 ம் ஆண்டு இந்தியப்படையினருடன் சேர்ந்து இயங்கிய E . P .R .L .F என்ற தமிழ் தேசிய விடுதலைக்கு எதிரானவர்களால் ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தலைத் தொடர்ந்து சிறிலங்காவின் தலைநகர் கொழும்புக்குச் சென்றார். இவருடன் சித்திரவதைப்படுகொலையிலிருந்து கடைசி வேளையில் தப்பிய பத்திரிகையாளர் நித்தி அவர்களும் சென்றிருந்தார். இருவருடைய எண்ணங்களும் ஒன்றாகவே இருந்ததனால் மட்டக்களப்பு காடுகளுக்குள் மறைந்திருந்த விடுதலைப் புலிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி உறுப்பினராக விடுதலைப்பணியில் இறங்கினார்கள்.
சிறிலங்கா அரசுடன் பேச்சுவார்த்தையில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டிருந்த காலமாகையால் சரவணபவான் அவர்களின் பணி கொழும்பிலிருந்து மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் கொழும்பில் வைத்து இரண்டு ஆதரவாளர்களுடன் சிங்களப் புலனாய்வாளர்களால் கடத்தப்பட்டு காணமல்போனார். மிகவும் தீவிரபற்றாளரான சரவணபவான் தனது விடுதலைப் பயணத்தில் தன்னை இழந்து தமிழீழ விடுதலைக்கு பலம் சேர்க்கும் நேர்த்தியான உறுதிமிக்க முடிவுகளையும் எடுத்திருந்தார். இதனால் இவருடைய இழப்பு இயக்கத்திற்கும், விடுதலைக்காக காத்திருக்கும் மக்களுக்கும் ஈடுசெய்யமுடியாததாகவிருந்தன.
போராளி வாழ்க்கைக்குள் புகுந்த இவர்கள் புனிதமான கடமையை வாழும் வரை நிறைவாக செய்திருந்தனர். இருப்பவர்கள் வரலாறு தேடும்போது நடந்து வந்தபாதையையும் திரும்பிப் பார்க்கவேண்டும் அது நேர்த்தியானதாக இருந்ததா என்பதையும் எண்ணிப்பார்க்கவேண்டும். கால மாறுபாட்டில் கடந்து வந்த பாதையில் கறைபடிந்த தேசிய விரோதங்களை செய்து விட்டு பதவியை எண்ணி தேசியத்தைக் காத்தவர்கள் போல் மக்கள் முன் வருவதை மக்கள் எப்போதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
விடுதலைப் போராளிகளின், மக்களின் இழப்புகளுக்கு மத்தியில் எமது மக்கள் உரிமைக்காக, தொடர்ந்தும் பயணிப்பதில் விடுதலைப் புலிப் போராளிகளுக்கு துணையாக நின்றனர். இலட்சியத்தை நோக்கிய போராட்டத்தில் இந்தியப் படையினருடனான மோதல் ஏற்பட்டபோது துணிந்து களமிறங்கி உறுதியுடன் செயல்பட்டனர். இந்த நிலையில் இந்தியப் படையினரும் விடுதலைப் போராளிகளை அழிப்பதற்காக தமிழ்க்குழுக்களையும் தாய் மண்ணில் ஊக்குவித்தனர். EPRLF,TELO ,ENDLF போன்ற இயக்கத்தினரின் குழுக்கள் அராஜகங்களை கட்டவிழ்த்துவிட்டதனால் தமிழ் மக்கள், போராளிகள் தேடி தேடிப் படுகொலை செயப்பட்டனர். ராசிக், ரெட்ணம் , ஜனா, போன்ற நூற்றுக் காணக்கானவர்கள் இத் தேசிய விரோதப்போக்குகளில் ஈடுபட்டதைக் காணமுடிந்தது.
தற்போது தமிழ்த்தேசியத் கூட்டமைப்பின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டச் செயலகம் என துரைரத்தினம் என்பவரின் வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள வீட்டில் அரங்கேறிய படுகொலைகள் எண்ணிலடங்கதவையாகும். விடுதலைப் புலிகளின் ஆதரவாளரான இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும், சுகுணா என்ற ஒரு தமிழ்ப்பெண்ணையும் கைது செய்து சித்திரவதை செய்ததில் ரெட்ணம் என்பவரின் பங்கு இருந்திருக்கக் கூடும் எனவும் நம்பமுடிந்தது. ஏனெனில் இவரும் அந்த வீட்டில்தான் வசித்து வந்திருந்தார்.
