இன்றைய பின்னடைவே நாளைய வெற்றியாக மாறும்
இன்றைய பின்னடைவே நாளைய வெற்றியாக மாறும்
மக்கள் வெளியேறிய நிலையில் இடிபாடுகளுடன் சுடுகாடாய்க் கிடக்கும் யாழ்ப்பாணத்தில் சிங்கள் இராணுவப் பேய்கள் வெற்றிக்கொடியைப் பறக்கவிடலாம். தமிழரின் இராட்சியத்தை கைப்பற்றிவிட்டதாக நினைத்து தென்னிலங்கையில் சிங்களப் பேரினவாதக் கும்பல்கள் பட்டாசு கொளுத்திக் குதூகலிக்கலாம். இராணுவ மேலாதிக்க நிலையை எட்டிவிட்டதாக எண்ணி சந்திரிக்கா அரசு சமாதானப் பேச்சுக்கான சமிக்ஞைகளையும் விடலாம்.
இந்தச் சர்ந்தப்பத்தில் நாம் ஒன்றை தெட்டத் தெளிவாக எடுத்தியம்ப விரும்புகின்றோம். அதாவது யாழ்ப்பாண மண்ணை சிங்கள இராணுவம் ஆக்கிரமித்து நிற்கும்வரை சமாதானத்தின் கதவுகள் இறுக்கமாக மூடப்பட்டிருக்கும். இராணுவ அழுத்தத்திற்கு பணித்து துப்பாக்கி முனையில் திணிக்கப்படும் சமரசப் பேச்சுக்களில் விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு பொழுதும் பங்குபற்றப் போவதில்லை. இதுதான் சந்திரிக்கா அரசிற்கு நாம் விடுக்கும் செய்தி. பாரிய இராணுவப் படையெடுப்பை முடுக்கிவிட்டு பல லட்சம் மக்களை இடம்பெயரச்செய்து, வரலாற்றுப் பெருமைமிக்க யாழ்மண்ணை ஆக்கிரமிப்பதன் மூலம் சமாதான சூழ்நிலையும் சமரசத் தீர்வும் ஏற்பட்டுவிடும் என சந்திரிக்கா அரசு எண்ணுமானால் அதைப் போல் அரசியல் அசட்டுத் தனம் வேறேதும் இருக்க முடியாது.
இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையானது சந்திரிக்காவின் ஆட்சிப்பீடம் இழைத்த மாபெரும் வரலாற்றுத் தவறாகும். இதன் விளைவாக சமாதானத்திற்கான சகல பாதைகளையும் கொழும்பரசு மூடிவிட்டதுடன் முழுத்தீவையுமே பெரியதொரு யுத்த நெருக்கடிக்குள் தள்ளிவிட்டிருக்கிறது. யாழ்ப்பாணச் சமரில் புலிகள் இயக்கம் பேரிழப்பைச் சந்தித்து விட்டதென்றும், பலவீனப்பட்டு விட்டதென்றும் அரசு பிரச்சாரச் சாதனங்கள் உரிமை கொண்டாடுவதில் எவ்வித உண்மையும் இல்லை. இந்தச் சமரில் புலிகள் பலவீனப்படவுமில்லை. பெரிய உயிரிழப்பைச் சந்திக்கவுமில்லை. யாழ்ப்பாணச் சமரில் புலிகளைவிட இராணுவத்தினருக்கே பெரிய அளவில் உயிரிழப்பும் தளபாட இழப்பும் ஏற்பட்டிருக்கின்றது. பெரிய அளவிலான ஆட்பலத்துடன் பெரிய அளவிலான ஆயுத சக்தியைப் பிரயோகித்து தனக்குச் சாதகமான நிலப்பரப்பு வழியாக முன்னேற முயன்ற பெரும் படையணிகளை எதிர்த்து எமது சக்திக்கு ஏற்றவகையில் நாம் சாதுரியமாகப் போராடினோம். பெரும் இடர்கள், ஆபத்துக்கள் மத்தியில் போராடியபோதும் பெருமளவில் உயிரிழப்புக்களை நாம் சந்திக்கவில்லை. இதனால் எமது படைபல சக்திக்கும் படையணிக் கட்டமைப்புக்கும் பாதிப்பு நிகழவில்லை. மரபுவழிப் போர் முறைக்கு புலிகளை ஈர்ந்து எமது படைபலத்தை அழித்து விடலாம் என எண்ணிய இராணுவத்திற்கு இது ஏமாற்றத்தையே கொடுத்திருக்கின்றது. ஒட்டு மொத்தத்தில் யாழ்ப்பாணச் சமர் எமக்கு ஏற்பட்ட பின்னடைவே தவிர தோல்வியல்ல. அதுவும் ஒரு தற்காலிகப் பின்னடைவேதான். இந்திய இராணுவமே இறுதியில் தோல்வியைச் சந்தித்தது. எனவே இன்றைய பின்னடைவே நாளைய வெற்றியாக மாறுவது திண்ணம்.
சிங்கள இராணுவம் யாழ்ப்பாண மண்ணில் அகலக்கால் பதித்திருக்கிறது. பெரும்படையைத் திரட்டி நிலத்தைக் கைப்பற்றுவது கடினமான காரியமல்ல. ஆனால் கைப்பற்றிய நிலத்தில் காலூன்றி நிற்பதுதான் கடினம். உலகெங்கும் ஆக்கிரமிப்பாளர் எதிர்கொண்ட வரலாற்று உண்மையிது. இந்த வரலாற்றுப் பாடத்தை சிறீலங்கா இராணுவம் படித்துக்கொல்வதற்கு வெகுகாலம் செல்லாது.
– தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்.
(1995ம் ஆண்டு மாவீரர் நாள் செய்தியிலிருந்து தேசக்காற்று….)
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”