லெப். கேணல் தட்சாயினி
கல்கியின் “பொன்னியின் செல்வனில்” வருவாரே ஒரு முதிய வீரர். பெரிய பழுவேட்டையார் என்று அவருக்குப் பெயர். உடலில் அறுபத்து நான்கு வீரத்தழும்புகள் இருக்கிறதாம் அந்த வீரக்கிழவருக்கு. எங்கள் தாட்சாயினியும் பெரிய பழுவேட்டையரைப் போலதான் என்றால் தாட்சாயினியின் தோழி ஒருத்தி சற்றுப் பெருமையாக, உண்மைதான். தாட்சாயினியின் உடலிலுள்ள வீரத்தழும்புகளை நின்று நிதானமாக எண்ணினால் அறுபத்துநான்குக்கும் அதிகமாகவே இருக்கும்.
தட்சாயினி!
அந்த வயதுக்கேயுரிய முதிர்ச்சி. களங்களில் அவள் காட்டிய உக்கிரம், தன்னோடு நிற்கும் போராளிகளில் வைத்திருக்கும் அன்பு, பராமரிப்பு, அவளது வளர்ப்பு, எல்லாவற்றுக்கும் மேலாக தவறு விடுகின்ற கணங்களில் அவளது தண்டிப்பு எல்லாமே ஒன்றாகச் சேர்ந்து இவளை எங்களுள் ஆளுமையுடையவளாக நிலைநிறுத்தியது. விடுதலைப் புலிகள் மகளிர் படையணி சந்தித்த பெரும்பாலான சண்டைக் களங்களில் கம்பீரமாக ஒலித்த கட்டளைக் குரலுக்குரியவளை 1997.08.04 அன்று காலையின் பின் நெருப்பள்ளிவீசும் களம் இழந்திருந்தது. பல் சண்டைக்களங்களில் உடல் நிறையக் காயங்களைப் பெற்றுவந்து, தப்பிப்பிழைத்து, இனிக் காயப்படுவதற்கே இடமில்லை என்ற நிலையில் கூட களத்தைவிட்டு போகமாட்டேன் என்று அடம்பிடிப்பவள்.
பலாலி காவல் நிலைகள், மணலாறுகளம், மண்டைதீவு, சூரியக்கதிர், பூநகரி, தொண்டைமானாறு ஒட்டகப்புலம் வரையான காவலரண் அழிப்பு என்ற நீண்ட பட்டியல் அவளுக்குரியது. திறமையான சண்டைக்காரி. பூநகரிச் சண்டையின் அவளுக்கு இடுப்பிலும் தோள்மூட்டிலும் பெரிய காயம்.
“இந்தக்காயங்க்களோடு உங்களாலை தொடர்ந்தும் பயிற்சி எடுத்து சண்டைபிடிக்க ஏலாது: வெளி நிர்வாக வேலைகளைச் செய்யுங்கோ” என்று கூறப்பட்டும் கேளாமல், ‘தன்னால் முடியும், தான் தொடர்ந்து சண்டையிலே நிற்பேன்’ என்று விடாப்பிடியாய் நின்று செய்து காட்டியவள்.
மணலாறு மின்னல் சண்டையின்போது அவளுக்கு வயிற்றில் பெரிய காயம் ஏற்பட்டு, வெளிவந்து விழுந்த குடலை எடுத்து உள்ளே வைத்துப் பொத்தியபடி, இரத்தம் இழுக்க ஒருவரின் உதவியுமின்றி அரை மணித்தியாலம் நடந்தே மருத்துவ ஒழுங்குசெய்யும் இடத்துக்கு வந்து சேர்ந்தாள். அவளது மனுருதியைக்காட்ட இதைப்போல் இன்னும் எத்தனையோ சம்பவங்கள்………..
ஓரளவு பதட்டமில்லாத காவல்நிலைப் பகுதிகளில் அவள் நிற்கும்போது அவள் அங்கு நடத்துகின்ற தடபுடலுக்குக் கணக்கில்லை. அதுவும் கடற்கரையோரக் காவல்நிலைப் பகுதியாயின் தாட்சாயினி நண்டு பிடித்து, வாய்க்கு ருசியாய் சமைத்துக் கொடுப்பாள். தனது குழுவிலுள்ள வயதில் சின்னப் போராளிகளுக்கு தானே உணவு குழைத்துக் கொடுப்பாள். ஒரு அம்மாவுக்குரிய பொறுமையும் பண்பும் கண்டிப்பும் அவளிடம் உண்டு.
ஆள் சரியான தேத்தண்ணிச்சாமி, விடாக்குடியன், மொடாக்குடியன் மாதிரி காலம் நேரமில்லாமல் தேநீர் தயாரித்து, தானும் குடித்து எல்லோருக்கும் கொடுப்பாள்.தேனீயைப் போலவே அவளும் சரியான சுறுசுறுப்புத்தான்.
சூரியக்கதிர் 01ல் அவளுக்குப் பெரிய காயம். எறிகணை அவளின் காதோடு சேர்த்து கன்னத்தசைகளையும் பிய்த்துச் சென்றதோடு, மார்பிலும் பெரும் காயத்தை ஏற்படுத்தியது.
ஒருமுறை அவளது குழு ஒரு காவற்பகுதியில் நின்றது. அப்போது அவள் குழுவிலுள்ள ஒரு போராளிக்குக் காய்ச்சல், ஆறியும் ஆராமலும் இருந்த வயிற்ருக்காயத்தைப் பொருட்படுத்தாது தானே மரத்தில் ஏறி இளநீர் பிடுங்கிக் கொடுத்துவிட்டு, வயிற்றுநோவேடுக்க, ஒருவருமறியாது தனியாகப் போயிருந்து வயிற்றைப் பிடித்துக்கொண்டு அழுதாள்.
எப்போதும் இயக்கத்தின் நலன், கட்டுக்கோப்பு, எல்லாவற்றுக்கும் மேலாக எமது தலைவர் என்று தீவிரமான பற்றுவைத்த போராளி. மிகத் திறமையான சண்டைக்காரி. அவளோடு நின்ற நாட்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு போராளிக்கும் உயிர்த்துடிப்பானவை. நெஞ்சை விட்டு அகலாதவை.
நெஞ்சை விட்டகலா நினைவுகளில் நீங்கள் என்றும்…….
களத்தில் (17.12.1997) இதழிலிருந்து தேசக்காற்று.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”