இவர்களை விடுதலை செய்யுமாறு மாவட்ட மக்கள் குழு இந்தியப் படையினரிடம் விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து சுகுணா என்ற தமிழ்ப் பெண் மாத்திரம் விடுதலைப் செயப்பட்டார்.அந்த இஸ்லாமியப் பெண் அநியாயமாக கொல்லப்பட்டதனால் எந்தவித தகவலும் இல்லாமல் போயிருந்தது.
நெருக்கடியான நிலையில் போராளிகள் இலட்சியப் பயணத்தில் உறுதியாகயிருந்தனர். தாயக விடுதலை என்ற குறிக்கோளில் இழப்புக்களையெல்லாம் இனத்தின் விடுதலைக்கான வெற்றியின் படிக்கட்டுக்களாக எண்ணி எந்தச் சவாலையும், எதிர் கொண்டனர். தங்கள் வாழ்வையும், வளத்தையும், எண்ணிச்செயல்படுகின்ற இயக்கங்கள், மற்றும் அதுசார்ந்த உறுப்பினர்கள் போராளிகளுக்கெதிராகச் செயல்படுகின்ற வேளையில் விடுதலைப் புலிப் போராளிகள் மாத்திரம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட அரசியல் பொறுப்பாளர் பிரான்சிஸ் மக்களின் ஆதரவோடு தேசிய விரோதிகளின் பலமான எதிர்ப்புகளுக்கு மத்தியில் மாவட்டத்தின் ஊர்களின் மறைவிடங்களில் இருந்து கொண்டு போராட்டப் பணியை மேற்கொண்டிருந்தார்.
நீண்ட நாட்களுக்குப்பின் 31.09.1988 அன்று தான் பிறந்த ஊரான கோட்டைக்கல்லாறு சென்று உறவுகளோடும், ஊர் மக்களோடும் எண்ணங்களை பகிர்ந்து இதமான, புரியாத மகிழ்வான உணர்வில் தங்கியிருந்தவேளையில் இந்தியப் படையினரை அழைத்துக்கொண்டு EPRLF தேசவிரோதிகள் ஊரை சுற்றி வளைத்துத் தேடுதல் நடத்தினர். பிரான்சிஸ் ஊரில் நிற்பதை அறிந்துகொண்டதன்பேரில் இச்சுற்றிவளைப்பு இடம்பெற்றிருக்கவேண்டும். வீட்டுக்குள் மறைந்திருந்த பிரான்சிஸ் தேச விரோதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.தான் பிறந்த மண்ணில், தனது இறுதி விடுதலைப் பயணமும் அமைய வேண்டுமென்ற நியதி பிரான்சிஸ் அவர்களை சொந்த ஊரை நோக்கி அழைத்திருக்கவேண்டும். தாய் நாட்டின் விடுதலைக்காக நீண்ட பயணத்தில் இணைந்திருந்த பிரான்சிஸ் தனது வரலாற்றுக் கடமையை முடித்து தாயின் மடியில் விழி மூடினார்.அக்காலத்தில் வாழ்ந்த பொதுநலம் சார்ந்த அனைவரும் விடுதலைப் புலிப்போரளிகளுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்கள் வீரமும், தன்மானமிக்க இவர்கள் தமிழரின் வரலாற்றைத் திரும்பவும் கொண்டுவந்திருக்கிறார்கள்.என்ற பெருமிதம் தமிழ் மக்களிடத்தில் மிகுந்திருந்தது. தமிழ்த் தேசிய உணர்வோடு பத்திரிகையாளர்களும் அக்காலத்தில் செயல்பட்டிருந்தனர்.
2004 ம் ஆண்டு மட்டக்களப்பில் ஏற்பட்ட துரோகத்தனமும், அதன் பிரதிபலனும் சில பத்திரிக்கையாளர்களையும் அரசியல்வாதிகளையும் தேசிய உணர்வுக்குள் உள்வாங்கிய போதும் அனைத்துப் பத்திரிகையாளர்களும், அரசியல் வாதிகளும் இணைந்திருக்கவில்லை. இதில் சிலர் எதிர்கால பதவியை எண்ணி தேசிய உணர்வாளர்களுடன் ஓட்டிக்கொண்டிருப்பதையும், எண்ணம் நிறைவேற தங்கள் சுயரூபத்தை மீண்டும் வெளிக்காட்டுவார்கள் என்பதும் எதிர்பார்ப்பாகும். மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத்தில் எந்தத்துறையில் பணியாற்றிய போதும் தமிழ்த் தேசிய உணர்வுகள் உள்ளடக்கப்பட்டவர்கள் அமைதியாக வாழும் நிலையில் எட்டு வருடங்களுக்குள் உட்பட்ட காலத்தில் வரலாறும், போராட்ட பாரம்பரியமும் புரியாமல் தமிழ்த் தேசியம்பற்றி பேசுபவர்கள் யார் என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டிய நிலையில் தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். எது நடந்தாலும், உண்மையும் நேர்மையும், உணர்வுகளும் என்றும் அழியாது. போராளி வாழ்க்கை என்பதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டவர்கள் விடுதலைப் புலிகள் அதனால் தங்கள் வீரச்சாவுகளை விருப்போடு ஏற்றுக்கொண்டனர். போராளி அரசியல்வேறு, பாராளுமன்ற அரசியல்வேறு என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ளவேண்டும். இவற்றின் அர்த்தத்தை புரிந்து கொண்டால் எமக்குள் இருக்கின்ற குழப்பநிலை அற்றுவிடும்.
தாயை இழந்த போதும் இரண்டு மகன்களையும் பெற்றெடுத்து வளர்த்து அழகு பார்த்து வாழும் வரை நல்லவர்களாக வாழவேண்டும் என்று எண்ணிய தந்தை குறுகிய காலத்தில் இவர்களின் வீரச்சாவை எண்ணிக் கலங்கிய போதும் நினைத்த மாதிரி உயர்ந்த கொள்கையில் நல்லவர்களாக வாழ்ந்து, வீழ்ந்த தமது புதல்வர்களை எண்ணி பெருமிதம் கொண்டிருந்தார். வரலாறும், எதிர்காலமும் இச்சகோதரர்களை எம் மத்தியில் வாழவைக்கும், மறக்காமல் காலம் காலமாக நினைவு கூரும். தம்மை இழந்து தமிழை வாழவைத்த இக் குடும்பத்தின் வாழ்க்கை எதிர்காலத்தில் எல்லோருக்கும் பாடமாக அமையட்டும். சொந்த மண்ணில், சொந்த மக்களினால் பிரான்சிஸ் அவர்களின் வித்துடல் விதைக்கப்பட்டது. தனது தம்பியின் உடலுக்கு இறுதி வணக்கம் செலுத்த அண்ணன் சரவணபவான் வந்தபோது தேச விரோதிகள் அவ்விடத்திற்கு வந்து துப்பாக்கியால் சுட்டதும் தப்பியோடும் அளவுக்கு தேச விரோதிகளின் ஈவிரக்கமற்ற காட்டுமிராண்டித்தனம் வெளிப்பட்டதையும் பார்க்க முடிந்தது.
இந்தியப்படையினர் எம் மண்ணை விட்டு வெளியேறியபோது தேசவிரோதிகளை விரட்டியடிக்கும்பணியில் விடுதலைப் புலிகள் வீறு கொண்டெழுந்து அம்பறையிலிருந்து ஆரம்பித்து துரத்தியடித்து வந்தனர். அம்பாறை மாவட்டத் தளபதி அன்ரனி தலைமையிலான படையணி கல்லாறு மண்ணை மிதித்தபோது கப்டன்.பிரான்சிஸ் அவர்களின் வீரச்சாவு அன்ரனியின் நினைவுக்கு வந்தது. உடன் பிரான்சிஸ் அவர்களின் தந்தையை அழைத்து உடல் விதைக்கப்பட்ட இடத்திற்குச் சென்று ஆயுதத்தைக் கீழே வைத்து வீர வணக்கம் செலுத்தினார். தேச விரோதிகளால் வீரச்சாவடைந்த பிரான்சிஸ் அவர்களின் நினைவில் மண்ணைவிட்டு தேசிய விரோதிகளை முற்றாக விரட்டும் பணியில் மேலும் தீவிரமானார். மேஜர். அன்ரனி அவர்களைப் பற்றி அடுத்த தொடர்களில் விரிவாகப்பார்ப்போம்.
எத்தனை எதிர்ப்புக்களையும், இழப்புக்களையும் எமது போராளிகள் சந்தித்தனர்.
அத்தனை எதிர்ப்புக்களையும், வீரத்துடனும், அர்ப்பணிப்புடனும் எதிர்கொண்டு இலட்சியத்தை நோக்கி உறுதியுடன் பயணித்தனர்.
சாவு ஒரு நாள் வரும், அச்சாவு எமது மக்களின் விடிவுக்காக அமைந்துவிடட்டும்.
விடியலை நோக்கிய எமது மக்களின் பயணம் தொடரட்டும்.
மாவீரரின் வரலாறு, தமிழ் மக்களின் நீண்ட வரலாற்றோடு இணைந்துவிட்டது, அதில் பவான் சகோதரர்களின் வரலாறும் பதியப்படட்டும்.
நினைவுப்பகிர்வு:- என்றும் எழுகதிர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”